> குருத்து: புதிதாக எழுதுபவர்கள் கவனத்துக்கு:

June 18, 2023

புதிதாக எழுதுபவர்கள் கவனத்துக்கு:


 1. சமூகத்தில் தான் காணும் காட்சிகளை, அனுபவித்த அனுபவங்களை யாரிடமாவது சொல்லியே தீர வேண்டும் என்கிற ஆவலும் அதற்கான களமும் அமையும் போது எல்லோராலும் எழுத முடியும். எழுத வேண்டும்.


2. அப்படி எழுத வேண்டும் என்ற நெருக்கடி உருவாகி அதைத் தைரியமாக வெளிப்படுத்தும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்; வரவேற்புகள்.


3. பதின் பருவத்தில் ஏராளமான பேர் கவிதைகள், கதைகலள் எழுதி இருப்பார்கள். சில படைப்புகள் பிரசுரம் கூட ஆகியிருக்கலாம். அதன் பிறகு அவர்களை வாழ்க்கைச் சக்கரம் எங்கெங்கோ இழுத்துச் சென்று அலைக்கழித்திருக்கும். ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் அந்த இலக்கிய தாகம் உருவாகி அலைக்கழிக்கும்.  அந்தப் பதின் பருவத்தில் அவர்கள் மனதில் எது இலக்கியம் என்று பதிந்திருந்ததோ அதையே இப்போதும் எழுதக் கூடாது. 


4. சமூக ஊடகங்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய வெளிப்பாட்டு ஜனநாயக வெளியை  உருவாக்கி இருக்கிறது. அதிலிருந்து புதிது புதிதாக ஏராளமான எழுத்தாளர்கள் உருவாகி இருப்பது வரவேற்புக்குரிய விஷயம். ஆனால் சமூக ஊடகங்களில் எழுதியதை நூல் வடிவாக்கும் பொழுது எச்சரிக்கை தேவை.


5. முகநூலில் எதை எழுதினாலும் பின்னூட்டத்தில், 'நீங்கள் இதைப் புத்தகமாகப் போடலாமே..' என்று சொல்பவர்கள், புதிதாக எழுதுபவர்களின் ஆசையைத் தூண்டுகிறார்கள். அதற்கு காரணம் பின்னூட்டமிடும் நண்பர்கள் எழுதுபவர்களின் நண்பர்களாக இருக்கலாம் அல்லது பெரிய வாசிப்பாளர்களாக இல்லாமல் இருக்கலாம் அல்லது வாசிப்பே இல்லாதவர்களாகவும் இருக்கலாம். அவர்களுக்குத்தான் எல்லாமே புதிதாகத் தெரியும். அவர்கள் தங்களுக்குப் புதிதாகத் தெரிந்ததை மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்றுதான் அந்தப் பின்னூட்டத்தை எழுதுகிறார்கள். ஆனால் எழுத்தாளர் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.


6. அந்தத் தூண்டிலில் சிக்கி விடக்கூடாது முகநூல் பதிவுகளில் விழும் லைக்குகளோ கமெண்ட்களோ அந்த அந்த நேரத்தில் அந்த அந்த நாளிற்கு உரியவை. பிறகு நாமே நாம் எழுதியதைச் சிறிது காலம் கழித்து வாசித்துப் பார்த்தால் அதில் என்ன மிஞ்சி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்?


7. எந்தத் துறை சார்ந்தும் எழுதலாம். கதை, கவிதை, நாவல், கட்டுரை, அனுபவம், வரலாறு, அறிவியல், உளவியல் என்று எந்தத் துறை சார்ந்தும் நீங்கள் எழுதலாம். ஆனால் அந்தத் துறையின் தற்காலம் குறித்துக் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் நம்முடைய உழைப்பு காலாவதியானதாகிவிடும்.


8. நம்முடைய படைப்புகளை எப்போதும் எல்லோரும் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு எழுத்தாளன் எதிர்பார்க்கக் கூடாது. மாற்றுக் கருத்துகளை, விமர்சனங்களை, நிராகரிப்புகளை எதிர்கொள்ளவும் பழக வேண்டும். 


9. புத்தகம் போடுவதற்கு முன்னால், நமக்கு நம்பிக்கையான சில நண்பர்களிடம் கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லும் கருத்துகளைக் கவனமாகக் கேட்டு மீண்டும் படைப்பைச் செம்மைப்படுத்த வேண்டும். 


டால்ஸ்டாய் அவருடைய 'போரும் அமைதியும்' நாவலை மூன்று முறை திருத்தி எழுதியதாகச் சொல்வார்கள். அந்த நாவல் ஆயிரம் பக்கங்களைக் கொண்டது, என்றால் அவருக்குத் தன் எழுத்தின் மீதும் இலக்கியத்தின் மீதும் வாசகர்களின் மீதும் இருந்த ஈடுபாட்டைப் புரிந்து கொள்ளலாம்.


10. புத்தகமாகப் போடுவது என்று முடிவெடுத்து விட்டால் முடிந்த வரை முன்னுரை இல்லாமலோ அல்லது ஒரே ஒரு முன்னுரையுடனோ வெளியிடலாம். நான்கு அணிந்துரைகள், 5 வாழ்த்துரைகள், இரண்டு முன்னுரைகள், ஒரு என்னுரை என்று அந்தப் புத்தகத்தை ஆண்டு மலரைப் போல மாற்றி விடக் கூடாது.


11.  ஒரு படைப்பு முழுவதும் தன்னுடைய பலத்திலேயே தான் நிற்க வேண்டும். வாழ்த்துரை, அணிந்துரை, முன்னுரை என்று முட்டுக் கொடுப்பதால் மட்டும் நின்று விடாது.


12. அப்படி முன்னுரை அவசியம் என்றால் அதற்குப் பொருத்தமான எழுத்தாளரை அணுகிக் கேட்க வேண்டும். அப்படி கேட்கும்போது அந்த எழுத்தாளரின் படைப்புகளை நாம் வாசித்திருக்க வேண்டும். அவர் இந்தப் புத்தகத்திற்குப் பொருத்தமானவர் தானா என்பதையும் முதலிலேயே தெரிந்து கொள்ள வேண்டும்.


13. எழுத்து என்பது வாசகருடைய மனதிலோ, அறிவிலோ வேலை செய்து அவர்களுக்கு ஞானமும் வெளிச்சமும் இதுவரை அவர்கள் அறிந்ததிலிருந்து கூடுதலாக அறிய வைக்கிற ஒரு மந்திரச் சாவி. அந்தப் பொறுப்புணர்ச்சியும் கடின உழைப்பும் எழுத்தாளர்களின் அடிப்படைத் தேவை.


14. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்னமும் இளமை குன்றாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய தமிழ் இலக்கியப் புத்தகங்களில் நம்முடைய எழுத்தும் ஒரு பக்கமாகச் சேர்ந்து மிளிர வேண்டும் என்கிற அர்ப்பணிப்பு வேண்டும்.


15. 'நான் என் ஆசைக்கு எழுதி வெளியிடுகிறேன்' என்று புத்தகம் எழுதி வெளியிடுகிற எழுத்தாளர்கள், இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்; வரவேற்புகள்.


Udhaya Sankar

1 பின்னூட்டங்கள்:

'பசி'பரமசிவம் said...

ஏற்புடைய பயனுள்ள நல்ல பரிந்துரைகள்.