தற்கொலைகள் பலவிதம்.
யாருமில்லாமல் சாகலாம்.
எல்லோரும் இருந்தும் சாகலாம்.
’காதலால்’ சாகலாம்.
கடனால் சாகலாம்.
காரணமே இல்லாமல் கூட சாகலாம்.
தற்கொலைகளில்
”வயிற்றுவலி” தற்கொலைதான்
சிறப்பானது.
அடிக்கடி பத்திரிக்கைகளில்
இடம் பெறுபவை.
பெரும் உலகப்புகழ் பெற்றவை.
படிக்கவேண்டும் என சொல்லி
சித்தி ஒத்துக்காததால்
மருந்து குடித்து செத்துப்போனான்
என் நண்பன் குருசாமி.
அவன் ”வயிற்றுவலியால்” தான் செத்தான்
அடுத்தநாள் செய்தி வந்தது.
வாட்டும் கொடிய நோய்
யாருமில்லாத தனிமை
தற்கொலை செய்துகொண்டார்
ஒன்றுவிட்ட மாமா.
அவரும் வயிற்றுவலியால் தான்
என செய்தி வந்தது.
தன் துணையின்
நடத்தை சரியில்லை என நொந்து
தற்கொலை செய்துகொண்டார்
தூரத்து அண்ணா.
உண்மை காரணத்தை
அறிய முடியாமல் போனால்…
அறிந்துகொண்டும் சொல்லாமல் போனால்…
அரசுக்கு சங்கடம் தருமென்றால்
போலீசின் கை “வயிற்றுவலி” என
தயக்கமே இல்லாமல்
தானாக எழுதிவிடும்.
வயிற்று வலியால்… என படித்தால்
என்ன காரணமாக இருக்கும் என
மனம் இப்பொழுதெல்லாம்
ஆராய ஆரம்பித்துவிடுகிறது.
தற்கொலைகளை ஆய்வு செய்தால்
உண்மை காரணம் அறியப்படலாம்.
அதெல்லாம் அறிந்து….?
வயிற்று வலியால்….
சிந்துபாத் கதை போல
நம்மை தொடரத்தான் போகின்றன!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment