> குருத்து: John Q (2002) டென்சில் வாசிங்டனின் திரில்லர் படம்

September 10, 2021

John Q (2002) டென்சில் வாசிங்டனின் திரில்லர் படம்நாயகன் ஒரு கருப்பின தொழிலாளி. அவருடைய துணைவியார் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறார். அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன். பொருளாதார நெருக்கடியில் தான் வாழ்கிறார்கள்.  ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்த பையன் சுருண்டுவிழுகிறான்.  என்னவென சோதித்தால், அவனுக்கு இதயம் மிக பலவீனமாக இருக்கிறது. புதிய இதயம் பொருத்தினால் மட்டுமே அவனால் வாழமுடியும் என்கிறார்கள். போட்டிருக்கும் காப்பீடு தாங்காது. இரண்டரை லட்சம் டாலர் வேண்டும் என்கிறார்கள். நம்மூர் பணத்தில் இரண்டு கோடி என சொல்லலாமா?

 

வீட்டில் இருப்பதை விற்கிறார்கள். நண்பர்கள் உதவுகிறார்கள். கடன்  கேட்கிறார்கள். இவர்களுக்கு அடகு வைக்க எந்த சொத்தும் இல்லாததால், கை விரிக்கிறார்கள்.  அந்த பையன் சோர்வடைந்துகொண்டே வருகிறான். அவனின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ”ஏதாவது செய்து பிள்ளையை காப்பாற்றுங்கள்” என அரற்றுகிறார்.

 

பையன் இருக்கிற மருத்துவமனையின் அவசர வார்டில் உள்ளே புகுந்து அங்கிருப்பவர்களை துப்பாக்கி முனையில் சிறைப்பிடிக்கிறார்.  அவரது ஒரே கோரிக்கை. “என் பிள்ளையை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுங்கள்”. மருத்துவமனையை சுற்றி வளைக்கிறது சிக்காக்கோ போலீஸ். ஒரு கட்டத்தில் அவரை சுட்டாவது அங்கு சிக்கியவர்களை காப்பாற்றவேண்டும் என முடிவெடுக்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை பரபரப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்கிறார்கள்.

 

****

”உங்க கணவர் எப்படிப்பட்டவர்?” என கேட்கும் பொழுது, ”அவர் மிகவும் அன்பானவர். மென்மையானவர்” என்பார். அப்படிப்பட்டவரையே தன் மகனுக்காக துப்பாக்கியை ஏந்த வைத்துவிடும். இந்தக் கதையை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அமெரிக்காவின் மருத்துவ நிலையை கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும்.

 

அமெரிக்காவில் நம்மூரைப் போல அரசு மருத்துவமனைகள் இல்லை. முழுக்க முழுக்க காப்பீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தான். காப்பீட்டுத் தொகையும் மிக அதிகம். வேலை செய்யும் பொழுது, நிறுவனங்கள் தங்கள் பணியாட்களுக்கு காப்பீடு செய்து தருகிறார்கள். ஒரு குடிமகன் வேலை இல்லாமல் போனால், காப்பீடு இல்லாமல் தத்தளிப்பான். அடுத்து வரும் நோய் அவனை அச்சுறுத்தும். பதட்டத்தை ஏற்படுத்தும்.

 

2008ல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, அமெரிக்காவில் 10% பேருக்கு மேலாக வேலை இல்லை.  அமெரிக்காவின் மக்கள் தொகை 30 கோடி என்றால், இதில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 20 கோடி என வைத்துக்கொண்டால், 2 கோடி பேருக்கு மேல் வேலை இல்லை. அதனால், காப்பீடு இல்லை. அப்படியே காப்பீடு இருந்தாலும், இந்த நோய்க்கு காப்பீடு இல்லை என்பார்கள். நீ ரெம்ப குண்டா இருக்கே! ரெம்ப ஒல்லியா இருக்கே! என இல்லை என்பார்கள் அல்லது காப்பீடுப் பணத்தை இன்னும் அதிகம் கேட்பார்கள். உலகம் முழுவதும் ரவுடித்தனத்தில் ஈடுபடும் அமெரிக்காவின் மருத்துவ லட்சணம் இது தான்.

 

அமெரிக்காவில், ஒபாமா பதவியேற்கும் பொழுது, “அமெரிக்காவில் மருத்துவ பிரச்சனை என்பது எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டாக இருக்கிறது” என்றார். அமெரிக்காவில் மருத்துவ பிரச்சனை குறித்து மைக்கேல் மூர் ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார்.  இதெல்லாம் அமெரிக்காவில் தான். கனடாவில், க்யூபாவில், பிரிட்டனில் எல்லாம் மருத்துவம் இலவசம் தான்.  சோவியத்தில் புரட்சி வந்து, அந்த புரட்சி மெல்ல மெல்ல மற்ற நாடுகளுக்கு பரவிய பொழுது, தங்கள் நாடுகளிலும் சோசலிச புரட்சி பரவிவிடும் என்ற பயத்தில், மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசுகள் போல பல நல திட்டங்களை அமுல்படுத்த துவங்கினார்கள். அதன் விளைவு தான் இப்பொழுது அவர்கள் அனுபவித்து வரும் திட்டங்கள்.

 

இந்தியாவிலும் அமெரிக்காவை அப்படியே தரவிறக்கம் செய்கிறார்கள். அதன் விளைவு தான் எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிறார்கள். மோடி தங்களுடைய நெருங்கிய முதலாளி நண்பர்களுக்கு, நாட்டில் உள்ள பொதுச்சொத்துக்களை குறைவான விலைக்கோ, குத்தகை என்ற பெயரிலோ அள்ளித்தந்து கொண்டே இருக்கிறார்.  இந்தப் படத்தில் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் போலவே வருங்காலங்களில் நாமும் நிச்சயம் அல்லல்படுவோம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

 

மற்றபடி, டென்சில் வாசிங்டன் உட்பட அத்தனை நடிகர்களும் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார்கள்.  எந்த ஓடிடி தளத்திலும் இல்லை. யூடியூப்பில் சப் டைட்டில் இல்லாமல் இருக்கிறது. பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: