எளிய மக்களோடு கலந்த பண்டுவம் படித்த நாவிதன் ஒருவனது வாழ்வைப் பதிவாக்கியிருக்கும் முத்துநாகுவின் முதல் நாவல் ‘சுளுந்தீ’ என்கிறார்கள்.
ஒரு பேரரசு மறையும் நேரத்தில் நாட்டில் நிலவும் நிறைய குழப்பங்கள், ஆட்சியதிகாரப் போட்டிகள் எப்படி இருக்கும் என்கிற கேள்விக்கு பதிலாய் ‘சுளுந்தீ’ 18 ம் நூற்றாண்டின் பின்னணியில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைய, வடுக மக்களின் தமிழக குடியேற்றம், நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் ‘கன்னிவாடி’ எனும் பாளையத்தின் மையம், பாண்டியத் தலைநகரின் மாற்றத்தின் பின்னணி, எதிர்க் கேள்விக் கேட்டவர்கள் ‘குலநீக்கம்’ செய்யப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வனங்களில், மலைகளில் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல வாழும் அவலம் என்கிற பின்புலத்தோடு எழுதப்பட்ட ‘சுளுந்தீ’ , நூலுக்காக மிக அதிகமாக உழைத்திருப்பதை நாவலில் சொல்லப்பட்டிருக்கும் வரலாறும், நுட்பமாய் சொல்லப்பட்டிருக்கும் பல அம்சங்களும் அதை நிரூபிக்கின்றன.
பொதுவான தமிழிலேயே படித்துவிட்டு, வட்டார வழக்கு என படிக்கும் பொழுது நான் மிகவும் சிரமப்படுவேன். முதன் முதலில் கோபால்ல கிராமத்தில் அதை உணர்ந்தேன். பிறகு ஜெயமோகனின் ஒரு நாவலை படிக்கும் பொழுது ஒரு சோர்வு ஏற்பட்டது. முத்துநாகு அரண்மனையை வியந்து பார்க்கும் பார்வையாக இல்லாமல், எளிய மக்களின் வாழ்க்கையை சொல்வதாக எழுதியிருப்பது வட்டார வழக்காக இருந்தாலும் எந்தவித தொந்தரவும் செய்யவில்லை.
நாவலில் சித்தர் ஒருவர் வருகிறார். அவருக்கு உதவும் பாத்திரத்தில் ராமன் வருகிறார். பல இடங்களில் நோய்களுக்கு நிறைய மருத்துவ குறிப்புகள் எழுதியுள்ளார். ஏன் இவ்வளவு விவரிக்கிறார் என தோன்றிக்கொண்டேயிருந்தது. அவர் போகிற போக்கில் அதை கவனமாக எழுதியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
நாவலில் குலநீக்கம் செய்யப்பட்டவர்களின் வாழ்க்கை கடுமையாக இருக்கிறது. அதற்கான பரிகாரம் அதைவிட பயங்கரமாக இருக்கிறது. இப்படி குலநீக்கம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாய் இணைந்து தங்களுக்கு தேவையானதை உழவு செய்வது, அதற்கு தேவையான கிணறு தோண்டுவது, அதற்காக வெடிமருந்தை அரண்மனையில் இருந்து எடுத்து பயன்படுத்தியது தெரிந்ததும் பதறிப்போகிறது. இனி இப்படி ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில் அடுத்தடுத்த உத்தரவுகள் பறக்கின்றன.
நாவலின் ஓரிடத்தில் பஞ்சம் வருகிறது. அதில் வரும் செய்திகள் எல்லாம் நம்மை உலுக்குகின்றன. புளியங்கொட்டைகளை அரைத்து குடித்து காலத்தை கடத்தியிருக்கிறார்கள். அரண்மனை காவல் படை வசூல் என்ற பெயரில் மக்களை கொள்ளையடித்திருக்கிறார்கள்.
பாதிரியார், அவர் சார்ந்த மதம் வருகிறது. அவருக்கு வேலை அரண்மனையை எதிர்த்து குல நீக்கம் செய்யப்பட்டவர்கள் அதிகாரத்தை எதிர்த்து போரிட்டு விடக்கூடாது என்ற இலக்கில், அவர்களை ஏசுவின் பெயரால் சாந்தப்படுத்தும் வேலையை பக்காவாக செய்கிறார்.
வண்ணான் தொழில் குறிப்புகளும் நாவலில் வந்து போகின்றன. வெள்ளாவி வைக்கும் பொழுது, துணியை அடுதடுத்து அடுக்கும் பொழுதே, சமூகத்தின் வர்க்க அடுக்களையும் புரிந்துகொள்ள முடிகிறது. அதில் மேலே உள்ள துணி யாருடையது என்றால்… பார்ப்பனர்களின் துணி. கீழே உள்ளவர்களின் துணி கடுமையாக உழைக்கும் “சூத்திர” மக்களின் துணி.
நாவலாசிரியரிடம் கேள்விகள் கேட்டு, பதில்களையும் அன்பாதவன் பெற்றிருக்கிறார். அதில் சில சுவாரசியமான கேள்விகளும், பதில்களும்.
சுளுந்தீ புதினத்தின் களம் வரலாறும் புனைவும் கலந்தது..எனில் வரலாற்றுக் காலம் எது?
நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கரின் காலமான 1650 முதல் 1680 வரை
இந்த நாவலை எழுத எத்தனை ஊருக்கு அலைந்தீர்கள்..எவ்வளவு காலம் ஆயிற்று?
தமிழகம், கருநாடகம், கேரளம், பகுதிகளுக்கு சென்று வந்தேன். காலம் நான் குறிப்பிட்டால் மிகையாக இருக்கும் என்பதால் பதிலை தவிர்க்கிறேன்.
திண்டுக்கல் தோல் பட்டறைகள் இந்நாவல் நிகழும் காலத்தில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டனவா?
ஆம். நாயக்கர் ஆட்சியின் துவக்க காலமான திருமலை நாயக்கர் காலத்திலே தோல் பதனிடும் பட்டறைகள் வந்து விட்டது. மன்னர் சொக்கநாதநாயக்கர் ஆட்சியிலே அது பெருக்கம் கண்டது.
பன்றிமலைச் சித்தர் தங்கியிருந்த குகைதான் கொடைக்கானல் குணா குகையா?
இல்லை. சித்தர் பொடவு என்ற சிறுகுகை பன்றிமலையில் உள்ளது. நீங்கள் குறிப்பிடும் பகுதியில் பிரிட்டீஷார் ஆட்சியிலே மனித நடமாட்டம் ஏற்பட்டது.
இந்த நாவலில் அரசு அதிகாரம், படை, மக்களின் வாழ்க்கை, பண்பாடு என கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. நாவலில் அம்சங்களை எடுத்துக்கொண்டு விவாதிப்பதற்கும் நிறைய இருக்கின்றன. இப்பொழுது தான் படித்து இருப்பதால், இது தொடர்பாக நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு பிறகு அசைப் போட்டு நாவல் குறித்த அறிமுகம் ஒன்றை விரிவாக எழுதுவது இன்னும் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். மீண்டும் ஒருமுறை பிறகு எழுதுகிறேன்.
பக்கங்கள் : 480
விலை : ரூ. 450 (நான்காம் பதிப்பு)
வெளியீடு : ஆதி பதிப்பகம்.