குழந்தை வேண்டாம் என கலைக்க வருபவர்களை அணுகி, நல்ல பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். இதில் ஒரு அம்மா தன் பிள்ளை தனக்கு வேண்டும் என அடம்பிடிக்கிறார். அதிலிருந்து கதை துவங்குகிறது.
அங்கிருந்து ஒரு குழந்தையை (நாயகி) எடுத்துக்கொண்டு ஓட… துரத்துகிறார்கள். அம்மா இந்த போராட்டத்தில் இறந்துவிட, அப்பா அந்த குழந்தையை காட்டில் வைத்து வளர்க்கிறார். நல்ல பயிற்சி தருகிறார்.
ஒரு கட்டத்தில் காட்டை விட்டு வெளியே வந்து, அந்த திட்டத்துக்கு வளர்க்கப்படும் (நாயகியைப் போலவே) பெண்களை காக்க, அந்த திட்டத்தை முறியடிக்க அப்பாவும், மகளுமாய் தங்களுக்கு துணை நிற்பவர்களோடு இணைந்து ஆட்கள், ஆயுதங்கள், அதிகாரம் என வலுவாய் இருப்பவர்களோடு மல்லுக்கட்டுகிறார்கள்.
பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாகவும், சண்டைகள் மூலமாகவும் நம்மை கவர முயல்கிறார்கள்.
****
அமெரிக்க சி.ஐ.ஏ. உலகம் முழுவதும் தங்களது எதிர்ப்பாளர்களை எப்படி ஆளைத் தூக்குகிறார்கள் என்பது உலகம் அறிந்த வரலாறு. இந்த கதையின் மையம் இன்னும் அபாயம். வருங்காலத்தில் தங்கள் அரசியலை, அதிகாரத்தை யாரெல்லாம் கேள்வி கேட்பார்களோ அவர்களை எல்லாம் இளைஞர்களாக இருக்கும் பொழுதே தூக்குவதற்கு ஆட்களை தயார் செய்வது தான் கதையே. ஆகையால் அதோடு நம்மால் ஒன்ற முடிகிறது.
பொதுவாக இப்படிப்பட்ட படங்கள் முழுக்க ஆக்சனை மட்டுமே வைத்து நகர்கிற படங்களாக இருக்கும். இந்தப் படம் குடும்பத்தைப் பிரிந்து வாழும் குழந்தைகள், அன்புக்காக ஏங்குபவர்கள், குற்ற உணர்வு என பல உணர்வுகளையும் சரியான விகிதத்தில் கலந்து எடுத்திருப்பது நன்றாக இருந்தது.
எல்லா தொடர்களில் இருக்கும் ஒற்றுமை… சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் தான் நம்ப கூடியவர்களிடமே விளக்கமாய் பேச மறுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இதன் பின்னணி மிக மோசமாக இருப்பதால், இன்னும் இறுக்கம் அதிகம். அதனாலேயே நிறைய சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள்.
எல்லா தொடர்களையும் போலவே ஆங்காங்கே மெல்ல மெல்ல நகர்கிறார்கள். கடைசி இரண்டு, மூன்று அத்தியாயங்களில் சுறுசுறுப்பாக நகர்த்துகிறார்கள். 2011ல் இதே பெயரில் ஒரு படமாகவும் எடுத்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் எல்லா பாத்திரங்களும் நினைவில் நிற்கிறார்கள். நாயகி கொஞ்சம் உணர்ச்சிகளை காட்டாத இறுக்கமான முகம். ஆனால் சண்டைக் காட்சிகளில் சுறுசுறுப்பாக இருக்கிறார். படத்தில் அவரே சொல்வது போல, ”எனக்கு சண்டைப் போடத்தான் தெரியும்.” என்பது உண்மை தான். அந்த இளம் பெண்களில் ஜூல்ஸ் என வருபவர் நன்றாக ஈர்க்கிறார்.
இந்த மாதிரி தொலைக்காட்சித் தொடர்களில், வலைத்தொடர்களில் எனக்கு ஒரு வியப்பு. நிறைய இயக்குநர்கள் மாறினாலும், படம் எடுக்கும் முறை, உணர்வு எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
இது தான் காட்சி. இது தான் கேமரா கோணம். இதை எடுத்துக்கொடுங்கள் என சொல்லிவிடுவார்களா என சந்தேகம் வருகிறது. உங்களுக்கு இப்படித் தோன்றிருக்கிறதா?
முதல் சீசன் 8, இரண்டாவது சீசன் 8, மூன்றாவது சீசன் 6 மொத்தம் 22 அத்தியாயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 45 நிமிடங்களைத் தாண்டுகிறது. நிறைய நேரம் இருப்பவர்கள் பாருங்கள். இது பிரைமில் ஆங்கிலத்தில் இருக்கிறது. ஆறுதலாக தமிழ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment