தற்போது அரியலூர் மாவட்டம் வேப்பூர் ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும்
அந்த பெண்மணி தனது கணவரைக் கொலை செய்த குற்றத்துக்காக காவல்துறையை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
1994-ம் ஆண்டு வேப்பூரைச் சேர்ந்த அரிசி ஆலை அதிபர் சீமான் என்பவரின் மைனர்
பெண் ராணி. அவரது ஆலை யில் பணிபுரிந்துவந்த இளைஞர் ஒருவரு டன் அந்தப்பெண்
ஓடிப்போய்விட அவரை கண்டுபிடித்துத் தரக்கோரி உயர் நீதிமன்றத்தை நாடுகிறார்
பெண்ணின் தந்தை சீமான். அதைத் தொடர்ந்து அப்போது ஒருங்கிணைந்த திருச்சி
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், பாடாலூர் காவல்நிலைய ஆய்வாளர் கஸ்தூரி
காந்தி தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து மைனர் பெண்ணைக் கண்டு பிடிக்க
நடவடிக்கை எடுக்கிறார்.
இதைத்தொடர்ந்து காவல் ஆய் வாளர் காந்தி, மைனர் பெண் ராணிக்கு அடைக்கலம்
தந்து தப்பிக்க வைத்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் சென்னையில்
கொத்தவால் சாவடியில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிசெய்து வந்த
பாண்டியனை அழைத்துப்போய் விசாரிக்கின்றார்.அவருக்கு காதல் ஜோடியினர் பற்றிய
விவரங்கள் எதுவும் தெரியாததால் காவல்துறையினரின் விசாரணையில் எதுவும்
சொல்லவில்லை. இந்நிலையில் பாண்டியன் வேப்பூர் அருகே உள்ள கிழுமத்தூர்
சின்னாற்றங்கரையில் ஒரு வேப்பமரத்தில் தூக்கில் தொங்கி யதை அங்குள்ளவர்கள்
பார்த்துள்ளனர். பிணத்தின் கைகள் கட்டப்பட்டு, ஆசன வாயில் துணி
திணிக்கப்பட்டு காணப் பட்டதால் பொதுமக்கள் சந்தேக மடைந்தனர்.
இது காவல்துறையினர் செய்த கொலை என பாண்டியனின் மனைவி அஞ் சலையுடன் சேர்ந்து
அம்பேத்கர் இளைஞர் முன்னணி, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்
கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் சாலை மறியல், சைக்கிள் பேரணி, அலுவலகம்
முற்றுகை, பொதுக்கூட்டம் என பல்வேறுவிதமான போராட்டங்களை நடத்தி நியாயம்
கேட்டு போராடினர். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அப்போதிருந்த
அதிகாரிகள்.
சீமானின் அண்ணன் சுப்பிரமணியனை ஊர் மக்கள் முற்றுகையிட்டு நியாயம்
கேட்டபோது, அவர் போலீஸ்காரர்கள்தான் இந்த சம்பவத்துக்குக் காரணம் எனச்
சொல்ல ஊர்மக்களின் கவனம் காவல்துறை மீது திரும்பியது.
சென்னைக்குச் சென்று மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்) தேசிய
பொதுச் செயலரான வழக்கறிஞர் சுரேஷை சந்தித்தார் அஞ்சலை. 1995ம் ஆண்டு
சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது கணவரின் சாவுக்கு நீதி விசாரணை கேட்டு
வழக்குத் தொடுக்கிறார் அஞ்சலை. 2003-ம் ஆண்டு அந்த முறையீட்டை தள்ளுபடி
செய்துவிடுகிறது உயர் நீதிமன்றம். தனது நியாயப் போராட்டத்தை
நிறுத்திக்கொள்ள வில்லை அஞ்சலை. உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்சில் அப்பீல்
செய்கிறார். நீதிபதிகள் எலிப் பி. தர்மாராவ், கிருபாகரன் அடங்கிய அமர்வு
2013 ஜூன் 13ல் வழங்கிய தீர்ப்பில் அஞ்சலையின் கணவர் பாண்டியன் கொலை வழக்கை
சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பி உத்தர விட்டது. அத்துடன் அஞ்சலைக்கு ரூ.5
லட்சத்தை இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் இணைந்து இழப்பீடாக வழங்க
வேண்டுமெனவும் உத்தர விட்டது.
ஏற்கெனவே 1995-ம் ஆண்டு இந்த வழக்கை வருவாய் கோட்டாட்சியர் மூலம் விசாரணை
நடத்தி தற்கொலை என முடித்துவிட்டிருந்தது தமிழக காவல் துறை. விசாரணையை
தொடங்கிய சி.பி.ஐ-க்கு தேவையான ஆவணங்களை இல்லை எனச் சொல்லி தர மறுத்தது
தமிழக போலீஸ். பிறகு ஆகஸ்ட் மாதம் அஞ்சலையை தேடி வேப்பூர் வந்த சி.பி.ஐ.
போலீஸார் அவர்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஆவணங்களை (தூக்கில்
தொங்கியபோது எடுக்கப்பட்ட 3 புகைப்படங்கள் மற்றும் பிரேத பரிசோதனை
அறிக்கை) வாங்கிச் சென்றவர்கள் பிறகு நான்கைந்து முறை வேப்பூர் வந்து
விசாரித்திருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் அஞ்சலை மன முடைந்து ’இப்படியே நீங்கள் எத்தனை வருஷம்
விசாரித்துக்கொண்டேயிருக்கப் போகிறீர்கள்’ என தன்னை சந்திக்க வந்த சி.பி.ஐ
அதிகாரிகளிடம் கேட்டாராம்.அவருக்கு ஆறுதலாக பதிலளித்த ஒரு அதிகாரி, “இந்த
வழக்குல உம்பக்கம் நியாயம் இருக்கும்மா. நாங்க ஒருத்தரை குற்றவாளியா
நீதிமன்றத்துல நிறுத்துனா அவன் தப்பிக்கவே முடியாதபடிக்கு ஆதாரம்
திரட்டிட்டுத்தான் குற்றவாளியை கைது செய்வோம். அது கூடிய சீக்கிரம்
நடக்கும்” என்றாராம்.
“அவர் சொல்லிட்டு போயி ஏழெட்டு மாதங்கள் ஆச்சு. இப்போ 2 பேரு கைதுன்னு சேதி
வருது. (‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை நமது நிருபர்
கூறியபோதுதான் அவருக்கு இந்த செய்தி குறித்து தெரியவந்த தாம்.) எப்படியோ
எனக்கு வாழ்க்கை பறிபோயி 19 வருஷம் கழிச்சாவது நியாயம் கிடைச்சதே அதுவே
போதும். இப்போ அந்த போலீஸ் அதிகாரி நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரியில
படுத்திருக்கிறதா சொல்றாங்க.ஒரு கைதுக்கே அவங்க ளுக்கு நெஞ்சுவலி
வருதுன்னா கண வரை பறிகொடுத்த என்னோட நெஞ்சு என்ன பாடுபட்டிருக்கும்.
போலீஸ்கார வங்க சாமான்ய ஜனங்கள துன்புறுத்து றதுக்கு முன்னாடி தன்னை அந்த
இடத்துல நிறுத்தி ஒப்பிட்டுப் பாக்கணும்.
அந்த போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த நிலைமை நாளைக்கு யாருக்கும் வராத படி
போலீஸ் அதிகாரிங்க நடந்துகிட்டா அதுவே நான் இத்தனை வருஷம் நடத் திய
போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி” என்கிறார் படிக்காத கிராமத்துப் பெண்ணான
அஞ்சலை.
இந்த வழக்குக்காக அவர் நடத்திய நீண்ட நெடிய போராட்டம் அவரை இப்படி பேச வைத்திருக்கிறது.
அஞ்சலை தனது கணவரின் சாவுக்கு நியாயம் கேட்டு போராடிக் கொண் டேயிருந்ததால்
மறுமணம்கூட செய்து கொள்ளவில்லை. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி
வருகிறார். அவருக்கு சட்ட ரீதியான நியாயம் கிடைக்க பி.யூ.சி.எல் அமைப்பும்
அஞ்சலையின் உறவினர் ராமலிங்கமும் பலவிதங்களில் உறுதுணையாக இருந்துள்ளனர்.
நன்றி : தி தமிழ் இந்து -29/05/2014