நாயகி 60+ ல் இருக்கிறார். பள்ளியில் மதம் சார்ந்த (Religious) கல்வி அளித்து ஓய்வு பெற்ற ஆசிரியர். ஒரு மகன், மகள் என இருக்கிறார்கள். கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
ஏதோ ஒரு வேகத்தில் பதிவு செய்து வந்துவிட்டார். காமம் குறித்து, தனது வயது குறித்து, தனது மகன் வயதில் வந்திருக்கும் ஒரு இளைஞனின் நிலை குறித்து என கடந்த கால மதிப்பீடுகள் அவளை கடுமையாக தொந்தரவு செய்கின்றன. அவளால் அவ்வளவு எளிதாக இருக்க முடியவில்லை. ஈடுபடவும் முடியவில்லை.
வந்திருந்த இளைஞனும் நாயகியும் தொடர்ந்து பேசுகிறார்கள். அவன் அவளுடைய குற்ற உணர்வை தனது பேச்சின் மூலம் களைய முயல்கிறான்.
ஐம்பதே வளையாது. அறுபது அத்தனை சீக்கிரம் வளையுமா? அவளின் அறிவு அவனைப் பற்றிய ஆய்வுக்குள் இறங்குகிறது. யார் இவன்? இவனோடு குடும்பம் இவனை கைவிட்டுவிட்டதா? இவன் இப்படி ஏன் தவறான விசயத்தில் ஈடுபடுகிறான். இவனை எப்படி நல்வழிப்படுத்துவது? என மண்டைக்குள் ஓடும் கேள்விகள் அவனிடம் கேள்வி மேல் கேள்விகள் எழுப்புகிறாள்.
இது தற்காலிக (பண) உறவு. தனிப்பட்ட எந்த விவரத்தையும் பகிர்ந்துகொள்வது அவசியமில்லை. கூடவும் கூடாது. ஆகையால் அவன் அந்த எல்லையை தாண்டக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறான்.
அந்த சந்திப்பிற்கு பிறகு அடுத்தடுத்து என நான்கு சந்திப்புகள் நடைபெறுகின்றன.
பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
****
ஒரு ஹோட்டல் அறை. ஒரு ரெஸ்டாரண்ட். இந்த இரண்டு இடங்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டார்கள். இந்த படம் காமம் பற்றிய படமல்ல! காமம் குறித்தும், பிற விசயங்கள் குறித்தும் பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நீண்ட உரையாடல் தான் மொத்தப்படமும் எனலாம்.
அந்த அம்மா தன் தாம்பத்யம் குறித்து பகிர்ந்துகொள்வார். தனது கணவர் படுக்கையில் எப்படி நடந்துகொள்வார்? காமம் குறித்த அவருடைய பார்வை என்பது எத்தனை வரம்புக்குட்பட்டதாக இருந்தது. அந்த எண்ணங்கள் தான் படுக்கையறையில் அவருடைய நடவடிக்கைகளை தீர்மானிப்பதாக இருந்தது. அது தனக்கு அத்தனை போதுமானதாக இருந்ததில்லை. இப்பொழுது நினைத்தால், துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பதை கண்களில் நீர் வடிய சொல்வார்.
அந்த இளைஞன் தனது பதினைந்து வயதில் காமம் குறித்த எங்கோ, ஏதோ செயல் செய்து, அது அம்மாவிற்கு தெரியவந்து… இவனை வெறுத்தவர் தான். அதற்கு பிறகு அவனுடைய பெயரை உச்சரிப்பதே இல்லை. விட்டுவிட்டு போய்விட்டார் என சொல்லும் பொழுது கலங்கித்தான் சொல்வான்.
இந்த உரையாடலை கவனிக்கும் பொழுது, கல்வி, அறிவு, பொருளாதாரம், புரிதல்களில் என வளர்ந்த நாடுகளிலேயே காமம் குறித்த புரிதல், நடைமுறை இவ்வளவு சிக்கலாக இருக்கும் பொழுது நம்மைப் போன்ற பின் தங்கிய நாடுகளில் எவ்வளவு சிக்கலானதாக இருக்கும் என்பதை யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது.
நம் நாட்டில் முன்பு விவாதிக்காத பல விசயங்களை குறித்தும் வெளிப்படையாக பேச துவங்கியிருக்கிறோம். விவாதிக்கிறோம். ஆனால் காமம் குறித்து இன்னும் துவக்க நிலையிலேயே தான் இருக்கிறோம். ஏனெனில் ”தாம்பத்யம் என்றால் புனிதம்” என மிகவும் உயரத்தில் வைத்திருக்கிறோம். அதனாலேயே விவாதிப்பதில்லை. புரிதல் இருப்பதில்லை.
கடந்த இரு பத்தாண்டுகளில் தான் பத்திரிக்கைகளில் மருத்துவர்கள் காமம் குறித்த கட்டுரைகள், கேள்வி பதில்களாய் பார்க்க முடிகிறது.
கணவனுக்கும், மனைவிக்கும் தாம்பத்தியத்தில் ஒரு புரிதல் பிரச்சனை. அணுகுமுறையில் பிரச்சனை என இருந்தால், அதை சொந்தங்களிடம் பேசுவதில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். முறையாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்போம். குறைபாடு இருந்தால், உரிய மருத்துவம் பார்ப்போம் என்ற சிந்தனை எத்தனை பேருக்கு நம் ஊரில் இருக்கிறது? அந்த சிக்கலை ஊதி ஊதி பெருக்கி, விவாகரத்து அளவுக்கு கொண்டு போய்விட்டு விடுகிறோம்.
மருத்துவர் காமராஜ் பாலியல், காமம் குறித்த தொலைக்காட்சியில் தொலைபேசியில் மக்களிடம் விவாதிக்கும் பொழுது, அவர்கள் என்ன வயதில் இருந்தாலும், அவர்கள் கேட்கும் பல சந்தேகங்கள் எல்லாம் எல்.கே.ஜி. அளவில் தான் இருக்கும். உதாரணத்திற்கு, ”சுய இன்பத்தில் ஈடுபடலாமா? அதனால் ஏதும் பிரச்சனையில்லையே!”
நான் அறிந்து ஒரு மூத்தவர் இருக்கிறார். அவரிடம் கணவன் மனைவி பிரச்சனை என விவாதிக்கப் போனால், முதன்மையாக இரண்டு கேள்விகளை கேட்பார். இருவருக்கும் தாம்பத்ய உறவில் பிரச்சனை இருக்கிறதா? குடும்பத்தில் பொருளாதார ரீதியாக பிரச்சனை இருக்கிறதா? இந்த இரண்டு மையமான பிரச்சனைகளை தீர்த்துவிட்டால், மற்ற பிரச்சனைகளை எளிதாக சரிசெய்துவிட முடியும் என்பார். பல குடும்பங்களை கவனித்த வரையில் அது உண்மை என உணர்ந்திருக்கிறேன்.
வேறு பார்வைகள், கோணங்கள் இருந்தால் தெரிவியுங்கள். அறிய காத்திருக்கிறேன். விவாதிக்கலாம்.
மற்றபடி, இப்படி ஒரு விபச்சாரம் என்பது சமூகத்திற்கு தேவை என்பது போல இறுதியில் நகர்த்தியிருப்பார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குடும்பத்திற்குள், தாம்பத்தியத்திற்குள் ஒரு புரிதலை உருவாக்கவேண்டும். விஞ்ஞானத்தின் உதவியால், மருத்துவர்களின் உதவியால் கோளாறுகளை சரி செய்யவேண்டும் என்பதை விட்டுவிட்டு… இப்படி ஒரு வழியை உண்டாக்குவது சிக்கலானது. குழப்பங்களைத் தான் விளைவிக்கும்.
காமம் என்பது ஒவ்வொரு உயிருக்கும் உயிரியல் தேவை. அடுத்தடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு அவசியமானது. அதனால் தான் எல்லா உயிரினங்களும் காமத்தில் தேவைக்கு, அளவோடு ஈடுபடுகின்றன. ஆனால், முதலாளித்துவ சமூகத்தில்… உணவில், உடையில், பொருட்களில் புதிது புதிதாக தேடுவது, நுகர்வது என்பது நுகர்விய பண்பாடு என்பது சிக்கலானது. அதை காமத்திலும் கொண்டு வருகிறார்கள். புதிய புதிய ஆட்களோடு உறவு. கூட்டமாய் உறவு கொள்வது என சிக்கலாய் நகர்த்துகிறார்கள். அது ஆரோக்கியமற்றது. தவறானது என நினைக்கிறேன்.
நாயகியாக வரும் எம்மா தாம்சன் (Emma Thompson), இளைஞனாக வரும் Daryl McCormack இருவரும் சிறப்பான நடிப்பு. நாயகி எப்படி இப்படி ஒரு கதையில் நடித்தார் என அதற்கான அடிப்படையை தேடினால்…. விக்கி பீடியாவில் அவரைப் பற்றிய குறிப்புகளில் ஓரிடத்தில் இப்படி சொல்லியிருக்கிறார்.
”நான் ஒரு நாத்திகவாதி (Athiest) ... நான் மதத்தை பயத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்கிறேன். கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் மட்டும் போதாது. நான் உண்மையில் இந்த அமைப்பை துன்பகரமானதாகக் கருதுகிறேன்: பைபிளிலும் குர்ஆனிலும் கூறப்பட்டுள்ள சில விஷயங்களால் நான் புண்பட்டுள்ளேன், அவற்றை நான் மறுக்கிறேன்” என்கிறார்.
இயக்குநர் ஆஸ்திரேலியாவை சார்ந்த ஒரு பெண் இயக்குநர் Sophie Hyde. இந்தப் படம் உலக அளவில் நிறைய விருதுகளை, பாராட்டுதல்களை பெற்றுள்ளது. நல்ல படம் பாருங்கள். பிரைம் வீடியோவில் இருப்பதாக இணையம் சொல்கிறது. படம் குறித்து நண்பர்களுடன் விவாதியுங்கள்.
5 பின்னூட்டங்கள்:
Velu Subramaniam
Excellent write up
from Facebook, 30/09/2023
திரைப்படம் என்பது சமூக சீர்திருத்தத்திற்கு உதவாது.
பசி,காமம் ---வயதுக்கு அப்பாற்பட்டது.
நாயகி, மத சம்பந்தமான பாடம் நடத்திய ஆசிரியை என்பது கவனிக்கத்தக்கது.
Practising the Preachings -----
கடினம்
கல்வி.
கலவி -----
ஒரு புள்ளி மட்டுமே வேறுபாடு.
மற்றபடி பதிவில் எதார்த்தமான செய்திகள், கருத்துகள் --நன்றி
- Chandra sekaran, from facebook, 30/09/2023
Ramasubramanian Muthukamatchi
மறுபடியும் பார்க்க உங்களருமையான பதிவு தூண்டுகிறது.இயல்பானது காமம் என்பதை காட்ட முயன்று வெற்றி பெற்றுள்னர்
- From Facebook, 30/09/2023
Aathiarivu Arivu
”மற்றபடி, இப்படி ஒரு விபச்சாரம் என்பது சமூகத்திற்கு தேவை என்பது போல இறுதியில் நகர்த்தியிருப்பார்கள்...” படம் சொல்வது அப்படியொரு விபச்சாரத்தையா அல்லது அப்படிப்பட்ட உறவின் அவசியத்தையா என்கிற கேள்வி எழுகிறது. படம் பார்த்தால்தான் தெரியும். பல பதிவுகளுக்குப் பிறகு ஒரு அருமையான பதிவு, உங்களிடமிருந்து. நன்றி.
- From Facbook, 30/09/2023
Bhalamurugan Rajaraman
அறிவியல் அணுகுமுறையில் ஒரு பெரும் மக்கள் தொகை கொண்ட சமுதாயத்தின் திருத்தம் அல்லது சீர்திருத்தம் என்பது கால வம்பில்லாதது. இது போன்ற விபச்சாரம் என்பது ஒரு இடைக்கால தீர்வாக அமையலாம்.
- From Facebook, 30/09/2023
Post a Comment