> குருத்து: A hard day (2014) தென்கொரியா

November 5, 2023

A hard day (2014) தென்கொரியா


ஒரு விபத்தும், தொடர் பிரச்சனைகளும்!

நாயகன் ஒரு போலீசு (Homicide) அதிகாரி. அவனின் அம்மா இறந்துவிட்டார். வேலை நெருக்கடியில் தாமதமாகிவிட, மிக வேகமாக அந்த நெடுஞ்சாலையில் காரில் போய்க்கொண்டிருக்கிறான்.

அவன் ஒரு லஞ்ச பேர்வழி போலீசு. அதே வேளையில் லஞ்ச போலீசு ஒழிப்பு அதிகாரிகள் அவன் அலுவல மேஜையை குடைந்துகொண்டிருக்கிறார்கள். அந்த தகவலையும் சக அதிகாரி சொல்கிறார்.

பதட்டம் அதிகமாக, கவனம் பிசகி சாலையில் ஒரு ஆளை தூக்கி அடித்து விடுகிறான். சோதித்தால், அடிப்பட்டவன் செத்துப்போய்விட்டான். போலீசு வண்டி ஒன்று வருகிறது. இருட்டில் மறைத்துவிடுகிறான். இங்கேயே உடலை விட்டுவிட்டால், மாட்டிக்கொள்வோம் என வண்டியின் பின்னால், தூக்கிப்போட்டு கிளம்பிவிடுகிறான்.


அந்த உடலை அவன் மறைப்பதற்குள் நாமே கூட்டு செய்து கொலை செய்தது போல வேர்த்து விறுவிறுத்துப்போய்விடுகிறோம்.

எல்லாம் முடிந்தது என ”நிம்மதி” அடைந்தால், “பாடியை என்னப்பா செய்தாய்?” என மிரட்டி போலீசு ஸ்டேசனுக்கே போனில் அழைப்பு வருகிறது. இவனே ஒரு லஞ்சம் வாங்குகிற ஆள். இவனை விட ஒரு பெரிய ஆள், கிரிமினல் பேர்வழி மிரட்டுகிறான்.

அடுத்தடுத்து அவன் நகர்த்தும் அதிரடி செயல்களால், இவனால் சமாளிக்க முடியாமல் திணறிப்போகிறான். இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பித்தானா? என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

****

போலீசை வைத்து நிறைய கதைகள் வந்திருக்கின்றன. போலீசுக்குள் நடக்கும் முரணை வைத்து தான் இந்த கதை. அதை துவக்கம் முதல் இடையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், பிறகு இறுதிவரை சுறுசுறுப்பாக இருக்கும்படி எடுத்திருக்கிறார்கள்.

”இப்படி ஒரு பாசமான மகனை பார்த்ததேயில்லை!” என சரியான நக்கலும் உண்டு. அம்மாவின் இறப்புகாக துக்கம் கேட்க வந்தவர்கள் “நம்ம எல்லோருடைய பணமும் உன் டிராயரில் மாட்டிக்கிடுச்சு! எங்களைக் காட்டிக்கொடுத்துவிடாதே! நீயே பழியை ஏத்துக்கோ!” என்பார்கள்.

உலகிலேயே சட்டத்தை மீறுபவர்கள் யார்? என கேடி, கிரிமினல்கள் என நமக்கு தோன்றும். என்னைக் கேட்டால், முதலிடத்தில் போலீசு தான் என்பேன். சட்டம், நீதிமன்றம், தண்டனை எல்லாம் மக்களுக்கு தான். தங்களுக்கு இல்லை என ஆழமாய் நம்புவர்கள் அவர்கள் தான். கேடி, கிரிமினல்களை கூட நாம் வாழ்நாளில் சந்திக்காமல் வாழ்ந்துவிடமுடியும். ஆனால், நிறைய அதிகாரம் உள்ள போலீசை நல்லது, கெட்டது என இரண்டிற்கும் வாழ்நாளில் எதிர்கொண்டே ஆகவேண்டும்.


போலீசின் சமூகப் பாத்திரத்தை சரியாக புரிந்துகொண்டதால் தான் ஒரு பேட்டியில் இயக்குநர் வெற்றிமாறன் ”என்னால் இயக்குநர் ஹரியை போல போலீசை நாயகனாக வைத்து படம் எடுக்க முடியவே முடியாது” என்றார்.

படத்தில் நடித்த நாயகன், வில்லன் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். Kim Seong-hun இயக்கியிருக்கிறார். வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். இணையத்தில் ஆப்பிள் ஓடிடியில் இருப்பதாக Justwatch தளம் சொல்கிறது.

0 பின்னூட்டங்கள்: