> குருத்து: Final Destination - Blood lines (2025) துரத்தும் மரணம்

May 17, 2025

Final Destination - Blood lines (2025) துரத்தும் மரணம்


ஒரு கொடூர விபத்து நடப்பது ஒருவருக்கு மட்டும் காட்சிகளாக முன் அறிவிப்பு வரும். முன் அறிந்தவர் பதட்டமாகி.. அந்த விபத்தைத் தடுக்க…. பலர் செத்து சிலர் அதிருஷ்டவசமாக காப்பாற்றப்படுவார்கள்.

”அவர்கள் எல்லாம் சாகவேண்டிய ஆட்கள். அவர்கள் பிழைத்தால் விட்டுவிடுவேனா” என மரணம் வரிசை வரியாக துரத்தும். தப்பித்தார்களா? பிழைத்தார்களா? என்பது இந்த படங்களின் சாரம்.

****

இப்பொழுது இந்தப் படத்துக்கு வருவோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஸ்கை வியூ உணவகம், பார் ஒன்றை துவக்குகிறார்கள். அதில் கலந்துகொள்ள காதல் ஜோடி செல்கிறது.

அங்கு காதலிக்கு விபத்துக்கான முன் அறிவிப்பு காட்சிகள் வருகின்றன. வழக்கம் போல பலரையும் காப்பாற்றிவிடுகிறார்.

2025 வந்துவிடுவோம். இப்பொழுது. இந்த காட்சி நாயகிக்கு கனவுகளாக வந்து தொடர்ந்து தொல்லைப்படுத்துகிறது. தூக்கம் தொலைந்து அன்றாட வேலைகளை செய்யவே சிரமப்படுகிறார்..

ஏன் என புரியாமல் வீட்டில் கேட்கும் பொழுது... (அம்மாவின் அம்மாவான) பாட்டி அந்த நிகழ்வுக்கு பிறகு துரத்தும் மரணத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டு வாழ்கிறார். ”அவர் மிகவும் பயமுறுத்துவார். அவரைச் சந்திக்காதே!” என எச்சரிக்கிறார்கள்.

ஆனால் போய் சந்திக்கிறார். அந்த விபத்தில் இருந்து தப்பித்த எல்லோரும் வரிசையாக … குறிப்பாக அவர்களுடைய சந்ததியினரும் கொல்லப்படுகிறார்கள். நம்ம குடும்பத்துக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆகையால் கவனமாய் இருங்கள் என எச்சரிக்கிறார்.

பிறகு என்ன ஆனது? மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்தார்களா என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லியிருக்கிறார்கள்.
***

நம்ம எமன், சித்திரகுப்தன் கணக்கு தான். அங்கு விதி என சொல்லாமல், செத்துடனும்னா செத்துடனும்! என மரண விளையாட்டை எடுத்திருக்கிறார்கள்.

ஒரு விபத்து. அதில் தப்பித்தவர்கள் வரிசையாக கொல்லப்படுவார்கள். ஏதாவது ஒருவர் எதையாவது செய்து தப்பிப்பார். அப்படி தப்பித்தவர் குடும்பத்தை விரட்டி கொல்வதாக இந்த பாகத்தில் யோசித்திருக்கிறார்கள். நல்ல பேய் யோசனை தான்.

ஒரு பேய் படத்தில் நம் கையை வைத்தே நம் கழுத்தை நெறித்து கொல்ல வைத்துவிடும். எங்காவது உயரத்தில் இருந்து எளிதாக தள்ளிவிட்டு கொ*ன்றுவிடும். ஆனால், இந்த படங்களில் மரணம் எல்லா சாத்தியங்களையும் அறிவியல்பூர்வமாக பயன்படுத்தும் என்பது தான் முரண் நகைச்சுவை. 🙂

அதே போல ஏகப்பட்ட கலாட்டா! ஏகப்பட்ட ரத்தம்! கொஞ்சம் டீசண்டா, கொலை செய்யக்கூடாதா! எனவும் மரணத்தை கேட்க வைத்துவிடுகிறது. 🙂
ரத்தம் படம் பார்க்கும் நம் மீதும் தெறிப்பதால் 18க்கு மேல் தான் பார்க்கலாம் என சான்றிதழ் தந்திருக்கிறார்கள். இளகிய மனதுகாரர்கள் தவிர்ப்பது நலம்.
இந்த சீரிசில் இரண்டாம் பாகத்தைத் தான் முதன் முதலில் பார்த்தேன். பிடித்திருந்தது. பிறகு அடுத்தடுத்த பாகங்களில் ஆர்வம் இல்லாது செய்துவிட்டார்கள். பதினான்கு வருடங்கள் கழித்து வந்திருக்கிறார்கள்.
இந்தப் படம் ஓக்கே தான். திரையரங்குகளில் தமிழ் மொழி மாற்றம் (Dubbed) செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: