கல்லூரியில் படிக்கும் நாயகிக்கு, அன்று அவள் அம்மாவின் இரண்டாவது நினைவு தினம். மிகவும் பிடித்தமான அம்மா. அம்மாவின் திடீரென மறைவு அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அம்மாவின் நினைவுகளால் நிரம்பி வழிகிறாள். உறவுகள் ஆறுதல் சொல்லிப்போகிறார்கள். மிகவும் சோர்வாக இருக்கிறாள்.
போன இடத்தில் சக கல்லூரி நண்பர்கள் சிலர் அங்கு இருக்கிறார்கள். Ouija போர்டு போல ஒரு விளையாட்டு. நிறைய இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாகியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் காணொளிகள் நிரம்பி வழிகின்றன.
விளையாட்டு இது தான். பீங்கானால் ஆன ஒரு கை. ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள். விளையாடுபவரை இறுக்கமாக பெல்ட்டால் சேரில் கட்டிப்போடுகிறார்கள். அந்த கையோடு கை பொருத்தி, ”என்னோடு பேசு!” (Talk to me) என சொன்னதும் ஒரு கோர/பேய் உருவம் விளையாடுபவரின் கண்ணுக்கு மட்டும் தெரிகிறது. ”எனக்குள் வா” (I let you in ) என சொன்னதும்… பேய் பிடித்துவிடுகிறது. விநோதமாக நடந்துகொள்கிறார்கள். பார்ப்பவர்களுக்கு பயமும், ஆச்சர்யமுமாய் இருக்கிறது. எல்லாம் 90 விநாடிகள் தான். துண்டித்துவிடுகிறார்கள். இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகிறார்கள்.
அடுத்த நாள். தோழி தன் காதலனிடம் சொல்ல… அவன் விளையாடுவதற்கு ஆர்வம் கொள்கிறான். தோழியின் வீட்டில் அன்றிரவு சந்திக்கிறார்கள். காதலன் விளையாட, பேய் பிடித்த சமயத்தில் நாய்க்கு லிப் டு லிப் கொடுத்துவிடுகிறான். கலாய்க்கிறார்கள். அவன் அவமானத்தில் வெளியேற, சமாதானப்படுத்த தோழியும் வெளியே செல்கிறாள். மற்றவர்களும் விளையாடுகிறார்கள். முடிவில், தோழியின் தம்பி விளையாட ஆசைப்படுகிறான். 18 வயதுக்கு மேல் தான் என முதலில் மறுக்கிறார்கள். அவன் நாயகியிடம் அடம்பிடிக்க… 50 வினாடிகள் தான் என்ற முடிவில் விளையாட அனுமதிக்கிறார்கள்.
இந்த முறை பேயாக வந்து இறங்குவது, நாயகியின் அம்மா. ரெம்ப பாசமாய் பேச, விநாடிகள் கடக்க… நாயகி இன்னும் கொஞ்ச நேரம் என தாமதிக்கிறாள். அதற்கு பிறகு நடப்பது எல்லாம் ரணகளம்.
பின்பு என்ன ஆனது என்பதை பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
***
2022ல் அமெரிக்காவில் வெளியாகி, இந்தியாவில் ஜூலை மாதத்தில் வெளியாகியிருக்கிறது. இடைவெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. சென்னையில் மல்டிபிளக்சுகளில் சமீபத்தில் வெளியாகி சில நாட்கள் ஓடியது.
சமீபத்தில் பார்த்த பேய்படங்களில் The smile (2022) படம் நன்றாக பயமுறுத்தியது. இந்த ஆண்டிற்கு இந்தப் படம் என தாராளமாக சொல்லலாம்.
பேய் என்பதே கற்பனை தானே! ஆகையால் லாஜிக் இல்லாமல் நன்றாக விளையாடலாம். ஆனால் நம் இயக்குநர்களுக்கு கற்பனை வறட்சி என்பதால், பல பேய் படங்களும் போராடிக்கின்றன. இந்தப் படம் கற்பனை குதிரையை தட்டி விட்டு, பட்ஜெட்டுக்குள் எடுத்தப் படம் தான். உலகம் முழுவதும் வலம் வருகிறது. அடுத்தடுத்த பாகங்களும் நிச்சயம் வெளிவரும். எதிர்பார்க்கலாம்.
நாயகி Sophie Wilde அருமையாக நடித்திருக்கிறார். பிறகு அந்த பையன். மற்றவர்களும் சிறப்பு. இசை, ஒளிப்பதிவு எல்லாம் துணை நின்றிருக்கின்றன.
பேய் பட விரும்பிகள் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment