திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!
தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!
எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்! - பிரசுரம்!பொதுக்கூட்டங்கள்
தெருமுனைக்கூட்டங்கள்
கலை நிகழ்ச்சிகள்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர். அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ். முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர். அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர். தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார வர்க்கம் போல் பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளிகள். ஒரு நிமிடத் தாமதத்திற்குக் கூட அதை வேலை நீக்கத்திற்கான குற்றமாக்குவது, இயந்திரங்களின் வேகத்தைக் காட்டி தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிவது, இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க தவறினால் சம்பள வெட்டு, கழிப்பறைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அற்பக்காரணங்களுக்கும் அசிங்கமாய் திட்டி அவமானப்படுத்துவது என அடுக்கடுக்கான அடக்குமுறைகள். பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்ற பெயரில் குண்டர்களையும் போலீசையும் வைத்து தொழிலாளர்களைத் தாக்க முற்பட்ட போது தொழிலாளிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத்திய போராட்டத்தில் தான் அந்த அதிகாரி பலியானான். வன்முறைக்கு வித்திட்டது ஆலை நிர்வாகம், தொழிலாளிகளல்ல.
நாட்டில் 90 சதம் பேர் தொழிலாளிகள், உழைப்பாளிகள். அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேச்சுவார்த்தை என அமைதியான வழிகளில் தான் போராடுகிறார்கள்.ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான முதலாளிகள் தான் அதிகார வர்க்கம், போலீசின் துணையோடு ஒடுக்கின்றனர். மிக மிக அரிதாகத் தான் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். எங்கோ, எப்போதோ ஒரு அதிகாரி பலியானால் ஊளையிடும் ஓட்டுக்கட்சிகளும், ஒப்பாரி வைக்கும் ஊடங்கங்களும் முதலாளிகள் நடத்தும் படுகொலைகள், வன்முறை பற்றி வாய் திறப்பதில்லை.
தனியார்மயத்தின் பெயரால் நாட்டை மீண்டும் காலனியாக்கும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வரும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளிகளின் வன்முறை மிகப்பெருமளவில் அதிகரித்துவருகிறாது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் கிடைத்த எட்டு மணிநேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை ஒழித்துவிட்டு முதலாளிகள் தங்கள் விருப்பப்படி 12 மணி, 14 மணி, 16 மணி என உழைப்பை உறிஞ்சுகிறார்களே இது வன்முறையில்லையா? எட்டு மணி நேரம் என்ற சட்டத்தை முதலாளிகள் அமுல்படுத்தினால் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கலாம். வேலையில்லாத் திண்டாட்டம் என்பது முதலாளிகளின் லாப வெறியால் உருவாக்கப்படும் கொடுமை. இது சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில்லையா?
240 நாட்கள் ஓராண்டில் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை எந்த முதலாளியும் மதிப்பதில்லை. பத்தாண்டு, இருபதாண்டு பணியாற்றியவர்களைக் கூட திடீரெனத் தூக்கியெறிந்து குடும்பங்களை வீதியில் நிறுத்துகின்றனர் முதலாளிகள். பயிற்சியாளர்கள் (ட்ரெய்னி) தொழில் பழகுநர் (அப்ரெண்டிஸ்) என்ற பெயரில் சம்பளமே இல்லாமல் அல்லது அற்பச் சம்பளத்தில் இளவயது ஆற்றலை உறிஞ்சி விட்டு தூக்கியெறிந்து விடுகின்றனர். இந்த மோசடியும், துரோகமும் வன்முறையில்லையா? தமிழகத்தின் பெருந்தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளிகளில் முக்கால்வாசிப்பேர் ஒப்பந்த தொழிலாளிகள் பெரும்பாலான் ஒப்பந்தத் தொழிலாளிகளை முதலாளிகள் கணக்கில் காட்டுவதேயில்லை. சென்னையைச் சுற்றி ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், இருங்காட்டுகோட்டை, மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நோக்கியா, ஹூண்டாய், சிமென்ஸ், செயிண்ட் கோபெய்ன் என பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன. அன்றாடம் நடக்கும் ஏராளமான விபத்துகளிலும் 'மர்ம'மான முறையிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரணமடைகின்றனர். இவ்வளவு பெரிய தொழில்பகுதியில் தீவிர, அவசர சிகிச்சைக்க்கு ஒரு மருத்துவமனை கூட இல்லை. அண்மையில் ஹவாசின் என்ற தொழிற்சாலையில் பணியாற்றிய 7 பேர் சாலை விபத்தில் இறந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் அடையாளம் தெரியாதவர்கள் என்றே பதிவு செய்யப்பட்டனர். புகழ்பெற்ற டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் கை நசுங்கிய தொழிலாளிக்கு பஞ்சை வைத்துக் கட்டி பேருந்து செலவுக்கு ரூ. 25/- கொடுத்து அனுப்பி விட்டது நிர்வாகம். முதலாளிகளின் கொடிய மனதுக்கு சிறு எடுத்துக்காட்டு இது. 'சுமங்கலித் திட்டம்' எனும் பெயரில் கிராமப்புறத்தில் ஏழை இளம்பெண்களைத் திரட்டி கொட்டடிகளில் அடைத்து வரைமுறையின்றி வேலை வாங்குவது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என சொல்லொணாக் கொடுமைகளை கோவை திருப்பூர் பஞ்சாலை முதலாளிகள் நடத்துகின்றனர். முதலாளிகள் நடத்தும் வரம்பற்ற வன்முறைகளைப் பற்றி ஊடகங்களோ, ஓட்டுக்கட்சிகளோ பேசுவதில்லை.
கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி, சாலை வசதி என அரசு வழங்கவேண்டிய சேவைகள் அனைத்தையும் தனியார்மயத்தின் பெயரில் முதலாளிகள் கைப்பற்றிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர். மழலையர் பள்ளி முதல் மருத்துவக் கல்வி வரை ஆக்கிரமித்து 'தரமான கல்வி' என்ற போர்வையில் விதவிதமான வழிகளில் - கல்விக் கட்டணம், சிறப்பு வகுப்பு, செருப்பு, சீருடை பேனா, பென்சில், பேருந்து என பெற்றோர்களைக் கசக்கிப் பிழிகின்றனர். எந்த சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றனர். அரியானா மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் இருநூறு ரூபாய் பணம் கட்டவில்லை என்பதால், இன்குபேட்டரில் இருந்த குழந்தைக்கு சிகிச்சையை நிறுத்தியதால் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்துவிட்டது. அரசு மருத்துவமனையே இப்படியென்றால் தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். அப்பல்லோ போன்ற கார்ப்பரேட், தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் முன்பணம் கட்டாவிட்டால் தொட்டுக்கூட பார்க்கமாட்டார்கள். இவையெல்லாம் அரசின் துணையோடு முதலாளிகள் நடத்தும் வன்முறையில்லையா?
போலி மருந்து தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள், பத்து மடங்கு, இருபது மடங்கு லாபம் வைத்து மருந்து விற்பனையில் கொள்ளையடிக்க்கும் கொலை பாதகத்தைச் செய்பவர்கள் யார்? தொழிலாளிகளா, முதலாளிகளா? மாசுப்பட்ட குடிநீரால் சென்னையில் காலரா நோய்க்கு 30 பேர் பலியாகிவிட்டனர். அசுத்தமான குடிநீரில் அன்றாடம் வாந்தி பேதிக்கு இரையாகும் மக்கள் ஏராளம். ஆனால் கொக்கோ கோலா, பெப்சி, டாடா, உள்ளூர் மாபியாக்கள் அனைவரும் நீர்வளத்தை உறிஞ்சி விற்று பல்லாயிரம் கோடிகளை சுருட்டுகின்றனர். தண்ணீர் சமூகத்தின் பொதுச்சொத்து, அதை முதலாளிகள் கைப்பற்றி உரிமை கொண்டாடுவது வன்முறையில்லையா? கட்டுப்படியாகாமல் கடன்பட்டு இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்? விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை அநியாய விலைக்கு விற்று, அடிமாட்டு விலைக்கு விளைச்சலை அபகரித்த முதலாளிகள் தானே! இது வன்முறையில்லையா?
பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பது, கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குவது, பொருள்களைப் பதுக்கி விலையேற்றுவது, கலப்படம் செய்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பொதுச்சொத்துக்கள், கனிவளங்கள், கிரானைட் ஆகியவற்றை கொள்ளையடிப்பது இப்படி அனைத்துக் கிரிமினல் குற்றங்களையும் செய்வது யார் தொழிலாளியா? முதலாளியா? இக்குற்றங்கள் வன்முறையில்லையா? பயங்கரவாதவில்லையா? சாராயம் காய்ச்சும் ரெளடி மீது பாயும் குண்டர் சட்டம் ஒரு குற்றத்தைக் கூட விட்டு வைக்காமல் செய்யும் முதலாளிகள் மீது பாய்வதில்லை. காரணம் இக்குற்றங்கள் தனியார்மயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு அரசு அதிகாரிகள் துணையோடு நடத்தப்படுவதால் தான்!
உழைப்பைச் சுரண்டுவது, நாட்டின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதோடு பண்பாட்டுத்துறையிலும் தங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் முதலாளிகள். விற்பனையை அதிகரிக்கவும், சந்தையை விரிவுப்படுத்தவும் பெரு விளம்பர யுத்தத்தை நடத்தி மொத்த சமூகத்திலும் நுகர்வு வெறியை, பாலூணர்வைத் தூண்டுகின்றனர். எல்லாவற்றையும் அனுபவிப்பது, எந்த வழியிலும் பணம் சேர்ப்பது, சுயநலம், ஆடம்பரமோகம் என்ற சித்தாந்தத்தைப் பரப்புவதன் மூலம் ஒழுக்கக் கேட்டையே புதிய சமூக ஒழுங்காக மாற்றுகின்றனர். இதன் விளைவு தான் நாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ரெளடித்தனம் ஆகியவை. சமூகம் பாதுகாப்பற்றதாக மாறிவரக்காரணம் முதலாளிகளின் லாபவெறித்தானே! இது வன்முறை இல்லையா?
முதலாளிகளின் அனைத்தும் தழுவிய இந்த வன்முறையை, பயங்கரவாதத்தை ஓட்டுக் கட்சிகளோ ஊடகங்களோ அம்பலப்படுத்துவதில்லை. ஏனெனில் இவர்கள் தனியார்மயத்தின் பங்காளிகளாகிவிட்டனர். ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பது, அதற்குப் போட்டி போடுவதே அவர்களின் ஜனநாயகம். உங்கள் எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை அம்பலப்படுத்த்வதால் தான் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்கின்றனர்.
இப்போது சொல்லுங்கள் யார் வன்முறையாளர்கள்? எது வன்முறை?
சூழ்ச்சி, வஞ்சகம், பித்தலாட்டம், மோசடி, லாபம் இவைதான் முதலாளிகளின் சிந்தனை. வரைமுறையின்றி இயற்கை வளங்கைச் சுரண்டுவதன் மூலம் சுற்றுச்சூழலை அழித்து பூமியின் இருத்தலுக்கே எதிராக இருப்பவர்கள் முதலாளிகள்.
உழைப்பாளி மக்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறோம். வன்முறையை நாம் சிந்திப்பதேயில்லை. அதனால் தான் அணு உலை வேண்டாம் என்கிறோம். ஆபத்து எனத் தெரிந்தும் தங்கள் சுயநலத்திற்கு அணு உலை வேண்டும் என்கின்றனர் முதலாளிகள்.
உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா? மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.
முதலாளித்துவ சுரண்டல், பயங்கரவாத ஒடுக்குமுறை இவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டுமானால் காங்கிரஸ், பா.ஜ.க. பிற ஓட்டுக் கட்சிகள் அமுல்படுத்தும் தனியார்மயக் கொள்கைக்கு முடிவுகட்டவேண்டும். இதற்கு மார்க்சிய - லெனினிய மாவோ சிந்த்னை வழியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தலைமையில் அணிதிரள்வது ஒன்றே வழி!
* நாடு மீண்டும் காலனியாவதைத்
தடுத்து நிறுத்துவோம்!
* முதலாளித்துவ பயங்கரவாதத்தை
அடித்து வீழ்த்துவோம்!
* போலி ஜனநாயக தேர்தல் பாதையைத்
தூக்கியெறிவோம்!
* நக்சல்பாரி புரட்சிப் பாதையில்
ஒன்றிணைவோம்!
மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.தொடர்புக்கு:அ. முகுந்தன்,
110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24
பேச : 94448 34519