> குருத்து: September 2024

September 12, 2024

விண்ணளந்த சிறகு - சு. தியடோர் பாஸ்கரன் இயற்கை சார்ந்த கட்டுரைகள்


திரை விமர்சகர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என தியடோர் பாஸ்கரன் பற்றி வெவ்வேறு இடங்களில் படித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருடைய புத்தகம் எதுவும் வாசித்ததில்லை. அந்த ஆர்வத்தில், கடந்த புத்தக திருவிழாவில், இந்தப் புத்தகம் கண்ணில்பட்டது. வாங்கினேன்.


அவர் தமிழ் இந்துவின் இணைப்பு இதழில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளைப் புள்ளினங்கள், பாலூட்டிகள், தாவரங்கள், ஆளுமைகள், கருத்தாக்கங்கள் என தலைப்புகொடுத்து 35 கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒரு பறவைப் பார்வையில் தமிழ்நாட்டில் (குறிஞ்சி மலர்) துவங்கி, குஜராத்தில் (காங்க்ரேஜ் மாடுகளைப் பற்றி) தொட்டுப்பேசி, இந்தியா முழுவதும் சுற்றி, பிறகு பரவலாக உலகமும் சுற்றி (ஆடுகளை லாவகமாக மேய்க்கும் ஆஸ்திரேலியா நாய்) வந்துவிடுகிறார்.

ஒவ்வொரு கட்டுரையிலும் நிறைய அடர்த்தியான செய்திகள் இருக்கின்றன. நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்ததினால், எல்லோருக்கும் தெரிந்த தாவரங்கள், விலங்கினங்கள் தான் நாம் அறிந்தவை. ஆசிரியர் ஒவ்வொரு தாவரத்தையும், விலங்கினத்தையும், பறவைகளையும் நம்மை உற்றுப் பார்க்க வைக்கிறார். கற்றுக்கொள்ள தூண்டுகிறார்.

எப்பொழுதும் சுதந்திரத்தின் மீது கவனமாய் இருப்பதால், பறவைகளை கூண்டில் பார்க்கும் பொழுது எரிச்சல் வரும். இதில் காதல் பறவைகள் என்று வேறு பாசம் காட்டுவார்கள். பறவைகள் பறந்தால் தான் அழகு. ஆசிரியர் ஒன்றை சுட்டிக்காட்டுகிறார்.

”சந்தைக்கு வரும் ஒவ்வொரு பறவைக்குப் பின்னாலும், ஒன்பது பறவைகளாவது உயிரிழந்திருக்கும். அதாவது பத்தில் ஒன்று தான் பிழைக்கிறது. மரங்களின் ஆழமான பொந்துகளில் அடைகாத்து குஞ்சு பொரிக்கும் பறவைகளைப் பிடிக்க மரத்தையே திருட்டுத்தனமாக வெட்டிவிடுகிறார்கள்”.

ஓரிடத்தில் “யாரொருவர் பறவைகளை கவனிக்க ஆரம்பிக்கிறாரோ, அவருக்கு புற உலகைப் பற்றிய ஒரு விழிப்பு ஏற்படும். அத்தகைய பிரக்ஞை இயற்கை சார்ந்த பல தளங்களுக்கு அவரை இட்டுச் செல்லும்”என்கிறார்.

கணக்கு வழக்கு இல்லாமல் காடுகளை அழிப்பதும், அதன் மூலம் பல உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருவதையும் இந்தக் கட்டுரைகளின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அதற்காக கவனப்படுத்தும், போராடும் மனிதர்களையும் அறிமுகப்படுத்துகிறார். இயற்கை எல்லோருக்குமானதால், எல்லோருக்கும் இந்த அக்கறை அவசியம். இந்த அக்கறை இல்லையென்றால், இயற்கையின் ஒரு பகுதி தானே மனிதன். அவன் மட்டும் ஆரோக்கியமாக வாழ்ந்துவிட முடியுமா என்ன?

ஆசிரியருக்கு நல்ல தமிழ் புலமை இருப்பதால், அவர் எழுதுவதைப் படிக்கையில் அத்தனை ஆசை ஆசையாய் இருக்கிறது. அடுத்தடுத்து அவர் எழுதிய புத்தகங்களை படிக்கவேண்டும் என ஆவல் வருகிறது. ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களை மோசமாக மொழிப்பெயர்த்து கொன்றுவிட்டார்கள் என வருத்தப்படுகிறார். ஒரு நல்லப் புத்தகத்தைப் பார்த்ததும், இது அவர்களிடம் சிக்காமல் இருக்கவேண்டுமே என உண்மையிலேயே கவலைப்படுகிறார்.

வாங்கிப் படிக்க பரிந்துரைக்கிறேன்.

வெளியிடு : தமிழ் திசை

பக்கங்கள் : 122

விலை : ரூ. 150

தொடர் சேவையில் ஒரு புதிய சேவை


ஒரு ஜி.எஸ்.டி ஆலோசகராக, இ.எஸ்.ஐ. ஆலோசகராக, பி.எப் ஆலோசகராக சென்னையில் இயங்கி வருவதை நண்பர்களில் பலரும் அறிந்திருப்பீர்கள். நிறுவனங்களுக்கு மாதாந்திர ரிட்டன்களை தாக்கல் செய்யும் வேலைகளையும் செய்து வருகிறேன். நிறுவனங்களுக்காக கணக்குகளை ஒழுங்கு செய்து, தெரிந்த தணிக்கையாளர்கள் மூலமாக வருமான வரி தாக்கல் செய்தும் தருகிறேன்.


பி.காம். எம்.காம் படித்து, தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கவுண்ட்ஸ் துறையிலேயே இருப்பதும் ஒரு பெரிய பாசிட்டிவ் தான். தொழிலை பொறுத்தவரையில் மிகவும் பிடித்தே செய்கிறேன். உரிய காலத்தில் வேலைகளை செய்வதையும் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கிறேன்.

ஜி.எஸ்.டி, இ.எஸ்.ஐ. பி.எப், வருமான வரி தொடர்பாகவும் தொடர்ந்து கட்டுரைகளை, குறிப்பாக நான் எழுதிய கட்டுரைகளையும் அவ்வபொழுது பகிர்ந்து வந்திருக்கிறேன். நீங்களும் படித்திருப்பீர்கள்.

இதன் தொடர்ச்சியில்… இப்பொழுது புதிதாக எல்.ஐ. சி முகவராகவும் பதிவு பெற்று அடையாள எண் பெற்றிருக்கிறேன் என்பதை பகிர்வதற்காக இந்த பதிவு.

கடந்த மாதத்தில் ஒரு வாரம் ஒரு முகவராக தேர்ச்சி பெறுவதற்கு தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும் பொழுது தான், எல்.ஐ.சி முகவர் என்பது கூடுதல் வருமானம் பார்ப்பது மட்டுமில்லை! அது ஒரு பொறுப்பான வேலை என்பதை உணர முடிந்தது.

பாலிசி எடுப்பதோடு, ஒரு முகவராக அதற்குரிய பலனைப் பெற்றுக்கொள்வதோடு வேலை முடிவதில்லை. பாலிசி எடுத்ததின் பலனை உரியவர்களுக்கு பெற்றுத் தருவது வரை, பொறுமையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும் என்பதும் அவசியம் என்பதை உணர முடிந்தது.

பயிற்சியிலும் கூட கமிசனை மனதில் கொண்டு வேலை செய்யாதீர்கள். சந்திக்கும் நண்பர்கள், மக்கள் அவர்களுடைய தேவைகளில் இருந்து என்னவிதமான பாலிசி வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க உதவி செய்யுங்கள். ஒரு சேவையாக செய்யுங்கள் என வழிகாட்டுவது பிடித்திருந்தது.

ஆகையால், எல் ஐ சி பாலிசி தொடர்பாக என்ன சந்தேகம் என்றாலும் அழையுங்கள். பழைய பாலிசிகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அழையுங்கள். பாலிசியின் காலம் முடிந்துவிட்டால், அதனை எப்படி பெறுவது என்பதை அறிந்துகொள்வதற்காகவும் அழையுங்கள். கூடுதலாக உங்களுக்கு, உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பொருத்தமான பாலிசி எடுக்கவும் அழையுங்கள்.

நன்றி.
தோழமையுடன்
இரா. முனியசாமி
9551291721

Kill (2023) இந்தி


நாயகன் ஒரு இராணுவத்தில் ஒரு அதிகாரி. ஒரு பெரும் பணக்காரப் பெண்ணை காதலிக்கிறார். அவளுக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையோடு நிச்சயதார்த்தம். நிகழ்வுக்கே நேரே போய் சந்தித்து, ”இப்படியே என்னுடன் கிளம்பி வா கிளம்பலாம்” என்கிறார். ”உன்னைத்தான் கல்யாணம் செய்துப்பேன். இப்ப ரெம்ப சிக்கலாயிடும்! அவசரம் வேண்டாம்” என்கிறார்.


நிச்சயத்தார்த்ததை முடித்துவிட்டு, பெண் குடும்பம் விரைவு ரயிலில் கிளம்புகிறது. நாயகனும், அவருடைய நண்பரும் அதே ரயிலில் கிளம்புகிறார்கள்.

அதே ரயிலில் 40க்கும் மேற்பட்ட திருடர்கள் உள்ளே ஏறுகிறார்கள். குறிப்பாக ஏசி கோச்சில் ஏறுகிறார்கள். மற்ற கோச்சிகளில் இருந்து ஆட்கள் வருவதை கதவடைத்து தடுக்கிறார்கள். மக்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறிக்கிறார்கள். தடுப்பவர்களை உதைக்கிறார்கள்.

இதில் நாயகனும் நாயகனின் நண்பனும் அந்த கூட்டத்தோடு மோதுகிறார்கள். வழக்கமாக கொள்ளையடித்துவிட்டு போகிறவர்கள், குழுவில் ஒருவன் நாயகியின் அப்பா பெரும் பணக்காரர் என்பதால், கடத்தி பெரும்பணம் கேட்கலாம் என யோசனை சொல்கிறான்.

இந்த களேபரத்தில் சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அங்கிருந்து படம் ரத்தக்களறியாக மாறிவிடுகிறது. கொள்ளையர்களிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லியிருக்கிறார்கள்.
****


இதுவரை ரயிலில் எடுத்த சண்டைப் படங்களில் இந்தப் படம் நிச்சயம் முதல் இடத்திற்கு வந்துவிடும். அவ்வளவு சண்டைகள். அதே போல இந்திய சண்டைப் பயிற்சியாளரோடு, கொரியா சண்டைக்கார்களும் கைகோர்த்திருக்கிறார்கள். ஆகையால் இன்னும் வேகமாகவும், லாவகமாகவும் சண்டைகள் இருக்கின்றன.

ரயில் குறுகிய இடம் எப்படி என யோசித்தால், உண்மையான ரயிலைப் போல ஒரு செட்டை அமைத்து கச்சிதமாக எடுத்திருக்கிறாகள். அதைப் பற்றி ஒரு சின்ன காணொளி யூடியூப்பில் இருக்கிறது.

பொதுவாக தென்கொரியா படங்கள் உணர்வுப்பூர்வமாகவும் படத்தோடு ஒன்றோடு வைப்பதில் தேர்ந்தவர்கள். இந்தப் படமும் அப்படி ஒன்ற வைத்திருக்கிறார்கள்.

துவக்கத்தில் கொள்ளையர்கள் திட்டமிடும் பொழுது, இப்ப ஏறனும், குறிப்பிட்ட நேரத்தில் இறங்கிவிடவேண்டும் என நேரம் எல்லாம் சொல்வார்கள். ஆனால் திட்டமிட்டபடி அங்கு நடப்பதில்லை. ரயில் என்றால், இடையில் மக்கள் ஏறுவார்கள். இறங்குவார்கள். எப்படியாவது நிர்வாகத்திற்கு தெரிந்துவிடும். குறிப்பிட்ட காலம் வரைக்கும் எதுவும் தெரியாத அளவிற்கு இருப்பதாக சொல்வது ஒரு குறை.

இந்தப் படம் டிரெண்ட் செட்டர் போல அமைந்தால், இனி நிறைய இந்த மாதிரி படங்கள் வரும். அது தான் பயமாக இருக்கிறது.

இந்தப் படத்தின் நாயகன் லட்சயாவிற்கு முதல் படம் என்கிறார்கள். அப்படி தெரியவில்லை. அந்த கொள்ளையர்களின் தலைவனாக நமக்கெல்லாம் தெரிந்த ஆசிஷ் வித்யார்த்தி வருகிறார். கொள்ளையர்களில் ஒரு ஆளாக கொடூர ஆளாக ஒரு வித அலட்சியத்துடன் வரும் ராகவ் கவர்கிறார். இனி நிறைய படங்களில் பார்க்கலாம் என நினைக்கிறேன். நிகில் ராகேஷ் பட் இயக்கியிருக்கிறார்.

ஹாட் ஸ்டாரில் இருப்பதாக இணையம் சொல்கிறது. சண்டைப் பிரியர்கள் பாருங்கள். இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது.

September 8, 2024

Lalitham sundharam (2022)


எளிமையானது அழகு

கேரளத்தின் வண்டிபெரியார் பகுதி. வால்பாறையின் குளிர் கொண்ட நிலமாய் இருக்கிறது. அந்த பெரியவர் சில பசங்களுக்கு வயலின் பயிற்சி தருகிறார். அவருடைய துணைவியார் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிடுகிறார்.

அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் கொச்சியில் சில தொழில்கள் செய்து, நொந்து நூடுல்சாகி இருக்கிறார். மனைவியுடன் பிணக்கு முற்றி, பிரியும் மனநிலையில் இருக்கிறார்.

இரண்டாவது மகள். மும்பையில் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக பிசியாக இருக்கிறார். அவருடைய கணவர் கப்பல் துறையில் வேலை செய்து, குடும்பத்துடன் இருப்பதற்காக விருப்ப ஓய்வில் இருக்கிறார்.

மூன்றாவது மகன். பெங்களூரில் ஒரு கணிப்பொறி இன்ஜினியராக இருக்கிறார். ஒரு பெண்ணை காதலிக்கிறார்.

பிள்ளைகள் மூவரையும் சொந்த ஊருக்கு அம்மாவின் நினைவு நாளுக்கு அழைக்கிறார். அவர்களுடைய தொழில் நெருக்கடியில்… வந்த மறுநாளே கிளம்பும் மனநிலையில் மூவரும் இருக்கிறார்கள்.

அவர்களின் அம்மா இறப்பதற்கு முன்பு, ”வருடத்திற்கு ஒருமுறை எல்லோரும் வரவேண்டும். இங்கு சில நாட்கள் தங்கவேண்டும்” என கேட்டுக்கொண்டதை நினைவுப்படுத்தி, ”அதன் பிறகு உங்கள் விருப்பம்” என சொல்லிவிடுகிறார்.

அங்கு இருக்கும் சில நாட்களில் அவர்களுக்குள் என்ன நடந்தது? குடும்பத்தின் அருமையை பாசம், நேசம் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

****


பொதுவாக குடும்பத்தின் பெருமையை சொல்கிற பல படங்கள் நெஞ்சை நக்குவதாக அமையும். சில இடங்களில் நெளிய கூட வைக்கும். மலையாள படங்களின் சமகால இயல்பு படி, மூன்று குடும்பங்களையும் அதன் இயல்புக்கு காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது. அந்த பெரியவர் தான் நினைப்பதை மெல்ல சொல்வதும் இயல்பு.

தனிநபர் குடும்பமே ஆளுக்கு ஒரு இடமாக சிதறுண்டு வாழும் சூழ்நிலையில், மூன்று குடும்பங்கள் இணைவது எல்லாம் நடைமுறையில் சாத்தியமா என இயல்பாய் கேள்வி எழுகிறது.

”பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் பங்காளிகள்” என ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது. நிறைய குடும்பங்களில் நிறைய பிரச்சனைகள். அடுத்தடுத்த தலைமுறைகளையும் இந்த சண்டை கடுமையாக பாதிக்கிறது.

பிள்ளைகளுக்குள் நடக்கும் சண்டைகளை வைத்து, ஓரிடத்தில் தன் பேரப்பிள்ளைகளிடம் சொல்வது போல மற்றவர்களுக்கும் சொல்வார். ”எவ்வளவு வேண்டுமென்றாலும் சண்டைப் போடுங்கள். ஆனால் அதற்கும் அதிகமாக அன்பு செலுத்துங்கள்” என்பார். இந்தப் படம் சொல்லும் செய்தியும் அது தான்.

தோற்ற மனிதனாக பிஜீ, அதிகாரியாக மஞ்சு, அதிகாரியின் கணவராக சஜூ குருப் என படத்தில் எல்லாரும் அளவாக நடித்திருக்கிறார்கள். மஞ்சுவின் சகோதரர் மது இயக்கியிருக்கிறார். மஞ்சு தான் தயாரிப்பாளரும்!

திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னியில் வெளிவந்த படம் என இணையம் சொல்கிறது. ஆகையால் டிஸ்னி ஸ்டாரில் இருக்கிறது.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

நூறாவது நாள் (1984)


ஊட்டியில் படிக்கும் நாயகிக்கு ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் ஒருவன் நாயகியின் அக்காவை வீடு புகுந்து கத்தியில் குத்தி கொலை செய்கிறான். பதறி எழுந்து, சென்னையில் இருக்கும் அக்காவிற்கு போன் செய்து சொல்கிறாள். அவள் சமாதானம் சொல்கிறாள். ஆனால், அதற்கு பிறகு காணாமல் போய்விடுகிறாள்.

சில ஆண்டுகள் கழிகின்றன. இப்பொழுது நாயகி, பக்கத்து வீட்டில் இருக்கும் பணக்காரராக இருக்கும் நாயகனை ஒரு கல்யாண வீட்டில் பார்த்து... ஒரு கலாட்டாவில் துவங்கி, பின்பு காதல் செய்து, கல்யாணமும் செய்துகொள்கிறார்கள்.

இப்பொழுது அவளுக்கு மீண்டும் கனவு வருகிறது. அதில் அவளுக்கு தெரியாத ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். தன் உறவுக்காரரான மருத்துவரின் உதவியுடன் அந்த கொலையை தடுக்க தன்னளவில் விசாரிக்க துவங்குகிறாள். அதற்கு பிறகு அடுக்கடுக்கான பிரச்சனைகள்.

பிறகு என்ன ஆனது என்பதை சில திருப்பங்களுடன் படத்தை சொல்லி முடிக்கிறார்கள்.
****


படம் நன்றாக ஓடியிருக்கிறது. தனது குருநாதர் எடுத்த சிகப்பு ரோஜாக்கள் போல ஒரு படத்தை மணிவண்ணன் எடுத்திருக்கிறார். கதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே எனப் பார்த்தால், 1977ல் வெளிவந்த ஒரு இத்தாலிய படத்தின் அதிகாரப் பூர்வமற்ற தழுவல் என்கிறது விக்கி.

ஆனால் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, ஒரு பேட்டியில், இந்தப் படத்தின் கதையை நம் ஆட்களிடம் ஆங்கில திரை நிறுவனம் கேட்டதாகவும், அந்த கதை தான் பிறகு ”மைனாரிட்டி ரிப்போர்ட்” (2002) என வந்ததாக ஆச்சர்யப்பட்டு சொன்னார். அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது மங்கலாக நினைவில் இருக்கிறது.
ஒரு பெரும் பணக்காரன் அவனின் செயல்கள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றன. அவனின் உதவியாளராக வரும் ஜனகராஜ் பாத்திரம் எல்லாம் அபத்தமான பாத்திரம். ஆனால் கதையை நகர்த்துவதற்காக வைத்திருக்கிறார்கள்.
ஒரு காட்சியில் நாயகன் நாயகிக்கு வந்த அத்தனை பரிசு பொருட்களும் வீட்டில் பயன்படுத்தும் டெலிபோன்கள் என்பது நல்ல கற்பனை. நம்ம ஆட்கள் அப்படித்தான். ஒரு கட்டத்தில் கடிகாரங்களாக கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் இரவு விளக்குகளாக கொடுத்தார்கள். இப்பொழுது நிலைமை மாறியிருக்கிறது என நினைக்கிறேன்.

பெரும் பணக்கார நாயகனாக மோகன், கனவில் வந்த பெண்ணின் கொலையை தடுக்க பதைபதைக்கும் நாயகியாக நளினி, பாய்ந்து பாய்ந்து சண்டை போடும் மருத்துவராக விஜய்காந்த், ஆரம்ப கால சத்யராஜ், ஜனகராஜ், தேங்காய் சீனிவாசன் என சிலரும் வந்து போகிறார்கள். இளையராஜா தான் இந்த மாதிரி திரில்லர் படங்களை தன் பின்னணி இசையால் காப்பாற்றியிருக்கிறார். ”விழியிலே மணி விழியிலே” பாடல் இந்தப் படத்தில் தான்.

அமேசானில் இந்தப் படத்தைப் பார்த்தும் பார்க்கலாமே என பார்க்க துவங்கினேன். யூடியூப்பிலும் இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. நேரம் நிறைய இருப்பவர்கள் பாருங்கள்.

September 5, 2024

The Blink (2024) கன்னடம்


நாயகன் ஒரு மேடை நாடக குழுவில் இருக்கிறான். பொருளாதார தேவைக்கு அவ்வப்பொழுது தற்காலிக எடிட்டிங் வேலை செய்துகொண்டிருக்கிறான். குழுவில் உள்ள ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருக்கிறான்.


அவனை திடீரென ஒரு வயதானவர் பின்தொடர்கிறார். ஏதோ சொல்ல முயல்கிறார். ஆனால் சட்டென காணாமல் போகிறார். நண்பர்களிடமும், காதலியிடமும் சொல்லி புலம்புகிறான். அவர்கள் கிண்டல் செய்கிறார்கள்., இப்பொழுது பின்தொடரும் ஆளோடு, தன்னைப் போலவே இன்னொருவனையும் பார்க்கிறான். குழப்பத்தின் உச்சிக்கே போகிறான்.

சில வருடங்களுக்கு முன்பு, கிராமத்தில் ஒரு நபருக்கு மைசூரில் இருந்து வந்த புதிய நபர் அறிமுகமாகிறான். பழகும் பொழுது, அந்த குடும்பத் தலைவனின் தங்கையை விரும்புகிறான். அந்த குடும்பத்துக்கு பிடித்துப் போனதால், திருமணத்திற்கும் சம்மதிக்கிறார்கள். திருமணமும் நடக்கிறது. அவளின் பிரசவ காலத்தில் ஒரு நாள் திடீரென காணாமல் போகிறான்.

இது ஒரு காலப்பயணம் (Time travel) செய்யும் ஒருவனின் கதை. அவன் ஒரு டைம் லூப்பில் (Time Loop) சிக்கிக்கொண்டிருக்கிறான். அதை சரி செய்ய போராடுகிறான்.

நாயகனை பின்தொடரும் அந்த நபர் யார்? என்ன சொல்ல வருகிறார்? கிராமத்தில் காணாமல் போனவன் யார்? என்பதை சுவாரசியமாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
*****


2014ல் Predestination என ஒரு ஆஸ்திரேலியன் படம் வந்தது. காலப் பயண கதைகளில் புகழ்பெற்ற படம் அது. அந்தப் படத்திற்கு நன்றி சொல்லித் தான் ஆரம்பிக்கிறார்கள். அந்தப் படத்தை பார்த்திருப்பவர்களுக்கு இந்தப் படம் புரிந்துகொள்வது எளிது.

அந்த படத்தின் ஒன்லைனை எடுத்துக்கொண்டு, கிரேக்க தொன்ம கதைகளில் ஒன்றான இடிபஸ்ஸையும் இணைத்து நம் ஊருக்கு ஒரு கதை பண்ணியிருக்கிறார்கள். படத்தின் துவக்க அரை மணி நேரத்திற்கு பிறகு கொஞ்சம் விறுவிறுப்பாய் நகருகிறது.

காலப் பயணத்தை விளக்குவதில் துவக்க கால படங்கள் நிறைய நேரத்தை எடுத்துக்கொள்வார்கள். வருங்காலங்களில் இது எளிதாகும் என நினைத்தேன். அதே போல இந்தப் படத்தில் ஒரு கண்ணில் ஒரு சொட்டு மருந்து விட்டால், பயணம் செய்யலாம். , கண் இமைத்தால் மீண்டும் திரும்பி வந்துவிடுவோம் என கதை சொல்லிவிட்டார்கள்.

சமீபத்தில் காதல் டிராமா படம் ஒன்றை பார்த்த பொழுது, ஒரு இருட்டறைக்குள் நின்று நமக்கு தெரிந்த, இருந்த ஒரு தேதியை நினைத்துக்கொண்டால் போதும். அங்கு போய்விடலாம் என சிம்பிளாய் சுவாரசியமாய் ஒரு கதை சொல்லியிருந்தார்கள்.

ஆக காலப் பயணக் கதை வருங்காலத்தில் இன்னும் எளிமையாகும். நல்ல கற்பனை இருந்தால், நல்ல கதை சொல்லலாம் என்பது மட்டும் நிதர்சனம்.

இந்தப் படத்தில் அந்த அண்ணன் ஈர்த்தார். அதற்கு பிறகு நிறைய ஈர்த்தவர் தங்கையாக வரும் சைத்ரா. இந்தப்படம் இயக்கியவருக்கு முதல் படம் என்கிறார்கள். ஆச்சர்யம்.

அமேசானில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. காலப்பயணம் சம்பந்தப்பட்ட, சுவாரசியமான படங்களை விரும்புபவர்கள் பாருங்கள். மற்றவர்கள் படத்தைப் பார்த்து என்னடா? குழப்புகிறார்களே என மனம் கலங்க வேண்டாம்.