இந்தப் படம் நன்றாக இருந்தது என யாரோ எழுத, பார்த்தேன்.
வடசென்னையை களமாக கொண்ட படம். இரண்டு ரவுடிகள். அவர்களுக்குள் நடக்கும் மோதல்களே கதை.
இதில் ஒரு ரவுடியின் தம்பியை கொன்ற வழக்கில், கொன்ற ரவுடியின் கையாட்கள் எல்லோரும் கைதாக, அதில் ஒருவருக்கு பதிலாக நண்பனை காப்பாற்றுவதற்காக நாயகனின் அண்ணன் பழியை ஏற்று ஜெயிலுக்கு போகிறார்.
இதில் கோயில் வசூலுக்காக பணத்தை வாங்கி வர ஒருமுறை மட்டும் போய்வா! என சொன்னதற்காக அதே ரவுடி வீட்டிற்கு அழைத்துப்போகிறார்கள். போன இடத்தில் கொன்றவர்களின் இவனும் ஒருவன் என அறிந்து விரட்டி விரட்டி கொல்கிறார்கள்.
பிறகு என்ன நடந்தது என்பதை அடிதடி, வெட்டுகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
****
பெரிய நெருக்கடியிலிருந்து காப்பாற்றி, தன் நண்பன் ஜெயிலுக்கு போயிருக்கிறான். பிறகு அதே ரவுடி சொன்னார் என ஒரு இடத்திற்கு பணம் வாங்க போவாரா! என்பது பெரிய நெருடல். ஆனால் அங்கு மாட்டிக்கொண்டது, தெரியாமல் அவனை கொன்றுவிடக்கூடாது என தம்பியை கொன்ற ஆட்களை வேறு வேறு வகைகளில் சரிப்பார்ப்பது, பிறகு கொன்றவர்களின் அவனும் ஒரு ஆள் என முடிவு செய்து கொலை வெறியோடு துரத்துவது வரைக்குமான அந்த காட்சிகள் நல்ல விறுவிறுப்பு,
ரவுடித்தனம் வேண்டாம்! வேண்டாம்! என திரும்ப திரும்ப ரவுடித்தனத்தின் பல அம்சங்களையும் ஒவ்வொன்றாக காட்டுவது, இன்னும் வட சென்னையைப் பற்றியான எதிர்மறையான அம்சங்களையே எடுப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?
வட சென்னை ஏன் அப்படி இருக்கிறது? என்பதை அதன் சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை விளக்கி நல்ல அரசியல் படங்கள் வரவேண்டும். அதற்கான சில படங்களும் சம காலத்தில் வரத் துவங்கியிருப்பது நல்ல தொடக்கம்.
இந்தப் படத்தின் இயக்குநர் பல புதுமுகங்களை கொண்டு எம்.ஆர். மாதவன் நன்றாகவே இயக்கியிருக்கிறார். அவரின் அடுத்தப் படத்தை ஆர்வமாக எதிர்நோக்கலாம். நாயகனாக உதய் கார்த்திக், மற்ற சில பாத்திரங்களும் நினைவில் நிற்பது சிறப்பு. “Die no Sirs”என படத்தின் பெயருக்கு படத்திலேயே ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள். அது அத்தனை பொருத்தமாயில்லை. வேறு ஒரு நல்ல பெயரை கொடுத்திருக்கலாம்.
பிரைம் வீடியோவில் இருக்கிறது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment