தெருமுனையில் உள்ள கடையில் ஒரு நோட் வாங்கிக்கொண்டு போகவேண்டும் என வாசலில் நினைப்பேன். மூன்று கிமீ சென்றபிறகு, மறந்தது பொறுப்பாக நினைவுக்கு வருகிறது.
திடீரென சில பெயர்கள் என்ன போராடினாலும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. ஒருமுறை எங்க அக்கா மகள் பெயரே மறந்துவிட்டது.
ஏதோ ஒரு வேலை. சொல்கிறார்கள். செய்யவேண்டும். ஆனால் அடுத்த ஆறு மணி நேரத்தில் சுத்தமாக மறந்துவிடுகிறது. திரும்ப சம்பந்தப்பட்டவர் நினைவுப்படுத்தும் பொழுது, எப்படி மறந்தோம் என வருத்தம் தருகிறது. இப்படி எல்லா வேலைகளும் அல்ல! சில வேலைகள் மட்டும்! அதுவும் ஆர்வமில்லா, தேவையில்லா வேலைகள் என புரிந்துகொள்ளக்கூடாது. அவை அவசியமான வேலைகள்.
மறதிகள் இருப்பதால், சின்ன சின்ன வேலைகளையும் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும் என தேவை வந்துவிடுகிறது. பயணம் செய்யும் பொழுது, பிறகு குறித்து வைத்துக்கொள்ளலாம் என நினைத்தால், காற்றில் கரைந்துவிடுகிறது.
இப்பொழுது செல்போனில் குறித்து வைத்துக்கொள்கிறேன். சில சமயம் குறித்து வைத்துக்கொள்ள செல்லை எடுத்து, எதை எதையோ பார்த்து, திசைமாறி போய் குறிக்க மறந்துவிடுகிறேன்.
செய்வதற்கு வெறுப்பேற்றும் ஒன்றிரண்டு வேலைகளை இதை இப்படியே மறந்து போனால் என்ன! என விளையாட்டாய் அவ்வப்பொழுது தோன்றும். ஆனால், அதை மறக்கவே முடிந்ததில்லை. சோகம்.
சின்ன மறதிகளுக்கும், பெரிய மறதிகளுக்கும் பல்வேறு காரணங்கள் சொல்கிறார்கள். மன அழுத்தம், மனநோய், வைட்டமின் குறைபாடு, மது, போதை மருந்துகள் பயன்பாடு, சில மருந்துகளின் பக்கவிளைவுகள் என இன்னும் சொல்கிறார்கள். சின்ன சின்ன மறதிகளை சரி செய்வதற்கு உடற்பயிற்சி, சத்தான உணவு, போதுமான தூக்கம், மன அழுத்தத்தை குறைப்பது எனவும், பெரிய மறதிக்கு மருத்துவரை அணுகுவது என பரிந்துரை செய்கிறார்கள்.
சின்ன சின்ன மறதிகளை மன அழுத்தங்களோடு ஒரு இணைத்து நீளமாய் ஒரு கட்டுரையை ஒருவர் எழுதியிருந்தார். பயந்துபோய் கட்டுரையை அப்படியே விட்டுவிட்டு தலை தெறிக்க ஓடிவந்துவிட்டேன்.
50 வயதும் 40+ல் தானே வரும்?! உங்களுக்கும் சின்ன சின்ன மறதிகள் இருந்தால், மறக்காமல் சொல்லிவிட்டு போங்கள். ஆறுதலாய் இருக்கும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment