> குருத்து: ராஜா என்கிற பிச்சைக்காரன்

May 19, 2023

ராஜா என்கிற பிச்சைக்காரன்


என் சொந்த ஊரின் உறவுகளில் ஒன்றுவிட்ட மாமா ஒருவர் இருந்தார். அவர் செய்த தொழிலில் செல்வ செழிப்புடன் இருந்த பொழுது முதல் பையன் பிறந்தான். அவன் ராஜாவாக வாழவேண்டும் என ஆசைப்பட்டு ”ராஜா” என பெயர் சூட்டினார். அதற்கு பிறகு மூன்று பெண்பிள்ளைகள்.


செல்வ செழிப்பு நல்ல விசயங்களையும் கொண்டுவரும். கோளாறுகளையும் கொண்டுவரும். மாமா இன்னொரு பெண்ணையும் சேர்த்துக்கொண்டார். அவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள். சண்டைகள் இருந்தாலும், அவரது சொந்தங்கள் அந்த குடும்பத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். சொந்தங்களின் விசேசங்களில் அவரையும், குழந்தைகளையும் பார்க்கமுடியும்.

செய்த தொழில் நொடித்து போகும் பொழுது குடியையும் சேர்த்துக்கொண்டார். எப்பொழுதும் மிதக்க ஆரம்பித்தார். ஏதோ ஒரு விசேசத்திற்காக காவிரி ஆறு மிக மிக குறுகலாய்... ஆனால் நல்ல வேகத்துடன் ஓடும் கொடுமுடி ஊரில் தண்ணியைப் போட்டு மப்பில் நின்ற பொழுது, ஆற்றில் ஒரு தக்கையைப் போல இழுத்து செல்லப்பட்டார். தொடர்ந்து சில நாட்கள் தேடியும் மாமாவின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. காவிரியுடன் கலந்துவிட்டார்.

பிறகு திடீர் திடீரென "உங்க அப்பாவை ஈரோட்டில் பார்த்தேன். சேலத்தில் பார்த்தேன்" என யாராவது சொன்னால்... அவரது மகன் ராஜா இரண்டு நாட்கள் அங்கு போய் தேடிவிட்டு வருவான். பிறகு அவரைப் பற்றிய புரளிகளும் அடங்கிவிட்டன.

இப்பொழுது மாமாவின் வாரிசான ராஜாவிற்கு வருவோம். பள்ளி படிப்பு பெரிதாக இல்லை. இளைஞனான ராஜா பள்ளிகளின் வாசலில் ஐஸ் விற்க ஆரம்பித்தான். ”ஐஸ் ராஜா” என பெயர் பெற்றான்.

சீசனுக்கு சீசன் தொழிலை மாற்றுவான். வெயில் காலங்களில் ஐஸ் விற்பவன், கார்த்திகை, மார்கழியில்.. மீனாட்சியம்மன் கோயில் வாயில்களில் நின்று... ஐயப்ப பக்தர்களிடம் மாலைகள், கவரிங் நகைகள் விற்பான். பழனியின் அடிவாரத்தில் வியாபாரம் செய்வான்.

டல்லான ஆளெல்லாம் இல்லை. நன்றாக உழைக்க கூடிய, நன்றாக பேசக்கூடிய, திறமை கொண்டவன் தான். உதிரி தொழில் செய்பவர்களிடம் நன்றாக காசு புழங்கும். ஆனால் அவர்ளின் தொழிலின் தன்மையைப் போல ஏற்ற இறக்கங்களுடன் இருப்பார்கள்.

ராஜா அப்படித்தான். காசு இருந்தால் தண்ணி தான். நல்ல சாப்பாடு தான். இல்லையென்றால் அமைதியோ அமைதி.

அத்தனைத் தங்கைகள் இருந்த பொழுதும், அவன் ஒழுங்காய் இருந்தால் போதும். என பெண் பார்த்து மணம் முடித்தார்கள். ஒரு பெண் குழந்தை பிறந்தது. குடும்பம் கோருகிற ஒழுங்குக்கு கட்டுப்பட மறுத்தான். சில ஆண்டுகளிலேயே உறவு முறிந்தது.

இன்னும் மோசமானான். குடி. குடி. பார்க்கும் சொந்தங்களிடம் தயங்காமல் பணம் கேட்பான். வேலைக்கு போவது குறைந்தது.

சென்னைக்கு நான் இடம் பெயர்ந்ததும்… அவனைப் பற்றிய செய்திகள் எப்பொழுதாவது யாராவது சொல்வார்கள். அப்படி இந்த முறையும் செய்தி ஒன்றைச் சொன்னார்கள். இந்தச் சித்திரைத் திருவிழாவில் திருவோடு ஏந்தி பிச்சை எடுப்பதை சொந்தங்கள் சிலர் பார்த்திருக்கிறார்கள்.

அவனை அந்த நிலையில் பார்த்த உறவுக்கார பெண் "உழைக்காமல்... குடும்பத்தை கேவலப்படுத்துற மாதிரி சொந்த ஊரிலேயே இப்படி பிச்சை எடுக்குகிறேயே!" எனத் திட்டியதும் ஒரு புன்சிரிப்புடன் கடந்து சென்றுவிட்டானாம்.

உறவுகளில் பல மனிதர்கள் பொருளாதாரத்தின் பல படிக்கட்டுகளில் வாழ்ந்தாலும்.. நகரம் எங்கிலும் நிறைய மனிதர்கள் கையேந்துவதை பார்த்துக் கொண்டிருந்தாலும். முதன்முறையாக 40+ல் நம்மோடு வாழ்ந்த சக வயது மனிதன் ஒருவன் பிச்சை எடுக்கிறான் என கேள்விப்பட்டதும் பெரும் துக்கத்தை தருகிறது.

ஒரு மனிதனின் வீழ்ச்சி பல சிந்தனைகளை கிளர்ந்தெழ செய்கிறது.

0 பின்னூட்டங்கள்: