1980 களில் ஈரானில் நடக்கிறது கதை. நாயகி, தன் கணவன், ஏழு வயது மகளுடன் ஈரான் தலைநகரில் வசிக்கிறார். நாயகி மருத்துவ கல்லூரி மாணவியாக 80களில் அரசுக்கு எதிராக நடந்த இடதுசாரி போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக, கல்லூரி படிப்பை தொடர முடியாது என முதல்வர் உறுதியாக மறுத்துவிடுகிறார்.
இப்பொழுது ஈராக்கிற்கும், ஈரானிற்கும் சண்டைகள் நடந்துகொண்டிருக்கிறது. மருத்துவராக இருக்கும் கணவனுக்கு இராணுவத்தில் வேலை செய்தே ஆகவேண்டும் என உத்தரவிடுகிறது. அவனின் ”அம்மா வாழும் பகுதியில் போர் இல்லை. ஆகையால் அம்மாவோடு போய் இரு!” என சொன்னால், அவளுக்கு அதில் உடன்பாடில்லை. பிடிவாதமாக அங்கேயே இருக்கிறாள்.
போர் தீவிரமாகிறது. அவள் வாழும் பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. அலாரம் சத்தம் வந்தால், கீழே ஒரு நிலவறையில் போய் ஒளிந்துகொள்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்கள் அங்கிருந்து மெல்ல மெல்ல வேறு இடங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இறுதியில் மிஞ்சுவது நாயகியும், அவளின் குட்டிப்பெண் மட்டும்!
இதற்கிடையில் அங்கு அமானுஷ்யமான விசயங்கள் நடக்க துவங்குகின்றன. முதலில் குட்டிப்பெண்ணுக்கு தெரிகிறது. பிறகு அவள் கண்களுக்கும் தெரிய வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதை கொஞ்சம் பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
****
ஒருமுறை அமானுஷ்ய விசயங்கள் இவளுக்கும் தெரிய வர, குழந்தையை தூக்கிக்கொண்டு, போட்டிருந்த ஆடையோடு தெருவில் ஓடிக்கொண்டிருப்ப்பாள். அங்கு வரும் போலீசு, அவளை அழைத்துக்கொண்டு போலீசு ஸ்டேசன் கொண்டு போய்விடும். என்ன பிரச்சனை என்று கூட கேட்காமல், நீ ஏன் உடலை மறைக்கும் துணி அணிந்துவரவில்லை. இப்படி அணியாததால் தான், எல்லா தப்புகளும் நடக்கின்றன என முதலில் அந்த ஆடையை கொண்டு வந்து கையில் தந்து அணிய சொல்வார்கள். பிறகு ஒரு பெரியவர் வந்து மத போதனையை செய்வார். பிறகு பெரிய மனது வைத்து, வழக்கு போடாமல், “எச்சரித்து” மட்டும் அனுப்பிவிடுவார்.
போர் என்பது கொடுமையானது. எல்லா நல்ல விசயங்களையும் துடைத்தெறிந்துவிடும். வாழ்வதற்கு அடிப்படை விசயங்கள் கூட கிடைக்காத துயரம், பயம் என எல்லா மோசமானவற்றையும் கொண்டு வந்துவிடும். ஆகையால், அமானுஷ்ய அம்சங்கள் படத்தில் வந்தால் கூட, உண்மையில் பேய் தான் போர் என்பேன். போர் சூழல் மறைந்துவிட்டால், பேயும் கூட காணாமல் போய்விடும்.
நாயகியும், அந்த பெண்ணும் தான் பிரதான பாத்திரங்கள். இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நெட் பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment