> குருத்து

November 24, 2008

கொள்ளையடித்தது நிதிமூலதன கும்பல்கள்! பரிதவிப்பது தொழிலாளர்கள்!





//“பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு” என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் ‘மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்’ என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது// - புதிய கலாச்சாரம் – அக். 08.

அமெரிக்காவில் 20 வங்கிகள் ஏற்கனவே மஞ்சள் கடிதாசி கொடுத்து திவலாகிவிட்டன. திவாலாவது அமெரிக்காவில் இப்பொழுது தொடர்கதையாகி வருகிறது. நேற்று புதிதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த “டவ்னி சேவிங்ஸ் அண்டு லோன் அசோசியேசன்” மற்றும் “பி.எப்.எப். பேங்க் அன்ட் டிரஸ்ட்” இரண்டு வங்கிகள் மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டன. இவைகள் இரண்டும் வீட்டுவசதி மற்றும் நுகர்வு கடன்கள் வழங்கி வந்தவை.

உலகின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான “ஜெனரல் மோட்டார்ஸ்” நிறுவனம் திவால் அறிவிப்பை தீவிரமாக பரிசீலித்து வருகிறார்களாம். இந்த திவால் அறிவிப்பைத் தவிர்க்க அந்த நிறுவனத்தின் இரண்டு பிரதிநிதிகள் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியைப் சந்தித்து 25 பில்லியன் டாலர்கள் (மக்களின் வரிப்பணத்தை) கேட்டிருக்கிறார்களாம்.


அமெரிக்காவின் “சிட்டி வங்கி” யின் பங்குகள் ஒரே நிதியாண்டில் 83% வீழ்ச்சியாகி, அதள பாதாளத்தில் கிடக்கிறது. ஏற்கனவே, உலகம் முழுவதும் 23000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துவிட்டது. இந்தியாவில் 37 முக்கிய உயர்நிலை அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. மேலும், 52000 ஊழியர்களை நீக்க அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே திவாலை தவிர்க்க இந்த வங்கி அமெரிக்க அரசிடம் 25 பில்லியன் டாலர்களை வாங்கி ஏப்பம் விட்டுவிட்டது முக்கிய செய்தி.

இப்படி நாளொரு வங்கி திவாலாவது நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு காரணம் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத மிகை (அராஜக) உற்பத்தியும், அதன் விளைவாய் எழுந்த நிதி மூலதனத்தின் தோற்றமும், நிதி மூலதனத்தைக் கொண்டு ஊக வாணிகத்தில் நிதி மூலதன கும்பல்கள் சூதாடி, ஊதிப் பெருக்கியதுதான் காரணம்.

கொள்ளையடித்தது நிதி மூலதன கும்பல்கள், ஏகாதிபத்திய வல்லரசுகள், மிகப்பெரிய வங்கிகள். ஆனால், இன்றைக்கு உலகம் முழுவதும் பாதிக்கப்படுவது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தான். அமெரிக்காவில் ஏப்ரலில் வந்த தகவல்படி, மார்ச் மாதம் மட்டும் 80 ஆயிரம் தொழிலாளர்களும், ஜனவரி முதல் மார்ச் வரை 2.5 லட்சம் பேர் வேலையிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர்.



அமெரிக்காவிற்கு காய்ச்சல் என்றால், நாமும் இங்கு மருந்து சாப்பிடுகிறோம். ஆம். தகவல் தொழில்நுட்பம், உருக்கு, நிதி சேவைகள், ரியல் எஸ்டேட், சிமெண்ட், கட்டுமானம் துறைகளில் 30% வேலை இழப்பார்கள் என அசோசியேட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்டு இன்டஸ்டிரீஸ் (அசோசெம்) கணித்துள்ளது.

வருகிற தகவல்கள் இந்த கணிப்பை உறுதிப்படுத்துகின்றன.

“டாடா மோட்டார்ஸ்” நிறுவனம் தனது வாகன உற்பத்தி பிரிவை 25.11.2008 லிருந்து 5 நாட்கள் மூடுகிறது. இது இந்த மாதத்தில் இரண்டாவது முறை. 3000 தற்காலிக ஊழியர்களை நீக்கிவிட்டது. 3 ஷிப்டிலிருந்து 1 ஷிப்டாக குறைத்துவிட்டது.

அசோக் லேலண்ட் நிறுவனம் வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுகிறதாம். ஷிப்டுகளை குறைத்துவிட்டதாம். இதனால், இதனை நம்பியிருக்கும் பல சிறு நிறுவனங்கள் இயங்க முடியாமல் மூடிவிட்டன.

கார் விற்பனை சரிந்ததால், டன்லப் டயர் நிறுவனம் தனது உற்பத்தியை காலவரையின்றி நிறுத்திவிட்டது. சென்னையில் 1000 ஊழியர்களையும், கொல்கத்தாவில் 1171 ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டது. மாதந்திர உதவித் தொகை ரூ. 1500 ரூபாயாம். இருக்கும் வீட்டிற்கு வாடகை கூட கொடுக்கமுடியாது.

அமெரிக்காவை காப்பியடித்து இந்தியாவிலும் காலியிடம் மற்றும் வீட்டின் விலையை செயற்கையாக ஏற்றி கொள்ளையடித்த ரியல் எஸ்டேட் பிசினெஸ் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

டி.எல்.எப்., யுனிடெக், பர்ஸ்வந்த், ஓமெக்ஸ் உட்பட்ட 4000 கட்டுமான நிறுவங்களின் கூட்டமைப்பு விற்பனை விலையிலிருந்து 15% குறைத்துக்கொள்ள (லாபத்தில் நட்டம்?)முடிவு செய்திருக்கின்றன. இப்பொழுது பரிசு – கார், லேப்டாப், பிளாஸ்மா டிவி, படுக்கையறை இலவசம் என அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். வீடு வாங்கினால் கார் தருவதாக‌ நேற்று கூட தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். குர்கானில் கூவி கூவி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். வாங்கத்தான் ஆளில்லை. இப்படி கட்டுமான தொழிலும் படுத்துவிட்டது.

இந்தியாவில் இப்படி கடந்த சில மாதங்களில் மட்டும் கோடிக்கணக்கானோர் வேலை இழந்திருக்கிறார்கள்.

இலாபம் கொழித்த பொழுதெல்லாம் அள்ளிய முதலாளிகள் இப்பொழுது நெருக்கடி என்றதும் வேறு எதிலும் கை வைக்க முடியாத இவர்கள் தொழிலாளர்களின் தலையில் கை வைக்கிறார்கள். சம்பளத்தை பாதியாக குறைக்கிறார்கள். சிக்கன நடவடிக்கை (Cost Cutting) என்ற பெயரில் தொழிலாளர்களை வேலையிலிருந்து துரத்துகிறார்கள்.


நிலைமை இவ்வாறு இருக்க, இந்தியாவில் 30% பேர் வேலை இழப்பார்கள் என்று தனது கணிப்பைச் சொன்ன அசோசெம்-ஐ மத்திய அரசு (8,நவம். 2008) கண்டித்து இருக்கிறது.

பொருளாதார மந்தத்தால் இனி வருங்காலத்தில் உருவாகப் போகும் வேலை வாய்ப்பு தான் குறையுமே ஒழிய இப்பொழுது வேலை வாய்ப்பு எப்படி குறையும் என சிதம்பரம் வேலை இழந்த தொழிலாளர்களைப் பார்த்து சிதம்பரம் (1,நவம்.2008) எதிர் கேள்வி கேட்கிறார்.

மூலதனத்தின் மீதும், பொருட்கள் மீதும் அரசாங்கக் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் நீக்கப்பட்டு, எல்லா துறைகளிலும் அன்னிய மூலதனத்திற்குத் தாராளமாக திறந்து விடப்பட்டது தான் இத்தனை நெருக்கடிக்கும் காரணம்.

இவ்வளவு நடந்த பிறகும், தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளிலிருந்து பின்வாங்க மாட்டோம் என உறுதியாக சோனியா அறிவித்துள்ளார்.

பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு இனி போராட்டம் இல்லாமல் வாழ்க்கையில்லை!

November 22, 2008

ஊகவணிகம் – பந்தய ஒப்பந்தங்கள் என்றால்?



மீண்டும் பங்குச் சந்தைக்கு வருவோம். பங்கு, பங்குச்சந்தை, பங்குச் சந்தை சூதாட்டம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்த பதிவில் ஊக வணிகம் பற்றிப் பார்க்கலாம்.

//ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.// - புதிய கலாச்சாரம்.

பங்குச் சந்தைச் சூதாட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த காலங்களிலும் நெருக்கடி இருந்திருக்கின்றன. இப்பொழுது இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி ஏன்? காரணம் இருக்கிறது. நிதி மூலதன கும்பல்கள் நடத்திய ஊக வாணிகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிதான் காரணம்.

முதலில் உண்மை வணிகம், ஊக வணிகம் என்றால் என்னவென்று பார்க்கலாம்.

உண்மை வணிகம்

என்னிடம் 100 கிலோ கடலை இருக்கிறது. இன்னொருவருக்கு கடலையின் தேவை இருக்கிறது. நான் அதன் விலை ரூ. 1000 என்கிறேன். இருவரும் பேரம் பேசி ரூ. 900 என முடிவுக்கு வந்து, நான் பணம் பெற்றுக் கொள்கிறேன். இது உண்மை வணிகம்.

ஊக வணிகம்

சரக்கு இல்லாமலே சூதாடுவது. கடலையை கண்ணில் பார்க்காமாலே சூதாடுவது. ‘அ’ என்பவர் கடலை இன்னும் ஒரு மாதத்தில் ரூ. 1500 விற்கும் என்பார். “ஆ” என்பவர் ரூ. 800 க்கு தான் விற்கும். என்பார். இருவரும் பந்தயம் கட்டிக்கொள்வார்கள். ஒரு மாதத்தில் என்ன நிலையோ அதற்கு தகுந்தபடி பந்தயப்பணம் கைக்கு மாறும்.


இந்த ஊக வணிகத்தின் அளவு எவ்வளவு என பார்த்தால் ...

உலகம் முழுவதிலும் நடக்கும் நிதி பரிவர்த்தனையில் உண்மை வணிகம் 2 %. மீதி 98% ஊக வணிகம் தான்.

உலக நிதிச் சந்தையில், இன்றைய நிலையில் ஓராண்டு காலத்திற்குள் நடக்கும் அன்னிய செலாவணி கைமாற்றுகளின் அளவு 10,00,00,000 கோடி டாலர்கள்! இதில் உற்பத்தியோடு தொடர்புடையது 2% மட்டுமே. மொத்த உலகத்தின் உள்நாட்டு உற்பத்தி அளவு இதில் 4% மட்டுமே! (Red Star – Oct 2006)

ஆச்சரியமாய் இருக்கிறதா!

ஊகவணிகத்தில் பந்தய ஒப்பந்த வகைகள் (deraivatives) இருக்கின்றன. நிதி மூலதன வங்கிகள் இந்த பந்தய வகையறாக்களில் விளையாடி கொள்ளையடித்தது தான் இவ்வளவு பெரிய நெருக்கடி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவைகள் கிடையாது. இதன் தன்மை, வகைகள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். அதைப் பற்றி சில தகவல்கள்.

பந்தய ஒப்பந்தங்களைத் தான் “நிதி உலகின் பேரழிவு ஆயுதங்கள்” என்கிறார்கள் இதன் பாதிப்பை ஆழமாய் உணர்ந்த பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும். அதில் ஒருவர் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட்.

பேரழிவு ஆயுதங்கள் மட்டுமில்லை. இவைகள் “கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்” என்கிறார் குருமூர்த்தி.

பழைய நினைவுகளில் கிளறிப் பார்த்தால்...


பந்தய ஒப்பந்த வகையறாக்களில் கொடிகட்டிப் பறந்து, பிறகு அவைகளினாலேயே என்ரான் குழுமம் நொறுங்கி விழுந்து திவாலானது. இந்த நிறுவனத்திற்குத் தான், மின் உற்பத்தியிலேயே ஈடுபடாமல், மகாராஷ்டிரா அரசு மாதம் 85 கோடி கட்டி, அதன் மின்சார வாரியம் திவாலானது. பிறகு, என்ரான் திவாலானதால், மகாராஷ்டிரா அரசு தப்பித்தது.




பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற் இரு மேதைகளால் நடத்தப்பெற்ற நீண்டகால முதலீட்டு நிர்வாகம் (LTCM) என்ற நிறுவனம் 1998ல் நொறுங்கியது இதற்கு இன்னுமொரு உதாரணம். இதன் கணக்குப் புத்தகங்களில் காணப்பட்ட பந்தய ஒப்பந்தங்களின் பண மதிப்பு 1,40,000 கோடி டாலர்களாகும்.

November 20, 2008

எஸ்.எம்.எஸ். மூலம் கலெக்டருக்கு கோரிக்கை! வாவ்! என்ன ஒரு அருமையான திட்டம்!


“இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக” என்ற சன் தொலைக்காட்சியின் பில்டப் போலவே, திருவள்ளூர் மாவட்ட வருவாய் நிர்வாகத்தில், எஸ்.எம்.எஸ் மூலம் பொதுமக்கள் மனு கொடுக்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறதாம்.

நமக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பட்டா நகல் வேண்டுமென்றால், கலெக்டருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். அவர்கள் அதை மனுவாக ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு தேவையான சான்றிதழை வீட்டுக்கு தபாலில் அனுப்பி வைத்துவிடுவார்களாம்.

சான்றிதழுக்கான பணம் செலுத்த வேண்டுமே! பி.எஸ்.என்.எல். நிறுவனம் உங்கள் செல்லில் பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்திவிடும். இதன் மூலம் மக்கள் தங்களுடைய வீண் அலைச்சலை தவிர்க்கப் போகிறார்களாம்.

திட்டம் கேட்க காதுக்கு இனிமையாக இருக்கிறது. நடைமுறைக்கு?

இந்த அரசு தரக்கூடிய ஒவ்வொரு சான்றிதழுக்கும் அலைய வேண்டிய அலைச்சல் இருக்கிறதே! சொல்லி மாளாது. ஒரு ரேசன் கார்டுக்கு நான் ஒரு வருடம் அலைந்தேன். 15 முறை போயிருப்பேன். ஒவ்வொருமுறையும், பர்மிசன் சொல்லிவிட்டுப் போவேன். அங்கு கூட்டமோ கூட்டம். கேட்க வேண்டிய நபர் சீட்டில் இருக்காது. பக்கத்து சீட்டிடம் கேட்டால், வருவார் என்பார்கள். 1 மணி நேரம் கழித்து திரும்ப கேட்டால், விடுப்பு எடுத்திருக்கலாம் என குத்துமதிப்பாய் பக்கத்து சீட் பதில் சொல்லும்.

இப்படி பர்மிசன் பலமுறை அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டியதாகிவிட்டது. 10 முறைக்கு மேல் போகும் பொழுது, அலுவலகத்தில், “ரேசன் கார்டுக்கு தானே! போகிறீர்கள். வேறு எங்கும் இல்லையே!” என நக்கலாய் கேட்பார்கள். வாங்காமலே விட்டுவிடலாம் என்றால், ரேசன் கார்டு இருந்தால் தான், கேஸ் சிலிண்டர் தருவேன் எனச் சொல்லிவிட்டார்கள்.

இந்த எஸ்.எம்.எஸ். திட்டத்தில் மிகப்பெரிய ஓட்டை இருக்கிறது. இப்படி பலமுறை அலையவிடுதலுக்கு காரணம் அரசு அலுவலகங்களில் விளையாடும் லஞ்சம் தான். கொஞ்சம் அலையவிட்டால் தான், ‘loss of pay” க்கு பயந்து லஞ்சமே தேறும். அதுவும் நிறைய தேறும் என்ற நிலை இருக்கிறது. அரசு தனக்கு தேவையான பணத்தை மொபைல் பில்லில் பிடித்துக்கொள்வார்கள். ஆனால், லஞ்சப்பணத்தை பற்றி இந்தத் திட்டத்தில் எதுவுமே திட்டத்தில் இல்லையே! இதனால் இந்த திட்டத்தை கிடப்பில் போட 99% வாய்ப்பு இருக்கிறது.

எல்லா அரசு அலுவலகங்களுக்கும் தொலைபேசி வைத்திருப்பார்கள். பல அலுவலகங்களுக்கு சில சில்லறைத் தகவல்களுக்கு தொலைபேசி செய்தால், “Does’not Exist” என்ற குரல் தான் கேட்கும். அல்லது தொலைபேசி ரிங் அடித்துக் கொண்டே இருக்கும். வெறுத்துப் போய்விடுவோம்.

இப்படிப்பட்ட திட்டங்கள் எங்கு நடைமுறைக்கு சாத்தியப்படும் என்றால்... மக்கள் நலம் நாடு அரசாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

பின்குறிப்பு : உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். காதைக் கொடுங்கள். முதலாளிகள் போன் செய்தால் எல்லா அதிகாரிகளும் கட்டாயம் பேசுவார்கள். எப்படி என்கிறீர்களா? அதற்கு நவீன தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது.

அந்த அதிகாரியே முதலாளிக்கு தனது செல்பேசி எண்ணைத் தானே முன்வந்து தருவார். போன் அடித்தால், தவறாமல் எடுப்பார். அவரை டீக்கடைக்கோ அல்லது டாஸ்மார்க் கடைக்கோ முதலாளியோ அல்லது அவரது பிரதிநிதியோ அழைத்தால் உடனடியாக வந்து லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டு போவார். வேலையும் கனக்கச்சிதமாக முடித்தும் தருகிறார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள். இது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் நலம் நாடும் அரசா? அல்லது ‘முதலாளி’ மக்களுக்கான அரசா?