> குருத்து: வங்கிகளை சூறையாடும் கார்ப்பரேட் காவி கும்பல்

March 1, 2023

வங்கிகளை சூறையாடும் கார்ப்பரேட் காவி கும்பல்




பிஎஸ்.என்.எல், ரயில்வே, இந்திய ரிசர்வ் வங்கி, சிபிஐ,  தேர்தல் ஆணையம், ஜி.எஸ்.டி, அமுலாக்க துறை என கார்ப்பரேட் காவி கும்பல் நம் நாட்டில் நொறுக்கிய  பர்னிச்சர்களின் எண்ணிக்கை அதிகம்.  அந்த வரிசையில் வங்கிகளையும் இணைத்திருக்கிறார்கள். எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டு போல வங்கிகளின் நிலைமை இருக்கின்றன.

 

அரசுடைமையாகிய வங்கிகள்

 

1947-க்கு பிறகான காலங்களில் வங்கிகள் பெரும் நிலப்பிரபுக்கள், தரகு முதலாளிகள் உள்ளிட்ட தனியார்வசம் தான் இருந்தன. 1947 – 1969க்கும் இடைப்பட்ட காலத்தில் 559 வங்கிகள் திவாலாகியதால், அரசு சுதாரித்து மக்களின் வைப்புத்தொகையை காப்பாற்றுவதற்கும், இந்தியாவை தொழில்துறையில் முன்னேற்ற வேண்டுமென்றால், அரசு வங்கிகளின் அவசியத் தேவையை உணர்ந்து வங்கிகள் தேசியமயமாக்கபட்டன.

 

இந்தியாவில் உள்ள வங்கிகள்

 

இந்தியாவில் 96 அட்டவணையிட்ட வணிக வங்கிகள் உள்ளன.  இந்திய அரசு தன் வசம் பணயப் பிணைப்பு வைத்துள்ள 27 பொதுத்துறை வங்கிகள்.  31 தனியார் வங்கிகள். அவை அரசின் பணய பிணைப்பு பெறாதவை.  பொதுப்படையான பட்டியலில் உள்ளவை, பங்குச் சந்தையில் வணிகம் புரிய அதிகாரம் பெற்றவை. 38 அயல்நாட்டு வங்கிகளும் உ ள்ளன.  அனைத்தும் தனித்தனியாக செயல்பட்டாலும், ஒருங்கிணைந்த ஒரு வலையமைப்பாக 53,000 கிளைகள், 17,000 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM) என இயங்கி வருகின்றன.

 

பொதுத்துறை வங்கிகள் வங்கித்தொழிலின் மொத்த சொத்துக்களில் 75% பங்கையும், தனியார் மற்றும் அயல் நாட்டு வங்கிகள் முறையே 18.2% மற்றும் 6.5% பங்குகளையும் வைத்துக்கொண்டுள்ளன.

 

வராக்கடன் என்றால் என்ன?

 

வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புத்தொகைகளை குறைவான வட்டிக்கு பெறுகின்றன. அதை தனிநபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ, தான் வாங்கியதை விட கூடுதல் வட்டிக்கு கொடுத்து வருமானத்தை ஈட்டுகின்றன.  அப்படி கடன்கள் வழங்கப்பட்டு பல்வேறு காரணங்களால்  தொழில் நொடித்துப்போனால், ஏமாற்றப்பட்ட  நிலையிலோ சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்தும், குறிப்பிட்ட காலத்திற்குள் வசூலிக்க முடியாத கடனைத் தான் வராக்கடன் என்கிறார்கள்.  இந்த வராக்கடனை கணக்கிட்டு நட்டக் கணக்காக எழுதிவிடுவார்கள்.

 

வங்கிகள் வெடிக்க காத்திருக்கின்றன

 

2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்பது வருடங்களில் வங்கிகளின் வராக்கடன் எக்குத்தப்பாக எகிறியிருக்கிறது.  காரணம் ஆட்சியில் இருக்கும் காவி கும்பல்கள் கார்ப்பரேட்டுகளுக்கு கடன் கொடுக்க  வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்து கடன்களை வகை தொகையில்லாமல் வாங்கி, திரும்ப செலுத்தவில்லை.

 

நிதியமைச்சர் நிர்மலா கொடுத்த தகவலின் படியே 2014 -2015 ஆண்டு துவங்கி, 2021 – 2022 காலம் வரை 66.5 லட்சம் கோடிகளை செயல்படாத (NPA – Non performing assets) சொத்துக்களாக மாற்றியிருக்கிறார்கள்.  இதில் வராக்கடனாக 14.5 லட்சம் கோடிகள் அறிவிக்கப்பட்டு நட்ட கணக்கில் எழுதி ஊத்தி முடித்துவிட்டார்கள்.

 

வராக்கடனை வசூலிப்பதற்காக உருவாக்கிய அவசர சட்டத்தை கொண்டு  சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை பிழிந்தெடுத்து ஓரளவிற்கு திரும்ப பெற்றுவிட்டார்கள்.  ஆனால் பெரும்பாலான கடன்களை பெற்ற  அரசியல் செல்வாக்கு கொண்ட கார்ப்பரேட்டுகளை தொடக்கூட முடியவில்லை. அப்படி வசூலிக்க முயன்ற தனியார் வங்கியான ஐசிஐசிஐ கூட சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது என குறிப்பிடுகிறார்கள்.

 

வராக்கடன் எவ்வளவு இருக்கலாம்?

 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2021 அறிக்கையின் படி,  மொத்தக் கடனுடன் ஒப்பிடும் பொழுது NPA விகிதம் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சுமார் 1%யாக இருக்கிறது.  அங்கு கடுமையான சட்டங்கள் அமுலில் இருப்பதால் இந்த நிலை. கனடாவில் 0.4% என சிறப்பாக இருக்கிறது.  தென்கொரியாவில்  (2020) 0.2% தான். சுவிட்சர்லாந்தில் 0.7% தான். ஆனால் சீனாவின் நிலைமை 1.7%. கொஞ்சம் அதிகம் தான்.  ஆனால் ரசியாவிலோ 8.3%.  அங்குள்ள ஆட்சியாளர்கள் செல்வந்தர்களுடன் கைகோர்த்து பொதுச் சொத்துக்களை சூறையாடுவதால் இந்த அபாயகரமான நிலை.  இந்தியாவின் நிலைமையும் ரசியாவோடு போட்டிப்போடுவதாக இருக்கிறது.  ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய பெரும்பாலான ஊடகங்களோ கள்ள மெளனம் சாதிக்கின்றன.

 

வங்கிகளின் இந்த அபாய நிலைக்கு ஆறு காரணங்களை முன்வைக்கிறார் பேராசிரியர் பிரபாத் பட்நாயக்.

 

11.குறுகிய கால கடன்களும், மூலதன கடன்களும்!

 

1990ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கிகள் பெரும்பாலும் தொழில் நிறுவனங்களுடைய நடப்பு தேவைகள், உற்பத்திக்கு சரக்குகள் கொள்முதல் வாங்குவதற்கான  கடனை மட்டும் தான் கொடுத்துக்கொண்டிருந்தன.   புதிய, பெரிய தொழில்கள் துவங்குவதற்கு தேவையான மூலதன கடன்களை வழங்குவதற்காகவே   ஐடிபிஐ (IDBI)  போன்ற வங்கிகள் இதற்காக துவங்கப்பட்டன.  தொழில்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்த கடன்களுக்கு மிக குறைவான வட்டி விகிதத்தை விதித்தார்கள்.

 

2. கடன் கொள்கைகளில் மாற்றம்

 

இந்தியாவில் புதிய தாராளமய பொருளாதார கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பொழுது வங்கி கொள்கைகளிலும் மாறுதல்களை உருவாக்கினார்கள்.  முதலீடுகளுக்காக துவங்கப்பட்ட ஐடிபிஐ (IDBI) போன்ற நிதி நிறுவனங்கள் வணிக வங்கிகளாக மாற்றம் பெற்றன.  இதனால் மூலதனத் தேவைகளுக்கான நீண்ட கால கடன்களைப் பெறுவதற்கு  சந்தையை நோக்கி திரும்பினார்கள். உடனடி லாபத்திற்கு உத்தரவாதமில்லாத இவ்வகை கடன்களுக்கு நிதி திரட்டுவதில் பல சிக்கல்கள் உருவாயின.  எனவே வேறு வழியில்லாமல் பொதுத்துறை வங்கிகளை நோக்கி திரும்பினார்கள்.  அரசியல் ரீதியான அழுத்தங்களும் இருந்ததால், வணிக வங்கிகள் முதலீட்டாளருக்கு நீண்டகால  கடன்களை கொடுக்க ஆரம்பித்தன.

 

3. எரிமலையின் விளிம்பில் வங்கிகள் :

 

வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புத்தொகைகள் பெறுகின்றன.  மக்கள் எப்பொழுது திருப்பிக் கேட்டாலும் பணத்தை உடனடியாக திரும்ப கொடுக்கவேண்டும் என்பதே விதிமுறை.  இப்படி மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து பெரிய பங்கை நீண்ட கால கடன்களுக்காக வழங்கும் பொழுது,  வங்கியின் பணப்புழக்கம் பெரிய அளவில் குறைகிறது. பணம் போட்ட மக்கள் பெரும்பாலோர் திரும்பி கேட்டால், வங்கி திவால் நிலைக்கு போய்விடும் அபாயம் இருக்கிறது.  நீண்ட காலக் கடன்கள் பெரும்பாலும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்காகவே வழங்கப்படுகின்றன.  இந்த மூலதனங்களிலிருந்து லாபத்தை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே லாபத்தை எதிர்பார்க்கமுடியும்.  அதுவரைக்கும் மக்களுக்கு திரும்ப கொடுக்க முடியாத நிலை.

 

வங்கிகளின் விதிமுறையின் படி..  வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த நீண்ட காலத்திற்கு இழுக்கும் பொழுது வராக்கடனாக மாற்றம் பெறுகின்றன.  இதன் மூலம் வங்கிகள் எந்நேரமும் பற்றி எரிந்து விழும் அபாயம் கொண்ட எரிமலையின் விளிம்பில் அமர்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.  இன்னும் வெடிக்காமல் இருப்பதற்கு காரணம், வங்கிகள் அரசின் வசம் இருப்பது தான். வைப்புத் தொகைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால் அரசு காப்பாற்றும் என்ற மக்களின் நம்பிக்கை தான்.


 

4. கிழக்காசிய நிதிநெருக்கடி அனுபவம்:


 

உலகில் எங்கெல்லாம் தனியார் வங்கிகள் இதுபோல் சொத்துக்கும் – கடன் பொறுப்புகளுக்கும் இடையிலான விகிதாச்சார பிரச்சனைகளில் சிக்குகிறதோ அங்கெல்லாம் தீவிரமான நிதி நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்பது கடந்த கால வரலாறு.   கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட கிழக்காசிய நிதி நெருக்கடி இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.  உதாரணத்திற்கு தென்கொரிய வங்கிகள் வைப்புத்தொகையாக பெறப்பட்ட  வெளிநாட்டுப் பணத்தை எடுத்து உள் கட்டமைப்பு முதலீட்டுத் திட்டங்களுக்கு நீண்டகால கடன்களாக வழங்கினர்.  உடனடியாக மக்களுக்கு திருப்பிக்கொடுப்பதிலும் பிரச்சனை எழுந்தது. நாட்டிற்குத் தேவையான அந்நிய செலாவணியிலும் அடிவாங்கியது.  இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி அந்நாட்டை தீவிரமாக பாதித்தது.

 

5. அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நெருக்கடி அனுபவம் :


 

2008ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிதி நெருக்கடியும் இதே போல தனியார் வங்கிகள் செய்த தவறுகளால் தான் நடந்தது.   இருபதாம் நூற்றாண்டின் பெரும் நிதி நெருக்கடியாக பார்க்கப்பட்ட 1933ம் ஆண்டு நிதி நெருக்கடியின் பொழுது அதனைச் சமாளிக்க அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அரசாங்கம் ’கிளாஸ் ஸ்டீகல் சட்டம்” (Glass – Steagall Act) என்ற முக்கிய சட்டத்தை இயற்றியது.   அச்சட்டம் வணிக வங்கிகளை மூலதன முதலீட்டுத் திட்டங்களில் இருந்து முற்றிலும் விலகி இருக்கவேண்டும் என நிர்பந்தித்தது.  சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த இச்சட்டத்தை 1999ஆம் ஆண்டு பில் கிளிண்டன் விலக்கிக்கொண்டார்.  இதன் மூலம் வங்கிகள் முதலீட்டு திட்டங்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அதிக லாபத்தை அடைய முடியும் என நம்பினார்கள். பத்தாண்டுகள் முடிவதற்குள்ளேயே 2008ம் ஆண்டில் அமெரிக்கா ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. வங்கிகள் முதலீட்டுத் திட்டங்களை நோக்கி நகர்ந்ததால், மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியது.

 

6. உலக பொருளாதார வரலாறுகள் கூறும் படிப்பினைகள்

 


மோடி ஆட்சிக்கு வந்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் வங்கிகளில் இத்தனை கோளாறுகள் நடந்த பிறகும்  இன்னும் பொதுத்துறை வங்கிகள் தாக்குப்பிடித்து நிற்பதற்கு காரணம் நாட்டின் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே ஆகும்.  இந்த அபாய நிலையில், வங்கிகள் தனியார் வசமாக்கப்பட்டால் வங்கிகளின் மீதான அரசின் கட்டுப்பாடு விலகும்.  இதனால் வங்கிகளின் மீதான மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்துபோகும்.  வங்கிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகும்.   ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் எரிமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டிருக்கும் வங்கிகள் நொறுங்கிவிழும்.  வங்கிகள் வீழும் பொழுது. பணப் பதுக்கல்கள் அதிகமாகும். பொருளாதாரத்திலும் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.

 

இந்தியாவில் உள்ள வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளுக்கு பின்னால், மேற்கண்ட அபாயகரமான போக்குகளும் உள்ளது.

 


எதிர்காலம், மக்களின் நலன் மீது அக்கறை கொள்ளாத கார்ப்பரேட் காவி கும்பல்

 


நாட்டின் எதிர்காலம் பற்றி எந்தவித கவலையுமே இல்லாமல் கார்ப்பரேட்டுகளும், அவர்களைப் பாதுகாக்குகின்ற காவி கும்பலும் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்து  கடனை வாங்கி திரும்ப செலுத்தாமல் பொதுச்சொத்தை சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள்.  பணமதிப்பிழப்பு கூட இந்த சதியின் அங்கம் தான் என இப்பொழுது துலக்கமாக அம்பலமாகியுள்ளது. மக்களிடம் இருக்கும் பணத்தை எல்லாம் வங்கியில் ஒருங்கிணைப்பதற்கு தான் “கருப்பு பணத்தை ஒழிக்கப் போகிறேன்” என பச்சையாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். அலைக்கழித்திருக்கிறார்கள்.

 


வங்கிகளில் நிலைமை இப்படி அபாயத்தில் இருக்கும் பொழுதும், நிலவரத்தின் தீவிரத்தன்மையைப் மறைத்துவிட்டு, ஒன்றிய அரசின் அமைச்சர்கள் வங்கிகளை தனியார்மயமாக்கப் போகிறோம் என அவ்வப்பொழுது பொதுவெளியில் அறிவிப்பது தேசத்துரோக நடவடிக்கையாகும். அது மட்டுமின்றி வங்கிகளில் திரண்டு கிடக்கும் 160 லட்சம் கோடி ரூபாயை அம்பானிக்கும், அதானிக்கும் படையல் வைக்க துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 


இலங்கை, பாகிஸ்தான், எகிப்து திவால் வரிசையில்.. இந்தியாவும்!

 


இலங்கையின் பல ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போர் அதன் விளைவாக  உலக அளவில் வாங்கிய கடன்களும்  நாட்டை திவாலாக்கியது. கழுத்தில் துண்டை இறுக்கி, சீனா இலங்கையின் துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு எழுதி வாங்கியிருக்கிறது. ஏகாதிபத்தியங்களும் புதிய புதிய அடிமை ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைக்கின்றன.

 


இதோ பாகிஸ்தானில் பொருளாதார பிரச்சனைகள் வெடித்து கிளம்புகின்றன. டாலருக்கு இணையான பாகிஸ்தான் பணத்தின் மதிப்பு ரூ. 230 என வீழ்ச்சியடைந்திருக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு பிரச்சனையால் எரிபொருள் இறக்குமதி செய்யமுடியாமல், பன்னிரெண்டு மணி நேரம் மின்வெட்டால், இருண்டு கிடக்கிறது. மக்கள் கோதுமைக்காகவும், அரிசிக்காகவும் சண்டையிட்டு கொள்ளும் காணொளிகளை காண சகிக்கமுடியவில்லை.

 


அடுத்து எகிப்து திவால் வரிசையில் தயாராய் நிற்கிறது.  இந்த வரிசையில்  இந்தியாவையும் திவாலாக்குவதற்கான அத்தனை வேலைகளையும் கார்ப்பரேட்டுகளும், அவர்களை பாதுகாக்குகிற காவி கும்பலும் கண்ணும் கருத்துமாக செய்துவருகிறார்கள்.

 

 

கார்ப்பரேட் காவி கும்பலை இன்னும் அரசியல் அரங்கிலிருந்து விரட்டாமல் விட்டோம் என்றால், இந்தியாவை மிகப்பெரிய காரிருளில் மூழ்கடித்துவிடுவார்கள். பெரும்பாலான மக்களை அரிசிக்கும் பருப்புக்கும் அலையவிட்டு கொத்து கொத்தாய் சாவதற்கு விட்டுவிடுவார்கள்.  ஆனால் அத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகும் முன்னரே அனைவரும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் ஓரணியில் திரள்வோம்.  கீழிருந்து அதிகாரத்தை கட்டியமைக்கும் வகையில் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுப்போம்!

 


- தமிழ்ச்செல்வன்

 

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2023 மாத இதழில் வெளிவந்தது.

0 பின்னூட்டங்கள்: