> குருத்து: Love, Rosie (2014)

January 4, 2019

Love, Rosie (2014)

’பிரியாத வரம் வேண்டும்’ பிரசாந்த் ஷாலினி போல ரோசியும் அலெக்ஸ்யும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். பால்யத்திலிருந்தே நண்பர்கள். பதின் பருவத்தில் இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு வருகிறது. அலெக்ஸ் அதை வெளிப்படுத்துகிறான். ஆனால் ரோசி “நாம் இருவரும் நல்ல நண்பர்கள்” என சொல்லிவிடுகிறாள்.

பத்து வருடங்களுக்கும் மேலாக இருவர் மண வாழ்க்கையிலும் நிறைய கசப்பான அனுபவங்கள். இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதை முழு நீளக்கதையில் சொல்கிறார்கள்.
****

இந்திய மனங்களுக்கு இந்த படம் ஆச்சர்யமானது தான். பத்தே ஆண்டுகளில் இருவர் மண வாழ்க்கையிலும் எத்தனை மாற்றங்கள்? அதை எளிதாக கடந்து செல்வது போல காண்பிக்கிறார்கள். வளர்ந்த நாடுகளே என்றாலும், ஒவ்வொரு உறவின் முடிவிலும் வலி இருக்கத்தான் செய்யும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

காதலனுடான உறவில் கான்டம் பிரச்சனையில் குழந்தை பெற்றுகொள்ளும் நெருக்கடியில் மாட்டும் பொழுது, நமது குடும்பத்தின் மனநிலை அந்த பெண்ணை அதிகபட்சமாக தற்கொலை வரைக்கும் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். அந்த குடும்பம் அவள் தவறை மன்னித்து குழந்தையையும் கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். நமது சமூகம் நிறைய முன்னேறவேண்டும் என்பதை உணரமுடிகிறது.

திருமணம் ஆகாத உறவில், பெண் என்பவள் தனக்கு பிடித்த கல்வி, தொழில் என பலவற்றை இழக்கிறாள். ஆண்களுக்கு அந்த பாரங்கள் இல்லை என்பதையும் படம் சொல்லி செல்கிறது.

மண உறவுகள் கசந்து அதில் திசைவிலகல்கள், கொலைகள் வரை சென்றாலும், நமது சமூகத்தில் வாழ்வின் கடைசிவரை இழுத்துக்கொண்டு செல்கிறோம். அந்த சமூகத்தைப் பார்க்கும் பொழுது, ரெம்பவும் கசந்தால், பிரிவதும், அவரவர்களுக்கு பிடித்தமானவர்களோடு இணைந்து வாழ்க்கை செல்வது தானே சரி என்றும் தோன்றுகிறது! சரி தானே?

இந்திய கலாச்சாரம், பண்பாடு காப்பாற்றப்படவேண்டும் என விவாதத்திற்கு வந்துவிடாதீர்கள். நான் சொன்னதை கொஞ்சம் எதார்த்தமாய் யோசியுங்கள்.

இந்த படம் தமிழிலேயே கிடைக்கிறது. நண்பர் ஒருவர் பென் டிரைவில் தந்தார். ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம்.

0 பின்னூட்டங்கள்: