கடந்த ஒரு வார காலமாக அவரது நினைவு மலரில் பல ஆளுமைகள், மனிதர்கள் எழுதியதை மீண்டும் வாசித்ததன் மூலம் அவரது நினைவலைகள் மனதில் ஓயாது அடித்துக்கொண்டே இருக்கின்றன.
இனியனுக்கு
புருஸ்லீயை அறிமுகப்படுத்தி… மறவாமல் சிடிக்களையும் வாங்கி மகிழ்வித்திருக்கிறார்.
இனியன் ஓரிடத்தில் “சிறுவர்களை கூட தனக்கு சமமாக நடத்துவார்” என குறிப்பிடுகிறான்.
”ஜவஹர் தாத்தாவின்
முத்தம் – தாத்தாவின் முத்தம் அலாதியானது. அவ்வளவு அன்பு மிகுந்தது. அவ்வளவு வாஞ்சையானது.
நரைத்த மீசை குத்தும். ஆனாலும் இன்னொரு முத்தத்திற்காக ஏங்கும்” என்கிறார் பேத்தி வானவில்.
ஒருமுறை இராஜீவ்காந்தி
போகும் பாதையில் கையசைப்பதற்காக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை நிற்க வைத்திருக்கிறார்கள்.
அவர் வர தாமதமாகிறது. ஆனால் உட்கார வைக்கவில்லை.
ஏன் என கேட்டால், வரும் பொழுது அவசரமாக எழ சொல்லமுடியாது என மடத்தனமாய் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
பத்திரிக்கையாளர் சுப்பு சண்டையிட கிளம்புவதைப் பார்த்து… உடன் இருந்த ஜவஹர் தோழர்
அவர்களிடம் போய் ஒன்றை சொல்ல… குழந்தைகளை அமர வைத்திருக்கிறார்கள். ”என்ன சொன்னீங்க?” என கேட்டதற்கு “நாங்க காங்கிரஸ்
தான். தலைவர் வருவதற்கு தாமதமாகும்.” என சமயோசிதமாக சொன்னாராம். ஜவஹர் பொய் சொல்லமாட்டார்
என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தியையும் பதிவு செய்கிறார்.
ஒரு விசயம்
குறித்து கேட்கும் பொழுது… குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவதை போல உண்மையைத் தான் தோழர்
பகிர்ந்துகொள்வார். அதை பலமுறை நானே உணர்ந்திருக்கிறேன்.
அதனாலேயே சில விசயங்களை அவரிடம் கேட்காமல் தவிர்த்திருக்கிறேன்.
தொழிலாளர்
தோழர்கள் மீது எப்பொழுதும் அவருக்கு பிரியமும் தோழமையும் உண்டு. “பொதுவாக தோழர் தன்னுடைய வேலைகளை ஒழுங்குபடுத்தும்
எண்ணத்தில், வாருங்கள் என சொல்வார். ஆனால்,
எங்கள் இருவருக்கு மட்டும் விதிவிலக்கு. இருவரும்
இருபத்து நான்கு மணி நேரமும் தன் வீட்டுக் கதவைத் தட்டலாம், வந்து பேசலாம் என்பார். அதே போல வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தோழரைச்
சந்தித்துப் பேசிவிட்டு வருவோம்” என்கிறார் தோழர் வெள்ளமுத்து.
ஜவஹர் தோழர்
மீதான அன்பும், தோழமையும் எனக்கு அதிகம் தான்.
ஆனால் அதை வெளிப்படையாக செயலிலோ, வார்த்தைகளிலோ காட்டிக்கொண்டதில்லை. ஆனால்
அதை அவர் உணர்ந்திருந்தார். அவரிடம் இருந்து கற்றதும், பெற்றதும் அதிகம். அந்த அன்பில் ஏதும் சின்ன முரண் கூட வந்துவிடக்கூடாதே
என்பதற்காகவே மிகுந்த நெருக்கம் கொள்ளாமல், தள்ளியே இருந்து… நான்கு மாதங்களுக்கு ஒருமுறை,
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவரை சந்தித்து பேசிவருவதுண்டு. அப்படி செய்திருக்க வேண்டியதில்லை என இப்பொழுது
தோன்றுகிறது.
பொதுவுடைமை
தோழர்கள், திராவிட இயக்க தோழர்கள், தொழிலாளர்கள்,
பத்திரிக்கையாளர்கள், தோழமை குடும்பத் தோழர்கள் என எல்லோரிடத்திலும் அன்பும், தோழமையும்
பாராட்டி வந்திருக்கிறார். அதற்கு அத்தனை
மனிதர்களுடைய பல்வேறு அனுபவங்கள் பதிவாகியிருக்கின்றன. அந்த நினைவு மலரை இப்பொழுது
கையில் எடுத்தாலும், மணம் வீசுகிறது.
கொரானா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக்கொண்டிருந்தது. மரணம் எங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்த காலமிது. தோழர் மரணித்த நாளில், இடுகாட்டுக்கு போயிருந்தோம். எப்பொழுதும் புன்னகையுடன் “என்னப்பு!” என பிரியத்துடன் அழைக்கிற தோழர், அன்று ஒரு ஸ்டிரச்சரில் வெளியே படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரை எரியூட்டுகிற காட்சியை பார்க்கிற தெம்பு மனதில் இல்லை. கிளம்பி வந்துவிட்டோம்.
-
- 28/05/2021
- இன்று அவரது நான்காம் நினைவு நாள்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment