> குருத்து: November 2019

November 26, 2019

திகில் படங்கள் - ஒரு பார்வை

திகில் படங்கள் - ஒரு பார்வை

கொஞ்சம் நீளமானது தான். ஆனால் சுவாரசியமான திகில் பதிவு.

***
"ஒவ்வொரு ஊர்களிலும் கதைகள் உண்டு, ஆற்றங்கரையோரம் நிற்கும் புளியமரம், பாழ் கிணறு, ஆற்றில் பாய்ந்து குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட மோகினி என்று ஏராளமான கதைகள் நமது பகுதிகளியே வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது? ஏன் இன்னும் அவை திரைக்குள் பிரவேசிக்கவில்லை? கால்ஷீட் பிரச்சினையா?"
****

திகில் திரைப்படங்களில் முக்கியமான இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று பயம். அடுத்தது பேய்.

பொதுவாக திகில் திரைப்படங்களை தமிழில் வரையறுக்கும் போது “பேய்ப்படங்கள்” என்று மொத்தமாக ஒரே சொல்லினுள் அடக்கிவிடுவார்கள். மனிதர்களைப் போல்தான் பேய்களிலும் பல வகைகள், இனங்கள் என்று இருக்கின்றன. அப்போ பேய் இருக்கா? அது அமானுஷ்ய ஆய்வாளனுக்குரிய விடயம்.

திகில் திரைப்படங்கள் (Horror Cinema) என்றால் மனிதனின் ஆதார உணர்வான பயத்தை உசுப்பிவிட்டு, அதன் மூலம் கிளர்ச்சியூட்டும் சினிமா. பயம்தான் திகில் சினிமாவின் ஆதாரப்புள்ளி.

திகில் திரைப்படங்களில் அதிகமாக Cheap Thrill உத்திகள் பாவிக்கப்படும். பார்வையாளனை எப்படியெல்லாம் பயமுறுத்த முடியுமோ, அதற்கான சகல பிரயத்தனங்களையும் செய்யும் இந்த வகை சினிமாக்கள். பயம், திடுக் தருணங்கள், செக்ஸியான பெண் என்று பல டிபிக்கல் க்ளிஷேக்களைக் கொண்டவை இத்திரைப்படங்கள். அதனால்தானோ என்னவோ உலக சினிமா இந்த வகையறாவை மூன்றாம் தர சினிமா என்று கழித்துக்கட்டிவிடுகின்றது. பெரும்பாலான திகில் திரைப்படங்கள் இந்த விமர்சனத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே வெளிவருவது மற்றுமொரு க்ளிஷே.

சிறுவயது முதற்கொண்டே எனக்கு திகில் திரைப்படங்கள் மீது அதிக ஆர்வம் இருந்த வந்தது. முதன் முதலில் பார்த்த திகில் சினிமா அனுபவத்தை இப்பொழுது கேட்டாலும் சொல்லிவிடுவேன். திகில் சினிமா, இலக்கியம் இவையிரண்டும் உலகத் தரத்தில் இருக்காது என்பதே பெரும்பாலானவர்களின் கோட்பாடு. ஆனால் உலக இலக்கியத்தில் டிராகுலா ஒரு காவியம். மேரி ஷெல்லியின் ப்ராங்கின்ஸ்டீன் மனிதனின் படைப்பு குறித்த பயத்தை ஆய்வு செய்யும் அற்புதப் நாவல். எட்கர் அலன் போ, உலக இலக்கிய மேதைகள் பலரின் முன்னோடி. தனது வாழ்நாளில் ஒரு பேய்கதையேனும் எழுதாத இலக்கிய ஆளுமைகள் இல்லையென்றே கூறலாம். அதேபோலத்தான் சினிமாவிலும். என்ன இலக்கிய உலகை விட கொஞ்சம் குறைச்சல்.

இந்த “மூன்றாம் தர” சினிமாவை உலக சினிமாவின் உச்சத்தில் கொண்டு போய் வைத்தவர் கியர்மோ டெல் டோரோ என்றால் மிகையாகாது. கானில் Pan’s Labyrinth பார்த்து முடித்த பார்வையாளர்கள் அனைவரும் தொடர்ந்தேச்சயாக 20 நிமிடங்கள் கைத்தட்டிக்கொண்டே இருந்தார்கள். டார்க் பென்டஸி ரகத்தை சேர்ந்த அத்திரைப்படம் மாய உலகையும், யதார்த்த உலகையும் பிணைக்கும் ஓர் அற்புத தாலாட்டு.

சினிமா பார்ப்பதில் ஒரு வளர்ச்சிப்படி இருக்க வேண்டும் அல்லவா? எமது ரசனை எப்பொழுதும் ஒரே மட்டத்தில் இருப்பதில்லை. அது பல்வேறு புறகாரணிகள் மூலம் வளர்ச்சியடைந்து கொண்டே போகும். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், ஆரம்பத்தில் நாம் ரசித்து வந்த திரைப்பட வகையறாக்கள் எல்லாம் தரம்தாழ்ந்து கொண்டு போகும். அப்படியொரு சந்தர்ப்பம் எனக்கும் வந்தது. உலக சினிமா அறிமுகமாகிக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. என் மனதில் ஒரு சஞ்சலம், நமக்கு பிடித்தமான வகையறாவை இப்படிச் சொல்கிறார்களே என்று…

அப்பொழுதுதான் லத்தின் அமெரிக்க இயக்குனர் கியர்மோ டெல் டோரோ அறிமுகமானார். எல்லோரும் திகில் சினிமாவை விட்டு தூரமாகிக் கொண்டிருந்த சமயம் அது. திகில் சினிமா அலை அடங்கிக் கொண்டு வந்ததற்கு முக்கியக் காரணம், பயம். ஆம், பயம். இதற்கு மேல் எப்படி புதிதாக இந்த ரசிகர்களை க்ளிஷேக்கள் இல்லாமல் பயம்காட்ட முடியும்? அந்த சமயம் கியர்மோ தனது முதல் படமான க்ரோனோஸை எடுத்தார். உலக சினிமாவில் அதுவரை சொல்லப்பட்டு வந்த வெம்பயர் கதைகளை உடைத்து போடும் வகையில் ஒரு பழம் தேவதைக் கதை வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது அத்திரைப்படம்.

கியர்மோ டெல் டோரோ எப்பொழுதும் தனது படைப்புகளில் cheap thrills ஐ தவிர்த்தே வந்திருக்கின்றார். அவரது திகில் சினிமா கோட்பாட்டிற்கு அது முரண். தனது திரைப்படங்களைப் பற்றி அவர் சொல்லும் போது, “எனது திரைப்படங்கள் ஹாலிவூட் வகையறாக்குள்ளும் அடக்க முடியாது, கலைப்பட வரிசைக்குள்ளும் அடக்கிவிட முடியாது. எனது திரைப்படங்கள் திகிலின் அழகியலை பேசுபவை.” தன்னை ஒரு pulpy guy என்று சொல்லிக் கொள்வார். இவரது சினிமாக்களில் தொன்மங்களில் வரும் மன்ஸ்ட்டர்கள், பேய்கள் என்று நிறைய இருக்கும். மன்ஸ்டர்கள் இல்லாத கியர்மோ திரைப்படத்தை பார்க்க முடியாது. இதுதான் எனது திகில் சினிமா குறித்த பார்வையும்.

தமிழ் சினிமாவில் திகில் சினிமா, இலக்கியம் இரண்டும் மிகக்குறைவாக அல்லது ஒப்பீட்டுரீதியில் இல்லையென்றே கூறலாம். இல்லை இருக்கின்றது என்று உதாரணங்களை கூறுமுன் அவற்றின் தரம் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள். ஆனால், திகிலுக்கான அத்துனை சரக்குகளையும் கொண்டது தமிழ் நாட்டுச் சூழல். எமது நாட்டார் மரபுகளில் எண்ணற்ற கதைகளும், அக்கதைகளில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏராளமான பேய்களும் இருக்கின்றன. துரதிஷ்டவசமாக இக்கதைகளில் இருந்து தமிழில் திகில் திரைப்படங்கள் உருவாகவில்லை. அழிவின் விளிம்பில் இருக்கும் நாட்டாரியலை எப்படி கட்டிக்காப்பது என்று சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள்… நாட்டாரியல் என்பது காலத்திற்கு காலம் தனது கதைகளை இன்னொரு வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளும் என்பதை ஏன் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர்?

இன்றைய நாட்டுப்புற கலையின் வடிவம் சினிமா.
அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட விடயம், அன்றாட வாழ்வில் விசேட சந்தர்ப்பங்களில் கதைகூறும் நிகழ்வுகள் இடம்பெறும். அது முதியோர்கள் மூலமும் வரலாம். அவர்கள் சொல்லும் பத்துக் கதைகளில் ஒன்பதில் பேய் சம்பந்தப்பட்டிருக்கும். இவற்றை வைத்தே படங்களை எடுக்க முடியும். ஆனால் என்ன செய்ய தமிழ் சினிமாவில் இறக்குமதிக்குதான் மவுசு அதிகம்.

உலகில் பல்வேறு நாடுகளில் எடுக்கப்படும் பேய்ப்படங்கள் அவ்வந்த நாட்டின் தொன்மங்கள், நாட்டார் கதைகளில் உள்ள பேய்களின் பாதிப்பில் உருவாகுபவை. முக்கியமாக ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்கள் பாட்டி சொன்ன பேய்க்கதைகளில் இருந்து அதிகமாக படமாக்கப்பட்டிருக்கும். அந்நாட்டு நாட்டார் மரபு பேய்க்கதைகளை தொகுத்து Kwaidan: Stories and Studies of Strange Things (கைதான் – பேய்கதைகள்) எனும் தொகை நூலை எழுதியிருக்கிறார் Lafcadio Hearn. இந்நூலை அடிப்படையாகக் கொண்டு கைதான் (Kwaidan – 1964) எனும் அன்தலாஜி திரைப்படமொன்றும் வெளிவந்திருக்கின்றது. இது நான்கு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத குறும்படங்களை கொண்ட திரைப்படம். கானில் ஸ்பெஷல் ஜுரி விருதையும் இத்திரைப்படம் பெற்றுக்கொண்டது.

கைதானில் வரும் நான்கு கதைகள்,

கருங் கூந்தல் அழகி (The Black Hair) – இக்கதை ஒரு சாமுராய் வீரனின் மனைவி தன் கணவனிடம் காட்டும் தீராக்காதலைப் பற்றியது. வறுமையின் காரணமாக அவன் மறுமணம் செய்துகொள்கிறான். ஆனால் அத்திருமண பந்தம் சந்தோஷத்திற்கு பதில் கடும் மனஉளைச்சலைக் கொடுக்கிறது. ஒரு வருட திருமண ஒப்பந்தத்தின் பின்னர் மீண்டும் தன் முந்தய மனைவியிடமே செல்கிறான். அவர்கள் வாழ்ந்த வீடு ஒரு மயானமாகக் காட்சியளிக்கிறது. இடிபாடுகளுடைய பாழ்வீட்டில் அவள் மனைவி எப்பொழுதும் போல் அவனுக்காக காத்திருக்கிறாள். பழையபடி வாழ்க்கையை துவங்குகிறான். இம்முறை ஆவியுடன்.

எப்பொழுதும் தலைவாறிக் கொண்டிருக்கும் அவள் கருங்கூந்தல் அவனை அரவணைத்துக் கொள்கிறது. ஒருவர் மரித்தவுடன் இலகுவில் உக்கிவிடாத பாகங்களில் ஒன்று கூந்தல்லவா?

#பனிமங்கை (The Woman of the Snow)

யூகி-ஒன்னா என்கிற பனிப் பிரதேச பெண் மோகினியை பற்றிய கதையிது. இரண்டு விறகு வெட்டிகள் மிகக் கடுமையான பனி மழையிலும் புயலிலும் வயிற்றுப்பிழைப்பை எண்ணி விறகு பொறுக்குவதற்காக செல்கிறார்கள்.
அடர்ந்திருக்கும் பனி அவர்களை அழைக்கழிக்கிறது. பலமாக வீசும் காற்றும் பைன் மரங்களும் அவர்களின் துயர பயணத்தை மேலும் துயரமாக்குகிறது. கடும் பிரயத்தனப்பட்டு கடக்கவேண்டிய ஆற்றை அடைந்தால், பாலம் உடைந்து விட்டிருக்கின்றது. பனிக்காற்றினூடே அமானுஷ்ய அனுபவம் அவர்களை ஆட்கொள்கிறது. அருகிலிருக்கும் மரக் கூடாரம் ஒன்றினுள் நுழைகிறார்கள் இருவரும். வயதானவனுக்கு நகர முடியவில்லை. சில நாழிகைகள் கழிய, பனிக்காற்றின் மாய மோகினி அந்த வயதானவன் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது. இவன் உடல் கூசி கல்லாகி நிற்கின்றான்… அடுத்து அவன். அருகில் வர வர இவன் முகம் வெளிறிக்கொண்டே வருகிறது. அவனைக் கொல்லவில்லை… “நீ மிகவும் இளையவனாய் இருக்கின்றாய்… உனக்கொரு வாய்ப்பளிக்கின்றேன்” என்று கூறும் பனி மோகினி கூடவே ஒரு நிபந்தனையையும் வைக்கின்றது. – இது நம்மில் யாரும் மறந்துவிடாமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை – “நீ இன்றிரவு கண்டதை யாரிடமும் சொல்லக் கூடாது அது உனது தாயாக இருந்தாலும் சரி, மீறினால் நீ சொன்ன மறுநிமிஷமே உன்னை கொன்றுவிடுவேன் – எங்கிருந்தாலும்” (பேய்கதைகளை யாரிடமும் சொல்லாதீர்கள் மக்களே.)

காலங்கள் உருண்டோடுகின்றது…. வசந்த காலத்தில் ஒரு நாள் விறகு வெட்ட சென்ற இளம் விறகு வெட்டி, அழகிய மங்கையொருத்தி வழி தவறி நிற்பதை கண்டு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். அது காதலாக மாறி திருமணத்தில் முடிகிறது. மீண்டும் காலங்கள் உருண்டோடுகின்றது… மூன்று அழகிய குழந்தைகளை பெற்றெடுத்து சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்கின்றனர் இருவரும். அவர்களின் காதல் என்றும் போலவே இருந்தது. அவள் அழகு போலவே. ஒரு நாள் இரவு அவளுக்காக அழகிய பாதணிகளை செய்து தருகிறான் இளம் விறகுவெட்டி அது அவளுக்கு பெரிதாகவும் இல்லை சிறிதாகவும் இல்லை சந்தோஷமடைகிறாள். இந்த இரவு அவனுக்கு அன்று நடந்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.

அமைதியாக இருக்கும் அழகிய மனைவியின் முகத்தில் பனி மோகினி தெரிகிறாள். அவன் அன்று நடந்ததை கூறுகிறான் தன் மனைவியிடம். இத்துனை வருடங்கள் சொல்லாமல் விட்ட ரகசியம்… திடீரென தன் சுயரூபத்தை வெளிப்படுத்துகிறாள் மனைவி. இப்போது பனி மோகினியாக அவன் முன்னால் இருக்கிறாள். இத்துனை நாள் உன்னால் சொல்லாமல் இருக்க முடிந்தது இன்று சொல்லிவிட்டாய் வாக்கை மீறி விட்டாய் நான் சொன்னது போல் உன்னைக் கொல்ல வேண்டும்…. ஆனால் முடியாது எங்கள் காதலின் சாட்சியான இந்த மூன்று குழந்தைகளுக்காக நான் உன்னைக் கொல்லமுடியாது, நான் செல்கிறேன் இனி திரும்ப வரமாட்டேன். இந்த செல்வங்களை பார்த்துக்கொள் என்று கூறி பனி மூட்டத்தில் கலந்து மறைந்து விடுகிறாள். அவளுக்காக செய்த பாதணியை கையிலேந்தியபடி, அவள் திரும்பி வருவாள் என்ற ஏக்கத்துடன் இன்னும் அந்த விறகுவெட்டி இளைஞன் காத்துக்கொண்டிருக்கிறான்.

#காதற்றவன் (Hoichi the Earless)

இதுதான் இந்த தொகுப்பிலுள்ள மிகப்பெரிய கதை. இது கண் தெரியாத ஒரு Biwa hoshi (பைவா என்பது ஒரு இசைக்கருவி – லுட் வடிவில் இருக்கும் – பைவா ஹோஷி என்பவர்கள் ஜப்பானிய கதைப்பாடல்களை இசைத்து தங்களுக்கான வருவாயை ஈட்டிக் கொண்டவர்கள்) ஒரு புத்த மத ஆலயத்தில் தனது வேலைகளை செய்து கொண்டு இருக்கிறான். அவன் கதைப்பாடல்கள் டன்-நோ-உரா என்ற பெரும் போர் பற்றியதாக இருக்கின்றது. ஹெய்கே என்ற பெரும் படை தோல்விக்குப் பின்னால் தன்னை கடலுடன் அழித்துக் கொண்டது பற்றிய கதையை, சோகமயமான இசையுடன் இந்த கதைப்பாடலை இசைக்கின்றான் இவன். அமானுஷ்ய இசையது. Battle of Dan-no-ura வின் ஆவியுலகு இந்த இசையில் மயங்குகிறது. பைவா துறவியை தமக்காக வாசிக்கும் படி ஒவ்வொரு இரவும் அழைத்துச் செல்கிறான் தளபதி. அது டன்-நோ-உராவின் மயான பூமி – கண் தெரியாத துறவிக்கு இது தெரிவதில்லை. ஒவ்வொரு இரவும் காணமல் போகும் துறவியை பற்றிய கவலை மடத்தின் பெரும் துறவிக்கு வருகிறது. ஒரு இரவு அவன் எங்கு செல்கிறான் என்பதை பார்க்கும் படி இரு பணியாட்களை அமர்த்துகிறார்.

அது கடும் மழைநாள் – பேய்மழை. அந்த இரவு பைவா ஹோஷி வாசிக்கும் கதைப்பாடல் கடைசிப்பாடல்… இன்னும் ஒரு சில வரிகளை வாசித்துவிட்டால் ஆவியுலக ஹெய்கேக்கள் திரும்ப வரப்போவதில்லை. ஆனால் அவன் வாசித்து முடிக்கும் முன்னர் தடுத்து விடுகிறார்கள். திரும்ப மடத்துக்கு அழைத்து வரப்படும் துறவி புனித நூலின் வசனங்களை உடல் முழுக்க எழுதுவதன் மூலம் ஆவிகளின் பார்வையிலிருந்து தப்பித்து விடலாம் என்ற யோசனையின் பிரகாரம் அவன் உடல் முழுவது புனித வரிகளால் நிரப்பப்படுகிறது. முழு உடலையும் எழுத்துக்களால் நிரப்பி விட்டாயா? பெரும் துறவி கேட்க ஆமாம் என்கிறான் இன்னொரு துறவி. காதுகளுக்கு மாத்திரம் பச்சைக் குத்த மறந்து விட்டான் அவன்…

தேனீர் (In a Cup of Tea) – எழுதப்படும் கதைகள் எங்கோ ஒரு வீட்டில், ஒரு இருட்டு அறையில், பழைய தகரபெட்டிக்குள் முடிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஏன் அவை முடிக்கப்படவில்லை? ஒருவேளை புனைவாளன் சோம்பேறியாக இருக்கக்கூடும், இல்லையெனில் பதிப்பகத்தாருடன் சிக்கல் இருந்திருக்கக்கூடும், அப்படியுமில்லையெனில் இடையில் வெளியே போனவன் திரும்பி வராமலேயே இருந்திருக்கக்கூடும், ஒரு வேளை மரணம் அவனை அழைத்திருக்கலாம்… இது தவிர வேறு காரணங்களும் இருக்கும்!. முடிக்கப்படாத புனைவு இதுதான் இந்த கதை. அந்த புனைவாளன் எங்கு சென்றான்? என்ற கேள்விக்கு பதில் இந்த கதையில் இருக்கின்றது. இருக்கின்றதா?

மேற்சொன்ன “கருங் கூந்தல் அழகி” கதையில் வரும் கூந்தல் பேய் ஜப்பானிய ஹாரர் சினிமாவில் அதிகம் காணக்கூடியதாக இருக்கும். The Grudge, Ring போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். இந்த பேயின் பாதிப்பில் ஹாலிவூட் மற்றும் தமிழ் சினிமா பேய்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பெண் பேய்கள் எனும் போது வெண்ணிற ஆடை, நீண்ட கரிய கூந்தல் என்று இருப்பது வழமைதானே. எமது பகுதிகளில் கூறப்படும் மோகினியும் இம்மாதிரி தோற்ற அமைப்பினுள் அடங்கும். நள்ளிரவில் கையில் குழந்தையை சுமந்து கொண்டு வெண்ணிற ஆடையில் வாகனங்களை மறித்து “லிஃப்ட்” கேட்கும் மோகினிக் கதைகள் ஏராளம். எமது மோகினி போன்றே தாய்லாந்தில் “மா – நாக்” என்ற பழங்கதையொன்றும் உண்டு. அதை வைத்தே கிட்டத்தட்ட 20ற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தாய்லாந்தில் வெளிவந்திருக்கின்றன.

Kwaidan படத்தின் நான்கு குறும்படங்களும் திகில் சினிமா வரைவிலக்கணங்களுக்குள் அடங்குபவையல்ல. பார்வையாளனுக்கு பயத்தை ஏற்படுத்துவதை விட ஒருவித அமானுஷ்ய அனுபவத்தை வழங்குகின்றது. இத்திரைப்படத்தில் பாவிக்கப்பட்டிருக்கும் இசையும் நாட்டார் இசைக்கருவிகளை வைத்தே இசைக்கப்பட்டிருக்கின்றது. இசையும் – அமானுஷ்யமும் இணையும் திரைப்படமாக இது பரிணமிக்கின்றது.

கிழக்காசிய நாடுகளின் திகில் திரைப்படங்கள் ஹாலிவூட் ஹாரர் சினிமாக்களை விட அதிகம் பயமுறுத்துபவையாக இருக்கும். முதன் முதலில் The Ring திரைப்படம் அமெரிக்க திரையுலகில் வெளியிடப்பட்ட போது, “அப்படியே மெரண்டு போய்ட்டாங்க” அதுவரையில் அவர்கள் அப்படியானதொரு திகில் சினிமா அனுபவத்தினை பெற்றிருக்கவில்லை.
வீட்டுச் சுவர்களில் ஏற்படும் வெடிப்புகள் அவ்வளவு நல்லதில்லை. கிழக்காசிய நாடுகளில் ஒருவகைப் பேய் வெடிப்புகளில் இருந்து கிளம்பி வந்து அப்படியே உங்களை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும். இப்படி இந்நாடுகளின் நாட்டார் மரபுகளில் பேய்களுக்கு பஞ்சமேயில்லை. பெரும்பாலும் தவளை, சிலந்தி, குரங்கு போன்ற உயிரினங்களை ஒத்ததாகவும், பெண்கள், குழந்தைகள், எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தியாகாத பேய்கள் வரை ஏராளமாக இருக்கின்றன.

இவற்றின் விசேசம் என்னவென்றால், இவையெல்லாம் ஏதோ ஒரு திரைப்படத்தில் அல்லது அனிமியில் தலைக்காட்டியிருக்கும். திகில் சினிமா மாத்திரமல்ல ஹயோ மியசாகியின் அற்புதமான மாயாஜா அனிமிக்களும் இவ்வாறான பேய்களை சித்தரித்திருக்கின்றன. நல்ல நட்பார்ந்த பேய்கள் அவை.

சரி, ஜப்பானில் இருந்து ஜெட்லி பாய்ச்சலில் ஹாலிவூட் செல்வோம். கிழக்காசிய நாடுகள் போன்று செழுமைமிக்க நாட்டார் பேய்களைக் கொண்ட நாகரீகமல்லவே மேற்கு. ஹாலிவூட் திகில் திரைப்பட பேய்கள் பெரும்பாலும் Urban Legends எனப்படும் நகர்ப்புற கட்டுக்கதைகளை குறிவைத்தே இயங்குபவை. இவை தவிர்த்து பாழந்டைந்த வீட்டுப் பேய்களும் உண்டு. இந்த நகர்ப்புற கதைகளில் இருந்து வந்த பேய்கள் பெரும்பாலும் “சதக்” ரகம்தான். கையில் பெரிய கத்தரிக்கோலுடன் நகர் சந்துகளில் வாழும், முகம் சிதைந்த அழகு மோகினி ஒரு உதாரணம். யாரும் ஒன்றுக்கு போக ஒதுங்கினால் ‘கட்’தான்.
ஹாலிவூட் தன்னிடம் சரக்கு இல்லாவிட்டால் வேறு இடங்களில் இருந்து திருடுவதற்கு தயங்குவதேயில்லை. லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்தும், கிழக்காசிய நாடுகளில் இருந்தும் பேய்களை வசப்படுத்தி இழுத்துக் கொண்டு தங்கள் திரைகளில் ஆட வைக்கும். அப்படி பூகிமேன் என்ற வாய்வழிக்கதை – அல்லது தலாட்டு – பூச்சாண்டியை இந்த லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்து லவட்டிக் கொண்டு வந்தது. குழந்தைகளை உறங்க வைக்க பாடப்படும் தலாட்டு எல்லாம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஒரே ஹம்மிங்கில்தான் இருக்கும் போல? நம்மூர்களில் குழந்தைகளை உறங்கவைக்க, அல்லது அடம்பிடிக்கும் குழந்தைகளை அடங்க வைக்க “இப்ப நீ சாப்டல்ல பூச்சாண்டி வருவான்… அவன்ட்ட ஒனய புடிச்சி கொடுத்துடுவேன்” என்பார்கள். இதை கிராமப்புறங்கள் துவங்கி எல்லா இடங்களிலும் கேட்டிருப்போம்.

பூச்சாண்டிக்கென்று தனியடையாளங்கள் எதுவும் இல்லை. ஆனால் குத்துமதிப்பாக கோணியைப் போர்த்திக் கொண்டு வருவான், கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருப்பான், கப்பர்டில் ஒளிந்திருந்து உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்… என்று சொல்வார்கள். இது உலகில் எல்லாப் பாகங்களிலும் ஒன்று போலவே இருக்கும். பூச்சாண்டிக்கு பல பெயர்கள் உண்டு கோணியை போர்த்திக் கொண்டு வந்து பிள்ளைகளை தூக்கிக் கொண்டு செல்பவன் “கோணி பிசாசு”, லத்தின் அமெரிக்க நாடுகளில் “கொகொ” என்று அழைக்கப்படும் பூச்சாண்டிக்கு அழகிய தலாட்டுப் பாடலும் உண்டு,

Sleep child, sleep now…
Or else the Coco will come and eat you

இந்த பாடலை கேட்கும் எங்களுக்கு பயம் வராதுதான், ஆனால் இதை ஒரு தாய் தன் குழந்தையிடம் சொல்லும் கண்டிப்பா பயம் வரும்.

அப்படியே கொஞ்சம் ரஷ்ய பக்கம் போனால் “பாபா-யாகா” என்று சூனியக்காரி (மூன்று சகோதரிகள்). இந்த பாபா-யாகா பற்றிய கதைகள் ரஷ்யாவில் மிகப் பிரபலம். இரண்டு விதங்களில் இந்த பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று குழந்தைகளை பிடித்துக் கொண்டு போவதாக, மற்றையது குழந்தைகள் ஆபத்தில் இருக்கும் போது காப்பாற்ற வருவதாக. இந்த பாபா-யாகா ஒரு வயதான மூக்கு நீண்ட கிழவி, உரல் – உலக்கை – தும்புத்தடிதான் இவளது வாகனம்.

சரி, இவ்வளவு தொகுப்புகளும் எதற்கு? இதனால் என்ன பிரயோசனம்? என்று கேட்கலாம். மேற்சொன்ன பேய்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் சினிமாவில், கார்டூன்களில் மீள்புனைவாக்கம் செய்யப்பட்டுத்தான் இருக்கின்றன. ஒன்றரல்ல இரண்டல்ல பல தடவைகள். இவ்விடத்தில் இடைச்செருகளாக ஒரு விடயம். இங்கு “பேய்” என்ற வார்த்தையைப் பாவிக்கும் போது ஒற்றை அர்த்தம்தான் வருகிறது. அது நமது மனதில் எப்பொழுதும் பதிவாகியிருக்கும் ஒன்று. இறந்தவர்களின் ஆவிதான் பேய் என்ற மனப்பதிவே அது. ஆனால், மேலே நான் சொன்ன அனைத்து பேய்களுக்கும் பெயர்கள் உண்டு. தமிழிலும் பல பெயர்களில் பேய்கள் இருக்கின்றன. அவற்றை நாம்தான் மறந்துவிட்டிருக்கிறோம்.

தமிழ் சினிமாவில் இதுவரைக்காலமும் வந்த எந்தவொரு திகில் சினிமாவிலாவது ஒரிஜினாலிட்டி இருந்திருக்கின்றதா? எல்லாம் இறக்குமதி பேய்கள்தானே. தமிழர் நாட்டார் மரபில், தொன்மங்களில் எத்தனை கதைகள், கதைப்பாடல்கள் இருக்கின்றன அவற்றில் ஏதாவது ஒன்றேனும் திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டிருக்கின்றதா?

ஒவ்வொரு ஊர்களிலும் கதைகள் உண்டு, ஆற்றங்கரையோரம் நிற்கும் புளியமரம், பாழ் கிணறு, ஆற்றில் பாய்ந்து குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட மோகினி என்று ஏராளமான கதைகள் நமது பகுதிகளியே வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது? ஏன் இன்னும் அவை திரைக்குள் பிரவேசிக்கவில்லை? கால்ஷீட் பிரச்சினையா?

சமகாலத்தில் திகில் சினிமாக்கள் எடுக்கப்படுவது அதிகரித்துக் கொண்டு வருகிறது. புதிய ட்ரண்டாக மாறிக் கொண்டு வருகிறது. எப்பொழுதும் புதிய ட்ரண்ட்களுக்கு நடக்கும் “க்ளீஷேக்கள்” போல் ஆகிவிடாமல் இருக்க, தமிழ் பேய்களுக்கு கொஞ்சம் சான்ஸ் கொடுத்துப் பாருங்களேன்.

- பதிவர் ஒமர் ஷெரிப்

யோகா

அம்மாவிடமிருந்து கொஞ்சம் ஒவ்வாமையும் (Allergies), அப்பாவிடமிருந்து கொஞ்சம் ஆஸ்துமாவும் சொத்தாக எனக்கு வந்து சேர்ந்தது.

அதிலிருந்து தப்பிக்க யோகா வகுப்புக்கு போக ஆரம்பித்தேன். இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஹோமியோபதி மருந்து, உணவு கட்டுப்பாடு, யோகா என மூன்றும் வேலை சேர்ந்து ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து என்னை காப்பாற்றின.

2009 ல் யோகா செய்ய துவங்கினேன். பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

விடிகாலை 5.30 முதல் 6.30 வரை ஒரு பேட்ஜ். வாரத்தில் ஐந்து நாட்கள். திங்கள் முதல் வெள்ளி வரை. ரூ. 300ல் துவங்கினேன். இப்பொழுது ரூ. 700.

இரண்டு நாட்கள், ஒரு வாரம், ஒரு மாதம் வந்தவர்கள்- என இந்த பத்து ஆண்டுகளில் எங்கள் பகுதியில் உள்ள பாதி பேரிடம் அறிமுகமாகிவிட்டேன். 
இடையில் இரண்டு வருடம் நான் மட்டுமே தொடர்ச்சியாக போனேன். மாஸ்டர் தான் ஐந்து நாட்கள் வருவதற்கு பதிலாக நான்கு நாட்கள் தான் வருவார். ஒரு நாள் மட்டம் போட்டுவிடுவார்.

யார் தொடர்ச்சியாக வருகிறார்கள் என்றால், அதன் பலனை நன்றாக உணர்ந்தவர்களும், ஆஸ்துமா, தைராய்டு, சர்க்கரை என சிரமப்படுபவர்கள் தொடர்ந்து வந்து நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகளில் 7 மாஸ்டர்கள் வரை மாறிவிட்டார்கள். எல்லோருமே சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வார்கள். சிலரிடம் அர்த்தம் கேட்டிருக்கிறேன். தெரியாது என்பார்கள். அதில் ஒரு மாஸ்டர் இந்துத்துவ கருத்துக்களை பேசுவார். அதையும் நான் கேள்விகள் கேட்டு இடைமறித்ததும் நிறுத்திவிட்டார். நான் மந்திரங்களை சொல்வதில்லை. எந்த மாஸ்டரும் ஏன் என கேள்வியும் கேட்டதில்லை.

உடல் உழைப்பிலிருந்து பிரிந்துவிட்ட நடுத்தர வர்க்க ஆட்கள் தான் யோகா பக்கம் வந்து சேர்கிறார்கள். அப்படி வருபவர்களை இந்துத்துவ ஆட்கள் ஆன்மிகம், கோயில், குளம் என தள்ளிக்கொண்டு போகிறார்கள்.

யோகாவை இந்துத்துவ ஆட்கள் கையில் எடுத்ததால், முற்போக்கு முகாம் ஆட்களுக்கு யோகா மீது ஒவ்வாமை வந்துவிட்டது. நாம் அதை புறக்கணிக்க வேண்டியதில்லை.

யோகா அவர்களுடைய சொத்தில்லை. நாம் யோகாவை அவர்களிடமிருந்து காப்போம்.

- 21, June 2019 - முகநூலிலிருந்து...

"ஒரு நைஸ் புளிச்ச தோசை"

கோடம்பாக்கம். இரவு 10 மணி. முதல் வாய் எடுத்து வைக்கும் பொழுதே தெரிந்துவிட்டது. நல்ல புளிப்பு.

'இவ்வளவு புளிப்பு உடம்புக்கு சிக்கல் பண்ணிவிடுமே" என்றேன் உணவக பணியாளரிடம் பணிவாய்!

"அடிக்கிற வெயிலுக்கு மாவு தாங்கிறது இல்ல!" என்றார் அவரும் பணிவாய்!

"புரோட்டா, சப்பாத்தி - என்ன சாப்பிடுறீங்க?" என்றார்.

நான் சாப்பாத்தியை தேர்ந்தெடுத்தேன். தோசைக்கு காசு கேட்கவில்லை.

#ஜெமோ ஒரு நிமிடம் நினைவில் வந்து போனார்.

November 25, 2019

Game Over (2019)


கதை. ஒரு புத்தாண்டு துவங்கும் நாளில் நாயகி பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் பொழுது டிசம்பர் துவங்கியதும் உடலில் பதட்டம் தொற்றிக் கொள்கிறது. மருத்துவர் ஆனிவர்சரி ஃபீலிங் என்கிறார். ஜனவரி பிறந்து விட்டால் சரியாகிவிடும் என்கிறார்.

சைக்கோ கொலையாளிகள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்கிறார்கள். நாயகியும் அதில் மாட்டுகிறாள். வீடியோ விளையாட்டில் தருவது போல மூன்று வாய்ப்புகள் தரப்படுகிறது. பயன்படுத்திக்கொண்டு தப்பித்தாளா என்பது பதட்டமான மீதிக்கதை.

****

30 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் பலாத்காரம் நடக்கிறது என இந்திய குற்ற ஆவணக் காப்பகம் அறிவிக்கிறது.

பாலியல் வெறித்தனத்தால், சாதிய வன்மத்தால், மதவெறியால் தனியாகவோ கும்பலாகவோ பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்கள். ஒரு பெண்ணின் வாழ்வில் அது எவ்வளவு பதற்றத்தையும் துயரத்தையும் தருகிறது என்பதை நாயகியின் உணர்வுகளால் நன்றாக உணர்த்தி இருக்கிறார்கள்.

இப்படி செய்திருக்கலாம். அப்படி செய்திருக்கலாம் என புலம்புவதா, அழுவதா, அதற்கு போராடி சாகலாம் என்ற முடிவுக்கு வருகிற நாயகியின் முடிவு அருமையானது. வரவேற்கத்தக்கது.

இந்த ஆனிவர்சரி உணர்வு எனக்கும் உண்டு. ஓணம் பண்டிகை வந்தால் ஒரு கசப்பான நிகழ்வு நினைவுக்கு வரும். ஒரு நாள் தான். பிறகு இயல்பாகிவிடும்.

காலயந்திரம், விளையாட்டில் தருகிற 3 (life) வாய்ப்புகளும் எப்பொழுதும் ஈர்ப்பானது. வாழ்வில் செய்த பெரும் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும் அல்லவா?

ஆண்களைவிட பெண்களுக்கு இது இன்னும் ஈர்ப்பாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.

படத்தை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்த்திருக்கலாம்.

மொத்தப் படத்தையும் தாப்ஸி தாங்குகிறார். வாழ்த்துக்கள்.
பார்க்கக்கூடிய படம் தான். பாருங்கள்.

படிக்க கற்றுக்கொள்

வாழ்க்கை எப்போதேனும் உன்னை மோசமாக நடத்த முயன்றால்... என்னை நினைத்துக்கொள்.

இன்னொரு விசயமும் இருக்கிறது. நீ எங்கேயிருந்தாலும், என்ன வேலை செய்தாலும், தீவிரமாக படித்து கற்றுக்கொள். எப்போதும் அதை கைவிடாதே. படிப்பில்லாமல் வளர்ச்சி இருக்கமுடியாது.

- நிகோலய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி,
தனது இறுதி நாட்களில்...


#வாழ்க்கையை_கொண்டாடுங்கள்' புத்தகத்திலிருந்து...

கும்பகோணமும் சுவாமிமலையும்



கல்யாணத்திற்காக கும்பகோணம் வரை போயிருந்தேன். தம்பதிகளை வாழ்த்திவிட்டு, சாப்பிட்டு முடிய மதியம் ஆகிவிட்டது.

கும்பகோணத்தில் பார்க்க கூடிய இடங்கள் பற்றி தேடும்போது சுவாமிமலை, தாராசுரம் என இரண்டு இடங்கள் கிடைத்தன.

முருகனின் அறுபடை வீடுகளில் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், அழகர் மலையில் உள்ள பழமுதிர்ச்சோலை, பழனி, திருச்செந்தூர் என முருகனின் அருளை பெற்று வளமாய் (!) இருக்கிறேன். இன்னும் இரண்டு தான் பாக்கி. சுவாமிமலையும், திருத்தணியும்!

சுவாமிமலை வரை போய் வரலாம் என முடிவு செய்தேன். எட்டு கிலோமீட்டர் தூரம். பேருந்து பிடித்து போய் சேர்ந்தேன்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். சுவாமிமலையில் நிறைய படிகள் ஏற வேண்டி இருக்கும் என பயந்து விசாரித்தால்... கும்பகோணத்தில் எங்கே குன்றெல்லாம்...? போங்க! ஒன்னும் சிரமம் இருக்காது என சிரித்துக்கொண்டே சொன்னார்.

செயற்கையாக ஒரு 20 அடி உயரத்திற்கு ஏற்றி கோயிலை கட்டி வைத்திருக்கிறார்கள். நிறைய லாட்ஜுகள் சுற்றி நிரம்பியிருந்தன. சுவாமிமலை ஊரில் பலரையும் முருகன் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என புரிந்தது.

வெள்ளிக்கிழமை. கூட்டம் மிதமாக இருந்தது. முகூர்த்தநாள் என்பதால், இரண்டு ஜோடிகள் முருகனிடம் ஆசி வாங்க வந்திருந்தார்கள்.
செருப்பை பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் ஏதும் ஏற்பாடு செய்யவில்லை. முருகன் மீது பாரத்தை போட்டு வெளியே விட்டு விட்டு போனேன். திவ்ய தரிசனம் முடித்துவிட்டு வந்து பார்த்தால், விட்ட இடத்திலேயே இருந்தது. அப்பாடா!

இன்னும் மூன்று மணிநேரம் முழுசாய் இருந்தது. கும்பகோணத்தில் என்ன சிறப்பு என்று இணையத்தில் தேடினேன். முராரி ஸ்வீட்ஸ் கடையில் கிடைக்கும் பூரியும், தொட்டுக்கொள்ள பாசந்தியும் சிறப்பு என சமஸ் சப்புக்கொட்டி எழுதியிருந்தார். பக்கத்தில் இல்லாததால் சாப்பிட கொடுத்து வைக்கவில்லை.

படம் பார்க்கலாம் என தேடியதில் 'சுட்டு பிடிக்க உத்தரவு' பார்க்கலாம் என இணையம் சொன்னது. பரணிகா திரையரங்கில் ஓடியது. நடந்து போகும்போது ஒரு இளைஞரிடம் வழிகேட்டேன். கொஞ்ச நேரத்தில் அவரே பின் தொடர்ந்து வந்து திரையரங்கு வாசலில் இறக்கிவிட்டு சென்றார். முருகனை பார்த்து வந்த பிறகு நடந்த அதிசயம் இது! :)

திருத்தணி முருகன் மட்டும் பாக்கி. விரைவில் பார்க்க வேண்டும். முருகன் அதற்கும் ஏற்பாடு செய்வார். காத்திருப்போம்.

சுட்டுப் பிடிக்க உத்தரவு (2019)


கதை. காது கேட்காத, வாய் பேசமுடியாத குட்டிப் பொண்ணை காப்பாற்ற நிறைய பணம் தேவை.

அந்த குழந்தையின் அப்பா, இன்னும் மூவரை சேர்த்துக்கொண்டு, நகரின் மத்தியில் பரபரப்பான மாலில் உள்ள வங்கியை கொள்ளையடிக்கிறார்கள்.
போலீசுடன் மோதியதில் ஒருவன் சுட்டுகொல்லப்படுகிறான். தப்பிக்கும் பொழுது போலீசு, பொதுமக்கள் என சிலரை போட்டு தள்ளிவிடுகிறார்கள். மற்ற மூவரும் மக்கள் நெருக்கமாக வாழும் ஒரு காலனிக்குள் நுழைந்துவிடுகிறார்கள். போலீசு எல்லா வழிகளையும் சுற்றி வளைத்துவிடுகிறது.

குழந்தைக்கு என்ன ஆனது? மக்களுக்கு என்ன ஆனது? மூவரும் அங்கிருந்து தப்பித்தார்களா என்பதை பரபரப்பாக சொல்லி முடிக்கிறார்கள்.

****
மாலில் உள்ள வங்கியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? கமிசனரே களத்தில் இறங்கி சண்டையிடுவது, நால்வரில் ஒருவரிடம் மெசின் துப்பாக்கி வைத்திருப்பது என எல்லாவற்றிருக்கும் இறுதியில் பதில் சொல்லியிருப்பதால் பெருந்தன்மையாய் மன்னித்துவிட முடிகிறது.

'அதே கண்கள்' என ரவிச்சந்திரன் நடித்த ஈஸ்ட்மேன் வண்ணப்படம். படத்தின் துவக்கத்தில் இந்த படத்தின் முடிவை யாரிடமும் சொல்லாதீர்கள் என தயாரிப்பாளர் கெஞ்சுவார். அது இந்த படத்திற்கும் பொருந்தும். 🙂

இடைக்கதையில் ஒரு பயங்கரவாத குழு வந்து போகிறது. முசுலீம்கள் போல காட்டியிருக்கிறார். இயக்குநர் இன்னும் அப்டேட் ஆகவில்லை. பிரக்யாசிங், அசீமானந்தா போன்ற ஆட்களை போல காட்டியிருந்தால், இன்னும் எதார்த்தமாக இருந்திருக்கும்.

மற்றபடி மிஷ்கின், விக்ராந்த், அறிமுகம் இயக்குனர் சுசீந்திரன், குட்டிப்பெண் அசுவதி (?) எல்லோரும் நன்றாக பொருந்தியிருக்கிறார்கள்.
கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். படம் இன்னும் செழுமையாக வந்திருக்கும்.

The Last Samurai (2003)


கதை. செவ்விந்தியர்களை வேட்டையாடிய படையில் நாயகன் முக்கிய பங்கு வகிக்கிறான்.

ஆக்கிரமிப்பு படைகள் குழந்தைகளை எல்லாம் ஈவிரக்கமின்றி கொன்றதில், கடும் மன உளைச்சலுக்குள்ளாகிறான். நிம்மதியாக தூங்க முடியவில்லை. பெருங்குடிகாரனாகிறான்.

சாமுராய் வீரர்கள் ஜப்பான் மன்னனின் முதன்மை படை வீரர்கள். பேரரசு என்றால் ஒடுக்குவதற்கு நவீன படை வேண்டுமல்லவா! நிறைய துப்பாக்கிகள் வாங்குகிறான். பீரங்கிகள் வாங்குகிறான். நவீனம் வேண்டாம் என்கிறார்கள் சாமுராய்கள்.

ஒப்புக்கொள்ளாத சாமுராய் வீரர்களை பணிய வைக்க, ஜப்பான் படைகளுக்கு பயிற்சி தர நாயகன் பெருந்தொகை கொடுத்து வரவழைக்கப்படுகிறான்.

இன்னமும் ஜப்பான் படைகளுக்கு பயிற்சி தேவைப்படுகிற பொழுதே, நாயகனை சாமுராய் வீரர்களோடு மோத அனுப்புகிறார்கள்.
சாமுராய் வீரர்கள் துவம்சம் செய்துவிடுகிறார்கள். நாயகனை கொல்லாமல், அவர்களுடன் அழைத்து சென்றுவிடுகிறார்கள்.

நாயகனுக்கு என்ன ஆனது? ஜப்பான் மன்னன் சாமுராய் வீரர்களை என்ன செய்தான்? என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

****

எதிரே பீரங்கி. துளிகூட பயமில்லாமல் குதிரையில் சாமுராய்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி உணர்ச்சிமிக்கது.

மன அமைதியில்லாமல் இருக்கும் நாயகன், சாமுராய்களின் நிதானம், தியாகம், ஒரு ஒழுங்கான வாழ்க்கைமுறையை புரிந்துகொண்டு மனம் மாறுவதை இயல்பாக காட்டியிருக்கிறார்கள்.

கதை 19 ம் நூற்றாண்டில் நடக்கிறது. இதற்கு பிறகு சாமுராய்கள் வேறு வேறு வேலைக்கு மாறிவிட்டதாக சொல்கிறார்கள்.

படத்தில் நடித்த நாயகன் டாம் குரூஸ், சாமுராய் வீரர்களுக்கு தலைமை தாங்கியவர், அவருடைய தங்கை, சாமுராய் வீரர்களில் தளபதி என பலரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

எப்பொழுதும் ஒரு படத்தைப் பற்றி எழுதுகிற பொழுது, குறைந்தப்பட்ச திருப்தி இருக்கும். இந்த படம் பற்றி மிக குறைவாக எழுதியிருக்கிறேன் என உணர்வதால் அது இல்லை.

தமிழிலும் கிடைக்கிறது. பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

நடத்தை

வேடிக்கை என்னவென்றால் நாம் சரியானவற்றைச் செய்வதில் காட்டும் சுறுசுறுப்பைவிட, நாம் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதில்தான் அதிகம் சுறுசுறுப்பை காட்டுகிறோம்.

- கலீல் ஜிப்ரான்