> குருத்து: April 2025

April 25, 2025

Khauf (2025) வெப் சீரிஸ்


நாயகி ஒரு இளம்பெண் குவாலியரில் இருந்து தலைநகர் தில்லி வருகிறாள். அவளுக்கு பொருளாதார நெருக்கடி. ஆகையால், தில்லியை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அந்த விடுதிக்கு வந்து சேர்கிறாள்.


அந்த விடுதியில், குறிப்பாக மாடியில் உள்ள தளத்தில் பக்கத்து அறைகளில் நான்கு பெண்கள் அறைகளில் இருக்கிறார்கள். அவளின் தோழி ஒருத்தி அறையில் தங்கி இருந்தவள், ஒரு சாலை விபத்தில் இறந்து போகிறாள். ஆகையால், அந்த அறையை யாருக்கும் வாடகைக்கு விடக்கூடாது என வார்டனோடு மல்லுக்கு நிற்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து சில மாதங்களாக விடுதியை விட்டு வெளியே செல்லாமல் அடைந்து கிடைக்கிறார்கள்.

நாயகிக்கு வேலை கிடைக்கிறது. அந்த அறையில் அமானுஷ்யமாக சில விசயங்கள் நடக்கின்றன. நாயகிக்கு கல்லூரியில் நடந்த பாலியல் அத்துமீறல் ஒரு கெட்ட கனவாக துரத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த அமானுஷ்யங்களும் இணைந்து அவளை வாட்டி வதைக்கின்றன.


ஒரு வயதான மருத்துவன் பெண்களை கடத்தி கொன்று தனது பலத்தை அதிகரிப்பதற்காக முயன்று கொண்டே இருக்கிறார். இதன் தொடர்ச்சியில் நாயகியை குறிவைக்கிறார்.

நடுத்தர வயது பெண் காவலர் தன் காணாமல் போன பையனைத் தேடி விசாரித்துக்கொண்டே இருக்கிறாள்.

மேலே சொன்ன எல்லா நிகழ்வுகளும் ஒரு முனையில் சங்கமிக்கும் பொழுது, களேபரங்கள் நடக்கின்றன.
***


பேய், அமானுஷ்யம் என்ற வகையில் இதன் கதையின் நகர்வு இருந்தாலும் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையென்றால், குழந்தையை வயிற்றிலேயே கலைத்துவிட நினைக்கும் கணவன், பெருமைக்காக தன் காதலியுடன் தனியாக இருக்கும் இடத்தை சொல்லும் காதலன், ஏன் தன் கணவனைப் பிரிந்தேன் என சொல்லும் பெண் காவலர் என பெண்களின் பிரச்சனையை எதிர்கொள்ளும் சிக்கல்களை படம் முழுவதும் சொல்லிச் சென்றது சிறப்பு.

சமீபத்தில் சோரி2 என ஒரு ஹாரர் படம் பார்த்தேன். அதிலும் குழந்தை திருமணம் தவறு என சொல்லிச் சென்றாலும், படம் பார்க்கும்படி இல்லை. ஆனால் இந்த சீரிஸ் சரியாக தொட்டு சென்றிருக்கிறது.

கதையில் வரும் சின்ன பாத்திரங்கள் கூட ஏதோ வகையில் மனதில் நிற்பது சிறப்பு. ஒளிப்பதிவு, பின்னணி இசை என எல்லாமும் துணை நின்றிருக்கின்றன. அதனால் சிறப்பா என்றால்… எட்டு அத்தியாயங்களை கொஞ்சம் கத்திரிப் போட்டு ஆறு அத்தியாயங்களாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பேய் படத்தில் லாஜிக் பார்ப்பது சிக்கல் என்றாலும், நிஜத்திலும் மிக மோசமாக நடந்துகொண்ட ஆண், செத்தப் பின்பும் உக்கிரமான ஆவியாக கொல்வது எல்லாம் ஏற்கமுடியாதது. (சீரிஸ் பாருங்கள். நான் சொல்வது புரியும். விலாவரியாக சொன்னால்… ஸ்பாய்லராகிவிடும்).

முதல் வலைத்தொடர். மொத்தம் 8 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் 45லிருந்து 50 நிமிடங்கள். பிரைமில் தமிழில் கிடைக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கலாம்.

தேங்காய் சட்னியும், ரோபா அணுகுமுறையும்!


மாலை ஏழு மணி போல அந்த கடையை கடந்த பொழுது, பசித்தது. உணவகத்தில் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.


ஒரு தோசை சொல்லி… தந்தார்கள். கொடுத்த தேங்காய் சட்னி நன்றாக புளித்தது.
பக்கத்து டேபிள்களில் எந்தவித சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அதெப்படி எனக்கு மட்டும்? இருந்தும் கேட்டுவிடலாம் என கிச்சனுக்கு போனேன். எல்லோருக்குமே 20 வயது தாண்டாது. இளம் பெண்கள்.

”சட்னி கெட்டு போயிருச்சுமா! புது சட்னி வேண்டும்!” என அந்த பெண்ணிடம் தெரிவித்தேன். அப்படியா! கவனிக்கவில்லையே! என சொல்லி வருத்தம் தெரிவிக்கும் என நினைத்தேன். ஒரு ரோபாவை போல ”அரைச்சிட்டு இருக்காங்க சார்!” என்றது.

அந்த பெண்ணுக்கு பின்னால், இன்னொரு பெண் வேகவேகமாக பார்சலுக்கு அந்த கெட்டுப்போன தேங்காய் சட்னியை ஒரு எந்திரம் போல பார்சல் செய்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், ஒரு மாதிரியாக இருந்தது. ”கெட்டுப்போயிருச்சுன்னு சொன்னேன். அந்த பெண் எதுவும் கேட்காத மாதிரி பார்சல் பண்ணிகிட்டு இருக்கு!” என்றேன். பதிலில்லை.

இந்த பெண்களிடம் பேசி பிரயோஜனமில்லை என புரிந்தது. ”இங்க யாரும்மா மேனேஜர்?” என்றேன். (போய் சொல்லிக்கங்க! என்ற மாதிரி) கை காட்டியது. அந்த இளைஞனும் 2000 கிட்ஸ் தான். “சட்னி கெட்டுப்போயிருச்சு! கெட்டுப் போன சட்னியை பார்சல் பண்ணிக்கிட்டு இருக்காங்க!” என்றேன்.

என்னுடன் கிச்சனுக்கு வந்தார். சட்னி அரைத்துக்கொண்டிருந்த தகவலைச் சொன்னதும், “சார் உங்க டேபிளுக்கு போங்க! நான் கொடுத்துவிடுகிறேன்” என்றார். கொஞ்ச நேரத்தில் ஒரு அம்மா புது சட்னியைக் கொண்டு வந்தார். இப்பொழுது தான் பக்கத்து டேபிள்களில் இருந்து கெட்டுப் போன சட்னியைப் பற்றி புகார் சொல்லிகொண்டிருந்தார்கள்.

இளையராஜா - ஒரு நாள் வாழ்க்கை


ஒரு நாள் வாழ்க்கை குறித்து சமீபத்திய ஒரு சமஸ் பேட்டியில் சொல்கிறார்.

திரைப்பட உலகில் பிசியாக இருந்த பொழுது, காலை 4 மணிக்கு எழுந்திருப்பேன். நான்கு மணிக்கு சமஸ்கிருத ஆசிரியர் வீட்டுக்கு வந்துவிடுவார். அரை மணி நேரம் வகுப்பு.

காரை எடுத்துக்கொண்டு பெசண்ட் நகர் கிளம்புவேன். டி.வி. கோபாலகிருஷ்ணன் காத்துக்கொண்டிருப்பார். அவரிடம் கர்நாடக சங்கீதம் பயிற்சி எடுத்துக்கொள்வேன்.

ஒருமணி நேரம் பூஜை செய்வேன். 6.50 க்கு ஸ்டுடியோ கிளம்புவேன். 7 மணிக்கு இசை கோர்ப்பு பணி துவங்கிவிடும். ஒரு உதவியாளர் அன்று பதிவு செய்வதற்காக காத்திருக்கும் மெட்டை இசைக் குறிப்புகளை கொண்டு நினைவூட்டுவார். டேப் ரிக்கார்டர் வந்த பிறகு அதில் உள்ள மெட்டை போட்டுக்காண்பிப்பார்.

அந்த பாடலுக்குரிய இசைக் கோர்வைகளை எழுத துவங்குவேன். எந்த பாடலுக்கும் அரை மணி நேரம் தான் எடுத்துக்கொள்வேன். (ஒரே ஒரு பாடல் மட்டும் 45 நிமிடம் ஆகியிருக்கிறது. ) நான் எழுதியதை வைத்து, இசைக் கலைஞர்களையும், பாடகர்களையும் வரச்சொல்லி சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பார்கள். இந்த இடைவேளையில் ஒரு மணி நேரம் தியானம் செய்வேன்.

காலை உணவு சாப்பிட்டுவேன். இசைக்கலைஞர்கள் அவரவர்களுக்கான குறிப்புகளைப் பெற்றுக்கொண்டு எனக்காக காத்திருப்பார்கள். அதை எப்படி வாசிப்பது என தெரியாது. என்ன பாடலுக்கு வந்தோம் என தெரியாது. ஓவ்வொருவருக்கும் சொல்லிக்கொடுத்து, திருத்தங்கள் செய்து சொல்லிக்கொடுத்து, ரிகர்சல் துவங்கும்.

இந்த வேளையில் பாடலாசிரியர் வருவார். அவருக்கு விளக்கி, பாடலை அரை மணி நேரத்தில் பெற்று, பாடகர்கள் காத்திருப்பார்கள். அவர்களுக்கு பாடலை விளக்கி… பயிற்சி கொடுத்து…. மொத்தமாக இசைக் கலைஞர்களோடு பாடலை பாடத் துவங்கி பயிற்சி எடுப்பார்கள். இடையிடையே திருத்தங்கள் செய்வேன். எப்பொழுது பிழையில்லாமல் பாடுகிறார்களோ அப்பொழுது பாடல் பதிவு நடக்கும்.

கொஞ்சம் சிரமமான பாடலாக இருந்தால்… திரும்ப திரும்ப பாடிக்கொண்டே இருப்பார்கள். பாடல் பதிவின் வேலை (Shift) என்பது 7 முதல் 1 மணி வரை. அதற்குள் பாடலை முடிக்கவேண்டும். இல்லையெனில் அடுத்த வேலை நேரத்திற்கு போய்விடும். பெரும்பாலும் 1 மணிக்குள் பாடலை முடித்துவிடுவோம்.

அடுத்த பாடல் இதே போல 2 முதல் 9 வரை தொடரும். அதற்கு பிறகு வீட்டுக்கு போய், கிளம்பி… மீண்டும் பெசண்ட் நகர் போய் கர்நாடக சங்கீத பயிற்சி தொடரும். வீடு திரும்ப 12 மணியாகிவிடும்.

அடுத்த நாள் காலை 4 மணிக்கு மீண்டும் துவங்கும்.

சாதனைக்கு பின்பு இத்தனை உழைப்பு இருக்கிறது.

நம்ம ஒரு நாள் வாழ்க்கை வந்து வந்து போவது தான் சிரமமாக இருக்கிறது. இப்படியெல்லாம் யோசிப்பதை தடுக்க முடியாதா? 🙂

வங்கி உணவு நேரம்!


பஞ்சாப் நேசனல் வங்கிக்கு இன்று நேரடியாக‌ போயிருந்தேன். இப்பொழுதெல்லாம் இணையத்திலேயே வரவு செலவு நடப்பதால், வங்கிக்கு போகவேண்டிய தேவை இல்லாமல் இருக்கிறது. நண்பர் ஒருவர் ஒரு உதவி கேட்டதால், போயிருந்தேன்.


காசாளர் இருக்கையில் இல்லை. சாப்பிட போயிருப்பதாக தெரிவித்திருந்தார்கள். நான் போகும் பொழுது 2.10. 2.30க்கு காசாளர் வந்து சேர்ந்தார். அதுவரை என்னைப் போல வாடிக்கையாளர்கள் காத்திருந்தார்கள்.

வங்கியின் தொழில் நேரம் : 10 முதல் 4 மணி வரை எழுதிப்போட்டிருக்கிறார்கள். ஏன் ஒரு ஊழியர் சாப்பிட போகமாட்டாரா! அந்த நேரத்தை தெளிவாக எழுதி போடலாமே! வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் குறையும் அல்லவா! வழக்கமாக 1.30 முதல் 2 மணி வரை இருக்கும் என நினைத்து... 2.10க்கு போனால், அந்த சமயத்தில் சாப்பிட போயிருக்கிறார்.

ஏன் முறையாக தெரிவிக்க‌வில்லை? ஒருவேளை காசாளர் சாப்பிட செல்லும் பொழுது, வேறு ஒரு ஊழியர் தற்காலிக பொறுப்பேற்க வேண்டுமா? இல்லையெனில், அதில் உள்ள நடைமுறை சிக்கலில் அதை செய்யவில்லையா?

நிறை இருந்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள். குறை இருந்தால், எங்களிடம் சொல்லுங்கள் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் வங்கி மேலாளரை இருக்கையில் இல்லை. அவரும் சாப்பிட சென்றுவிட்டார் என நினைக்கிறேன்.

சரி. அங்குள்ள ஒரு பணியாளரிடம் தெரிவித்தால், அவங்க 2.15க்கு தான் சாப்பிட சென்றார் என சிம்பதியுடன் சொல்கிறார். ”அவங்களுக்கான சாப்பாடு நேரத்தை தாரளமாக எடுத்துக்கொள்ளட்டடும். சாப்பாடு நேரம் என ஏன் போர்டில் தெரிவிக்கவில்லை என்றேன்?” புன்னைகைத்து அமைதியாகிவிட்டார். அவரிடம் பதில் இல்லை.

குறுஞ்செய்தியில்... வங்கிக்கு சென்று வந்த அனுபவம் கேட்டார்கள். வந்த பொழுது காசாளர் சாப்பிட சென்றிருக்கிறார். போர்டில் உணவு நேரத்தை எழுதிப் போடுங்கள். இல்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்தேன்.

நான் சொல்வது சரியா? உங்கள் அனுபவம் என்ன?

மறக்கப்படும் நினைவுகள்


இருபது வயதில் பழகிய சில மனிதர்களை இப்பொழுது நினைத்தால், சுத்தமாக நினைவில் இருந்து காணாமலே போய்விட்டார்கள். அவர்களோடு ஒரு அலுவலகத்தில் இரண்டு மாதங்கள் வேலை செய்திருக்கலாம். அவர்களோடு மூன்று மாதம் ஒரு கோர்ஸ் ஏதாவது இணைந்து படித்திருக்கலாம். இப்பொழுது யோசித்தால் அந்த முகங்கள் மெல்ல மறந்து போயிருக்கின்றன. அதே போல அவர்கள் தொடர்பான நினைவுகளும்! எவ்வளவு நினைவுப்படுத்தினாலும் நினைவுக்கு வருவதில்லை.


குமரவேல் என ஒரு நண்பர். வானவியல் குறித்த விசயங்களில் நிறைய ஆர்வமுள்ளவர். இது குறித்து நிறைய சில நாட்கள் சில மணிநேரங்கள் விவாதித்து இருக்கிறோம். அதற்கு பிறகு கேரளாவிற்கு பணி நிமித்தமாய் மாற்றாலாகி போன நினைவு. இப்பொழுது அவரை நினைத்தால்… முகம் சுத்தமாக நினைவில் இல்லை. இது எனக்கு மட்டும்தானா! பலருக்குமா என தெரியவில்லை.

என் சின்ன அக்கா சிறு வயது நினைவுகளைப் பற்றி, பழகிய மனிதர்களைப் பற்றி பல விசயங்களை கடந்த ஆண்டு நடந்தது போல நினைவுகளை பகிர்வார். அவரிடம் ஒன்றை கவனித்திருக்கிறேன். எப்பொழுதும் கடந்த கால நினைவுகளை சம்பந்தப்பட்டவர்களிடம், தனது உறவுகளிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒருவேளை மீண்டும் மீண்டும் நினைவுகளை மங்க விடாமல் தூசித் தட்டி புதுப்பித்துக்கொள்கிறார் என இப்பொழுது புரிந்துகொள்ள முடிகிறது.

இப்பொழுது ஏன் இதை எழுதுகிறேன். மனிதனின் வாழ்வு என்பது நினைவுகளால் நிரம்பியது தானே! ஏதோ ஒரு விபத்தில் சிக்கி, நினைவுகள் எல்லாம் அழிந்து போனால், ஒரு மனிதன் என்ன ஆவான்? அப்படித்தான் நினைவுகள் மங்கலாகி, மறக்கும் பொழுது… ஏதோ ஒன்று கைநழுவி போவதாக படுகிறது. அன்றைக்கு ஒரு நடுத்தர வயது பெண்ணை எதைச்சையாக ஒரு பழக்கடையில் பார்க்கிறேன். இவரிடம் பழகியிருக்கிறேன் என தெரிகிறது. எந்த அலுவலகம், எந்த இடம் என மறந்துபோய்விட்டது. அந்த நினைவை மீட்டுக்கொண்டு வரும் வரை ஒரு பதட்டம் வருகிறதே! அது தாங்க முடியாததாக இருக்கிறது.

இனி வாழ்வில் எதிர்கொள்ளும் சில நபர்களைப் பற்றி, சில நிகழ்வுகளைப் பற்றி, சில விசயங்களைப் பார்க்கும் பொழுது, பழைய நினைவுகள் மேலெழும்பி வருவதைப் பற்றி எழுதுவது, பகிர்வது என்பதை எனக்காகவாவது கவனமாக செய்யவேண்டியிருக்கிறது.

நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?

உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!


ஆறு மாதத்திற்கொருமுறை செல்லும் அந்த அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பொழுது, புதிதாய் ஒருவர் இருந்தார். முதலாளியிடம் பேசிக்கொண்டிருந்தார். புதியவரும் எனக்கு வணக்கம் தெரிவித்தார். ஆனால் எனக்கு அடையாளம் தெரியவில்லை. இது மண்டையை குடைகிற விசயம். கண்டுபிடிக்கும் வரை சிரமம் தான்.


இந்த அவஸ்தைக்கு அவரிடமே கேட்டுவிடலாம். உங்களை நான் பார்த்திருக்கேன். ஆனால் எங்க பார்த்தேன் என தெரியவில்லை என பட்டென கேட்டுவிட்டேன்.

”நான் உங்க டாலி பார்ட்னர் நிர்மல்” என அவர் சொன்னதும்… சடாரென மண்டையில் உரைத்தது. ”ஸாரி நிர்மல் சார்!” என சமாளித்தேன். மாதம் ஒருமுறையாவது அவரிடம் போனில் பேசிவிடுகிறேன். ஆனால் பார்த்து மூன்று, நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மேலும் சமீபத்தில் மொட்டை போட்டு, முடி வளர்த்திருக்கிறார்.

வேறு இடத்தில் கேட்டால் கூட பரவாயில்லை. அந்த நிறுவனத்தில் கேட்டது இன்னும் சங்கடம். அவர் டாலி (Tally) குறித்து நன்றாக சப்போர்ட் தருவார் என அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் முதல் நாள் தான் வாய் மொழியாக சான்றிதழ் கொடுத்திருந்தேன். இப்பொழுது அவர்கள் முன்னாலேயே இப்படி கேட்டது இன்னும் சங்கடம்.

பிறகு பேசி சமாளித்து வந்துவிட்டேன். இதிலிருந்து அறிவது என்னவென்றால், கொஞ்சம் நிதானித்து பேசியிருந்தால்.. இந்த தர்ம சங்கடம் ஏற்பட்டிருக்காது. ஏன் அத்தனை அவசரம் என யோசித்துப் பார்த்தேன்.
வேறு என்ன காரணம். பலரும் புலம்புகிற மண்டையை பிளக்கிற வெயில் தான்.

ஆட்டோ பயணமும் சங்கடங்களும்!


ஓலா, ஊபர் ஆகியவை பல் போன நிறுவனங்களாகி விட்டன. அவர்கள் தயவில் வண்டி ஓட்டுபவர்கள் இருந்தது போய் வண்டி ஓட்டுபவர்கள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டார்கள். செயலியில் காட்டும் கட்டணம் எல்லாம் சும்மாங்காட்டிக்குத்தான். போன் செய்து இண்டர்வியூவில் வெற்றி பெற்றால்தான் சவாரியே கிடைக்கும். டிரைவர் மீது புகார் சொல்லலாம் என்றால் செயலியில் காட்டும் வாகனமும் வரும் வண்டியின் எண்ணும் வேறு வேறாக இருக்கும். ஒரே ஓட்டுநர் மூன்று நான்கு மொபைல் போன்களை வைத்துக் கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறார். இங்கே இன்னொரு பிரச்னையும் உள்ளது. பெண்கள் அல்லது முதியவர்கள் தனியாக செல்லும்போது இந்த வாகனத்தில்தான் செல்கிறார்கள் என்று செயலி அனுப்பும் செய்தி தவறானதாக இருக்கும். இவை அனைத்தும் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. தங்கள் பங்கு வந்தால் போதும் அவர்களுக்கு.

***
கடந்த சனி, ஞாயிறு தஞ்சையில் இரண்டு நாட்களில் ஆறுமுறை பயணித்தோம். ஆறு ஆட்டோ ஓட்டுநர்களும் சொல்லி வைத்தாற் போல இருந்தார்கள்.

ஒரு கி.மீட்டரோ அல்லது இரண்டு கிமீட்டரோ எல்லாவற்றிக்கும் குறைந்த பட்ச கட்டணம் ரூ. 100 என அவர்களுக்குள் பேசி முடிவு செய்து கறாராக கேட்டு வாங்கிறார்கள்.

ஒரு ஆட்டுநர் அரண்மனையில் இருந்து நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ் 3 கி.மீ. ரயில்வே நிலையத்துக்கு ரூ. 100. அதையும் தாண்டி போக வேண்டியிருப்பதால் ரூ. 150 கேட்டார். அதற்கான தூரம் 400 மீட்டர் தான். 🙁 பிறகு ரூ. 100க்கு வேறு ஒரு ஆட்டோ பிடித்து போய் சேர்ந்தோம்.

விசாரித்த பொழுது ஓலா அங்கு வேலை செய்கிறது. ஒரு குறிப்பிட்ட 2 கிமீ தூரத்திற்கு ரூ. 45 என காட்டியது. அதற்கு வந்த டிரைவர் ஆப்பில் குறைவாக காட்டும் என சொல்லி ரூ. 100 வாங்கிகொண்டார்.

சென்னையில் நட்சத்திரங்கள் இடச் சொல்லி வலியுறுத்தும் ஓலா ஆப், தஞ்சையில் கவனமாய் ஆப் செய்யப்பட்டிருந்தது. 🙂

கல்நெஞ்சக்காரர்கள்.


அசைவம் சாப்பாடு கல்யாணத்தில் இருக்கும் பொழுது...

சைவக்காரர்களையும் மதித்து அவர்களுக்கும் தனியாக சாப்பாடு ஏற்பாடு செய்கிறோம்.
ஆனால்... இந்த சைவக்காரர்களுக்கு அந்த பெருந்தன்மை இருப்பதில்லை. எல்லோருக்கும் சைவத்தையே திணிக்கிறார்கள்.
கல்நெஞ்சக்காரர்கள்.

காதல் திருமணம்! புத்தகப் பரிசு!!




தஞ்சைத் தமிழ் பையன் அருணும், வங்கத்தைச் சேர்ந்த தெப்லீனா பெண்ணும் பெங்களூரில் MBA படிக்கும் பொழுது காதல் கொண்டார்கள்.


இருவரும் இப்பொழுது நல்ல வேலையிலும் இருக்கிறார்கள்.

பெற்றோர்கள் ஒப்புதலுடன் திருமணம் வங்க மண்ணில் ஆட்டம், பாட்டத்துடன் நடந்து... இன்று (09/03/25) தஞ்சையில் வரவேற்பு சிறப்பாக நடைபெறுகிறது.

வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசாக அஸ்வகோஷ் அவர்கள் எழுதிய "கடவுள் என்பது என்ன?" புத்தகம் பரிசாக தரப்படுகிறது.

புத்தகங்களை பரிசாக தரும் வேலையை எனக்கே ஒதுக்கியிருக்கிறார்கள். மகிழ்ச்சி.

பையனின் அப்பாவும், அம்மாவும் ஆசிரியர்கள். அப்பா இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர். அதனால் இந்தப் புத்தகங்கள்.

இப்படி எல்லா திருமணங்களிலும் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

நான் திருமண பரிசாக கடந்த 30 ஆண்டுகளாக கொடுத்து வருகிறேன். (இப்ப சொல்லாமல் எப்பொழுது சொல்வது!
🙂

மணமக்கள் வாழ்க!

ரயில்

 தஞ்சைக்கு ஒரு திருமணத்திற்காக போய்க்கொண்டிருக்கிறோம்.

அகமதாபாத்திலிருந்து 1700 கிமீ பயணித்ததில் ரயில் மூன்றரை மணி நேரம் தாமதம்.
ரயில் நேரம் குறித்து புகழ்பெற்ற நகைச்சுவை உண்டு.
"வண்டி சரியாக ஏழரைக்கு வருகிறதே!" என ஆச்சர்யப்பட்டாராம்.
"நேத்து வரவேண்டிய வண்டிப்பா!" என்றாராம்.
இப்பொழுது அத்தனை தாமதமாய் ஆவதில்லை என்பதற்காக கொஞ்சம் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் ரயில் விபத்து ஏற்பட்டால் பொறுப்பேற்று பதவி விலகிய ரயில் அமைச்சர்களை அறிவோம்.
இப்பொழுதும் பெரும் விபத்துகள் நடைபெறுகின்றன. அதிகாரிகளை மாற்றம் செய்கிறார்கள். அமைச்சர் பதவி விலகுவது எல்லாம் கிடையாது.
நிற்க.
நாங்கள் போக வேண்டிய வண்டி ஒன்றரை மணி நேரமாக பெரம்பூரில் நின்றுகொண்டு இருக்கிறது.
ரயில் ஓட்டுநர் "இனிமேல் இவ்வளவு தாமதமாக வரமாட்டேன். இடம் கொடுங்கப்பா!" என கெஞ்சிக்கொண்டு இருப்பார் என நினைக்கிறேன். இன்னும் நடைமேடையை சொல்லாமல் இழுத்தடிக்கிறார்கள்.
பலரும் வண்டிகளின் அட்டவணையை அண்ணாந்து பார்த்து முறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மனம் வெறுத்து அங்கு விற்கும் தேநீரை வாங்கி குடிக்கிறார்கள். வெறுப்பின் உச்சத்தில் தான் அந்த மோசமான தேநீரை குடிக்கமுடியும்.
ஒரு அம்மா தன் குழந்தையை தள்ளு சூட்கேசில் உட்கார வைத்து சுற்றுகிறார்கள். மகிழ்ந்து சிரிக்கிறது.
May be an image of 3 people and train
All reactions:
Bala Murugan, Ravindran Chelliah and 1 other