ஒரு கோழி பண்ணை. ஜிஞ்சர் என்ற புத்திசாலி கோழி தன் கூட்டத்தோடு தப்பி சுதந்திரமாக வாழ வேண்டும் என ஆசைப்படுகிறது. அதற்காக பல்வேறு வழிகளில் தப்ப முயற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது.
அந்த பண்ணையை நடத்துகிற பெண்மணி பேராசை பிடித்தவர். முட்டைகளை சேகரித்து சிறுக சிறுக பணம் சம்பாதிப்பது பிடிக்காமல் ஒரு எந்திரத்தை வரவழைத்து ஒரே நாளில் எல்லா கோழிகளையும் கொன்று மாமிச உணவாக மாற்றிவிட வேண்டும். அதன் மூலம் பெரும் பணம் கிடைக்கும் என அதற்கான எந்திரத்தை வரவழைக்கும் வேலைகளை செய்கிறார்.
அங்கிருந்து உடனடியாக தப்பிக்க வேண்டும். இல்லையென்றால் மரணம் என்ற சூழலில் எதேச்சையாக 'பறந்து' வந்து சேருகிறது ஒரு சேவல். 'தங்களுக்கு பறக்க கற்றுக் கொடு நாங்கள் தப்பிக்க வேண்டும் என கோழிகள் மன்றாடுகின்றன. பறக்க கற்றுக் கொண்டார்களா? அந்த பண்ணையில் இருந்து தப்பித்தார்களா? என்பதை ஏகப்பட்ட கலாட்டாக்களுடன் முழுநீள கதையில் சொல்கிறார்கள்.
*****
ஸ்டாப்மோஷன் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்பட வரிசையில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
ஒருமுறை மதுரை மீனாட்சி பவனில் சாப்பிட போயிருந்தோம். அங்கு சுதந்திரப் போராட்டம் குறித்து பல்வேறு கருப்பு வெள்ளை படங்களை அழகாக பிரேம் செய்து மாட்டி இருந்தார்கள்.
அங்கு காதல் பறவைகளை கூண்டில் அடைத்து வைத்திருந்தார்கள். அங்கு வைத்திருந்த குறிப்பு நோட்டில் "மனிதர்களின் சுதந்திரம் பற்றி பேசும் நாம் பறவைகளின் சுதந்திரம் பற்றி குறித்தும் கொஞ்சம் கவலைப்படலாம்" என எழுதி வைத்து வந்தேன்.
அடுத்த முறை போன பொழுது காதல் பறவைகளின் கூண்டை காணவில்லை. ஒரு தொட்டியில் நிறைய வண்ண வண்ண மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. பறவைகள் தப்பித்துக் கொண்டன மீன்கள் மாட்டிக்கொண்டன. 🙂
சுதந்திரத்தின் சுவை அறிந்தவர்கள் எல்லா சமூக அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுகிறார்கள். எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டேன் என்று வாழ்பவர்களுக்கு எடப்பாடியும் பன்னீருமே போதுமானவர்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment