> குருத்து: My fault (2023) ஸ்பானிஷ் படம்

November 6, 2023

My fault (2023) ஸ்பானிஷ் படம்


நாயகி உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார். நடுத்தர வர்க்க குடும்பம். அப்பா குடும்பத்தை டார்ச்சர் செய்த வழக்கிலோ, வேறு ஒரு வழக்கிலோ கைதாகி சில ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.


நாயகியின் அம்மா இப்பொழுது ஒரு பெரிய பணக்காரரை திருமணம் செய்கிறார். அவருக்கும் கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

நாயகிக்கு அம்மாவின் முடிவில் கொஞ்சம் கசப்பு இருக்கிறது. தனது காதலன், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு வருவதில் அவளுக்கு மனசேயில்லை. நாயகியின் குடும்பம் புதிய குடும்பத்தின் பெரிய வீட்டுக்கு இடம் பெயர்கிறார்கள்.

இருவருடைய பிள்ளைகளும் துவக்கத்தில் சண்டையிட்டு கொண்டாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகளில் இருவரும் தீவிரமாக ”காதல்” வயப்படுகிறார்கள்.

உள்ளூரில் சிலரோடு தகராறு. சிறையில் இருந்து நாயகியின் அப்பாவும் வெளியே வருகிறார்.

கடைசியில் என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
****

இப்படி ஒரு “காதல்” சமூகத்தில் நிலவுகிறது என்றால், அதை எடுத்து கையாளலாம். அதில் உள்ள உளவியல் குறித்து விவாதிக்கலாம். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. வழக்கமான ஒரு காதல் கதை. வித்தியாசம் அண்ணன், தங்கை காதல். அவ்வளவு தான். இதைப் படத்தில் இருவரும் தப்பு, தப்பு என அவ்வப்பொழுது உதிர்த்துக்கொண்டே”காதல்” செய்கிறார்கள். இயக்குநருக்கு கல்லா கட்ட, காதலில் இவர்களுக்கு ஒரு வெரைட்டி தேவைப்படுகிறது. அதனால் இப்படி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

”அண்ணன் தங்கையோடு உறவு கொண்டாலும், அம்மா, தன் மகனுடன் உறவு கொண்டாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு காண்டம் விற்றாகவேண்டும்” என முதலாளித்துவத்தின் இலாப வெறியை அம்பலப்படுத்திய ஒரு கவிதை முன்பு படித்தது நினைவுக்கு வருகிறது.

படம் நன்றாக ஓடி நன்றாக கல்லாக் கட்டியிருக்கிறது. ஆகையால், Your fault, Our fault என அடுத்தடுத்து படங்கள் எடுக்கும் திட்டமும் அவர்களிடத்தில் இருக்கிறது. பிரைம் வீடியோவில் இருப்பதாக இணையம் சொல்கிறது.

0 பின்னூட்டங்கள்: