படத்தின் ஓரிடத்தில் சிவாவின் அப்பா ”பையனுக்கு எவ்வளவு பீஸ் கட்ற?” என கேட்கும் பொழுது… ”மூன்றே கால் லட்சம்” என்பார்.
***
தொழில்முறையில் நடுத்தர வயதில் ஒருவரைத் தெரியும். பெயரைத் தவிர்க்கலாம்.
தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடை வைத்திருந்தார். துவக்கத்தில் நன்றாக
விற்பனை ஆனது. விற்பனை அதிகரிக்க கடன்கள் கொடுக்க ஆரம்பித்தார். அதில் இரு நிறுவனங்கள் சில லட்சங்களில் பாக்கி வைத்து
ஓடிப்போனார்கள். இன்னும் ஒன்றிரண்டு நிறுவனங்கள் அவர்கள் பெரும் கடன் பாக்கியில் சிக்க,
அவர்கள் இவரிடம் பெரிய தொகையாக நிறுத்திவைத்தார்கள். மெல்ல மெல்ல வீழ்ச்சியைச் சந்திக்கத்
துவங்கினார்.
அவர் கொஞ்சம் பந்தா பேர்வழி. அவருடைய சொந்த அண்ணனின் முன்பு,
அவருடைய நண்பர் கிண்டலோடு ஒரு சம்பவத்தைச் சொன்னார். ஒரு நாள் மழை பெய்த பொழுது…. சட்டை
நனைஞ்சிருச்சுன்னு… கலர் ப்ளஸ் கடையில் நுழைந்து மூவாயிரத்துக்கு சட்டை வாங்கி, மாற்றிக்கொண்டு
கிளம்பினான் என்றார்.
அவருக்கு இரண்டு பையன்கள். அவர்களை இண்டர்நேசனல் பள்ளி ஒன்றில்
சேர்த்திருந்தார். வருடத்திற்கு ஒன்றரை லட்சம்
கட்டணம். இரண்டு பையன்களுமே அங்கு படித்தார்கள்.
தொழில் வீழ்ச்சியடைய, அடைய பொருளாதார நெருக்கடியில் சிக்கினார். அதைச் சரிக்கட்ட
வீட்டை அடமானம் வைத்து வட்டிக்கு சில லட்சங்களை கடன் வாங்கினார். நிலைமையை சரி செய்யமுடியவில்லை.
தொடர்ச்சியான, பிறகு அதிகமான குடிப்பழக்கம் சொந்தங்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும்
அவர் மீதான மதிப்பையும் குறைத்திருந்தது. அவர் மீள்வதற்கு நிறைய யோசனைகள் அவர் வைத்திருந்தாலும், அவரால் நடைமுறைப்படுத்த
இயலவில்லை.
வருமானம் பெரிதாக உயரவில்லை. செலவுகளை குறைக்கலாமே! பசங்களை
வேறு பள்ளியில் மாற்றலாமே! என்றால்… அந்தப் பள்ளி எத்தனை சிறந்தப் பள்ளி தெரியுங்களான்னு
நமக்கே பாடம் எடுப்பார்.
அவரிடம் பத்து, பதினைந்து நிமிடம் பேசினாலே, எத்தனை உற்சாகம்
நம்மிடம் இருந்தாலும்… வற்றி பதட்டமாகிவிடுவோம். ”தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன்னு”
என்று தான் ஒவ்வொருமுறையும் முடிப்பார்.
இடையில் சில மாதங்கள் அவரைச் சந்திக்கவேயில்லை. அவருடைய தொழில்
ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அந்தப் பக்கம் போகும் பொழுதெல்லாம், கடை அடைத்தே கிடக்கும்.
வேறு ஒருவர் அவர் நலம் குறித்து விசாரித்தப் பொழுது சொன்னார்.
“தீபாவளிக்கு முதல்நாள் இருவருக்கும் சண்டை வந்து… இவர் தண்ணியடித்து எழ முடியாத அளவிற்கு
தூங்க…. அன்று இரவில் அவருடைய துணைவியார் தூக்கு மாட்டிக்கொண்டு, இறந்துவிட்டார். இவர்
மீது சந்தேகம் கொண்டு வழக்கு நடந்தது அவருடைய மூத்தப் பையன் நடந்ததை சொன்னதால்… அவர் வழக்கிலிருந்து மீண்டார்”
என்றார்.
அடுத்த சில மாதங்களுக்கு பிறகு அவரையேச் சந்தித்தேன். நடந்த
விசயங்கள் குறித்து அவரே புலம்பியபடி சொன்னார். இப்பொழுது இரண்டு பசங்களும் தன்னுடைய
மாமானார் வீட்டில் வளர்கிறார்கள். அவர்களை நாங்கள் நன்றாக கவனித்துக்கொண்டது போல கவனித்துக்கொள்வதில்லை
என மிகவும் விசனப்பட்டார். சில மனிதர்கள் அப்படித்தான்
போலிருக்கிறது!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment