வீட்டிலேயே வாரம் இரண்டு நாட்கள் வேலை செய்ய நேரிடுவதால், இணையம் தேவை என தேடும் பொழுது, எதிர்த்த வீட்டுக்காரர் Hathway இப்பொழுது தான் இணைப்பு கொடுத்தேன். நன்றாக இருக்கிறது என பரிந்துரைத்தார். அவருடைய வேலையே இணையத்தில் தான் என்பதால், நானும் வாங்கிக்கொண்டேன்.
மூன்று மாதங்களில் அடுத்த தெருவுக்கு வீடு மாற வேண்டியிருந்தது. Hathwayக்கு தெரிவித்தேன். வந்து மாற்றிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
ஆனால் அதற்கு பிறகு தான் பிரச்சனை. சிஸ்டத்தில் இணையம் பிரச்சனையில்லை. வீடு மாறும் பொழுது, டிஷ் ஆன்டானாவை விட்டுவிட்டு வந்துவிட்டேன். செய்திகள் மட்டும் தானே ! இணையத்தை வைத்து, யூடியூப்பில் பார்த்து சமாளித்துக்கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டேன். ஆனால், Hathway அதற்கு ஒத்துவரவில்லை. தொலைக்காட்சி நின்று நின்று ஓடிக்கொண்டிருந்தது. வீட்டில் இருப்பவர்கள் கடுப்பாகிவிட்டார்கள்.
இத்தனைக்கும் நான் வாங்கியது குறைவான வேகமெல்லாம் இல்லை. 300 Mbps வேகம் கொண்டது. சோதிக்கும் பொழுது தான் தெரிகிறது. 30ஐ கூட தொடவில்லை. அநியாயம்.
கஸ்டமர் கேர் எண்ணில் தொடர்புகொண்டால், என் எண்ணை ரீசார்ஜ் செய்ய சொல்கிறது. டேய் இதில் தானாடா ஊருக்கே பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு மட்டும் என்னடா தனி ரீசார்ஜ் என கடுப்பானேன். சென்னையில் அவர்களுக்கும் எங்கும் அலுவலகம் இல்லை. மின்னஞ்சலில் பிரச்சனையை எழுதினால், பத்து நாட்கள் கழித்து, பிரச்சனையை சரி செய்துவிட்டோம் என பதில் அனுப்பினார்கள். ஆனால், பிரச்சனை அதே அளவில் நீடித்தது. ஆக பொய் சொல்லியிருக்கிறார்கள்.
மீண்டும் மின்னஞ்சல் அனுப்பினேன். கண்டுகொள்ளவில்லை. பகுதிக்குள் Hathwayக்கு விளம்பரப்படுத்துவதற்காக, இரண்டுபேர் பிட் நோட்டிஸ் கொடுத்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரை அழைத்து, இவ்வளவு மோசமான சேவை கொடுக்கீறீர்களே! இதுக்கு பிறகும் விளம்பரம் கொடுப்பதெல்லாம், உங்க மன உறுதியை காட்டுகிறது! என கலாய்த்து பேசினேன். மறுத்து பேசவில்லை. போய்விட்டார்.
பத்து நாட்கள் கழித்து பிட் நோட்டிசில் இருந்த தொலைபேசி எண்ணை அழைத்தால், “நான் இப்பொழுது ஏர்டெல்லுக்கு மாறிவிட்டேன். அன்றைக்கு நீங்கள் என்னிடம் தான் பேசினீங்க! ஏர்டெல்லுக்கு மாறிக்கிங்க! Hathway அப்படித்தான்! ஏர்டெல் நல்லா இருக்கு சர்வீஸ்!” என்றார்.
வரச்சொன்னேன். உடனே கனெக்சன் கொடுத்தார்கள். தொலைகாட்சியும் நின்று நின்று ஓடுகிற பிரச்சனை சரியாகிவிட்டது. ஹாத்வேயை விட குறைவான கட்டணம் தான். அப்பாடா! என நிம்மதியடைந்தேன்.
அதற்கு பிறகு ஹாத்வேக்கு பணம் கட்டாமல் விட்டுவிட்டேன். அதற்கு பிறகு தான் தொல்லையே! ஒரு மணிநேரத்துக்கு ஒரு போன். “வேகமே இல்லை. புகார் செய்தாலும் கண்டுகொள்ள மறுக்கிறீர்கள். ஆகையால் ஏர்டெல்லுக்கு மாறிவிட்டேன்.” என பதிலளித்தேன்.
ஹாத்வேயில் அவர்களுக்கென ஒரு பிரத்யேக கஸ்டமர் கேர் சிஸ்டம் இல்லை போலிருக்கிறது. இப்படி துண்டித்துப் போன இணைப்புகளை பேசி சரி செய்து, மீண்டும் இணைய வைத்தால், அவர்களுக்கு நல்ல கமிசன் தருவார்கள் போலிருக்கிறது. நான் சொல்வதை கேட்கும் பொறுமை எல்லாம் அவர்களுக்கு இல்லை. ”பணம் கட்டுங்க! பணம் கட்டுங்க!” என கிளிப்பிள்ளை போல சொல்ல ஆரம்பித்தார்கள். பிறகு தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வருவதை தவிர்த்தேன்.
இப்பொழுது கோபம் எல்லாம் போய், ஹாத்வே என சொன்னால், நிதானமாக திட்ட ஆரம்பித்தேன். இது ஒரு நாலு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது இவன் பணம் கட்டமாட்டான் என முடிவுக்கு வந்துவிட்டார்கள். நேற்று ஒருவர் போன் செய்து, “மோடத்தை (Modem) திருப்பித்தாருங்கள்” என்றார். தரலைன்னா 2500 தரவேண்டும் என வாட்சப்பில் செய்தியும் அனுப்பினார்கள். வந்து ஒரு ரசீது தந்து ஒரு இளைஞர் வந்து வாங்கியும் சென்றுவிட்டார். இன்று காலையில் ஒருவர் போன் செய்து, அதே மோடத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். நேற்று ஒருவர் வாங்கிப்போய்விட்டார் என்றேன் நிதானமாக. ”எத்தனை மணிக்கு வந்தார்? ” என கேட்டதும், “ஆமாம்பா! எத்தனை மணி, ஆள் எப்படி இருந்தார்? இன்னும் என்னென்ன கேள்விகள் கேட்பீங்க! நல்லா திட்டிருவேன்! போனை வைச்சிரு தம்பி! என்றேன். வைத்துவிட்டார்.
குறிப்பு : இந்த பதிவை எழுதிவிட்டு, புகைப்படங்கள் தேடும் பொழுது, என்னைப் போலவே தொல்லைகள் அனுபவித்தவர்கள் யூடியூப்பில் பேசியிருக்கிறார்கள். படங்களை பகிர்ந்திருக்கிறார்கள். அதைத்தான் மேலே பகிர்ந்துள்ளேன்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment