> குருத்து: February 2011

February 28, 2011

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!


பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!
கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!

" அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு "

23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும்.
ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?

மேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். " குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்". கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.

இப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து "பஸ் டே" விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு(preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத்தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் "லத்தி சார்ஜ்" ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.

கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது,ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.

தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் "தம்பி" என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.

அவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் , என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.

இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் "ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?" என்றனர் பேராசிரியர்கள். அதற்கு "நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?" என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.

இதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.

ஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.

*****

ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.
" நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் "
எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம்.

மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.

பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.

பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ' வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.

இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.

அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.

காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. " சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? " என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன?

ஈராண்டுகளுக்கு முன்புவரை "ரூட்" பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.

உடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள்.
அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.


இது ஏதோ "பஸ் டே" பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.


NDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் " மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது" என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் "மாணவர் சக்தி ". தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.

மாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.

நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.

மாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். " கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்" மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல' நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.

இதோ !!!!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம்
நாம் ?


- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
தொடர்புக்கு : 9445112675

February 21, 2011

இப்படியும் நடக்கிறது!

நன்றி : தினமணி

கேரளத்தைச் சேர்ந்த ராய் வர்கீஸ் என்பவர் எதற்காக ராஜஸ்தான் போனார், அவர் ஏன் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் இத்தனை ஆண்டுகளாக முறையான விசாரணை இல்லாமல் அடைபட்டுக் கிடந்தார் என்பதெல்லாம் புதிராக இருக்கின்றன. ஜெய்ப்பூர் சிறைச்சாலை ஆவணங்களின்படி அவரது பெயர் ஹிட்லர் பாபாகான் என்று காணப்படுகிறது. கைது செய்யப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏதாவது பெயர் தரப்பட வேண்டும் என்பதற்காகக் காவல்துறையில் வைக்கப்பட்ட கற்பனைப் பெயராகக்கூட இருக்கலாம் ஹிட்லர் பாபாகான் என்பது.

18 ஆண்டுகளும் நான்கு மாதங்களும் ராய் வர்கீஸ் என்கிற ஹிட்லர் பாபாகான் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் ஒரு விசாரணைக் கைதியாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுத் தனது வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். அவர் என்ன குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதே கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது கொலைக்குற்றம். வேடிக்கை என்னவென்றால் அப்படி ஒரு கொலை நடந்தது பற்றியேகூட அவருக்குத் தெரியாது என்பதுதான்.

ராய் வர்கீஸ் எப்போது புத்தி சுவாதீனத்தை இழந்தார் என்று யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை. சித்தப்பிரமையுடையவர்களை மனநோய் மருத்துவமனைக்குச் சிறைச்சாலை நிர்வாகம் அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி, சட்டம். ஆனால், ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸ் பல ஆண்டுகளாக ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள தனிமைச் சிறையில்தான் அடைபட்டுக் கிடந்திருக்கிறார். தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் என்ன என்பதுகூடத் தெரியாத நிலையிலுள்ள ஒருவரை ஏன், எதற்காக இப்படித் தனிமைச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்தது சிறைச்சாலை நிர்வாகம் என்பதற்குப் பதில் கிடையாது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலுள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள சகோதரி மரியோலா, ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குப் போதனை செய்வதற்காகவும், மனசாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதற்காகவும் சென்றிருந்தபோது, ஹிட்லர் பாபாகான் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்திருக்கிறார். இந்த வழக்கைப் பற்றியும், ஒரு மனநோய் பாதிக்கப்பட்ட மனிதர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவலத்தைப் பற்றியும் வெளியுலகுக்குத் தெரிவித்தவர் சகோதரி மரியோலாதான்.

கடந்த ஜனவரி 25-ம் தேதி ஜெய்ப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸýக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதுவும் எப்படி? ரூ. 50,000-க்கு உத்தரவாதமும், அவரைப் பாதுகாப்பதாக வாக்குறுதியும் எழுதி வாங்கிய பிறகுதான் 18 ஆண்டுகளாகத் தனிமைச் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த ராய் வர்கீஸ் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டார்.

இப்போது ராய் வர்கீஸ் கேரளத்திலுள்ள தனது சகோதரியின் பாதுகாப்பில் ஒரு மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 18 ஆண்டுகள் சிறைவாழ்வில் முழுமையாகப் பார்வையை இழந்துவிட்டிருக்கும் அந்த மனிதருக்குத் தன்னைப் பற்றியோ, தான் சிறையில் கழித்த நாள்களைப் பற்றியோ, இப்போது விடுதலையாகித் தனது சகோதரியுடன் இணைந்திருப்பது பற்றியோ எதுவுமே தெரியவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயம்.

யார் ஹிட்லர் பாபாகான்? அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலை வழக்குதான் என்ன? இனிமேல் அதைப்பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. உண்மையான கொலைகாரன் தப்பிவிட்டான். அப்பாவி நிரபராதி ஒருவர் செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து இப்போது மனநோயாளியாக ஊருக்கு அனுப்பப்பட்டு விட்டார். இதுபோல மேலும் 82 விசாரணைக் கைதிகள் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் இருப்பதாகவும், அவர்களுக்கும், தான் உதவப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் சகோதரி மரியோலா.

இது ஏதோ ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ராய் வர்கீஸ் போன்ற ஆயிரக்கணக்கான அப்பாவிகள் முறையான விசாரணைக்கு ஆண்டுக்கணக்காகக் காத்திருந்து தங்களது வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமத்தப்பட்ட குற்றத்துக்கான அதிகபட்சத் தண்டனையில் பாதி நாள்களை சிறையில் கழித்திருந்தால், விசாரணைக் கைதியை சொந்த ஜாமீனில்விட வேண்டும் என்பது விதி. இந்திய சிறைச்சாலைகளில் உள்ள 80% கைதிகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும், கல்வியறிவு இல்லாதவர்களும் என்பதால், இப்படி ஒரு விதி இருப்பதே பல விசாரணைக் கைதிகளுக்குத் தெரியவே நியாயமில்லை.

இந்திய சிறைச்சாலைகளின் நிலைமையை எடுத்துக்கொண்டால், மனித உரிமை மீறலின் உச்சகட்டமே அதுவாகத்தான் இருக்கும். போக்குவரத்து நெரிசலைவிட மோசமான நெரிசல் இந்திய சிறைச்சாலைகளில்தான் காணப்படுகிறது. 2008 புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள மொத்தம் 1,356 சிறைச்சாலைகளில், 3,84,753 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை 2,97,777. ஏறத்தாழ 88 ஆயிரம் பேர் அதிகமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கைதிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்கின்றன என்பது ஒருபுறம். சிறைச்சாலை ஊழியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 68,920-க்குப் பதிலாக 49,250தான் காணப்படுகிறது என்கிறது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம்.

நீதிமன்றங்களின் நிலைமை அதைவிட மோசம். மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. பத்து லட்சம் மக்கள்தொகைக்குக் குறைந்தது 50 நீதிபதிகள்கூட இல்லாத நிலைமையில் வழக்குகளை விரைந்து முடித்து, விசாரணைக் கைதிகளுக்கு இறுதித் தீர்ப்பு வழங்குவது எப்படி?

ராய் வர்கீஸýக்கு ஏற்பட்ட நிலைமை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். ஏதாவது வெளியூரில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தேக வழக்கில் அழைத்துச் செல்லப்பட்டு ஏதாவது பெயரில் விசாரணைக் கைதியாக்கப்படலாம்.

இதைப் பற்றி மக்கள் மன்றம் கவலைப்பட மறுக்கிறதே, அதுதான்
கவலையளிக்கிறது!

- தினமணி தலையங்கத்திலிருந்து...

February 15, 2011

எதை விட்டுக்கொடுக்க கூடாது? - தோழர் மருதையன்


முன்குறிப்பு : சமீபத்தில் தோழர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வு நடைபெற்றது. தோழர் மருதையன் வாழ்த்துரை வழங்கினார்.

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

கணவனும், மனைவியும் விட்டுக்கொடுத்து போகவேண்டும் என மேடைகள் தோறும் பேசுவார்கள். நான் விட்டுக்கொடுக்க கூடாது என்று சொல்வேன். எதை விட்டுக்கொடுக்கலாம்? எதை விட்டுக்கொடுக்க கூடாது? ஒரு மனிதன் எதை விட்டுக்கொடுக்கிறான் என்பதில் தான் அவனுடைய தரம் இருக்கிறது.

ஒரு வேளை இந்த தம்பதியினர் இந்த திருமணமுறை வேண்டாம். நாங்கள் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறோம் என பெற்றோர்களுக்கு விட்டுக்கொடுத்திருந்தால், இந்த மேடைக்கு நான் வந்திருக்க மாட்டேன். நான் இந்த திருமணத்தை விட்டுக்கொடுத்திருப்பேன்.

அவர்கள் விட்டுக்கொடுக்காமல் போராடியதால், இங்கே இருக்கிறார்கள். ஒரு விழுமியத்திற்கு எது நியாயம்? எது சரி என்பதில், ஆணோ, பெண்ணோ விட்டுக்கொடுக்க கூடாது என்று சொல்வேன்.

சில்லறை விஷயங்களை விட்டுக்கொடுப்பது என்பது வேறு! கொள்கை விஷயங்களை விட்டுக்கொடுப்பது என்பது வேறு! ஆனால், இந்த இரண்டிற்குமான வேறுபாடினை புரிந்து கொள்ளாமல், நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்தால், நாங்க கொஞ்சம் விட்டுக்கொடுப்போம் என்கிறார்கள். இதென்ன தொகுதி பங்கீடா? அப்படி விட்டுக்கொடுத்தல் என்பது சாத்தியமில்லை.

கொள்கை ரீதியானவற்றில் விட்டுக்கொடுப்பது என்பதில் சாத்தியமில்லை.அப்படி விட்டுக்கொடுக்காத வகையிலே, இந்த தம்பதியினர் போராடி இருக்கிறார்கள். தொடர்ந்து போராட வேண்டும் என்ற என் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

****
இந்த காதல், திருமணம் என்பது வாழ்க்கையின் துவக்கம். இந்த குடும்ப வாழ்க்கை துவங்கிய பின்னர், சாதி மறுப்பு, சம்பிரதாய மறுப்பு என்பதெல்லாம், இந்த மேடையோடு முடிந்துவிடக்கூடாது. நம்முடைய காதலுக்கு தடையாக இருக்கிறது என்பதற்காக இந்த சாதியை இப்பொழுது எதிர்த்திருக்கிறோம்.

தலைமை உரையில் வழக்கறிஞர் ராகுல் பேசும் பொழுது, ஒரு வன்னிய சாதி ஆணுக்கும், தலித் சாதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்ததுப் பற்றி குறிப்பிட்டார். அதே ஊரில் அவரே நடத்துகின்ற ஒரு வழக்கில்.. தலித் இளைஞன், வன்னிய சாதி பெண் இருவரும் காதலித்து திருமணம் செய்த 'குற்றத்திற்காக' 200, 300 பேர் என ஊரே கூடி, ஊர் மத்தியில் கண்டந்துண்டமாக வெட்டி, மண்ணெண்னெய் ஊற்றி நெருப்பு வைத்து கொன்றார்கள்.

தொடரும்...

February 13, 2011

குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வது! - தோழர் மருதையன்


முன்குறிப்பு : சமீபத்தில் தோழர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வு நடைபெற்றது. தோழர் மருதையன் வாழ்த்துரை வழங்கினார்.

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

அதன் தொடர்ச்சி :

இப்படி கெளரவிக்க மரபை பின்பற்றுகிற(!) இவர்கள் சொல்கிறார்கள். அங்கு போய் அமெரிக்காவிலே குடியேறிய ஐ.டி. தம்பதியரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று? ஆனால் இங்கே நம்முடைய பத்திரிக்கைகளிலே, நம்முடைய தொலைக்காட்சிகளிலே என்ன பேசுகிறார்கள் என்றால், "அமெரிக்காவிலே குடும்பம் சீர் குலைந்துவிட்டது. நம் நாட்டிலே குடும்ப அமைப்பு வலிமையாக இருக்கிறது". இது நம்முடைய மேன்மையான நாகரிகம். அங்கே நினைத்தால், விவாகரத்து செய்துவிடுகிறார்கள். இங்கே அப்படியெல்லாம் கிடையாது. இது எதைக் காட்டுகிறது என்றால்... இந்த நாட்டின் 5000 ஆண்டு தொன்மைமிக்க கெளரவமான நாகரிகத்தை காட்டுகிறது என பேசுகிறார்கள். இது பொய்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் நாகரிகமாக இருக்கிறது என்று நான் சொல்வேன். பிடிக்காத ஒரு ஆணும், பெண்ணும் அங்கு சேர்ந்து வாழ்வதில்லை. காரணம் என்ன என்பது வேறு விஷயம். கணவன் ஆணாதிக்கவாதியாக இருக்கிறான்.அல்லது பொறுக்கியாக இருக்கிறான் அல்லது பேராசைக்காரனாக இருக்கிறான் என்பதினால் மனைவி அவனை வெறுக்கலாம். சில வேலைகளில் புருஷன் குறட்டைவிடுகிறான் என்பதற்காகவும் விவாகரத்து செய்பவர்கள் இருக்கிறார்கள். அது அவர்களுடைய விருப்பம். ஆனால், மனம் இணங்காத ஒரு தம்பதி அங்கே சேர்ந்து வாழ்வதில்லை. நம்முடைய நாட்டில் இணக்கம் இல்லாத தம்பதிகள் சேர்ந்து வாழ நிர்ப்பதிக்கப்பட்டிருக்கிறோம்.

அநேகமாக பெண்கள் கட்டாயமாக இங்கு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு வாய்ப்பில்லை என்பதினால், சேர்ந்து வாழும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஐ.டி. துறையில் பணிபுரியும் இளைஞர்கள் பலர் வந்திருக்ககூடும். ஒரு ஆங்கில சொற்பிரயோகத்தில், ஒரு வேறுபாடு இருக்கிறது. மேலைநாடுகளில் "Saving the marriage" என்று சொல்வார்கள். திருமணத்தை காப்பாற்றிக் கொள்வது . இங்கு, "Saving the family" குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வது. அங்கு திருமணம் வேறு. குடும்பம் வேறு. இங்கே குடும்பத்துக்கு உட்பட்டது மண உறவு. ஒரு பிள்ளை என வந்துவிட்டபிறகு, அதைக் காப்பாற்றுவதற்காக மனைவி விட்டுக்கொடுக்கவேண்டும். மனைவி அடிமையாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இங்கே இருக்கிறது. ஆக, அந்த நாகரிகத்தை விட மேம்பட்ட நாகரிகத்தில் வாழவில்லை என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக சேர்ந்துவாழ்கிறோம்.

*****

விட்டுக்கொடுப்பது பெருமை என மேடையெல்லாம் பேசுவார்கள். நான் விட்டுக்கொடுக்க கூடாது என்று சொல்வேன். எதிலே விட்டுக்கொடுக்கனும்? எதிலே விட்டுக்கொடுக்க கூடாது ? ஒரு மனிதன் எதை விட்டுக்கொடுக்கிறான் என்பதில் தான் அவனுடைய தரம் இருக்கிறது.

தொடரும்.

February 10, 2011

எது நம்முடைய மரபு? - தோழர் மருதையன்


சமீபத்தில், ம.க.இ.க தோழர் ஒருவரின் மகனின் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடந்தது. அதில், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். செல்பேசியில் பதிவு செய்ததை, நேற்றிரவு கேட்டுக்கொண்டிருந்தேன். பகிர்வதற்கான அருமையான உரை. 20 நிமிட உரை என்பதால், மூன்று தொடர் பதிவுகளாக இடுகிறேன். (தட்டச்சு செய்ய நேரம் கொடுங்க!).

முதல் பதிவை படிக்க : முதல் பகுதி

டிஸ்கி : அவருடைய உரையை, உரைநடைக்கு தகுந்தவாறு சில இடங்களில் முன்பின் மாற்றியிருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால், நானே முழு பொறுப்பு!
***

எது நம்முடைய மரபு?

இன்று நடக்கும் திருமணம் போல பல திருமணங்களுக்கு போயிருக்கிறேன். பலரும் பாராட்டுவார்கள். தாலி இல்லை; வரதட்சணை இல்லை; சீர்வரிசை இல்லை; அன்பளிப்புகள் இல்லை. இதெல்லாம் பாராட்டத்தக்கது தான் என்பார்கள். ஆணால், அதை பின்பற்றுவதற்கு எவ்வளவு பேர் தயார் என்றால், இல்லை. ஏனென்றால், நம்முடைய மரபு. "எல்லாம் வேண்டாம். இந்த தாலியை மட்டுமாவது கட்டுங்கள்" என கோருபவர்கல் பலர் இருக்கிறார்கள். நம்முடைய மரபு அவ்வளவு பெருமைபடக் கூடிய மரபு அல்ல! இந்து மரபு என்பது ஒரு இழிவான மரபு.

இராமன், இராமன் என கடவுளை தூக்கி ஆடுகிறார்கள். அந்த இராமனின் பெருமை என்ன? ஏகபத்தினி பரதன். ஒரு மனைவியைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தான் என்பதற்காக ஒரு மதம் அதையே ஒரு சாதனையாக கருதி, அவனைக் கடவுளாக வைத்திருக்கிறது என்றால், அந்த மதத்தின் யோக்கியதை எப்படி இருக்கும்?

கிருஷ்ணனும் கடவுள்; அவர் என்ன கடவுள்? அவர் ஏகப்பட்ட பத்தினி விரதர். அவரும் கடவுள். நானா சொல்கிறேன் இதை! கிருஷ்ண புராணம் சொல்கிறது. என்ன பெருமை இருக்கிறது இந்த மரபிலே?

தாலியை பெண்கள் அதை புனிதமாக கருதுகிறார்கள். பெண்களுக்கு நான் சொல்கிறேன். தாலி ஆணுக்கு இல்லை; பெண்களுக்கு தாலி இருக்கிறது. 1950ம் ஆண்டு அம்பேத்கர் அரசியல் சட்டத்தை இயற்றும் வரையில்..அதாவது 51 லே இந்து சட்டம் இயற்றப்படும் வரையிலே, இந்துக்களிடையே நிலவிய மரபு எது? ஒரு இந்து 25 கல்யாணம் வேண்டுமென்றாலும் பண்ணிக்கொள்ளலாம். சட்டப்படி செல்லும். 25 தாலி கட்டலாம் ஒரு ஆண். அம்பேத்கார் இந்த சட்டத்தை முன்மொழிந்த பொழுது, இந்து மரபினுடைய தலைவர்களாக இருந்தவர்களெல்லாம், அரசியல் நிர்ணய சபையிலே எதிர்த்தார்கள்.

"இதை வேறு என்ன சட்டம் என வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள்; இந்துச் சட்டம் என்று சொல்லாதீர்கள்" என்றார்கள். காரணம் என்ன ஒரு தார மணம்.

ஒருதார மணத்தை எதிர்த்தது இந்து மரபு!
சதியை, உடன்கட்டை ஏறுதலை ஆதரித்தது இந்து மரபு!
பால்ய விவாகதத்தை ஆதரித்தது இந்து மரபு!
விதவை மறுமணத்தை எதிர்த்தது இந்து மரபு!
விவாகரத்தை எதிர்த்தது இந்து மரபு!

விவாகரத்து என்ற ஒரு உரிமை இருந்திருக்குமென்றால், சீதை தீக்குளிக்க நேர்ந்திருக்குமா? போடான்னு இராமனை டைவேர்ஸ் பண்ணிட்டு சீதை போயிருப்பாள். அப்படி ஒரு உரிமை கிடையாது. விவாகரத்து என்ற உரிமையை வழங்கியது எது? இந்து மரபுக்கு எதிரான இந்த சட்டம். ஆகவே, நம் மரபு என்று பேசும் பொழுது நம்முடைய மத மரபிலே இருப்பதெல்லாம் குப்பைகள். நான் இந்து மதத்தில் மட்டும் சொல்லவில்லை. இஸ்லாம், கிறித்துவம் பற்றி பேச இங்கு வாய்ப்பில்லை. அதனால் இங்கு வேண்டியதில்லை.

....

அமெரிக்காவிலே, ஐரோப்பாவிலே குடும்பம் சீரழிந்து விட்டது என்கிறார்கள். நம்முடைய நாட்டில் குடும்ப அமைப்பு வலிமையாக இருக்கிறது. இது இந்த நாட்டின் தொன்மையான கெளரவமான நாகரிகத்தை காட்டுகிறது என பேசுகிறார்கள். இது பொய்.

தொடரும்...

தொடர்புடைய பதிவுகள் :

உலகின் அழகிய மணமக்கள் - பதிவர் சந்தனமுல்லை - வினவு

இயல்பாய் நடந்த திருமணம்

தேவையில்லாத தாலியும் சில உருப்படியான தகவல்களும் - நந்தவனம்

February 5, 2011

தோழர் மருதையன் அவர்கள் நிகழ்த்திய திருமண வாழ்த்துரை!


சமீபத்தில், ம.க.இ.க தோழர் ஒருவரின் மகனின் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடந்தது. அதில், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். செல்பேசியில் பதிவு செய்ததை, நேற்றிரவு கேட்டுக்கொண்டிருந்தேன். பகிர்வதற்கான அருமையான உரை. 20 நிமிட உரை என்பதால், மூன்று தொடர் பதிவுகளாக இடுகிறேன். (தட்டச்சு செய்ய நேரம் கொடுங்க!).

டிஸ்கி : அவருடைய உரையை, உரைநடைக்கு தகுந்தவாறு சில இடங்களில் முன்பின் மாற்றியிருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால், நானே முழு பொறுப்பு!

****

.....

(மாப்பிள்ளை) பார்த்திபனை புதிய கலாச்சாரம் தொடங்கிய காலத்திலிருந்தே தெரியும். புதிய கலாச்சாரத்தின் வயதும், பார்த்திபன் வயதும் ஏறத்தாழ சமம். சிறு பையனாக இருந்த பொழுதே தெரியும். ரெம்ப அமைதியான பையன். ஆனால், காதலிக்கும் அளவுக்கு தைரியமுள்ள பையனாக இருந்திருக்கிறார்.

இதிலே ஒரு வேடிக்கை இருக்கிறது. இந்த காதலில் மட்டும் மாவீரர்கள், அடி, உதைக்கு அஞ்சாதவர்கள் எல்லாம் பயப்படுவார்கள். பயந்தாங்கொள்ளி என்று நினைப்பவர்கள் எல்லாம் இந்த விசயத்தில் நிறைய தைரியமாக இருப்பார்கள். இது ஒரு விசித்திரம். வேடிக்கையல்ல!

இதை வைத்து தான் தமிழ் சினிமா இன்றைக்கு வரைக்கும் உயிர்வாழ்கிறது. சொன்ன காதல், சொல்லாத காதல், மிரட்டி காதலிக்க வைப்பது, காதலிக்கிற பையனை கடத்துவது, பெண்ணை கடத்துவது என ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காட்டிலும், அதிக லட்சங்கள் கோடிகள் நம்மை கொள்ளையடித்திருக்கிற ஊழல் காதல் சினிமாக்கள் பற்றிய ஊழல்கள் தான்.

இதை வைத்து, இவ்வளவு பிஸினஸ் நடந்திருக்கிறது என்றால், அதற்கு அடிப்படை இருக்கிறது. அது என்ன? ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இயல்பாக நண்பர்களாக பழக கூடிய வாய்ப்பு இந்த சமூகத்திலே இல்லை. அந்த சமூகத்தில் அப்படி இல்லாத காரணத்தினால் தான், இது நாள் வரையிலே, காதல் திருமணங்களை அதிகமாக நாம் காணமுடிவதில்லை.

படிப்பது, வேலைக்கு செல்வது, ஆணும், பெண்ணும் பழகுவது என்று தொடங்கிய பிறகு, பெற்றோர்கள் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என்ற நிலைமாறி, ஒருவரையொருவர் தெரிவு செய்கின்ற வாய்ப்பு வழங்கியிருக்கிறது. தெரிவு செய்கிறார்கள். அவ்வாறு தெரிவு செய்யும் பொழுது, உடனே அதற்கு தடை வருகிறது. முக்கியமாக, சாதி, மதம் போன்ற தடைகள் இயல்பாக வருகின்றன. ஏற்கனவே, ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களில், தேவாலாயங்களிலே நீங்கள் பார்த்திருக்கலாம். பாதிரியார் மணவிழாவை நடத்தி வைக்கும் பொழுது, "இறைவன் சேர்த்து வைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்று சொல்லி திருமணத்தை நடத்தி வைப்பார்.

நடக்கும் காதல் திருமணங்கள் எப்படி இருக்கிறது என்றால், "இறைவன் பிரித்து வைத்ததை, மனிதன் சேர்க்காதிருக்கட்டும்". மதம் வாரியாக இறைவன் பிரித்து வைத்திருக்கிறார். சாதிவாரியாக இறைவன் பிரித்து வைத்திருக்கிறார்.

மனிதன் தன் முயற்சியனாலே சேர்த்துவிடக்கூடாது என்பது தான் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களுக்காக, சாதி அடிப்படையிலான திருமணங்களுக்காக, மதத்தின் அடிப்படையிலான திருமணங்களுக்காக, வாதாடுபவர்கள் சொல்வது. அப்படியானால், பிரிவினையின் சின்னமாக இறைவன் இருக்கிறார்.

மனிதன், மனித நாகரிகம் ஒற்றுமையின் சின்னமாக முன்னே செல்கிறது. இதிலே இப்படி காதலெல்லாம் வரும் பொழுது, ஒரு பழைய சுமை போல, சாதி, மதம் என்பது, காதலில் ஈடுபடுகின்ற இளைஞர்களாகட்டும், அல்லது, குடும்பத்தினரே ஆகட்டும் அது அழுத்துகிறது.

பள்ளிப்பாட புத்தகங்களிலே படித்திருக்கலாம். "சிந்துபாத்தும் கடற்கரை கிழவனும்" ஒரு கதை. கொஞ்சம் தூக்கிக் கொண்டு போய்விடு என கடற்கரை கிழவன் கேட்க, சிந்துபாத் அந்த கிழவனை தோளில் தூக்கி கொண்டு போவான். தூக்கி, தூக்கி பிறகு இவனால் முடியாது. "இறங்குப்பா" என்றால், இறங்க மாட்டேன் என்பான் கிழவன். கிழவனை கீழே தள்ளுவதற்கும் சிந்துபாத்திற்கு மனதில்லை. தள்ளிக் கொன்றுவிடலாம் என்றால், "அய்யோ பாவம் கிழவன்" இப்படித்தான் இருக்கிறது சாதி. சாதியை முன்நிறுத்துகின்ற பெற்றோரும்.

சாதி அநீதியானது என்று தெரிந்தாலும், அந்த சாதியை நியாயப்படுத்தி பெற்றவர்களும், உற்றார்களும் பேசுகிறார்கள். சொந்தமாக இருப்பதினால் அவர்களின் கண்ணீரை பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. மதத்தை பேசுபவர்கள் பெற்றோராக இருப்பதினால், அவர்களுடைய கண்ணீரைப் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. அதனாலே சமரசம் செய்து கொள்கிறார்கள். அல்லது நியாயப்படுத்துகிறார்கள்.

யாரையும் உயர்வு, தாழ்வு என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் பழகிவிட்டோம் இப்படி! இது எங்களுடைய அடையாளம். இது எங்களுடைய பழக்கம்.

ஒரு சாதி குடுமி வைத்துக் கொள்கிறது. ஒருசாதி மீசையை பெருமை என்கிறது. இராஜஸ்தானை சேர்ந்தவர்களைப் பார்த்தால், ஒரு முண்டாசு கட்டியிருக்கிறார்கள். அந்த துணியின் நீளம் மவுண்ட் ரோடு அளவுக்கு இருக்கும். அவ்வளவு பெரிசை தலையில் வைத்திருக்கிறார்கள். இது எங்களுடைய மரபு, பழக்கம் என அதை நியாயப்படுத்தி கொள்கிறார்கள். இதை என்ன வார்த்தைகளால் சொன்னாலும், இது ஒரு அநாகரீகம். மற்ற எல்லா செளகரியங்களுக்கும் மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவர்கள் இப்ப (உதாரணமாக) "கடல் கடந்து செல்வது குற்றம் என ஒரு சாதியினருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது" ஆனால் அவர்கள் தான் கடல் கடந்து போவதிலே முன்னிலையில் இருக்கிறார்கள். கடல் கடந்து சென்றால், சாதியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று இருந்தது.

ஊரைவிட்டு வெளி மாநிலம் போகக்கூடாது. அங்கே சென்றால் என்ன சாப்பாடு கிடைக்கும்? இங்கே போனால் என்ன கிடைக்கும் என்ற தயக்கம் இருந்தது. அதையெல்லாம் விட்டுவிட்டு இங்கே அமர்ந்திருக்க கூடிய மதுரை மாவட்ட விவசாயிகள் ஆந்திராவிற்கும், டெல்லிக்கும், திருப்பூருக்கும் ஓடுகிறார்கள். புது ஊர் தெரியாது என்பதற்காக போகாமல் இருப்பது இல்லை. படித்தவர்கள் அமெரிக்காவிற்கு ஓடுகிறார்கள். அது பழக்கமில்லாத ஊர். சாப்பாடு கிடைக்குமா? நாகரிகம் என்ன? என்றெல்லாம் யோசிப்பதில்லை. வேண்டியது பணம். அதற்காகவெல்லாம் மாறிக்கொள்ள தயாராக இருப்பவர்கள், சாதி என்ற ஒரு விசயத்தை பழக்கம் என்ற பெயரிலே நியாயப்படுத்துவது; அதை நியாயப்படுத்த முடியாத பொழுது இது ஒரு மரபு என்று சொல்லி, நாசூக்காக அதற்கு ஒரு விளக்கம் சொல்வது. அது என்ன மரபு?

தொடரும்...