> குருத்து

November 15, 2008

முதலாளித்துவ பொருளாதாரம்!

இன்றைக்கு அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவலாகி நிற்கின்றன. சந்தை சுதந்திரத்தை வலியுறுத்தி பல கோடிகளை சுருட்டிய முதலாளித்துவம் (முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் - ஏகாதிபத்தியம்) இவ்வளவு காலம் தண்ணீர் தொட்டிக்குள் நின்று கொண்டிருந்தது. தண்ணீர் இறங்கியதும் அதன் அம்மணத்தை உலகம் இன்றைக்கு பார்த்து காறித்துப்புகிறது.

முதலாளித்துவத்தின் கட்டமைப்பிலேயே எல்லா கோளாறுகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றாக பார்க்கலாம். அந்த வரிசையில் முதலில் ...

முதலாளித்துவ பொருளாதாரம்

நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணங்களாய் வரையறுப்பது.

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
2. அந்நிய செலாவணி அதிகரிப்பு
3. பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகரிப்பு
4. ஏற்றுமதி அதிகரிப்பு
5. நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு

கவனியுங்கள்
- மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் – இதெல்லாம் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள் இல்லை.

• மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால், பல்வேறு தொழில்களை நடத்தி வரும் முதலாளிகளின் கைகளுக்கு லாபம் போகிறது. உற்பத்தி அதிகமானால், ஏற்றுமதி அதிகமாகும். அதன் விளைவாக அந்நிய செலாவணி கையிருப்பு அதிகமாகும். இதில் பெரும்பான்மையான மக்களுக்கு எதுவும் கிடைக்க என்ன இருக்கிறது.

• பங்குச் சந்தை மதிப்பு உயர்வது, உண்மை மதிப்பு அல்ல! காகித மதிப்பு தான். சூதாடிகள் செயற்கையாக ஏற்றுகிறார்கள், இறக்க வைக்கிறார்கள். இதில் பெரும்பான்மையான மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. மாறாக அத்தியாவசிய பொருட்களில் இவர்கள் ஊக பேர வணிகத்தில் விளையாடி, கொள்ளையடித்து விலையை ஏற்றிவிடுகிறார்கள்.

• நிதி நிறுவங்களின் லாபம் - ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு நிறுவனமும் கணக்கு காட்டுகிறார்கள். 99% நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை 10% தான் காட்டுகின்றன. நட்ட கணக்கு கூட காண்பிப்பார்கள். அதில் வேறு சங்கடங்கள் இருப்பதால், தவிர்க்க முடியாமல், லாப கணக்கு காண்பிக்கிறார்கள். இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு, பல மான்யங்களை அள்ளி வழங்குகின்றன. ஆனால், லாப வெறி கொண்ட பன்னாட்டு நிறுவங்கள் தனது லாபத்தை குறைத்து காட்டுகின்றன. தில்லியில் தணிக்கையாளர்களுக்கான நடந்த சிறப்பு கூட்டமொன்றில் நிதியமைச்சர் சிதம்பரம் இது குறித்து நிறைய வருத்தப்பட்டார்.(!)

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி!



ஆகஸ்ட் 2008 ல் அமெரிக்காவில் பான்னி மே, பிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் மஞ்சள் கடிதாசி கொடுக்க, அமெரிக்க அரசு பதறிப்போய் அரசுடைமையாக்கியது. அடுத்து அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் என்ற காப்பீட்டு நிறுவனம் திவாலின் விளிம்பில் நிற்க, இதன் 80% பங்குகளை அமெரிக்கா மக்கள் கொடுத்த வரிப்பணத்தில் வாங்கி காப்பாற்றியிருக்கிறது.



தனியார்மயம், தாராளமயம், உலகமயம் – தான் அருமையான பொருளாதார கொள்கைகள். இதை அமுல்படுத்தினால், நாடுகள் சொர்க்க பூமியாகும் என்று உலக நாடுகள் முழுவதும் வலுக்கட்டாயமாக திணித்து பல நாடுகளை திவலாக்கி கொண்டிருந்த அமெரிக்கா இன்றைக்கு அதுவே திவலாகி நிற்கிறது.

**

நமது மொத்த நாடும் ஆபத்தில் இருக்கிறது. அரசு நிதி கொடுத்து உதவாவிட்டால், வீடு ஜப்தி நடக்கும். தொழில் முடங்கும். - இன்றைய அமெரிக்க அதிபர் புஷ் அறிவிக்கிறார்.

நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதிலிருந்து வெளிவருவது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை. – தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற புதிய ஜனாதிபதி ஒபாமா சொல்கிறார்.

**

அமெரிக்க வீழ்ச்சியின் பாதிப்பு உலகம் முழுவதிலும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.

இந்தியாவில், பல நிறுவனங்கள் தன் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை பாதியாய் குறைத்து இருக்கின்றன. காரணம் சொல்லப்படாமலே, பலரை வேலையிலிருந்து தூக்கி எறிந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், “ எல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றன” என சிதம்பரம் சொல்கிறார். சொன்ன மறுநிமிடமே வங்கிகள் வாங்கிய பணத்துக்கு ரிசர்வ் வங்கியிடம் வட்டி விகிதத்தை குறைக்கவும், வங்கிகளின் பண இருப்பை குறைத்துக் கொள்ளுங்கள் என வேண்டியிருக்கிறார்.

இந்த மாபெரும் வீழ்ச்சிக்கு காரணமாய் ... அமெரிக்க மக்கள் தங்களுடைய வீட்டுக் கடனை கட்டாதது தான் காரணம் என்கிறார்கள். முதலாளிகளும், அமெரிக்க வங்கிகளும், நிதி மூலதன ஆதிக்க கும்பல்களும், பங்கு சந்தை சூதாடிகளும், சேர்ந்து கொள்ளையடித்து விட்டு, மக்கள் மீது பழி போடுகிறார்கள். இதை புரிந்து கொள்ள முதலாளித்துவம், பங்குச் சந்தை, நிதி மூலதனம் பற்றியெல்லாம் கொஞ்சம் விளங்கி கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியாய் தேடுகிற பொழுது, சில நல்ல கட்டுரைகள் உதவின. நான் தொகுத்ததை எளிமையாக எழுத முயற்சிக்கிறேன். அதற்கு முன்பு சில கட்டுரைகளை படித்து விடுவது நல்லது.

***

இந்த கட்டுரை கச்சா பேரல் விலையில் அமெரிக்காவின் பங்கு குறித்து விவாதிக்கிறது. கச்சா பேரல் விலை 140 டாலர் இருக்கும் பொழுது, இந்த கட்டுரை வெளிவந்தது.

இன்றைக்கு கச்சா பேரல் விலை 60 டாலருக்கும் கீழாக இறங்கியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. 140 டாலராய் இருக்கும் பொழுது, பலமுறை விலை ஏற்றிய இந்திய அரசு, இன்றைக்கு இறங்கி நிற்கும் பொழுது, விலையை குறைக்க மறுக்கிறது.

ஏறியிருக்கும் பொழுது, நிதி மூலதன கும்பல்கள் கொள்ளையடித்தன. இறங்கி நிற்கும் பொழுது, இந்திய அரசு, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன.


எண்ணெயில் விளையாடும் அமெரிக்கா!

கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாத இறுதியில் மேற்கு ஆசியாவில் உள்ள ஜெட்டா நகரில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட சில ஏழை நாடுகள் பங்கு கொண்ட மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உருப்படியான யோசனைகள் கூட வைக்கப்படவில்லை என்ற போதும், இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எண்ணெய் விலைக்குக் காரணமான உண்மையைப் போட்டு உடைத்தார்.

"கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகச் சூதாடிகள்தான் காரணமே ஒழிய, சந்தைக்கும் விலை உயர்வுக்கும் சம்பந்தமேயில்லை'' என்றார், ப.சிதம்பரம். அவரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், திருட்டு வழக்கில் "அப்ரூவர்'' ஆகிவிட்ட குற்றவாளியின் சாட்சியத்திற்கு நிகரானது. பாம்பின் கால் பாம்புக்குத் தானே தெரியும்.


ப.சிதம்பரம் மட்டுமல்ல, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியாவும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் வள அமைச்சர் இன்னும் ஒருபடி மேலே போய், "மேற்காசிய எண்ணெய் வளத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் ஏகாதிபத்திய நாடுகளிடையே நடந்துவரும் போட்டியும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்'' எனக் கூறியிருக்கிறார். (பிசினஸ்லைன், ஜூலை 4).


இவ்வளவு ஏன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிரந்தர துணைக் குழுவொன்று எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை உயர்வுக்கும் சந்தை சூதாட்டத்திற்கும் இடையேயுள்ள உள்ள தொடர்பை ஆராய்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இணைய தளம் வழியாக நடைபெறும் சூதாட்ட வர்த்தகம், எண்ணெய் விலையைக் கணிசமான அளவு உயர்த்தியிருப்பதை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியம் இருப்பதாக''க் குறிப்பிட்டுள்ளது. (ஃபிரண்ட்லைன், ஜூலை 4, பக்:19)


திருடனுக்குத் தேள் கொட்டினால் அலறவா முடியும்? அதனால் அமெரிக்க அரசும், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களும் இந்த அறிக்கை பற்றி மூச்சு விடாமல் மூடி மறைத்துவிட்டனர். "எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் சந்தையின் தேவையைவிடக் குறைவாகக் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வருவதும்; இந்தியா மற்றும் சீனாவின் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருவதும்தான் விலை உயர்வுக்குக் காரணம்'' என்பதுதான் அமெரிக்காவின் வாதம். இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட சில மேற்குலக நாடுகள் அமெரிக்காவிற்குப் பின்பாட்டு பாடி வருகின்றன.


ஒரு முழுப் பொய்யைவிட அரைகுறை உண்மை ஆபத்தானது என்பார்கள். அமெரிக்கா, கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து அளித்துவரும் விளக்கம் அந்த ரகத்தைச் சேர்ந்தது.


2007ஆம் ஆண்டில், இந்தியாவும் சீனாவும் இறக்குமதி செய்த கச்சா எண்ணெயின் அளவு, 2006ஆம் ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்தது உண்மைதான் என்றாலும், அமெரிக்காவோடு ஒப்பிட்டால், இந்தியா, சீனாவின் கச்சா எண்ணெய் நுகர்வு குறைவானதுதான். உலகில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில், இந்தியா ஏறத்தாழ 3 சதவீதமும்; சீனா 8 சதவீதமும்தான் பயன்படுத்துகின்றன. அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இதற்கு மேல் கச்சா எண்ணெய் நுகர்வைக் கோரவில்லை. ஆனால் பொருளாதார மந்தத்தில் சிக்கிக் கொண்டுள்ள அமெரிக்காவோ உலகின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 24 சதவீதப் பங்கை நுகர்ந்து தள்ளுகிறது.


அமெரிக்க அரசின் எரிசக்தித் தகவல் நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2008ஆம் ஆண்டில் சர்வதேச கச்சா எண்ணெய் தேவை, உற்பத்தியைவிட 1.2 சதவீதம்தான் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. தேவை இவ்வளவு குறைவாக உயரும் என எதிர்பார்க்கப்படும் பொழுது, 2008ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள்ளாகவே கச்சா எண்ணெயின் விலை 140 சதவீதம் அதிகரித்துவிட்டது.


இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, தேவையைவிட உற்பத்தியைக் குறைத்துவிடுவது முதலாளித்துவ பொருளாதாரத்தில் புதிய விசயமல்ல. குறிப்பாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 200 அமெரிக்க டாலரைத் தாண்டிப் போகும் எனப் பீதி கிளப்பப்படுவதால், கச்சா எண்ணெயைத் தோண்டியெடுக்கும் நாடுகள் அனைத்துமே இந்தத் தில்லுமுல்லுவில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்தத் தில்லுமுல்லைக் கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் இருப்பதைப் போல அமெரிக்கா தன்னைக் காட்டிக் கொள்வதுதான் வேடிக்கையானது.


கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியா, அமெரிக்காவின் அடியாள் என்பது உலகமே அறிந்த உண்மை. ஆனாலும், அமெரிக்கா தேவைக்கு ஏற்ப உற்பத்தியைக் கூட்டச் சொல்லி சவூதி அரேபியாவிற்குக் கட்டளை போட மறுக்கிறது. இப்படிக் கட்டளை போடுவது சுதந்திர வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றால், அமெரிக்கா தனது சொந்த நாட்டில் இதுவரை தோண்டி எடுக்காமல் இருக்கும் கச்சா எண்ணெயை எடுத்து, சந்தையில் கொட்டப் போவதாக ஒரு மிரட்டலாவது விட்டிருக்கலாம். அதையும் செய்ய மறுக்கிறது, அமெரிக்கா.


டாலர் மதிப்புச் சரிவு, பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு, கச்சா எண்ணெய் விலை உயர்வு இன்னுமொரு தலைவலியாகத் தானே இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அமெரிக்க ஆளும் கும்பலோ கச்சா எண்ணெய் விலை உயர்வை வாராது வந்த மாமணியாகத்தான் பார்க்கிறது; வீட்டுக் கடன் பிரச்சினையால் நட்டமடைந்துள்ள அமெரிக்க வங்கிகளும், நிதி ஆதிக்கக் கும்பலும் கச்சா எண்ணெய் விலை உயர்வைப் பயன்படுத்திக் கொண்டுக் கரையேறிவிட முயலுவதால், கச்சா எண்ணெய் விலை சரிந்துவிடக் கூடாது என்றே அமெரிக்கா விரும்புகிறது.



சொல்லப் போனால், இந்த விலை உயர்வைத் தொடங்கி வைத்ததே அமெரிக்காவின் ஈராக் மீதான மேலாதிக்கப்போர்தான். ஈராக் ஆக்கிரமிப்புப் போருக்கு முன்பாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 25 டாலராக இருந்தது. இது, சனவரி 2004க்கும் ஏப்ரல் 2007க்கும் இடைபட்ட காலத்தில் 65 டாலராக உயர்ந்தது. அடுத்த ஒரே ஆண்டிற்குள் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 145 டாலரைத் தொட்டது. இவ்விலை உயர்வினால் சவூதி அரேபியா, ஈரான், ரசியா, நைஜீரியா, குவைத் உள்ளிட்ட எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மட்டுமல்ல, எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும் கொழுத்த இலாபம் அடைந்து வருகின்றன.


உலக எண்ணெய் வளத்தில் ஏறத்தாழ 25 சதவீதப் பங்குகள் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் எக்ஸான்மொபில் என்ற நிறுவனத்திற்கு மட்டும், உலகின் 21 நாடுகளில் எண்ணெய் வயல்கள் சொந்தமாக உள்ளன. சவூதி அரேபியா ஒவ்வொரு நாளும் 1 கோடி பீப்பாய் எண்ணெயைத் தோண்டி எடுக்கிறது என்றால், எக்ஸான்மொபில் பல்வேறு நாடுகளில் உள்ள தனது எண்ணெய் வயல்களில் இருந்து ஏறத்தாழ 68 இலட்சம் பீப்பாய் எண்ணெயை உறிஞ்சிக் கொட்டுகிறது. எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவின் ஆதிக்கம் நிலவுவதைச் சுட்டிக் காட்டும் சிறிய உதாரணம் இது. எதிர்காலப் பயன்பாட்டுக்காக, அமெரிக்கா, தனது நாட்டிலுள்ள எண்ணெய் வயல்களைப் பயன்படுத்தாமல், பாதுகாத்து வருவது தனிக்கதை.


எண்ணெய் விலையேற்றத்தால், எக்ஸான்மொபிலின் கடந்த ஆண்டு இலாபம் நான்கு இலட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. எக்ஸான்மொபில், செவ்ரான்க்ராப், கோங்கோபிலிப்ஸ் உள்ளிட்ட அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்க அரசிற்கு கடந்த ஆண்டு வரியாக மட்டும் ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாயைக் கட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.


சவூதி அரேபியாவிற்கு அடுத்து எண்ணெய் வளம் நிறைந்த நாடு ஈராக்தான். ஈராக்கில், இன்னும் கண்டுபிடிக்கப்படாத எண்ணெய் வளம் ஏராளம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சதாம் ஆட்சியின்பொழுது, நாட்டுமையாக்கப்பட்டிருந்த எண்ணெய் வயல்கள், ஈராக் ஆக்கிரமிப்புப் போருக்குப் பிறகு அமெரிக்கமயமாக்கப்படுகின்றன. போரில் சதாமை வீழ்த்தி பாக்தாத் நகருக்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள், சதாம் பதுக்கி வைத்திருப்பதாகச் சொல்லப்பட்ட பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தேடி அலையவில்லை. மாறாக, ஈராக்கின் எண்ணெய் அமைச்சரவை அலுவலகத்திற்குள் நுழைந்து அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டன. "ஷெல்'' எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிலிப் கரோலை எண்ணெய் அமைச்சரவையின் ஆலோசகராக நியமித்தது, அமெரிக்கா.


ஈராக்கில், குர்து இன மக்கள் வாழும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களில் இருந்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக 20 ஒப்பந்தங்களை அமெரிக்கா போட்டுக் கொண்டுள்ளது. தற்பொழுது ஈராக்கின் தெற்கே, சன்னி மற்றும் ஷியா முசுலீம்கள் வாழும் பகுதிகளில் உள்ள மிகப் பெரும் எண்ணெய் வயல்கள், அமெரிக்காவின் எக்ஸான்மொபில், ஷெல்; பிரிட்டனின் பிரிட்டிஷ் பெட்ரோலியம்; அமெரிக்கபிரான்சு கூட்டு நிறுவனமான டோட்டல் ஆகிய நான்கு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன.


இந்த எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுக்க ரசியா, சீனா, இந்தியா உள்ளிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 46 நிறுவனங்கள் ஈராக் பொம்மை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தன. ஆனால், இந்த நான்கு நிறுவனங்களைத் தவிர்த்து, பிற நாட்டு நிறுவனங்கள் போட்டியிட அனு மதிக்கப்படாமல், குத்தகை முடிவு செய்யப்பட்டது. ஈராக் பொம்மை அரசு இந்த நான்கு நிறுவனங்களுக்குத் தர வேண்டிய இலாப ஈவுத் தொகை, தொழில்நுட்ப ராயல்டி தொகை ஆகியவற்றைப் பணமாக இல்லாமல், கச்சா எண்ணெயாகத் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.




இப்படிப்பட்ட நிலையில், கச்சா எண்ணெயின் விலை மீண்டும் பழைய நிலைக்கு — ஒரு பீப்பாய் 25 அமெரிக்க டாலருக்கு உடனடியாகச் சரிந்துவிட அமெரிக்கா அனுமதிக்குமா? "தற்பொழுது புழக்கத்திலுள்ள எண்ணெய் வயல்கள் அனைத்தும் வயது முதிர்ந்து விட்டன; அதனால் உற்பத்தியை அதிகரிப்பது சாத்தியமில்லை'', "உலகின் எண்ணெய்த் தேவையும் உற்பத்தியும் உச்சத்தை எட்டிவிட்டன; அதனால் உற்பத்தியை இதற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பில்லை'', "புதிய எண்ணெய் வயல்களைக் கண்டுபிடிப்பதும், உருவாக்குவதும் உடனடியாக சாத்தியமில்லை'', எனப் பல்வேறான ஆய்வு அறிக்கைகளை மாற்றி மாற்றி வெளியிடுவதன் மூலம், கச்சா எண்ணெய் சந்தை ஒரு பரபரப்பு நிலையிலேயே இயங்க வைக்கப்படுகிறது. இதன் மூலம், கச்சா எண்ணெயின் விலை தடாலடியாகச் சரிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது.


குறிப்பாக, கச்சா எண்ணெய் மீது நடைபெற்று வரும் முன்பேர ஊக வாணிபம் இரண்டு வழிகளில் அமெரிக்காவுக்குப் பயன்படுகிறது. செயற்கையாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெயின் விலை, தடாலடியாகச் சரிந்து விடாமல், ஊக வாணிபம் மூலம் முட்டுக் கொடுக்கப்படுகிறது. இரண்டாவதாக, வீட்டுக் கடன் பிரச்சினையில் சிக்கி நட்டமடைந்துள்ள அமெரிக்க வங்கிகளும், பல்வேறு நிதி நிறுவனங்களும் உடனடி இலாபம் ஈட்டுவதற்கான வழியாக இதனைத் தேர்ந்து எடுத்துள்ளன.


எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் மீது நடைபெறும் முன்பேர வர்த்தகத்தின் மதிப்பு ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை 1,300 கோடி அமெரிக்க டாலராக (ரூ. 62,000 கோடி) இருந்தது. அது, இன்று ரூ. 10,40,000 கோடி ரூபாயாக வீங்கிப் போய் விட்டது. இந்த வீக்கம்தான், 60 சதவீத கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. (தி ஹிந்து, 3.7.08)


அத்தியாவசியப் பண்டங்களின் மீது நடைபெறும் இந்த முன்பேர வர்த்தகம், அமெரிக்காவின் நியூயார்க் வாணிபச் சந்தையிலும்; இலண்டனில் உள்ள "இண்டர்காண்டினேன்டல் சந்தையிலும்'' தான் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு சந்தைகளும் கடுமையான கண்காணிப்புக்கு உட்படாமல், "சுதந்திரமாக'' இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், எந்தெந்த நிறுவனங்கள் ஊக வாணிபத்தில் பங்கு பெறுகின்றன? எவ்வளவு இலாபம் சம்பாதிக்கின்றன? என்பதெல்லாம் மர்மமாகவே இருப்பதாக முதலாளித்துவ பத்திரிகைகளே புலம்புகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, சிட்டி குரூப், ஜே.பி.மார்கன் சேஸ் ஆகிய நான்கு நிதி நிறுவனங்கள்தான் இந்தச் சூதாட்டத்தில் பெரும் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.


இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே நடைபெற்று வருவது, அமெரிக்காவுக்கு மிகவும் சாதகமான அம்சம். எண்ணெய் வர்த்தகம் மூலம் அரபு ஷேக்குகளுக்குக் கிடைக்கும் அமெரிக்க டாலரின் பெரும்பகுதி, அமெரிக்க வங்கிகளிலும், அமெரிக்க அரசு வெளியிடும் பத்திரங்களிலும் தான் முதலீடு செய்யப்படுகிறது. "பெட்ரோ டாலர்'' என்று அழைக்கப்படும் இந்த முதலீடு, அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் கேடயமாகப் பயன்படுவதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான ஆயுதமாகவும் பயன்படுகிறது. எனவே, அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்துப் புலம்புவதெல்லாம் வெறும் நாடகம்தான். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையை 200 அமெரிக்க டாலராக ஊதிப் பெருக்க வைப்பதுதான் அமெரிக்காவின் உள்ளார்ந்த நோக்கம்!


· ரஹீம்

புதிய ஜனநாயகம் (செப்-2008)

(அனுமதியுடன்)

October 18, 2008

ஆண்டுக்கு ஏறத்தாழ 22,327 - பாதாள சாக்கடை கொலைகள்!


மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது சட்டவிரோதம் என 1993ம் ஆண்டு அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. மீறினால் ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதிக்கலாம் என சட்டத்தில் இருக்கிறது.

- 15 ஆண்டுகளுக்கு பிறகு, இப்பொழுது உயர்நீதி மன்றம் பொதுநல மனு ஒன்றை விசாரித்து, மேற்கண்ட சட்டத்தை அரசு அதிகாரிகளுக்கு நினைவுப்படுத்தியிருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளில், ஒரு வருடத்திற்கு பாதாளச் சாக்கடையில் இறந்தவர்களின் மன்னிக்கவும் கொல்லபட்டவர்களின் எண்ணிக்கை 22327. இதில் 99.99% பேர் தாழ்த்தப்பட்டோர்.

இந்த நாடு வல்லரசு ஆவது பற்றி, இன்றைக்கு கூட செய்திதாள்களில் அப்துல்கலாம் நினைவுப்படுத்தியிருக்கிறார்.

அவலச் சிரிப்பு மனதிற்குள் எழுகிறது.

கீழ்க்கண்ட கட்டுரை,புதிய ஜனநாயகத்தில் கடந்த மார்ச் 2008ல் வெளிவந்த கட்டுரை. இந்த செய்திக்கு பின்னால் இருக்கும் அரசியலை தெளிவாக விளக்குகிறது.

*****

கொலைகள், நாளும் தொடரும் படுகொலைகள். ஒருவரல்ல, இருவரல்ல; ஆண்டுக்கு ஏறத்தாழ 22,327 தாழ்த்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது, ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை அல்ல. நாடெங்கும் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும்போது நச்சுவாயு தாக்கி, மூச்சுத் திணறி மாண்டு போகும் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கைதான் இது.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ள அரசு பயங்கரவாத போலீசு, இராணுவ, துணை இராணுவப் படையினரில், 1990 முதல் 2007 மார்ச் மாதம் வரை மாண்டு போனவர்களின் எண்ணிக்கை 5100 பேர். பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாண்டு போன அச்சிப்பாய்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமும் கருணைத் தொகையும் ஓய்வூதியமும் பதக்கங்களும் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், ஆண்டுக்கு ஏறத்தாழ 22,000 பேர் துப்புரவுப் பணியாற்றும்போது மாண்டு போகிறார்கள். அவர்களது குடும்பத்தாருக்கு நிவாரணமோ, உதவிகளோ செய்யப்படுவதில்லை.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அரியானா மாநிலத்தின் ஹல்தேரி கிராமத்தில் 50 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயதான குமார் காஷ்யப் என்ற சிறுவனை மீட்க இராணுவப் படை விரைந்தது. மீட்புப் பணியைப் பார்வையிட மாநில முதல்வர் ஹூடா, அமைச்சர்கள், எம்.பி.க்கள் அங்கே குவிந்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அச்சிறுவன் மீட்கப்பட்டதை தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. நாளேடுகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. மீட்கப்பட்ட அச்சிறுவனுக்கு ரூ. 7 இலட்சம் பெறுமான பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால், பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்புகளை நீக்கும்போது நச்சுவாயு தாக்கி தத்தளிக்கும் துப்புரவுத் தொழிலாளியை மீட்க எந்த இராணுவமும் வருவதில்லை. இராணுவம் கிடக்கட்டும்; தீயணைப்புப் படையின் மீட்புக் குழுகூட வருவதில்லை. எந்த அமைச்சரும் எட்டிப் பார்ப்பதில்லை. மாண்டுபோன துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணமும் இல்லை.

மனிதக் கழிவுகள், அடுப்பங்கரைக் கழிவுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், ஆடுமாடுகளின் கழிவுகள், இறைச்சிக்கூட கழிவுகள் என அனைத்தும் பாதாளச் சாக்கடையில் பாய்கின்றன. பெருநகரங்களில் இப்பாதாள சாக்கடைகளில் ஆங்காங்குள்ள மனிதக் குழி மூடிக ளைத் திறந்து வெற்றுடம்புடன் இறங்கி துப்புரவுத் தொழிலாளர் அடைப்புகளை அகற்றுகின்றனர். டெல்லி மாநகரில் ஏறத்தாழ 5600 கி.மீ. நீளத்துக்கு குறுக்கும் நெடுக்குமாக அமைந்துள்ள பாதாள சாக்கடையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேலான திறப்புக் குழிகள் உள்ளன. சென்னையில் 2800 கி.மீ. நீளத்துக்கு ஏறத்தாழ 80,000க்கும் மேற்பட்ட திறப்புக் குழிகள் உள்ளன. அடைப்புகளை நீக்க துப்புரவுத் தொழிலாளர்கள் அன்றாடம் இக்குழிகளில் இறங்கி மூழ்கி எழுகின்றனர்.

மூழ்கி எழுந்தால் உடலெங்கும் கழிவுகள் படிந்து துர்நாற்றம் குடலைப் புரட்டும். பாதாள சாக்கடையில் மூச்சை அடக்கி மூழ்கும்போது கழிவுகள் உதட்டில் படியும். மீண்டு வெளியே வந்து உடலைக் கழுவிய பிறகும் நாற்றம் அருவருப்பூட்டும். பச்சைத் தண்ணீரைக் குடித்தால் கூட குமட்டும்.

பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் அழுகியும் நொதித்தும் பலவகை நச்சு வாயுக்கள் உருவாகின்றன. ஹைட்ரஜன் சல்பைடு எனும் கொடிய நச்சு வாயு மூளைக்குச் செல்லும் பிராண வாயுவைத் தடுத்து மயக்கத்தையும் மரணத்தையும் விளைவிக்கும். மீதேன் என்பது இன்னுமொரு கொடிய நச்சு வாயு. இதுவும் மரணத்தை விளைவிக்கும். இவை தவிர கரியமலவாயு, கார்பன் மோனாக்சைடு முதலான நச்சு வாயுக்களும் துப்புரவுத் தொழிலாளிகளைத் தாக்குகின்றன. வாடையோ நிறமோ இல்லாத சில கொடிய நச்சுவாயுக்களைக் கண்டறியவும் முடியாது. பாதாள சாக்கடையின் மனிதக் குழி எனும் மரணக் குழியில் இறங்கி திடீர் மரணமடைவது மட்டுமின்றி, பெரும்பாலான துப்புரவுத் தொழிலாளர்கள் சுவாசக் கோளாறுகளுக்கும், தோல் நோய்களுக்கும் பலியாகின்றனர்.

""நச்சு வாயு உள்ளதா என்று சோதித்தறிய எங்களுக்கு எவ்வித சாதனமும் வழங்கப்படுவதில்லை. பாதாள சாக்கடையின் மனிதக்குழி மூடிகளைத் திறந்து பார்ப்போம். கரப்பான்பூச்சிகள் ஓடினால் பிரச்சினை இல்லை. அவை செத்துக் கிடந்தால் அபாயம். இதுதான் நச்சுவாயு உள்ளதா என்பதைக் கண்டறிய நாங்கள் வைக்கும் சோதனை. கரப்பான் பூச்சிகள் செத்துக் கிடந்தால் நச்சுவாயு உள்ளதாகத் தீர்மானித்து, சிறிது நேரம் மூடியைத் திறந்து வைத்துவிட்டு, பின்னர் குழியில் இறங்குவோம்'' என்கிறார் கிருஷ்ணையா என்ற துப்புரவுத் தொழிலாளி.

""நாங்கள் குழியில் இறங்கி, தீக்குச்சியைப் பற்ற வைத்து கீழே பிடித்துப் பார்ப்போம். தீக்குச்சி சுடர்விட்டு எரிந்தால் நச்சுவாயு உள்ளதாக முடிவு செய்து, சிறிது நேரம் மூடியைத் திறந்து வைத்துவிட்டு குழியில் இறங்குவோம்'' என்று இன்னுமொரு சோதனை முறையைக் கூறுகிறார் முனியசாமி என்ற தொழிலாளி.

மூங்கில் குச்சிகள்தான் அடைப்புகளை நீக்க துப்புரவுத் தொழிலாளிகளுக்குத் தரப்படும் சாதனம். சில நேரங்களில் இரும்புக் கம்பிகள் தரப்படும். ""குழியினுள் மூழ்கி மூச்சை அடக்கி மூங்கில் குச்சியால் குத்தி அடைப்புகளை உடைக்கும்போது, திடீரென உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் வெள்ளமெனப் பாய்ந்து எங்களை இழுத்துச் சென்றுவிடும். எதிர்நீச்சல் போட்டு எழமுடியாமல் மாண்டவர்கள் ஏராளம்'' என்கிறார் டெல்லியைச் சேர்ந்த சதீஷ் என்ற துப்புரவுத் தொழிலாளி.

பாதாள சாக்கடைக்குள் இறங்கும் துப்புரவுத் தொழிலாளிக்கு கயிறு மட்டும்தான் பாதுகாப்புச் சாதனமாகத் தரப்படுகிறது. கயிறை இடுப்பில் கட்டிக் கொண்டு பாதாள சாக்கடைக்குள் மூழ்கும் தொழிலாளி அபாயம் ஏற்படும்போது கயிறை அசைத்தால், மேலே கயிறைப் பிடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு தொழிலாளி அவரை இழுத்து மேலே தூக்குவார். ""பல நேரங்களில் மாண்டு போன சக தொழிலாளியின் பிணத்தைத் தூக்குவதற்குத்தான் இந்தக் கயிறு பயன்பட்டிருக்கிறது'' என்று விம்முகிறார் இராமையா என்ற தொழிலாளி.

ஆனால், மேலைநாடுகளிலும் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் துப்புரவுத் தொழிலாளிக்கு சாக்கடைக் கழிவுகள் உடலில் படாதிருக்க கவச உடைகள் தரப்படுகின்றன. மூச்சுக் கவசங்கள், கைகால்களுக்கான தனிச்சிறப்பான உறைகள் தரப்படுகின்றன. பாதாள சாக்கடையில் துப்புரவுத் தொழிலாளி இறங்குமுன் நச்சுவாயு உள்ளதா என்று நவீன கருவிகளைக் கொண்டு சோதிக்கப்படுகிறது. குழியில் இறங்கியதும் எந்திர விசிறி மூலம் காற்றோட்டம் உருவாக்கப்படுகிறது. துப்புரவு தொழிலாளிக்கென தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பின் ஒவ்வொரு தொழிலாளியும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

ஆனால், இந்தியாவில், கயிறுதான் துப்புரவுத் தொழிலாளிக்குத் தரப்படும் பாதுகாப்புக் கவசம். இத்தொழிலுக்கென எவ்வித சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோர் என்பதாலேயே துப்புரவுத் தொழிலாளிகள் நம் நாட்டில் நரபலி கொடுக்கப்படுகிறார்கள். டெல்லி குடிநீர்வடிகால் வாரியத்தில் மட்டும் கடந்த 2005ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் 200 துப்புரவுத் தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த தொழிலாளிகளில் 95% பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோர் கண்நோய்கள், தோல் நோய்கள், சுவாசக் கோளாறு, மஞ்சள் காமாலை நோய்களுக்கும் ஆளாகியுள்ளனர். ஓய்வு பெறுமுன்னரே பெரும்பா லான தொழிலாளிகள் நோய் தாக்கி மரணமடைகின்றனர். சராசரியாக 45 ஆண்டுகள்தான் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கைக் காலமாக உள்ளது. அபாயகரமான இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளிக்கு சம்பளத்தோடு பேரிடர் உதவித் தொகையாக ரூ. 50 முதல் ரூ. 200 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்தியாவில் துப்புரவுத் தொழிலாளிகள் அற்பக் கூலிக்கு உயிரைப் பணயம் வைத்து பாதாளச் சாக்கடையில் இறங்கும் அதேநேரத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துப்புரவுத் தொழிலாளர்கள் பாதுகாப்புக் கவசங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டு மாதத்துக்கு ஏறத்தாழ ரூ. 1 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள். ஆறு மாதங்களில் இச்சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் நிரந்தரம் செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளிக்கு மாதம் ரூ. 12,000 கூட ஊதியமாகக் கிடைப்பதில்லை. ""எல்லா பாதுகாப்புக் கவசங்களுடன் ரூ. 50,000 வரை சம்பளம் கொடுத்தாலும் பார்ப்பனர்களும் ஆதிக்கச் சாதியினரும் இத்தொழிலைச் செய்ய முன்வர மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டுமே இத்தொழிலை நிர்ப்பந்தமாகச் செய்யுமளவுக்கு இங்கே தீண்டாமை புரையோடிப் போயுள்ளது'' என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார், தாழ்த்தப்பட்ட வால்மீகி சங்கப் பிரமுகரான புருசோத்தமன் வகேலா.

""ஏதோவொரு கம்பெனியின் ஆதாயத்துக்காக டெல்லி மாநகராட்சி 50 பாதுகாப்புக் கவசங்களை வாங்கியது. இங்கு நாங்கள் 800 பேருக்கு மேல் இருக்கும்போது, யார் இதை அணிய முடியும்? மேலும் அதன் எடையோ 18 கிலோ. இது தவிர வாயுக்கலன் எடையோ 13 கிலோ. இவற்றைச் சுமந்துக் கொண்டு சாக்கடை குழியில் இறங்கினால், மீண்டு வர முடியாமல் அங்கேயே சமாதி ஆக வேண்டியதுதான்'' என்று பாதுகாப்புக் கவசங்களின் யோக்கியதையும் அரசின் அலட்சியத்தையும் சாடுகிறார் டெல்லியைச் சேர்ந்த துக்காராம் என்ற தொழிலாளி.

ஆனால் அரசோ, நாங்கள் பாதுகாப்புக் கவசம் வழங்கியும் கூட, அவற்றைத் துப்புரவுத் தொழிலாளிகள் பயன்படுத்துவதில்லை என்று பழிபோட்டு தப்பித்துக் கொள்கிறது. இதேபோல அடிக்குழாய் மூலம் சேற்றை உறிஞ்சும் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு, நம் நாட்டு பாதாள சாக்கடைகளுக்குப் பொருத்தமில்லாததால் துருப்பிடித்து கிடக்கின்றன.

தனியார்மயக் கொள்கை தீவிரமாக்கப்பட்ட பிறகு, பல மாநகராட்சிகளில் துப்புரவுப் பணிகள் தனியாருக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. இத்தனியார் நிறுவனங்கள் அற்பக் கூலிக்கு ஒப்பந்தத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தி கொழுத்த ஆதாயமடைகின்றனவே தவிர துப்புரவுத் தொழிலாளிக்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வதில்லை. ஆபத்தான பாதாள சாக்கடைப் பணிகளில் இறங்கி துப்புரவுத் தொழிலாளி மாண்டு போனால், அற்பத் தொகையை நிவாரணமாகக் கொடுப்பதற்கு மேல் அவை வேறொன்றும் செய்வதில்லை. ஒப்பந்தத் தொழிலாளி என்பதால் வழக்கு விசாரணையும் நடப்பதில்லை. அரசோ இது ஒப்பந்த நிறுவனத்துக்கும் தொழிலாளிக்குமான தாவா என்று கூறி, கை கழுவிக் கொள்கிறது. கடந்த மார்ச் 2006லிருந்து ஆகஸ்ட் 2007 வரை டெல்லியில் 14 துப்புரவுத் தொழிலாளிகள் பாதாள சாக்கடையில் இறங்கி வேலை செய்யும்போது மாண்டு போயுள்ளனர். இவர்களில் 12 பேர் ஒப்பந்தக் கூலிகள். இவர்களது குடும்பத்தாருக்கு எவ்வித நிவாரணமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

ஒப்பந்ததாரர்கள் மூலம் துப்புரவுத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று ஏற்கெனவே குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், நாடெங்கும் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவுப் பணியே விரிவடைந்து வருகிறது. இத்தகைய ஒப்பந்த முறையானது, துப்புரவுத் தொழிலாளிகளின் உயிரைப் பறிப்பதோடு, நிரந்தரத் தொழிலாளிகளின் வேலையையும் பறிக்கிறது. சென்னை மாநகராட்சி, 2003ஆம் ஆண்டில் பாதாள சாக்கடைத் துப்புரவுப் பணியை ஒரு கோடி ரூபாய் ஏலத்துக்கு கே.கே.குமார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் கையளித்தது. அத்தனியார் நிறுவனமோ பாதாள சாக்கடையில் மூழ்கி மூச்சை அடக்கி நீந்திச் சென்று அடைப்புகளை நீக்கும் தனிச்சிறப்பான நீச்சல் பணியாளர்கள் 250 பேரை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, அற்ப கூலிக்கு அவர்களை ஒப்பந்தக் கூலிகளாக்கியுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமாக மதிப்பது ஒருபுறமிருக்க, தான் இயற்றிய சட்டத்தையே இந்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டு, துப்புரவுத் தொழிலாளிகளான தாழ்த்தப்பட்டோரை நாயினும் கீழானவர்களாகவே நடத்தி வருகிறது. மனித மலத்தைத் தலையில் சுமப்பது, உலர் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது ஆகியன 1993ஆம் ஆண்டில் இந்திய அரசால் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தை மீறினால், ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதிக்கப்படும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்கும் தொடரப்படும். இருப்பினும் மலம் அள்ளும் துப்புரவுப் பணி இந்திய அரசாலேயே சட்டவிரோதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நாட்டின் மிகப் பெரிய அரசுத்துறை நிறுவனமான இரயில்வே துறையில் மலம் அள்ளும் தொழில் இன்னமும் வெளிப்படையாகவே நடந்து வருகிறது. இரயில்வே துறையில் ஏறத்தாழ 14,500 ரயில் பெட்டிகளில் பழங்கால முறையிலான கழிவறைகளே நீடிக்கின்றன. ரயில் நின்ற பிறகுதான் பயணிகள் கழிப்பறைக்குச் செல்வதால் ரயில் நிலையங்கள் மலக்காடாகின்றன. மனிதர்கள் மலம் அள்ள சட்டபூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், 6856 ரயில் நிலையங்களில் தாழ்த்தப்பட்டோரான துப்புரவுத் தொழிலாளிகளே மலம் அள்ளும் வேலையைச் செய்கின்றனர். இக்கொடுமைக்கு எதிராக பல்வேறு அமைப்புக ளும் பலமுறை போராடிய போதிலும், வழக்கு தொடுத்த போதிலும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. ரயில் பெட்டிகளில் நவீன கழிப்பறைகளை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும், அதிக செலவு பிடிப்பதால் திட்டம் தாமதமாகிறது என்றும் பசப்பி வருகிறது இரயில்வே துறை.

இரயில்வே துறையிலேயே சட்டவிரோதமாக இக்கொடுமை தொடரும்போது, நகராட்சிகள் பஞ்சாயத்துக்களின் நிலைமை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. துடப்பம், இரும்புவாளி, தகர முறத்தோடு இன்னமும் துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை அள்ளும் கொடுமை பல மாநிலங்களில் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நாடெங்கும் ஏறத்தாழ 13 லட்சம் தாழ்த்தப்பட்டோர் மனித மலம் அள்ளுவதைச் செய்து வருவதாக துப்புரவுத் தொழிலாளர் சங்கம் (சஃபய் கரம்சாரி அந்தோலன் குஓஅ) கூறுகிறது. இச்சட்டவிரோத சமூகக் கொடுமைக்கு எதிராக இச்சங்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, எல்லா மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், மனித மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளி என்று யாருமே இல்லை என்றும் கூசாமல் புளுகின. மேலும், மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டு வந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வும் மாற்று வேலைவாய்ப்பும் செய்யப்பட்டதாகவும் அவை கணக்குக் காட்டி ஏய்த்தன.

இரயில்வே முதற்கொண்டு நகராட்சிகள் பஞ்சாயத்துகள் வரை மலம் அள்ளுவது உள்ளிட்ட துப்புரவுப் பணிகள் தனியார்மயமாக்கப்பட்டு வருவதால், மைய அரசும் மாநில அரசுகளும் தாங்கள் மலம் அள்ளும் தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தவில்லை என்று கூறி மோசடி செய்கின்றன. மேலும், துப்புரவுப் பணி என்பது மாநில அரசின் பொறுப்பு என்கிறது மைய அரசு. இதன்படி மலம் அள்ளுவதும் துப்புரவுப் பணிதான் என்பதாகச் சுருக்கி, இச்சமூகக் கொடுமையை சாதாரண துப்புரவு சுகாதாரப் பிரச்சினையாகச் சுருக்கி விட்டது மைய அரசு.

மனித மலத்தை அள்ளும் தொழிலுக்குத் தடைவிதித்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்று வரை இச்சமூகக் கொடுமை தொடர்ந்த போதிலும், இதுவரை ஒரு வழக்கைக் கூட அதிகார வர்க்கமோ, போலீசோ பதிவு செய்யவில்லை. இச்சட்டம் வெறும் காகிதச் சட்டமாகவே உள்ளது. துப்புரவு அதிகாரி, சுகாதார அதிகாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமே இச்சட்டத்தின்படி கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்நிலையில், மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளியால் புகார் மட்டும்தான் கொடுக்க முடியும். அரசு எந்திரத்தில் உள்ள சாதிவெறி கொண்ட அதிகார வர்க்கம் இத்தகைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவது இன்னுமொரு மூட நம்பிக்கைதான்.

மலம் அள்ளும் இழிதொழிலிலிருந்து மீண்டு வேறு தொழில் செய்து பிழைக்க தாழ்த்தப்பட்டோர் முயுற்சித்தாலும், பார்ப்பன இந்துமத சாதியக் கட்டுமானம் அவர்களை மீண்டும் பழிவாங்குகிறது. அரியானா மாநிலத்தின் ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித்ரா தேவி எனும் இளம் பெண், சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் மலம் அள்ளும் இழிதொழிலிலிருந்து மீண்டு, வங்கியில் கடன் பெற்று கிராமத்தில் துணி வியாபாரம் செய்தார். பிணங்களின் மீது இறுதியாகப் போர்த்தப்படும் துணிகளைக் களவாடி அவர் துணி வியாபாரம் செய்வதாக ஆதிக்க சாதியினர் வதந்தியைப் பரப்பி, அவரது வியாபாரத்தையே முடமாக்கினர். நட்டமடைந்த அவர் வியாபாரத்தை விட்டு, வேறு வழியின்றி இப்போது மீண்டும் மலம் அள்ளும் தொழிலையே செய்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொகஞ்சதாரோ ஹாரப்பா நாகரிக காலத்தில் கூட, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, செங்கற்களிலான கால்வாய் மூலம் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன என்பதை அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்துக் காட்டுகின்றன. ஆனால் தொழில்நுட்பப் புரட்சி நடக்கும் இன்றைய நவீன காலத்தில் இன்னமும் நம்நாட்டில் மனித மலத்தை அள்ளும் கொடுமை தொடர்கிறது. நாடெங்கும் நவீன கழிப்பறைகளைக் கட்டியமைத்து இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த, போதிய நிதி இல்லை என்று அரசு வாதிடுவது மிகப் பெரிய மோசடி. சந்திரனுக்கு விண்கலம் அனுப்ப ""சந்திராயன் ஐஐ'' திட்டத்துக்கு ரூ. 386 கோடியை அரசு வாரியிறைக்கிறது. ஆனால், மலம் அள்ளும் கொடுமையை நிறுத்தவும், பாதாள சாக்கடைகளை நவீனப்படுத்தி துப்புரவுத் தொழிலாளர்கள் நரபலி கொடுக்கப்படுவதைத் தடுக்கவும் மட்டும் நிதியில்லையாம்!

ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஏழாண்டுகளில் ரூ. 1,20,536 கோடிகளை நகராட்சிகளுக்கும் உள்ளூராட்சிகளுக்கும் மைய அரசு வாரியிறைத்துள்ளது. இதில் ஏறத்தாழ 40% தொகை வடிகால்கள், பாதாள சாக்கடைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீண்டும் பழைய வழியிலான பாதாளச் சாக்கடைக் குழாய்களும் மனிதக் குழிகளும் அமைக்கப்படுகின்றனவே தவிர, துப்புரவுத் தொழிலாளிகளின் பாதுகாப்புக்காக சல்லிக்காசு கூட செலவிடப்படுவதில்லை. ஏனெனில், அருவருப்பான ஆபத்தான தொழில் என்றாலும், பாதாள சாக்கடையைத் துப்புரவு செய்ய மலிவான உழைப்புக்கு தாழ்த்தப்பட்டோர் இருக்கிறார்கள் என்கிற அரசின் சாதியத் திமிர் தான் இதற்குக் காரணம்.

அதிகார வர்க்கம், போலீசுஇராணுவம், நீதித்துறை அடங்கிய இன்றைய அரசு எந்திரம்தான், சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிராக மலம் அள்ளும் தொழிலில் தாழ்த்தப்பட்டோரை நிர்பந்தமாகத் தள்ளுகிறது. எவ்விதப் பாதுகாப்போ நிவாரணமோ இன்றி, பாதாள சாக்கடைதுப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரை தொடர்ந்து நரபலி கொடுத்து வருகிறது. அவர்களை அறிந்தே தீராத கொடிய நோய்களில் தள்ளி வதைக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கென்றே இத்தொழிலை ஒதுக்கி பார்ப்பன சாதியக் கட்டுமானத்தைக் கட்டிக் காக்கிறது. தீண்டாமைக்கும், தொடரும் இக்கொடுமைக்குமான முதல் குற்றவாளியே இன்றைய அரசமைப்புதான்.

கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சாதியத் திமிர் கொண்ட இக்கேடுகெட்ட அரசமைப்பை வீழ்த்தாமல் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோர் நரபலியாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட முடியாது. உழைக்கும் மக்களின் புரட்சிகர அரசை நிறுவாமல் மனித மலம் அள்ளும் சமூகக் கொடுமைக்கு முடிவு கட்டவும் முடியாது.

· பாலன்

(அனுமதியுடன்)