நாயகன், நாயகியும் இருவரும் எதிர் எதிர் குணாதிசயம் கொண்டவர்கள். இருவரும் காதலிக்கிறார்கள். இணைந்து வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ரெம்ப முட்டிக்கொள்ளும் பொழுது, அவள் பிரிந்து சென்றுவிடுகிறாள்.
பிரிந்து சென்றவள், ஒரு நிறுவனத்தை அணுகி நாயகன் குறித்தான அத்தனை நினைவுகளையும்
அழித்துவிடுகிறாள். இவன் அவளைத் தேடி போகும் பொழுது, யாரோ என்பது போல் அணுகிறாள். இவனுக்கு
பித்து பிடித்தது போல் ஆகிவிடுகிறது. அவள் என்ன செய்தாள் என்பது இவனுக்கு தெரிந்துவிடுகிறது.
பிறகு இவனும் அவள் செய்ததையே செய்ய அந்த நிறுவனத்தை அணுகிறான். அவளைப் பற்றிய
நினைவுகள் காட்சிகளாக விரிகின்றன. மெல்ல மெல்ல நினைவுகள் அழிக்கப்படுகின்றன. அவளுடனான
கசப்பான நினைவுகளோடு, நல்ல நினைவுகளும் அழிக்கப்படுகின்றன. அவளின் மீதான காதலால் எப்படியாவது
தன் மனதின் ஓரத்தில் அவளை ஒளித்து வைத்துக்கொள்ள எவ்வளவோ போராடுகிறான். இறுதியில் என்ன
ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****
யோசித்துப் பார்த்தால், நினைவுகள் தானே வாழ்க்கை. ஒரு மனிதனின் அத்தனை நினைவுகளையும்
அழித்துவிட்டால், அவன் தன் வாழ்ந்த வாழ்வை தொலைத்தவனாகிவிடுகிறான்.
அவளைப் பற்றிய நினைவுகள் மட்டும் குறிப்பாக அழிக்கப்படுகின்றன. அவனின் ஆழ்ந்த
தூக்கத்திலேயே காதலின் கசப்பான நினைவுகளை அழிக்கும் பொழுது அமைதியாக இருப்பவன். நல்ல
நினைவுகள் அழியும் பொழுது பதறுகிறான். நமது நினைவுகளும் விசித்திரம் தான். நல்ல நினைவுகளை
பாதுகாத்து வைப்பதை விட, மோசமான நினைவுகளேயே திரும்ப திரும்ப தேய்ந்த ரிக்கார்ட் போல
நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன.
அதனாலேயே என் வாழ்வில் நல்ல நினைவுகளை நாட்குறிப்பில் எழுதி பாதுகாக்கிறேன்.
நல்ல நிகழ்வுகளை புகைப்படங்களாக, கொஞ்சம் செலவானாலும் ஆல்பமாக தயாரித்துக்கொள்கிறேன்.
படத்தில் ”மாஸ்க்” பட நாயகன் ஜிம் கேரியும், ’டைட்டானிக்’ பட நாயகி கேட் வின்ஸ்லெட்டும் பாத்திரங்களை அருமையாக செய்திருக்கிறார்கள். படம் நிறைய விருதுகளை பெற்றிருக்கிறது. நெட் பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment