> குருத்து: Kung pu panda (2024)

March 22, 2024

Kung pu panda (2024)


வழக்கம் போல ஒரு டிராகன் வீரராய், மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி உதவுகிறார். எதிரிகளை வீழ்த்துகிறார் பாண்டா கரடி

”இதுவரை டிராகன் வீரனாய் இருந்துவிட்டாய். அடுத்தப் பொறுப்புக்கு நகரவேண்டும். ஆகையால் மரபுப்படி புது வீரரை தேர்ந்தெடுக்கவேண்டும்” என மாஸ்டர் ஷிபூ கறாராக சொல்கிறார். “எனக்கு என்ன வயசாயிருச்சுன்னு இவ்வளவு அவசரப்படுறீங்க!” என்கிறது பாண்டா.

புதுவீரனை தேர்ந்தெடுக்கும் விழா நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் ஒரு புது வில்லி உருவெடுக்கிறார். பச்சோந்தி வடிவத்தில் இருக்கும் சூனியக்காரி. குறுக்கு வழிகளை கையாண்டாவது பலசாலியாகிவிட வேண்டும். சீனாவின் எல்லா பகுதிகளையும் தானே ஆளவேண்டும் என காய்களை நகர்த்துகிறது. நினைத்தப்படியே ஒவ்வொன்றாக முடித்தும் வருகிறது.

மிக மிக பலசாலியான வில்லியை எதிர்கொள்ள கிளம்பி போகிறார் பாண்டா. பழைய நண்பர்கள் எல்லாம் வேறு வேலையில் பிசியாக இருக்க இந்த முறை பாண்டாவிற்கு புதிய ”நண்பனாக” ஒரு பெண் நரி வருகிறது.

பையன் புதுப்பிரச்சனையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டும். அவனுக்கு உதவலாம் என பிள்ளை சென்ற வழியில் அப்பாவும், வளர்த்த அப்பாவும் தேடிப்போகிறார்கள்.

பிறகு என்ன ஆனது என்பதை பல்வேறு கலாட்டாக்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
****
ஒரு குழந்தையைப் போல கண்கள் விரிய பலவற்றையும் ஆச்சர்யமாய் பாண்டா பார்ப்பது ஆச்சர்யம். வில்லி தனது சக்தியை பயன்படுத்தி மிகப்பெரியதாய், கோர உருவமாய் எழுந்து நிற்கும் பொழுது, பயந்து போகாமல், “இது புதுசா, அற்புதமால்ல இருக்கு” என வாய்விட்டு பாராட்டுவது கல கல!

Zootopia வில் வரும் கல கல ஆண் நரியைப் போல, இந்தப் படத்தில் ஒரு கல கல பெண் நரியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நல்ல அறிமுகம் இனி வரும் படங்களில் தொடர்ந்து இந்தப் பாத்திரம் வரும். எதிர்பார்க்கலாம்.

படம் துவக்கம் முதல் இறுதி வரை தொய்வு இல்லாமல் போகிறது. வலுவான வில்லன், நகைச்சுவை காட்சிகள், சண்டைகள் என எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவது போல எனக்கு தோன்றியது. அது என்னவென்று யோசித்துகொண்டிருக்கிறேன். உங்களுக்கு தோன்றினால் சொல்லுங்கள்.

3Dயில் தமிழ் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். மாணவர்களுக்கு தேர்வு நடந்துகொண்டிருக்கும் பொழுது என்ன கணக்கில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியிட்டார்களோ தெரியவில்லை. 19/03/2023 அன்று மாலை காட்சியில் பத்து பேர் தான் இருந்தோம்.

பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: