> குருத்து: June 2023

June 26, 2023

Lift prank – சின்ன சின்னதாய் குறும்பு செய்து கலக்குகிறார்கள்!


இந்திவாலா குழு ஒன்று ஒரு லிப்டிற்குள் பயணிக்கும் பொது சனங்களை குறைந்த நேரத்தில் குறும்பு (Prank) செய்கிறார்கள். ஒரு லிப்டிற்குள் என்னென்ன சாத்தியமோ எல்லா வழிகளிலும் முயன்று இருக்கிறார்கள்.


லிப்ட்டிற்கு வரும் அந்த குட்டிப்பெண் தன் கையில் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வைத்திருக்கிறது. தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு எடுத்துக்க சொல்லி தருகிறது. எடுக்கவில்லை என்றால், உங்களை வற்புறுத்துகிறது. அந்த குழுவில் உள்ளவர்கள் சாப்பிடும் பொழுது அமைதியாய் இருக்கும் குழந்தை, நீங்கள் அந்த ஒற்றைச் சிப்ஸை வாயில் போட்டதும் அழ ஆரம்பிக்கிறது. சுற்றி உள்ளவர்கள் “நீங்க நிறைய எடுத்துட்டீங்களா! அதை உடனேயே சாப்பிட்டீங்களா!” என கேள்விகளுக்கு மேல் கேள்விகளை இயல்பாக கேட்கிறார்கள். நீங்கள் திரு திருவென முழிக்கிறீர்கள். அவ்வளவு தான் முடிந்தது.
🙂

நீங்கள் லிப்டிற்குள் இருக்கிறீர்கள். அதே குட்டிப்பெண் உள்ளே நுழைகிறது. அடுத்தடுத்து உள்ளே வருபவர்கள் மிகுந்த மரியாதையுடன் அந்த குட்டிப்பெண்ணுக்கு வணக்கம் வைக்கிறார்கள். யாரோ பெரிய ஆள் என உங்களுக்கு எண்ணம் தோன்றுகிறது. எதுக்குப் பிரச்சனை! நாமளும் ஒரு வணக்கம் வைத்து விடுவோம் என நீங்களும் வணக்கம் வைக்கிறீர்கள். அவர்கள் மெல்ல புன்னகைக்கிறார்கள். அவ்வளவு தான். 🙂

நீங்கள் ஏதும் செய்யாமல் சும்மா லிப்டிற்குள் இருக்கிறீர்கள். ஒரே நேரத்தில் இல்லாமல், அடுத்தடுத்த மாடியில் உள்ளே வருபவர்கள் சம்பந்தமே இல்லாமல் உங்களை முறைத்துப் பார்க்கிறார்கள். உங்களுக்குள் சின்ன பதட்டம் வருகிறது. நம்மளைத் தான் பார்க்கிறார்களா! என திரும்ப திரும்ப சந்தேகமாக பார்க்கிறீர்கள் உங்கள் மாடி வந்ததும், நீங்கள் இறங்கி போய்விடுகிறீர்கள். அவ்வளவு தான். 🙂

குறும்பு (Prank) என சமூக வலைத்தளங்களில் சில தவிர்க்க முடியாமல் கண்ணில்படுகிறது. இவர்கள் குறும்பு செய்கிறேன் என சம்பந்தப்பட்டவர்களையும், பார்க்கும் நம்மையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடுகிறார்கள்.

வாய்ப்பிருந்தால், யூடியூப்பில் lift prank என தேடிப்பாருங்கள்.

"டாடி மம்மி வீட்டில் இல்லை"


படத்தின் நாயகி அவள். சிறுவயதில் அரிய நோயால் நோய்வாய்ப்படுகிறாள். அவள் நோய்க்கு மருந்து இல்லை. வாழும் வரை வாழட்டும் என மருத்துவம் கைவிரித்துவிடுகிறது. அவளுக்கோ வாழ மிகவும் விருப்பம். ஆனால் கல்லூரியில் படிக்கும் பொழுது வாழ்வு தீர்ந்துவிடுகிறது. இறந்துவிடுகிறாள். வாழ்வின் கடைசி துளிவரை மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.


அவளுக்காக அவள் படித்த பள்ளியில் அஞ்சலி நிகழ்வு நடைபெறுகிறது. அவள் குறித்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரு சின்ன பையன் "பிடித்த அக்கா அவள். ஒருமுறை ஆசிரியர் ஒருவர் என்னைத் திட்டிவிட்டார். நான் தனியாக அழுதுகொண்டிருந்தேன். அப்பொழுது அந்த அக்காத்தான் என்னைத் தேற்றி, பிறகு இந்த பாடலை எனக்குச் சொல்லி தந்தார்" என சொல்லிவிட்டு குதூகலமான உடல் மொழியுடன் பாடத்துவங்குகிறான்.

"டாடி மம்மி வீட்டில் இல்லை!
தடை போட யாரும் இல்லை!"

இறுக்கமான சூழல் கரைந்து போய், குழுமியிருந்த பள்ளிப் பிள்ளைகள் பலரும் சிரிக்கிறார்கள். ஒரு ஆசிரியர் பதறிப்போய் அந்தப் பையனின் பாடலை நிறுத்த தலைப்படுகிறார். அவள் காற்றில் கரைந்த பிறகும், அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டாள்.
- koode” (2018) மலையாளப் படத்தில்!

June 22, 2023

வதந்தி – வெப் சீரிஸ் (2022)


வந்த புதிதில் இதன் விமர்சனங்களை படித்துவிட்டு, பார்க்க நினைத்த தொடர். இப்பொழுது தான் பார்க்க முடிந்தது.  இடையிடையே கொஞ்சம் தொய்வு இருந்தாலும், இறுதிவரை நம்மை அழைத்து சென்றது!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கிறது கதை.  வெலோனிகா என்ற இளம்பெண் கொலை செய்யப்படுகிறார்.  விசாரணை துவங்குகிறது. பிறகு தணிந்துவிடுகிறது.  மதுரை உயர்நீதிமன்றம் இந்த கொலை வழக்கை விசாரிக்க (suo moto) உத்தரவிட, உதவி ஆய்வாளரை நியமிக்கிறார்கள்.

 

வெலோனிகா கல்லூரி படித்து வருகிறார். அவருடைய அம்மா, அங்கு ஒரு மேன்சனை நடத்தி வருகிறார்.  அப்பா சின்ன வயதிலேயே இறந்துவிடுகிறார்.  அம்மாவிற்கும், பெண்ணுக்கும் புரிதல் பிரச்சனை இருக்கிறது. ஆகையால் சின்ன சின்ன சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

 

வெலோனிகாவை மேன்சனை நடத்த உதவும் ஒரு பையனுக்கு திருமணம் முடித்துவிடவேண்டும் என அவர் அம்மா விரும்புகிறார். ஆனால், வெலோனிகாவிற்கு பிடிக்கவில்லை.

 


இந்த சமயத்தில் கிளம்பி செல்லும் வெலோனிகா கொலை செய்யப்படுகிறார்.  அவரை கொன்றது யார் என மெல்ல மெல்ல துப்பறிகிறார்கள். இறுதியில் கொலையாளியை கண்டுப்பிடித்தார்களா என்பதை ஒரு நல்ல செய்தியுடன் முடித்திருக்கிறார்கள்.

 

***

 

செத்தது இளம்பெண் என்றால், கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் வாயில் வந்தபடி பேசுவது, அதை பரப்புவது என்பதை அழுத்தமாக கண்டித்திருக்கிறார்கள்.

 

இதில் மக்களின் மனநிலை ஒரு சிக்கலாக இருந்தாலும்,  பத்திரிக்கைகள், ஊடகங்களுக்கு அதை மாற்றுவதற்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பை கைவிட்டு விட்டு,  ”மக்கள் விரும்புகிறார்கள்” என்ற போர்வையில் இவர்கள் கொட்டும் குப்பை பெரிது.  இவர்களை மன்னிக்கவே முடியாது. மன்னிக்கவும் கூடாது.

 

ஒரு கொலை வழக்கு. அதை இயல்பான அக்கறையுடன் விசாரிக்காதது.  அதை நீதிமன்றம் கையில் எடுத்ததும், போலீஸ் துறை எப்படியாவது வழக்கை முடித்துவிடவேண்டும் என்ற அவசரம், அதில் செத்த பெண்ணையே  களங்கப்படுத்தி முடிப்பது தான் கொடூரம்.   படத்தில் அந்த  உதவி ஆய்வாளர் விடாப்பிடியாக விசாரிப்பது எல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை.  அதனால் தான் அதை அவருடைய கடந்த கால வாழ்வோடு தொடர்புப்படுத்தி சிறப்பாக்கி  சொல்லியிருப்பார்கள்.

 


கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவின் பசுமை உள்ள இடம். அந்த பசுமையை அருமையாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.  எந்த ஊர் என்றாலும், மதுரை தமிழ் பேசுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதை உடைத்து, கன்னியாகுமரி தமிழை படம் பேசுகிறது.   சில கதைகள் படிக்கும் பொழுது, வட்டார வழக்கில் பல வார்த்தைகள் புரியாது. அந்த சிக்கலும் இல்லாமலும் சரி செய்திருக்கிறார்கள்.

 

படத்தில் உதவி ஆய்வாளராக நடித்த எஸ். ஜே. சூர்யா, புதுமுக நாயகியாக சஞ்சனா, லைலா, விவேக் பிரசன்னா என பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். லீலை, கொலைகாரன் என படங்களை எடுத்த ஆண்ட்ரூ லூயிஸ் தான் சீரிசின் இயக்குநர். சிறப்பாக இயக்கியிருக்கிறார். இயக்குநர்கள் புஷ்கர்காயத்தி தயாரித்திருக்கிறார்கள்.

 

வெப் சீரிஸ் பார்ப்பதில் எப்பொழுதுமே தயக்கம் இருக்கிறது.  துவக்கத்தில் சுவாரசியப்படுத்தி, பிறகு இழு இழு என சீரியல் போல் இழுத்துவிடுகிறார்கள்.  இந்த சீரிஸ் கூட எட்டு என்பதை ஐந்து என எடுத்திருந்தால், கூர்மையாக இருந்திருக்கும்.  ஊரே இந்த வெப் சீரிஸ் நன்றாக இருக்கிறது என பார் என சொன்னால் தான் பார்ப்பது என முடிவில் இருக்கிறேன்.

 

இந்த சீரிஸ் நன்றாக இருக்கிறது. அமேசான் பிரைமில் இருக்கிறது.  பாருங்கள்.

The Flash (2023)


Flash – (DCயினுடைய நாயகர்களில் ஒருவன்.) மின்னல் எதைச்சையாக தாக்கியதால், கிடைத்த ஆற்றலால், மின்னல் வேகத்தில் செயல்படக்கூடியவன். இப்பொழுது ஒரு ஆய்வகத்தில் வேலை செய்து வருகிறான்.


தனியாக வாழ்வதால், பழைய நினைவுகள் அவனை துரத்திக்கொண்டே இருக்கின்றன. அவன் சிறுவனாய் இருக்கும் பொழுது அம்மாவை யாரோ ஒரு திருடன் கத்தியால் குத்திவிட்டு ஓடிப்போக, அப்பா அங்கே வர, அவர் மீது கொலைப்பழி விழுகிறது. ஆகையால் சிறையில் இருக்கிறார். அவரை அந்த வழக்கில் இருந்து மீட்க முயன்றாலும் முடியவில்லை. அம்மா, அப்பா இருவரின் இழப்பும் அவனை எப்பொழுதும் வாட்டுகிறது.

வெறுத்துப்போய் கண் மண் தெரியாமல் ஓடும் பொழுது, அவனுடைய சக்தியால் முந்தைய காலத்துக்கு சிறிது தூரம் பயணிக்கிறான். இதைப் பற்றி பேட் மேனிடம் சொல்லும் பொழுது, ”இழப்பை ஏற்றுக்கொள். பழையதை மாற்ற முயலாதே! ஏகப்பட்ட குழப்பங்கள் வந்துவிடும்” என எச்சரிக்கிறார். ஆனால், அவன் கேட்கவில்லை. காலத்தின் வழியே பயணம் செய்து, அம்மாவை காப்பாற்றிவிடலாம் என சிந்திக்கிறான். அதன் பின்விளைவுகள் பற்றி அவன் சிந்திக்கிற நிலைமையில் அவனில்லை.

கால வழிப்பயணத்தில் போய், அவன் செய்த மாற்றங்களால், அவன் அம்மாவை காப்பாற்றினா? அதனால் என்னென்ன குழப்பங்கள் வந்தன? என்பதை உணர்வுப்பூர்வமாகவும், சுவாரசியமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

***

Flash ஒரு சுவாரசியமான பாத்திரம். அதை வைத்து, இந்த படத்தில் மல்டி யுனிவர்ஸை தொட்டு இருக்கிறார்கள். அதை சிக்கல் இல்லாமல், சுவாரசியமாக புரிய வைத்திருப்பது நல்ல விசயம்.

கால வழிப்பயணத்தில் இவன் செய்த மாற்றங்களால், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேட் மேன் வெவ்வேறு ஆளாக மாறுவது சுவாரசியம். என்ன தான் மாற்ற முயன்றாலும், பெரிய விளைவை உருவாக்க முடியவில்லை. வாழ்வு தந்த காயத்தின் தழும்புகளை எதிர்கொள்வதால், இப்பொழுதுள்ள நம் ஆளுமையே உருவாகிறது. அந்த தழும்பிற்கான காரணங்களை மாற்றினால், மொத்த வாழ்வும் மாறிவிடும் என்பதை மறந்துபோகிறோம். நம் பார்வையை எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது தான் சரியானது என்கிற பாடத்தை சொல்லியிருக்கிறார்கள்.

பொதுவாக கொரியன் படங்களில் உணர்ச்சியை சரியாக பொருத்திவிடுவார்கள். இப்பொழுது ஹாலிவுட் படங்களிலும் அதை சரியாக செய்ய முயல்கிறார்கள்.

திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழிலும் வெளியிட்டிருக்கிறார்கள். பாருங்கள்.

June 18, 2023

புதிதாக எழுதுபவர்கள் கவனத்துக்கு:


 1. சமூகத்தில் தான் காணும் காட்சிகளை, அனுபவித்த அனுபவங்களை யாரிடமாவது சொல்லியே தீர வேண்டும் என்கிற ஆவலும் அதற்கான களமும் அமையும் போது எல்லோராலும் எழுத முடியும். எழுத வேண்டும்.


2. அப்படி எழுத வேண்டும் என்ற நெருக்கடி உருவாகி அதைத் தைரியமாக வெளிப்படுத்தும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்; வரவேற்புகள்.


3. பதின் பருவத்தில் ஏராளமான பேர் கவிதைகள், கதைகலள் எழுதி இருப்பார்கள். சில படைப்புகள் பிரசுரம் கூட ஆகியிருக்கலாம். அதன் பிறகு அவர்களை வாழ்க்கைச் சக்கரம் எங்கெங்கோ இழுத்துச் சென்று அலைக்கழித்திருக்கும். ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் அந்த இலக்கிய தாகம் உருவாகி அலைக்கழிக்கும்.  அந்தப் பதின் பருவத்தில் அவர்கள் மனதில் எது இலக்கியம் என்று பதிந்திருந்ததோ அதையே இப்போதும் எழுதக் கூடாது. 


4. சமூக ஊடகங்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய வெளிப்பாட்டு ஜனநாயக வெளியை  உருவாக்கி இருக்கிறது. அதிலிருந்து புதிது புதிதாக ஏராளமான எழுத்தாளர்கள் உருவாகி இருப்பது வரவேற்புக்குரிய விஷயம். ஆனால் சமூக ஊடகங்களில் எழுதியதை நூல் வடிவாக்கும் பொழுது எச்சரிக்கை தேவை.


5. முகநூலில் எதை எழுதினாலும் பின்னூட்டத்தில், 'நீங்கள் இதைப் புத்தகமாகப் போடலாமே..' என்று சொல்பவர்கள், புதிதாக எழுதுபவர்களின் ஆசையைத் தூண்டுகிறார்கள். அதற்கு காரணம் பின்னூட்டமிடும் நண்பர்கள் எழுதுபவர்களின் நண்பர்களாக இருக்கலாம் அல்லது பெரிய வாசிப்பாளர்களாக இல்லாமல் இருக்கலாம் அல்லது வாசிப்பே இல்லாதவர்களாகவும் இருக்கலாம். அவர்களுக்குத்தான் எல்லாமே புதிதாகத் தெரியும். அவர்கள் தங்களுக்குப் புதிதாகத் தெரிந்ததை மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்றுதான் அந்தப் பின்னூட்டத்தை எழுதுகிறார்கள். ஆனால் எழுத்தாளர் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.


6. அந்தத் தூண்டிலில் சிக்கி விடக்கூடாது முகநூல் பதிவுகளில் விழும் லைக்குகளோ கமெண்ட்களோ அந்த அந்த நேரத்தில் அந்த அந்த நாளிற்கு உரியவை. பிறகு நாமே நாம் எழுதியதைச் சிறிது காலம் கழித்து வாசித்துப் பார்த்தால் அதில் என்ன மிஞ்சி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்?


7. எந்தத் துறை சார்ந்தும் எழுதலாம். கதை, கவிதை, நாவல், கட்டுரை, அனுபவம், வரலாறு, அறிவியல், உளவியல் என்று எந்தத் துறை சார்ந்தும் நீங்கள் எழுதலாம். ஆனால் அந்தத் துறையின் தற்காலம் குறித்துக் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் நம்முடைய உழைப்பு காலாவதியானதாகிவிடும்.


8. நம்முடைய படைப்புகளை எப்போதும் எல்லோரும் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு எழுத்தாளன் எதிர்பார்க்கக் கூடாது. மாற்றுக் கருத்துகளை, விமர்சனங்களை, நிராகரிப்புகளை எதிர்கொள்ளவும் பழக வேண்டும். 


9. புத்தகம் போடுவதற்கு முன்னால், நமக்கு நம்பிக்கையான சில நண்பர்களிடம் கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லும் கருத்துகளைக் கவனமாகக் கேட்டு மீண்டும் படைப்பைச் செம்மைப்படுத்த வேண்டும். 


டால்ஸ்டாய் அவருடைய 'போரும் அமைதியும்' நாவலை மூன்று முறை திருத்தி எழுதியதாகச் சொல்வார்கள். அந்த நாவல் ஆயிரம் பக்கங்களைக் கொண்டது, என்றால் அவருக்குத் தன் எழுத்தின் மீதும் இலக்கியத்தின் மீதும் வாசகர்களின் மீதும் இருந்த ஈடுபாட்டைப் புரிந்து கொள்ளலாம்.


10. புத்தகமாகப் போடுவது என்று முடிவெடுத்து விட்டால் முடிந்த வரை முன்னுரை இல்லாமலோ அல்லது ஒரே ஒரு முன்னுரையுடனோ வெளியிடலாம். நான்கு அணிந்துரைகள், 5 வாழ்த்துரைகள், இரண்டு முன்னுரைகள், ஒரு என்னுரை என்று அந்தப் புத்தகத்தை ஆண்டு மலரைப் போல மாற்றி விடக் கூடாது.


11.  ஒரு படைப்பு முழுவதும் தன்னுடைய பலத்திலேயே தான் நிற்க வேண்டும். வாழ்த்துரை, அணிந்துரை, முன்னுரை என்று முட்டுக் கொடுப்பதால் மட்டும் நின்று விடாது.


12. அப்படி முன்னுரை அவசியம் என்றால் அதற்குப் பொருத்தமான எழுத்தாளரை அணுகிக் கேட்க வேண்டும். அப்படி கேட்கும்போது அந்த எழுத்தாளரின் படைப்புகளை நாம் வாசித்திருக்க வேண்டும். அவர் இந்தப் புத்தகத்திற்குப் பொருத்தமானவர் தானா என்பதையும் முதலிலேயே தெரிந்து கொள்ள வேண்டும்.


13. எழுத்து என்பது வாசகருடைய மனதிலோ, அறிவிலோ வேலை செய்து அவர்களுக்கு ஞானமும் வெளிச்சமும் இதுவரை அவர்கள் அறிந்ததிலிருந்து கூடுதலாக அறிய வைக்கிற ஒரு மந்திரச் சாவி. அந்தப் பொறுப்புணர்ச்சியும் கடின உழைப்பும் எழுத்தாளர்களின் அடிப்படைத் தேவை.


14. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்னமும் இளமை குன்றாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய தமிழ் இலக்கியப் புத்தகங்களில் நம்முடைய எழுத்தும் ஒரு பக்கமாகச் சேர்ந்து மிளிர வேண்டும் என்கிற அர்ப்பணிப்பு வேண்டும்.


15. 'நான் என் ஆசைக்கு எழுதி வெளியிடுகிறேன்' என்று புத்தகம் எழுதி வெளியிடுகிற எழுத்தாளர்கள், இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்; வரவேற்புகள்.


Udhaya Sankar

Boston strangler (2013) 13 கொடூர கொலைகள்! கொலைகாரன் யார்?


 ”வெளியே பல ஆல்பர்ட் டிசால்வோஸ் உலாவுகிறார்கள். உங்கள் பாதுகாப்பான சிறிய உலகம் என்பது வெறும் மாயை. ஆண்கள் பெண்களைக் கொல்கிறார்கள். இது ஆல்பர்ட்டிலிருந்து மட்டும் தொடங்கவில்லை. நிச்சயமாக நரகம் அவனுடன் முடிவடையாது.”

- படத்திலிருந்து…

***

1964. அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை ஒன்றில் நாயகி பத்திரிக்கையாளராக வேலை செய்கிறார். அந்த கால கட்டத்தில், ஒரு அலுவல் வேலை போல, பெண் பத்திரிக்கையாளர்களுக்கு சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் ஒதுக்குகிறார்கள். நாயகிக்கு மூன்று குழந்தைகள், கணவனுடன் வாழ்ந்தாலும், புதிதாக சாதிக்கவேண்டும் என நினைக்கிறார்.

பாஸ்டன் நகரத்தில் தனித்து வாழும் மூன்று வயதான பெண்கள் கழுத்தை நெறித்து கொலை செய்யப்படுகிறார்கள். மூன்றும் சம்பந்தமில்லாமல் தனித்தனி செய்தியாக வெளியாகிறது. மூன்று கொலைகளின் ஒற்றுமையை கவனித்த நாயகி, இதுப் பற்றி தான் எழுதுவதாக அனுமதி கேட்டால், மறுக்கிறார்கள். வழக்கமான வேலைகளை செய்துகொண்டே கூடுதலாக இந்த வழக்குகளையும் தொடர்கிறேன் என சொல்கிறாள். ஏற்றுக்கொள்கிறார்கள்.

அசுவாரசியமான அந்த கொலை வழக்குகள், அடுத்து ஒரு கொலை என அதே போல நடக்க, இவள் எல்லாவற்றையும் தொடர்புப்படுத்தி எழுதிக்கொடுத்த செய்தி தலைப்பு செய்தியாக வர பர பரவென நகரத்தில் மக்களிடத்தில் பற்றிக்கொள்கிறது. தனியாக வாழும் பெண்கள் எல்லாம் பதறிப்போகிறார்கள். போலீசை குடைந்து கேள்வி கேட்கிறார்கள்.

வயதான பெண்கள் என ஆரம்பித்த கொலைகள், பிறகு இளம்பெண்களும் கொலை செய்யப்படுகிறார்கள். இன்னும் பரபரப்பாகிவிடுகிறது.

கொலைகளை யார் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? என்ற உண்மைகளை கண்டறிந்தார்களா என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்தப் படம் உண்மைச் சம்பவங்களை கொண்டு கதை எழுதப்பட்டுள்ளது. அதனால் அதற்குரிய தன்மைகளுடன் தான் படமும் இருக்கிறது.

தொடர்கொலைகள். ஒரு சைக்கோ கொலைகாரனோடு முடிந்துவிட்டால் பரவாயில்லை. Boston Strangler என்பது ஒரு கட்டதில் Boston stranglers என மாறும் பொழுது தான் அதிர்ச்சி. இந்த வசனத்தை கூர்ந்து கவனியுங்கள். இதன் தீவிரம் புரியும். மேலும் சொன்னால், ஸ்பாய்லராகிவிடும். ஆகையால்
நிறுத்திக்கொள்ளலாம்.

”வெளியே பல ஆல்பர்ட் டிசால்வோஸ் உலாவுகிறார்கள். உங்கள் பாதுகாப்பான சிறிய உலகம் என்பது வெறும் மாயை. ஆண்கள் பெண்களைக் கொல்கிறார்கள். இது ஆல்பர்ட்டிலிருந்து மட்டும் தொடங்கவில்லை. நிச்சயமாக நரகம் அவனுடன் முடிவடையாது.”

அதே போல பெண்கள் வெளியே வேலைக்கு வந்துவிட்டாலும், அவர்களை இன்னும் குடும்பம் பின்னுக்கு இழுத்துக்கொண்டு தான் இருக்கிறது. வேலை என்பதைத் தாண்டி, இத்தனைப் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்களே என்கிற ஆதங்கம் நாயகியைத் தொற்றிக்கொள்ளும். முதலில் ஒத்துழைத்த கணவன், பிறகு அவள் தொடர்ச்சியாக பகலும், இரவு, வெளியூர் என அலையும் பொழுது, சிக்கலாவான். உண்மையில், பிறகு பிரிந்துவிட்டிருக்கிறார்கள்.

காதல் வேறு. குடும்பம் வேறு. சமூகத்தில் குடும்பம் என்பது ஒரு நிறுவனம். அது ஒரு ஒழுங்கை கோரும். குடும்பத்தில் வாழும் நபர்கள் அந்த ஒழுங்கை மீறும் பொழுது, சிக்கலாகும். முதலாளித்துவம் தன் லாபத்திற்காக பெண்களை வீட்டிலிருந்து வெளியே தன் ஊழியர்களாக கொண்டு வந்துவிட்டது. ஆனால் குடும்பம் இன்னும் பழைய முறையிலிருந்து வெளியே வருவதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்து தரவில்லை. ஆகையால் ஏகப்பட்ட குழப்பங்கள். குழந்தைகளை இலவசமாகவோ, நியாயமான ஒரு விலையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான காப்பகங்களை உருவாக்கித் தரவில்லை. வீட்டு பராமரிப்பு, சமையல் வேலைகளிலிருந்தும் விடுவிக்கவில்லை. சமூகத்தில் இந்த சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல், புதிய தலைமுறையில் ஒரு பிரிவினர் ”குடும்பம்” என்ற நிறுவனத்தையே எதிர்க்கிறார்கள். சமீபத்தில் சீன அரசு, இளந்தலைமுறையினர் குடும்பம், குழந்தைகள் என வாழ உற்சாகப்படுத்தி நிறைய சலுகைகளை அறிவித்தது நினைவுக்கு வருகிறது.

அமெரிக்க ஹாலிவுட் படங்கள் அமெரிக்காவில் தொலைந்து போன ”குடும்பம்”த்தை மீட்டெடுக்க, படாத பாடு படுகிறது. ஊருக்கொரு காதலி வைத்திருக்கும் ஜேம்ஸ்பாண்ட், கடைசியாய் வந்த படத்தில் தன் ”குடும்பத்திற்காக” தற்கொலை செய்துகொள்கிறார். மார்வல் படங்களில் வரும் தன் திறன்களால் புகழ்பெற்ற Wanda கடைசியாய் வந்த Doctor Strange in the Multiverse of Madness படத்தில் இழந்த தன் குடும்பத்தை மீட்க எந்த லெவலுக்கும் கீழே இறங்கி வேலை செய்கிறார்.

குடும்பத்தை ”காப்பாற்ற” நினைக்கும் முதலாளித்துவம் தோற்றுத்தான் போகும். ஏனெனில் அது நேர்மையாக மக்களின் நலனிலிருந்து ஒருபோதும் சிந்திக்காது. அதற்கு இலக்கு லாபம். இன்னும் லாபம். மேலும் லாபம் மட்டுமே! உலகமே அழிந்தாலும் அதற்கு கவலையில்லை. நாம் தாம் முதலாளித்துவ மாயைகளிலிருந்து விடுபடவேண்டும். மாற்று சமூகம் குறித்து சிந்திக்கவேண்டும்.

படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்ற தொழில்நுட்ப குழுக்களான ஒளிப்பதிவு, அந்த காலக்கட்டத்தை நம் முன் கொண்டு வந்திருக்கிற கலை இயக்குநர் என சிறப்பு. The Boston Stranger என 1968லேயே ஒரு படம் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்பொழுது மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஹாட் ஸ்டாரில் இங்கிலீஷ் சப் டைட்டில்களுடன் கிடைக்கிறது.

June 12, 2023

கண்புரை (Cataract) சிகிச்சை


சில நாட்களாக சென்னை மங்கலாகி கொண்டே வந்தது. சுற்றுப்புற சூழல் அவ்வளவு கெட்டுப்போய் கிடக்கிறது என மிகவும் வருத்தப்பட்டேன். ஒருநாள் லேசான சந்தேகம் வந்து, இடதுகண்ணை மூடிவிட்டு வலது கண்ணால் மட்டும் பார்த்த பொழுது தான் வலது கண்ணுக்கு ஏதோ பிரச்சனையாகிவிட்டது என மங்கலாக புரிந்தது.


மருத்துவரைப் பார்த்தேன். கண்புரை வந்துவிட்டது. இன்னும் சில மாதங்கள் வரை வளரும். பிறகு சிகிச்சை செய்துகொள்ளுங்கள் இப்பொழுதே கூட நீங்கள் விரும்பினால் சிகிச்சை செய்துகொள்ளலாம் என பரிந்துரைத்தார். ”கண்புரை குறைபாடு எல்லாம் வயதானவர்களுக்கு தானே வரும்! இவ்வளவு சின்ன வயதில் ஏன் எனக்கு டாக்டர்?” என்றேன். இப்பொழுதெல்லாம் பிறந்த குழந்தைக்கே புரை வந்துவிடுகிறது. அதனால் கவலைப்படாதீர்கள்! என ஆறுதல் சொன்னார்.

கண்புரை என்றால், கண்ணில் இயற்கையாக இருந்த லென்ஸ் பழுதடைந்துவிட்டது. அதை அகற்றிவிட்டு, செயற்கை லென்ஸ் வைத்துக்கொள்ளவேண்டியது தான்! இயற்கை லென்ஸ் எவ்வளவு நாட்கள் வருகிறதோ! அதுவரை பார்த்துக்கொள்ளலாம். பிறகு மாற்றிக்கொள்ளலாம் என முடிவு செய்தேன்.

இதற்கிடையில் கட்டணம், சிகிச்சை எல்லாம் விசாரித்தால்… மருத்துவமனைக்கு தகுந்த மாதிரி கட்டணம் சொன்னார்கள். அதே போல கண்ணில் வைக்கிற லென்ஸ்க்கு தகுந்தமாதிரி விலையும் இருந்தது. மூன்று வகையான லென்ஸ்கள் இருக்கின்றன. என்னுடைய தொழில். எப்பொழுதும் கணிப்பொறி, படிப்பு வேலைகள் என்பதால் அதற்கு பொருத்தமான இறக்குமதி (import) செய்த ஒரு லென்ஸை தேர்ந்தெடுத்தேன். கட்டணத்தை விட லென்ஸின் விலை அதிகமாக இருந்தது.

ஒப்பீட்டளவில் சென்னையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் கட்டணம் குறைவாக இருந்தது. அதனால் அங்கேயே செய்துகொள்ளலாம் என முடிவு செய்துவிட்டேன். சர்க்கரை, ரத்த அழுத்தம் எல்லாம் இயல்பாக இருந்ததால், தாமதிக்காமல் தேதியை குறித்துக்கொடுத்தார்கள்.

காலையில் ஏழு மணியளவில் போனோம். மதியம் 12 மணிக்கு எல்லாம் வீடு வந்து சேர்ந்துவிட்டோம். சிகிச்சைக்கான மொத்த நேரம் 15 நிமிடம் தான். மற்றபடி, பரிசோதனைகளுக்கான நேரம் தான் கூடுதலாக ஆனது. கொஞ்சம் பதட்டம் இருந்தது. இருந்தாலும் சமாளித்துவிட்டேன். என்னுடன் சிகிச்சை செய்துகொண்டவர்கள் பெரும்பாலோர் என்னை விட மூத்தவர்கள் தான். இரண்டு பேர் மட்டுமே என்னை விட இளையவர்கள்.

மூன்றுவாரம் ஓய்வில் இருந்தேன். கண்ணை பயன்படுத்தாமல் இயல்பு வாழ்வில் எதையும் செய்யமுடியவில்லை. படிக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை. வெளியே போக முடியவில்லை. ஆடியோ வடிவில் செய்திகள் கேட்டேன். சில அரசியல் உரைகள் கேட்டேன். வீட்டில் கேட்டால், ”நான் இயல்பாக என்ன செய்வேனோ எல்லாமே செய்தேன்.” என அபாண்டமாய் புகார் சொல்வார்கள்.

மூன்று வாரம். வழக்கமாக செய்யும் அலுவலக வேலைகளை சமாளிப்பது தான் கொஞ்சம் சவாலாக இருந்தது. கண் சிகிச்சை என்பதால், புரிந்துகொண்டு, ஒத்துழைத்தார்கள். சில வேலைகளை இணையத்தின் உதவியுடன் செய்து முடித்தேன். கேள்விப்பட்ட சொந்தங்கள், நண்பர்கள், அலுவலக நண்பர்கள், தோழர்கள் எல்லோரும் நலம் விசாரித்தார்கள்.

மூன்றாவது வார முடிவில், கண்ணை பரிசோதித்த பொழுது, கண் நன்றாக இருந்தது. கண்களின் தன்மைக்கேற்ப புதிய கண்ணாடி எழுதித்தந்தார்கள்.

இப்பொழுது சென்னை முன்பை விட பளிச்சென தெரிகிறது. வலது கண் சிகிச்சையின் பொழுது, இடது கண்ணையும் சோதித்த பொழுது, அந்த கண்ணிலும் புரை துவங்கியிருப்பதாக சொன்னார்கள். ஆறு மாதம் தாங்கும். இடது கண்ணிலும் சிகிச்சை செய்துகொண்டால், இன்னும் சென்னை பளிச்சென தெரியும்.

இந்த செயற்கை லென்ஸ் எவ்வளவு ஆண்டுகள் வரும் என கேட்ட பொழுது, 30 ஆண்டுகள் வரை அதிகப்பட்சம் வரும் என்றார்கள். நல்லது. புதிய லென்ஸ். புதிய உலகு. உற்சாகமாய் செயல்படுவோம்.

GPAY : ”சிரமத்திற்கு வருந்துகிறோம்”


கடந்த வாரம் எங்கள் பகுதியில் ஒரு செருப்பு வாங்கப் போனேன். பணத்தை அனுப்பும்பொழுது, GPay மூலமாக அனுப்பப் பார்த்தேன். Payment failed என வந்துவிட்டது. வங்கியிலிருந்து பணம் போனதற்கான குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை. ஆகையால் என் வங்கி டெபிட் அட்டையைக் கொடுத்து, பணத்தைச் செலுத்திவிட்டு வந்து விட்டேன்.


இன்று காலையில் வங்கிக் கணக்கைச் சோதிக்கும் பொழுது, Gpay யும் அவருக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறது. எங்கள் பகுதியில் உள்ள கடை என்பதால், நேரில் போய்க் கேட்டால், ”வங்கிக் கணக்கைச் சரி பார்த்துவிட்டுச் சொல்கிறேன்” என்றார். பிறகு, மூன்று மணி நேரம் எடுத்துக் கொண்டு, சோதித்துவிட்டு, ”எனக்கு ஒருமுறை தான் பணம் வந்துள்ளது” எனச் சொல்லிவிட்டார்.

இப்பொழுது Gpay வாடிக்கையாளர் மையத்துக்கு போன் செய்தால், ”உங்கள் வங்கியிடம் போய்ப் புகார் அளியுங்கள். இல்லையெனில், அடுத்தடுத்து, இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. அங்கு போய்ப் புகார் அளியுங்கள்” என்கிறார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ”Payment failed என குறுஞ்செய்தி வந்த பிறகு தான், நான் பணம் செலுத்தினேன். அதற்குப் பிறகு ஏன் நீங்கள் பணத்தைச் செலுத்தினீர்கள். இனி இந்தப் பிரச்சனை தீருகிற வரை Gpay யை பயன்படுத்த பெரிய தயக்கம் வந்துவிடுகிறது. நான் சொல்வது சரியா? தவறா? சொல்லுங்கள்” எனக் கேட்டால், “நீங்கள் சொல்வது சரி தான். உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்” எனச் சொல்கிறார்.

இனி வங்கிக்குப் போய், கேட்டு… எப்ப அந்தப் பணம் வரப் போகுதுன்னு தெரியல! சோகம்.

ஏற்கனவே ரூ. 3000க்கு மேலே பெரிய பணமாக இருந்தால், ஜி பேயில் அனுப்பக்கூடாதுன்னு முடிவுல இருக்கிறேன். (அவ்வளவு தான் நமக்குக் கட்டுப்படியாகும்!) இப்ப இந்தப் பிரச்சனை வேற! 🙁

நீங்கள் இந்தப் பிரச்சனையை எதிர் கொண்டிருக்கிறீர்களா? அனுபவம் இருந்தால் சொல்லுங்கள்.

June 11, 2023

போர் தொழில் (2023) அருமையான திரில்லர்


திருச்சியைச் சுற்றி இளம்பெண்கள் கொடூரமாக வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியை பிடிக்க ஒரு சிறப்பு குழுவை நியமிக்கிறார்கள். கறாரான, மிக இறுக்கமான ஒரு மூத்த அதிகாரியையும், அவருக்கு உதவியாக ஒரு இளம் அதிகாரியையும், தொழில்நுட்ப உதவிக்கு இளம் பெண் அதிகாரியையும் நியமிக்கிறார்கள்.


ஒரு துப்பும் இல்லாத கொலைகள். மெல்ல மெல்ல நூல் பிடித்து இருவரும் வேறு வேறு வழிகளில் குற்றவாளியை நெருங்கும் பொழுது, ஒரு சடரென திருப்பம். இறுதியில் கொலையாளியை கண்டுபிடித்தார்களா என்பதை திரில்லராக அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.

****

வெறும் கொலைகள். துப்பறிவது என்பதோடு இல்லாமல், கொலைகளுக்கு பின்னால் உள்ள உளவியல் காரணம் என்ன என்பதையும் சரியான விதத்தில் படம் முழுக்க தூவியிருக்கிறார்கள்.

அனுபவமுள்ள மூத்த அதிகாரி, கத்துக்குட்டிக்குமான இடைவெளி. புரிந்துகொள்வதின் மூலம் மெல்ல மெல்ல அந்த இடைவெளி களைவது, போலீசு துறைக்குள் இருக்கும் சின்ன சின்ன முரண் எல்லாவற்றையும் நன்றாக காட்டியிருக்கிறார்கள்.

துவக்கம் முதல் இறுதி வரை அருமையாக இருக்கும் திரில்லர் வகைகளில் தாராளமாய் இதையும் சேர்க்கலாம். மூத்த அதிகாரியாக சரத்குமார், இளம் அதிகாரியாக அசோக் செல்வன், சரத்பாபு என முக்கிய பாத்திரங்களும், துணைப் பாத்திரங்களும் அனைவருமே நன்றாக உணர்ந்து நடித்திருக்கிறார்கள். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பு. விக்னேஷ் ராஜா சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

பாடல்கள் இல்லை. சண்டைகள் இல்லை. அது இன்னும் சிறப்பு. பார்க்கவேண்டிய படம்.

இன்று தான் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஓடிடி வர இன்னும் ஒரு மாதமாகலாம்.

Munnariyippu (2014) மலையாளம்


நாயகி எந்த நிறுவனத்திலும் வேலை செய்யாமல், தனிப்பட்ட முறையில் (freelancer) எழுதக்கூடியவராக இருக்கிறார் ஒரு பத்திரிக்கையாசிரியரின் மூலமாக, ஒரு சிறைக் கண்காணிப்பாளரின் சுயசரிதை எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. அவருக்கு எழுத தெரியாது. இவர் எழுதி தரவேண்டும். இவர் எழுதினார் என குறிப்பிடமாட்டார்கள். (என்ன ஒரு அல்பத்தனம்.) அதற்கு ஒரு தொகை கொடுத்துவிடுவார்கள். இப்படி எழுதும் எழுத்தாளர்களுக்கு Ghost writer என அழைப்பார்கள்.


சிறைக் கண்காணிப்பாளரை சந்தித்து பேசுகிற பொழுது, தன் மனைவி, வீட்டில் வேலை செய்த ஒரு பெண் என இரட்டை கொலைகள் செய்து சிறைவாசம் முடிந்து, அங்கு சில எடுபிடி வேலைகள் செய்து வருகிறார் ஒருவர். ஆனால் தான் கொலை செய்யவில்லை என்கிறார்.

அவருடைய நாட்குறிப்பை வாங்கி படிக்கும் பொழுது, அவர் சுவாரசியமாக எழுதக்கூடியவராக இருக்கிறார். இதைப் பற்றி தனது துறை சார்ந்தவர்களிடம் பேசும் பொழுது, அவரை அவர் வழக்கு சேர்ந்து எழுத வைத்தால் ஒரு நல்ல பத்திரிக்கையில் வெளியிடலாம் என்கிறார்கள். இதன் வழியாக தானும் பிரபலமடையலாம் என நினைத்து, ஒரு இங்கிலீஷ் பத்திரிக்கையில், சம்பந்தபட்டவரிடம் பேசி, ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. முன்பணமும் கொடுத்துவிடுகிறார்கள்.

ஒரு வீடு எடுத்து தங்க வைத்து, அவருக்குத் தேவையானதை ஏற்பாடு செய்து தருகிறார். ஆனால் நாட்கள் நகர்ந்தாலும் அவரால் ஒரு வார்த்தை எழுத முடியவில்லை. சிறைக் கண்காணிப்பாளருக்கு எழுத ஒப்புக்கொண்டதையும் செய்து முடிக்காமல் இருக்கிறார். அவர் நெருக்குகிறார். நாட்கள் நெருங்க நெருங்க பத்திரிக்கை நெருக்குகிறது. யார் போனையும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்.

நெருக்கடிகள் தரும் கோபத்தை எல்லாம் எழுதாமல் இருக்கிறவரிடம் அவள் காண்பிக்கிறாள். பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக முடித்திருக்கிறார்கள்.

****

இந்தப் படம் ஒரு சிறுகதை. அவ்வளவு தான். ஆனால், முழு நீள திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.

எழுத்து என்பது நிறைய படிப்பது, எழுதுவது என தொடர் பயிற்சியால், ஆர்வத்தால் வருவது என்பது என் புரிதல். எல்லா நாளும் எழுதிவிட முடியாது. சிலருக்கு மாற்று கருத்து இருக்கலாம்.

அதே போல எல்லா நாளும் எழுதிவிடமுடியாது என்பதும் என் அனுபவத்தில் கண்டது. சில விசயங்கள் உலுக்கும். சர சரவென எழுதிவிடலாம். சில நாட்கள் எழுத வேண்டும் என உட்கார்ந்தால், சிக்கலாகும். எனக்கு வேறு ஒரு சிக்கலும் உண்டு. ஒரு கட்டுரை இத்தனாம் தேதிக்குள் கொடுங்கள் என்றால், எழுதுவது சிக்கலாகிவிடும். பிறகு பதட்டம் தான் வரும். ஆகையால், அந்த நேர நெருக்கடிக்குள் சிக்குவதில்லை.

மேலே சொன்னதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தில் இரண்டு கொலைகள் செய்த நபரை கொஞ்சம் கூட சந்தேகமே இல்லாமல் அந்த பெண் முழுமையாக நம்புவதும் ஒரு பிரச்சனை. அவன் நன்றாக எழுதுவதாலேயே அவன் கொலை செய்யவில்லை என்பதாகிவிடுமா என்ற சந்தேகம் வரவேயில்லை. இப்பொழுதுள்ள யூடிப்பர்கள் எதையாவது கண்டெண்டாக தேத்திவிடுகிற மனநிலை தான் அந்த பெண்ணிடத்திலும் இருக்கிறது. அது எப்பொழுதும் ஆரோக்கியற்றது தான். நிறைய சிக்கல்களை கொண்டுவந்துவிடும்.

மொத்த படத்தையும் மம்முட்டியும், அபர்ணா கோபிநாத்தும் தாங்குகிறார்கள். இவன் நல்லவனா, கெட்டவனா என்பதை கணிக்கமுடியாத தோற்றமும், நடிப்பும் நன்றாக பொருந்துகிறது. ஒளிப்பதிவாளர் வேணு கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுமிருக்கிறார்.

கதை வித்தியாசமாக இருக்கிறதே என தோன்றுபவர்கள் மட்டும் பாருங்கள். மற்றவர்களுக்கு நான் பரிந்துரைக்கவில்லை. Sun Nextல் உள்ளதாக இணையம் சொல்கிறது.

June 7, 2023

மின்சார கட்டண உயர்வு : ஆண்டுக்கு ஒருமுறை இனி ஷாக் கொடுக்க போகிறார்கள்!


மின்சார வாரியம் ஏகப்பட்ட கடனில் இருக்கிறது. (ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி). கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவே இல்லை. ஆகையால், உயர்த்துகிறோம் என கடந்த ஆண்டு உயர்த்தினார்கள்.


ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, கல்வி கட்டண உயர்வு என பல திசைகளிலிருந்தும் தாக்குதல்களை எதிர்கொண்டு திணறிக்கொண்டிருந்த மக்கள், மின்சார கணக்கீட்டை மாதம் இருமுறை கணக்கு எடுப்பதால், ஏகப்பட்ட கட்டணம் வருகிறது. மாதம் மாதம் எடுங்கள் என மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கும் பொழுது தான் இந்த விலை உயர்வையும் அறிவித்து, அதிர்ச்சி தந்தார்கள்.

இப்படி மின்சார கட்டணத்தை உயர்த்தியும், அவர்களுக்கு பெருமளவு வருமானம் வரவில்லையாம். ஆகையால் மின்சார ஒழுங்குமுறை வாரியம் ஆண்டுக்கு ஒருமுறை நுகர்வோர் விலைக் குறியீடு உயர்வின் அடிப்படையில் ஏற்றிக்கொள்ளலாம் என கடந்த ஆண்டே அனுமதி அளித்துவிட்டது. மக்களின் கூலி என்பது வருடம் வருடம் உயர்வதில்லை. ஆனால், ஒருங்குமுறை ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் மக்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அக்கறையும், புரிதலும் இல்லாமல் அறிவித்தார்கள். ”உனக்கென்னப்பா! பைத்தியம். எது வேணா சொல்லுவ!” வசனம் தான் நினைவுக்கு வந்தது.

இப்படித்தான் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கலாம் என ஒன்றிய அரசு மாற்றினார்கள். ஒரு லிட்டர் எண்பது ரூபாய்க்கு இருந்த பெட்ரோலை 103 ரூபாய் வரை விலை ஏற்றி ஒன்றிய அரசும், கார்ப்பரேட்டுகளும் கூட்டுக்கொள்ளையடிக்கிறார்கள். ஆனால் விலை குறையும் பொழுது, கவனமாய் குறைக்க மறந்து போகிறார்கள்.

ஒன்றிய அரசு சுங்கவரி கட்டணத்தை இப்படி ஒரு உத்தரவுக்கு பிறகு தான், ஆண்டுக்கு இருமுறை உயர்த்திக்கொண்டே போகிறார்கள். அதனால், எல்லா போக்குவரத்து கட்டணமும் உயர்ந்து, விலைவாசியும் எகிறிக்கொண்டே போகிறது.

தமிழக அரசும், மின்சார வாரியமும் உயர்வுக்கு சொல்லும் காரணம் மின்சார வாரியம் கடனில் தத்தளிக்கிறது என்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த வாரியம் எப்படி ஒரு லட்சத்து, நாற்பதினாயிரம் கடனாகிப்போனது என்றால், தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளினால், தனியாரிடம் அநியாய விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்தார்கள். அரசு புதிதாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யக்கூடாது என தடை விதித்தார்கள். அதன் விளைவு தான் மலை போல கடன் சேர்ந்துவிட்டது. இந்த கடனுக்கு பின்னால் உள்ள ஊழலை நேர்மையாக விசாரித்தால், இப்பொழுது உள்ள தமிழக அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளே தான் இருக்கவேண்டும்.

அப்பொழுது நாம் கேட்கத்தவறியதின் விளைவு தான் அவர்கள் (பெருமளவு அதிமுக) ஊழல் செய்து ஏற்றி வைத்த கடன் சுமையை மக்கள் தலையில் சுமத்தப்பார்க்கிறார்கள். இப்படி கடன், நஷ்டம் என சொல்லிக்கொண்டே இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் சில மாநிலங்களில் இருப்பது போல மின்சார வாரியத்தை தனியார் தரகு முதலாளிகளுக்கு நைசாக கை மாற்றிவிடவும் முயலுவார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஜூலை ஒன்றாம் தேதி மின்சார கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற உத்தரவுக்கு எதிராக போராடப் போகிறோமா அல்லது கட்டண உயர்வு தரும் ஷாக்கை எதிர்கொள்ளபோகிறோமா என்பதை நாம் தாம் முடிவு செய்ய வேண்டும்.

June 6, 2023

Hunger (2023)




 "எல்லோரும் பசியுடன் இருக்கிறார்கள், ஆனால் ஒவ்வொருவரின் பசியும் வித்தியாசமானது."

“உங்கள் சமூக அந்தஸ்து நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.”
- படத்திலிருந்து…!
****

நாயகி தனது படிப்பை முடித்துவிட்டு, அப்பா நடத்தி வந்த அந்த சிறிய உணவகத்தை, தாய்லாந்தின் ஒரு நகர்ப்புற பகுதியில் பொறுப்பேற்று நடத்தி வருகிறாள். அங்கு சாப்பிட வந்த ஒருவன் ”அருமையாக சமைக்கிறாய். உன் திறமை வெளிப்பட வேண்டுமென்றால் இங்கு வந்து பார்” என ஒரு கார்டை கொடுத்துவிட்டு போகிறான். அவளும் அசிரத்தையாக வாங்கி வைத்துக்கொள்கிறாள்.

அவர்களைப் பற்றி விசாரித்தால், “Hunger” என்ற பெயரில் தாய்லாந்தின் பிரபல சமையல் நிபுணராக (chef) இருக்கிறார். மிகப்பெரிய பணக்காரர்கள் எல்லாம், அவருடைய தேதிக்காகவும், சாப்பிடவதற்காகவும் ”உச்” கொட்டிக்கொண்டு சாப்பிட காத்திருக்கிறார்கள்.

இந்த துறையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அவள் அவரைப் போய் பார்க்கிறாள். சோதனைத் தேர்வில் வெற்றி பெற்று குழுவில் இணைந்துகொள்கிறாள். அந்த நிபுணரோ மிக மிக கறாராகவும், கண்டிப்பாகவும் நடந்துகொள்கிறார். தவறிழைத்தால் கடுமையாக தண்டனையும் தரக்கூடிய ஆளாகவும் இருக்கிறார்.

பணக்கார்களுக்காக சமைக்கும் பொழுது, அந்த நிபுணர் வளைந்து கொடுத்து போகிறார். உதாரணமாக சட்டத்திற்கு புறம்பாக ஒரு பறவையை வேட்டையாடி ஒரு பணக்காரர் சமைக்க சொன்னால், மறுப்பு இல்லாமல் சமைத்து தருகிறார். அவரிடம் எந்தவித தயக்கமும் இல்லை. ”தவறும் இல்லை” என்கிறார்.

இப்படி சில அம்சங்கள் பிடிக்காமல், அவரின் குழுவில் இருந்து வெளியேறுகிறார் நாயகி. இன்னொரு பணக்காரன் நாயகியின் திறனறிந்து, ஒரு பெரிய உணவகத்தை உருவாக்கித் தருகிறான்.

இந்த தொழிலில் உள்ள “நெளிவு சுழிவுகள் கழுத்தறுப்புகள்” எல்லாம் அவளைத் தொந்தரவு செய்கின்றன. இறுதியில் என்ன ஆனது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். அந்த உணவைப் பெற சமூக உற்பத்தியில் அவன் ஈடுபடுவது அவசியம். ஈடுபடுகிறான். அதில் கிடைத்ததை வைத்து உணவை உண்கிறான். இங்கு பெரும்பாலான மக்கள் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு உழைத்தாலும், அவர்களுக்கு ”நல்ல” உணவு, பல சமயஙக்ளில் உணவே கிடைப்பது பெரிய போராட்டமாக இருக்கிறது. பசி ஒவ்வொரு வேளையும் அவனைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. குடும்பத்தை விட்டு நகரங்களை நோக்கி, பெரும் நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறான். மாநிலங்கள் கடக்கிறான். நாடுகள் கூட பறந்து செல்கிறான்.

சமூக உற்பத்தியில் எல்லோரும் உழைத்தாலும், பெரும்பாலான மக்களுக்கு ”உயிர் வாழ்வதற்கு மட்டும்” சொற்பத்தை கொடுத்துவிட்டு, உற்பத்தியில் கிடைக்கும் பெரும்பலனை சிறுபான்மையினர் மலை போல பல தலைமுறைகளுக்கு சொத்தைச் சேர்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலான மக்களை பசி துரத்திக்கொண்டே இருக்க, இவர்களுக்கு பசி என்பதே உணர முடியாத நிலையில் வாழ்கிறார்கள்.

ஒவ்வொரு வேளைக்கும் விதவிதமாய் சாப்பிடுகிறார்கள். புதிது புதிதாய் தேடித்தேடி தின்கிறார்கள். பல மணி நேரம் அது பற்றி சிலாகித்து பேசுகிறார்கள். தின்பதற்காகவே, மாநிலங்கள், நாடுகள் பறந்து செல்கிறார்கள். தின்று தின்று பல மடங்கு உடல் வீங்குகிறார்கள். படத்தில் சொல்வது போல “உங்கள் சமூக அந்தஸ்து நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.”

படத்தில் இந்த சமூக ஏற்றத்தாழ்வையும், பசி குறித்த அரசியலையும் பளிச்சென நேரடியாக சொல்லாவிட்டாலும், பார்க்கிற நம்மால் நன்றாக உணர முடிகிறது.

படத்தின் ஒரு காட்சியில், பெருங்கடனில் சிக்கிய ஒரு பணக்காரன், அந்த சமையல் நிபுணரை வரவழைத்து, விருந்து சமைத்து, நன்றாக சாப்பிட்டுவிட்டு, துப்பாக்கியில் தன் மனைவி, சின்ன குழந்தையையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்வான்.

மார்க்ஸ் ஓரிடத்தில் சொல்கிறார். ஒரு பெரும் பணக்காரன் தன் வீட்டின் உணவு டேபிளில் அமர்ந்தால், விதவிதமான உணவு, பழரசங்கள், பால் என பலவும் இருக்கும். அவனுக்கு அன்றைக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் சாப்பிட்டுவிட்டு நகர்வான்.

சோசலிச சமூகம் உலகம் முழுவதும் பரவி, கம்யூனிச சமூகம் நிலவும் பொழுது, அப்பொழுதும் சமூகம் மொத்தமும் உழைப்பில் ஈடுபடும். அந்த பணக்காரன் சாப்பிடுவது போல மொத்த சமூகமும் தனக்கு பிடித்தமானதை, ஆரோக்கியமானதை சாப்பிடும் என்கிறார்.

பசிக்காக நாம் ஓடிக்கொண்டே இருந்தால், வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே தான் இருக்கும். சமூக ஏற்றத்தாழ்வுகளை களையும் போராட்டத்தை முன்னெடுத்தால் தான், இங்கு எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.

படத்தில் நடித்த நாயகி, நிபுணராக வருபவர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். உப பாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். Sitisiri Mongkolsiri நேர்த்தியாக இயக்கியிருக்கிறார். அவருடைய மற்ற படங்களையும் தேடிப்பார்க்கவேண்டும்.நெட் பிளிக்சில் இருக்கிறது. பாருங்கள்.