> குருத்து: September 2023

September 30, 2023

Good luck to you leo grande (2022) – பிரிட்டன் “காமம் குறித்த நீண்ட உரையாடல்”


நாயகி 60+ ல் இருக்கிறார். பள்ளியில் மதம் சார்ந்த (Religious) கல்வி அளித்து ஓய்வு பெற்ற ஆசிரியர். ஒரு மகன், மகள் என இருக்கிறார்கள். கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.


தனது பாலியல் தேவைக்காக, இணையத்தின் மூலம் முகமறியா ஒரு இளைஞனை தேர்வு செய்கிறார். இருவரும் ஒரு ஹோட்டல் அறையில் சந்திப்பில் படம் துவங்குகிறது.

ஏதோ ஒரு வேகத்தில் பதிவு செய்து வந்துவிட்டார். காமம் குறித்து, தனது வயது குறித்து, தனது மகன் வயதில் வந்திருக்கும் ஒரு இளைஞனின் நிலை குறித்து என கடந்த கால மதிப்பீடுகள் அவளை கடுமையாக தொந்தரவு செய்கின்றன. அவளால் அவ்வளவு எளிதாக இருக்க முடியவில்லை. ஈடுபடவும் முடியவில்லை.

வந்திருந்த இளைஞனும் நாயகியும் தொடர்ந்து பேசுகிறார்கள். அவன் அவளுடைய குற்ற உணர்வை தனது பேச்சின் மூலம் களைய முயல்கிறான்.

ஐம்பதே வளையாது. அறுபது அத்தனை சீக்கிரம் வளையுமா? அவளின் அறிவு அவனைப் பற்றிய ஆய்வுக்குள் இறங்குகிறது. யார் இவன்? இவனோடு குடும்பம் இவனை கைவிட்டுவிட்டதா? இவன் இப்படி ஏன் தவறான விசயத்தில் ஈடுபடுகிறான். இவனை எப்படி நல்வழிப்படுத்துவது? என மண்டைக்குள் ஓடும் கேள்விகள் அவனிடம் கேள்வி மேல் கேள்விகள் எழுப்புகிறாள்.

இது தற்காலிக (பண) உறவு. தனிப்பட்ட எந்த விவரத்தையும் பகிர்ந்துகொள்வது அவசியமில்லை. கூடவும் கூடாது. ஆகையால் அவன் அந்த எல்லையை தாண்டக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறான்.

அந்த சந்திப்பிற்கு பிறகு அடுத்தடுத்து என நான்கு சந்திப்புகள் நடைபெறுகின்றன.
பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

****


ஒரு ஹோட்டல் அறை. ஒரு ரெஸ்டாரண்ட். இந்த இரண்டு இடங்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டார்கள். இந்த படம் காமம் பற்றிய படமல்ல! காமம் குறித்தும், பிற விசயங்கள் குறித்தும் பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நீண்ட உரையாடல் தான் மொத்தப்படமும் எனலாம்.

அந்த அம்மா தன் தாம்பத்யம் குறித்து பகிர்ந்துகொள்வார். தனது கணவர் படுக்கையில் எப்படி நடந்துகொள்வார்? காமம் குறித்த அவருடைய பார்வை என்பது எத்தனை வரம்புக்குட்பட்டதாக இருந்தது. அந்த எண்ணங்கள் தான் படுக்கையறையில் அவருடைய நடவடிக்கைகளை தீர்மானிப்பதாக இருந்தது. அது தனக்கு அத்தனை போதுமானதாக இருந்ததில்லை. இப்பொழுது நினைத்தால், துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பதை கண்களில் நீர் வடிய சொல்வார்.

அந்த இளைஞன் தனது பதினைந்து வயதில் காமம் குறித்த எங்கோ, ஏதோ செயல் செய்து, அது அம்மாவிற்கு தெரியவந்து… இவனை வெறுத்தவர் தான். அதற்கு பிறகு அவனுடைய பெயரை உச்சரிப்பதே இல்லை. விட்டுவிட்டு போய்விட்டார் என சொல்லும் பொழுது கலங்கித்தான் சொல்வான்.

இந்த உரையாடலை கவனிக்கும் பொழுது, கல்வி, அறிவு, பொருளாதாரம், புரிதல்களில் என வளர்ந்த நாடுகளிலேயே காமம் குறித்த புரிதல், நடைமுறை இவ்வளவு சிக்கலாக இருக்கும் பொழுது நம்மைப் போன்ற பின் தங்கிய நாடுகளில் எவ்வளவு சிக்கலானதாக இருக்கும் என்பதை யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது.

நம் நாட்டில் முன்பு விவாதிக்காத பல விசயங்களை குறித்தும் வெளிப்படையாக பேச துவங்கியிருக்கிறோம். விவாதிக்கிறோம். ஆனால் காமம் குறித்து இன்னும் துவக்க நிலையிலேயே தான் இருக்கிறோம். ஏனெனில் ”தாம்பத்யம் என்றால் புனிதம்” என மிகவும் உயரத்தில் வைத்திருக்கிறோம். அதனாலேயே விவாதிப்பதில்லை. புரிதல் இருப்பதில்லை.

கடந்த இரு பத்தாண்டுகளில் தான் பத்திரிக்கைகளில் மருத்துவர்கள் காமம் குறித்த கட்டுரைகள், கேள்வி பதில்களாய் பார்க்க முடிகிறது.

கணவனுக்கும், மனைவிக்கும் தாம்பத்தியத்தில் ஒரு புரிதல் பிரச்சனை. அணுகுமுறையில் பிரச்சனை என இருந்தால், அதை சொந்தங்களிடம் பேசுவதில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். முறையாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்போம். குறைபாடு இருந்தால், உரிய மருத்துவம் பார்ப்போம் என்ற சிந்தனை எத்தனை பேருக்கு நம் ஊரில் இருக்கிறது? அந்த சிக்கலை ஊதி ஊதி பெருக்கி, விவாகரத்து அளவுக்கு கொண்டு போய்விட்டு விடுகிறோம்.

மருத்துவர் காமராஜ் பாலியல், காமம் குறித்த தொலைக்காட்சியில் தொலைபேசியில் மக்களிடம் விவாதிக்கும் பொழுது, அவர்கள் என்ன வயதில் இருந்தாலும், அவர்கள் கேட்கும் பல சந்தேகங்கள் எல்லாம் எல்.கே.ஜி. அளவில் தான் இருக்கும். உதாரணத்திற்கு, ”சுய இன்பத்தில் ஈடுபடலாமா? அதனால் ஏதும் பிரச்சனையில்லையே!”

நான் அறிந்து ஒரு மூத்தவர் இருக்கிறார். அவரிடம் கணவன் மனைவி பிரச்சனை என விவாதிக்கப் போனால், முதன்மையாக இரண்டு கேள்விகளை கேட்பார். இருவருக்கும் தாம்பத்ய உறவில் பிரச்சனை இருக்கிறதா? குடும்பத்தில் பொருளாதார ரீதியாக பிரச்சனை இருக்கிறதா? இந்த இரண்டு மையமான பிரச்சனைகளை தீர்த்துவிட்டால், மற்ற பிரச்சனைகளை எளிதாக சரிசெய்துவிட முடியும் என்பார். பல குடும்பங்களை கவனித்த வரையில் அது உண்மை என உணர்ந்திருக்கிறேன்.

வேறு பார்வைகள், கோணங்கள் இருந்தால் தெரிவியுங்கள். அறிய காத்திருக்கிறேன். விவாதிக்கலாம்.

மற்றபடி, இப்படி ஒரு விபச்சாரம் என்பது சமூகத்திற்கு தேவை என்பது போல இறுதியில் நகர்த்தியிருப்பார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குடும்பத்திற்குள், தாம்பத்தியத்திற்குள் ஒரு புரிதலை உருவாக்கவேண்டும். விஞ்ஞானத்தின் உதவியால், மருத்துவர்களின் உதவியால் கோளாறுகளை சரி செய்யவேண்டும் என்பதை விட்டுவிட்டு… இப்படி ஒரு வழியை உண்டாக்குவது சிக்கலானது. குழப்பங்களைத் தான் விளைவிக்கும்.

காமம் என்பது ஒவ்வொரு உயிருக்கும் உயிரியல் தேவை. அடுத்தடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு அவசியமானது. அதனால் தான் எல்லா உயிரினங்களும் காமத்தில் தேவைக்கு, அளவோடு ஈடுபடுகின்றன. ஆனால், முதலாளித்துவ சமூகத்தில்… உணவில், உடையில், பொருட்களில் புதிது புதிதாக தேடுவது, நுகர்வது என்பது நுகர்விய பண்பாடு என்பது சிக்கலானது. அதை காமத்திலும் கொண்டு வருகிறார்கள். புதிய புதிய ஆட்களோடு உறவு. கூட்டமாய் உறவு கொள்வது என சிக்கலாய் நகர்த்துகிறார்கள். அது ஆரோக்கியமற்றது. தவறானது என நினைக்கிறேன்.

நாயகியாக வரும் எம்மா தாம்சன் (Emma Thompson), இளைஞனாக வரும் Daryl McCormack இருவரும் சிறப்பான நடிப்பு. நாயகி எப்படி இப்படி ஒரு கதையில் நடித்தார் என அதற்கான அடிப்படையை தேடினால்…. விக்கி பீடியாவில் அவரைப் பற்றிய குறிப்புகளில் ஓரிடத்தில் இப்படி சொல்லியிருக்கிறார்.

”நான் ஒரு நாத்திகவாதி (Athiest) ... நான் மதத்தை பயத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்கிறேன். கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் மட்டும் போதாது. நான் உண்மையில் இந்த அமைப்பை துன்பகரமானதாகக் கருதுகிறேன்: பைபிளிலும் குர்ஆனிலும் கூறப்பட்டுள்ள சில விஷயங்களால் நான் புண்பட்டுள்ளேன், அவற்றை நான் மறுக்கிறேன்” என்கிறார்.

இயக்குநர் ஆஸ்திரேலியாவை சார்ந்த ஒரு பெண் இயக்குநர் Sophie Hyde. இந்தப் படம் உலக அளவில் நிறைய விருதுகளை, பாராட்டுதல்களை பெற்றுள்ளது. நல்ல படம் பாருங்கள். பிரைம் வீடியோவில் இருப்பதாக இணையம் சொல்கிறது. படம் குறித்து நண்பர்களுடன் விவாதியுங்கள்.

September 27, 2023

Jaane Jaan (2023) இந்தி


மேற்கு வங்கத்தில் மலைப்பாங்கான பிரதேசம் கலிம்போங் (Kalimpong). நடுத்தர வயது நாயகி அங்கு ஒரு உணவகத்தில் வேலை செய்கிறார். அவருடைய மகள் உயர்நிலைப் பள்ளியில் படித்துவருகிறார்.


திடீரென நாயகியின் கணவன் 13 ஆண்டுகள் கழித்து அவர்களைத் தேடி வருகிறான். அவன் ஒரு சப் இன்ஸ்பெக்டர். பொறுக்கி. நாயகியை கல்யாணம் செய்து, ஹோட்டலில் நடனம் ஆட வைத்தவன். அவனிடம் இருந்து விலகி, தூரமாய் வேறு மாநிலத்துக்கு வந்து வேறு ஒரு பெயரில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள். இத்தனை ஆண்டுகள் கழித்து வந்தவன் மகளையும் அம்மாவை இழுத்துவிட்ட அதே தொழிலுக்கு அழைத்து செல்வேன் என்கிறான்.

வாக்குவாதம் முற்றி, கைகலப்பில், எசகு பிசகாக அவனை நாயகியும், மகளும் ஒரு வேகத்தில் கொன்றுவிடுகிறார்கள். போலீசுக்கு போவதா? என்ன செய்வது என மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் பக்கத்துவீட்டில், நடுத்தர வயதில் ஒரு கணித வாத்தியார் வசிக்கிறார். கணிதத்தில் தேர்ந்த ஆள். விவரமான ஆளும் கூட. அவருக்கு நாயகியை மிகவும் பிடிக்கும். அதனால் தினமும் அவள் வேலை செய்யும் உணவகத்தில் தான் சாப்பாடு வாங்குகிறார்.


இவர்களின் சிக்கலை உணர்ந்து உதவ முன்வருகிறார். அவர்களுடன் பேசி, சில ஏற்பாடுகளை செய்கிறார்.

காணாமல் போன சப் இன்ஸ்பெக்டரைத் தேடி போலீஸ் விசாரணை செய்கிறது. மொபைல் டவர், அழைப்பு … என தொட்டு தொட்டு நாயகியை விசாரிக்கிறது. அதன்பிறகு என்ன ஆனது என்பதை திரில்லராக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

****
The Devotion of suspect X என ஒரு நாவலை தழுவி ஜப்பானில் 2008ல் எடுக்கப்பட்ட படம் Suspect X. அங்கு பெரிய வெற்றி பெற, 2012ல் தென் கொரியாவில் ஒரு படம் எடுத்தார்கள். பிறகு தமிழில் விஜய் ஆண்டனி, அர்ஜூன் நடித்த கொலைகாரன் வந்தது. அதன் தொடர்ச்சியில் இப்பொழுது இந்தியில் இந்தப் படம். இந்தக் கதை ஒரு டிரெண்ட் செட்டர் தான். உலகம் முழுவதும் சுற்றி வருகிறது. இதை அடிப்படையாக கொண்டு தான் திரிஷ்யமும் கூட!.

கரீனா கபூர் என்ற புகழ்பெற்ற நடிகை இருந்தும் படத்தை பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், சிம்பிளாக எடுத்திருந்தார்கள். நன்றாகத் தான் இருந்தது.

அந்த கணித வாத்தியார் ஒரு சுவாரசியமான பாத்திரம். கணிதத்தில் தேர்ந்தவர். நடுத்தர வயதிலும் விடாமல் ஜூடோ கற்று தேர்ந்தவராக இருக்கிறார். பத்து ஆண்டுகள் முயன்று, ஒரு கணிதத்திற்கு விடை கண்டுபிடிக்க… அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் அதே கணிதத்திற்கு விடை கண்டுபிடித்துவிடுகிறார். கணிதத்தின் மீதான பேரார்வத்தைப் பார்த்ததும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கணித மேதை இராமனுஜர் நினைவுக்கு வந்து போனார்.

ஒரு இடத்தில் வாத்தியாருக்கும், விசாரணை அதிகாரிக்குமான கலந்துரையாடலை, இருவரும் கராத்தே சண்டை போடுவதாய் காண்பித்திருந்தார்கள். நன்றாக இருந்தது.

நாயகியாக கரீனா கபூர். பயமும் பதட்டமுமாய் கொடுத்தப் பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். Jaideep Ahlawat தான் ஆசிரியராக வருகிறார். பொருத்தமாக செய்திருக்கிறார். பிறகு அந்த விசாரணை அதிகாரியாக வரும் விஜய் வர்மா. அவரும் சிறப்பு.

நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

September 24, 2023

Talk to Me (2022) “என்னோடு பேசு! எனக்குள் வா!”


கல்லூரியில் படிக்கும் நாயகிக்கு,   அன்று அவள் அம்மாவின் இரண்டாவது நினைவு தினம். மிகவும் பிடித்தமான அம்மா. அம்மாவின் திடீரென மறைவு அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அம்மாவின் நினைவுகளால் நிரம்பி வழிகிறாள். உறவுகள் ஆறுதல் சொல்லிப்போகிறார்கள். மிகவும் சோர்வாக இருக்கிறாள்.


தோழியின் வீட்டுக்கு வருகிறாள். தோழியின் அம்மா, இரவு வேலைக்கு செல்வதால், நாயகியின் மனநிலையை மாற்ற, நண்பர்களைச் சந்திக்க அழைத்துக்கொண்டு கிளம்புகிறாள். தோழியின் பதினைந்து வயது தம்பியும் அடம்பிடித்து உடன் வருகிறான்.

போன இடத்தில் சக கல்லூரி நண்பர்கள் சிலர் அங்கு இருக்கிறார்கள். Ouija போர்டு போல ஒரு விளையாட்டு. நிறைய இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாகியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் காணொளிகள் நிரம்பி வழிகின்றன.


விளையாட்டு இது தான். பீங்கானால் ஆன ஒரு கை. ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள். விளையாடுபவரை இறுக்கமாக பெல்ட்டால் சேரில் கட்டிப்போடுகிறார்கள். அந்த கையோடு கை பொருத்தி, ”என்னோடு பேசு!” (Talk to me) என சொன்னதும் ஒரு கோர/பேய் உருவம் விளையாடுபவரின் கண்ணுக்கு மட்டும் தெரிகிறது. ”எனக்குள் வா” (I let you in ) என சொன்னதும்… பேய் பிடித்துவிடுகிறது. விநோதமாக நடந்துகொள்கிறார்கள். பார்ப்பவர்களுக்கு பயமும், ஆச்சர்யமுமாய் இருக்கிறது. எல்லாம் 90 விநாடிகள் தான். துண்டித்துவிடுகிறார்கள். இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகிறார்கள்.

அடுத்த நாள். தோழி தன் காதலனிடம் சொல்ல… அவன் விளையாடுவதற்கு ஆர்வம் கொள்கிறான். தோழியின் வீட்டில் அன்றிரவு சந்திக்கிறார்கள். காதலன் விளையாட, பேய் பிடித்த சமயத்தில் நாய்க்கு லிப் டு லிப் கொடுத்துவிடுகிறான். கலாய்க்கிறார்கள். அவன் அவமானத்தில் வெளியேற, சமாதானப்படுத்த தோழியும் வெளியே செல்கிறாள். மற்றவர்களும் விளையாடுகிறார்கள். முடிவில், தோழியின் தம்பி விளையாட ஆசைப்படுகிறான். 18 வயதுக்கு மேல் தான் என முதலில் மறுக்கிறார்கள். அவன் நாயகியிடம் அடம்பிடிக்க… 50 வினாடிகள் தான் என்ற முடிவில் விளையாட அனுமதிக்கிறார்கள்.

இந்த முறை பேயாக வந்து இறங்குவது, நாயகியின் அம்மா. ரெம்ப பாசமாய் பேச, விநாடிகள் கடக்க… நாயகி இன்னும் கொஞ்ச நேரம் என தாமதிக்கிறாள். அதற்கு பிறகு நடப்பது எல்லாம் ரணகளம்.

பின்பு என்ன ஆனது என்பதை பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
***

2022ல் அமெரிக்காவில் வெளியாகி, இந்தியாவில் ஜூலை மாதத்தில் வெளியாகியிருக்கிறது. இடைவெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. சென்னையில் மல்டிபிளக்சுகளில் சமீபத்தில் வெளியாகி சில நாட்கள் ஓடியது.

சமீபத்தில் பார்த்த பேய்படங்களில் The smile (2022) படம் நன்றாக பயமுறுத்தியது. இந்த ஆண்டிற்கு இந்தப் படம் என தாராளமாக சொல்லலாம்.

பேய் என்பதே கற்பனை தானே! ஆகையால் லாஜிக் இல்லாமல் நன்றாக விளையாடலாம். ஆனால் நம் இயக்குநர்களுக்கு கற்பனை வறட்சி என்பதால், பல பேய் படங்களும் போராடிக்கின்றன. இந்தப் படம் கற்பனை குதிரையை தட்டி விட்டு, பட்ஜெட்டுக்குள் எடுத்தப் படம் தான். உலகம் முழுவதும் வலம் வருகிறது. அடுத்தடுத்த பாகங்களும் நிச்சயம் வெளிவரும். எதிர்பார்க்கலாம்.

நாயகி Sophie Wilde அருமையாக நடித்திருக்கிறார். பிறகு அந்த பையன். மற்றவர்களும் சிறப்பு. இசை, ஒளிப்பதிவு எல்லாம் துணை நின்றிருக்கின்றன.

பேய் பட விரும்பிகள் பாருங்கள்.

September 21, 2023

Dear Child (2023) - TV series psychological thriller


13 வயது பெண். ஆறு வயது பையன். ஒரு பெண். காட்டை ஒட்டி இருக்கும் ஒதுக்குப்புறமான வீட்டில் இருக்கிறார்கள். குழந்தைகள் அது தான் தங்கள் உலகம் என இயல்பாய் இருக்கிறார்கள். அந்த பெண் அப்படி இல்லை. பதட்டமும், பயமும் கலந்தவளாய் இருக்கிறாள். கதவைத் திறந்துவிட்டால், தலைதெறிக்க ஓடுபவளாய் இருக்கிறாள். நீங்கள் நினைப்பது சரி தான். அவர்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.


அவன் நடந்துவரும் சத்தம் வரும் நெருங்கும் பொழுதே, இவர்கள் வரிசையாக நிற்கிறார்கள். தங்கள் கைகளை நீட்டிக்கொண்டிருக்கிறார்கள். சுத்தமாய் இருக்கவேண்டும். அந்த வீட்டில் எல்லாமும் நேரத்திற்கு சரியாக நடக்கவேண்டும். இல்லையெனில் கடுமையான தண்டனை.

இங்கிருந்து தப்பித்தாகவேண்டும். அதற்காக ஒரு நேரம் பார்த்து காத்திருக்கிறாள். ஒருநாள் இரவு வேளையில் அவன் கொஞ்சம் அசந்த நேரத்தில் தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிக்கிறாள்.

சாலையில் ஒரு கார் மோதி கீழே விழுகிறாள். ஆம்புலன்ஸ் வந்து தூக்கிப்போகிறது. கூடவே அந்த குட்டிப்பெண்ணும் செல்கிறாள்.


மருத்துவமனை வந்து சேர்ந்ததும், குட்டிப்பெண் மூலமாக அவளின் பெயர் தெரிந்ததும் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து தேடினால்… 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவள் அவள்.. பெற்றோர்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். அவர்கள் அடித்துப் பிடித்து வந்துப் பார்த்தால், அவள் தன் மகளில்லை. ஆனால், அந்த குட்டிப்பெண் தன் மகளின் மகள் என அவள் தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் பெண் உடல்நிலை தேறி, தன் பழைய வாழ்க்கைக்கு நகர்கிறாள். அந்த குட்டிப்பையனையும் தேடலுக்கு பிறகு மீட்டு வருகிறார்கள்.

யார் இப்படி பல வருடங்கள் அடைத்து வைத்தது? அந்த பெண்ணின் அம்மாவிற்கு என்ன ஆனது? உயிரோடு இருக்கிறாளா? செத்துவிட்டாளா? என விசாரணை நடக்கிறது. டி.என்.ஏ வைத்து சோதனை செய்தால், அந்த பையனின் அம்மா வேறு ஒருவர் என தெரியவருகிறது. ஆக அடைத்து வைக்கப்பட்டது ஒரு ஆள் இல்லை. சில பேர் என தெரிய வருகிறது.

அடைத்து வைத்தவனோ, “தன் குடும்பத்தை” கடத்தி… புதிய ”வீட்டிற்கு” நகர்த்திக் கொண்டு போவதற்கான வேலையில் தீவிரமாய் இருக்கிறான்.

இதுவரை சொன்னதெல்லாம் துவக்கம் தான். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாய் சொல்லியிருக்கிறார்கள்.
*****
ஒரு பெண்ணை அவளின் விருப்பம் இல்லாமல் கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைப்பது. அவளின் மொத்த வாழ்க்கையும் நாசமாக்குவது. ஒருநாள் தப்பித்தவறி அங்கிருந்து தப்பித்தாலும் .. பழைய நினைவுகளில் இருந்து அதிலிருந்து விடுபட முடியாமல்…. தடுமாறுவது. கொடூரம் தான்.

பிறந்ததில் இருந்தே வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகள். முதன் முதலாக சூரிய வெளிச்சத்தைப் பார்த்ததும், கண்கள் வெகுவாக கூசுகின்றன. கூலிங் கிளாஸ் இல்லாமல் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை. அந்த குழந்தைகளின் மனநிலை எவ்வளவு சிக்கலாக இருக்கிறது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு கொடூரத்தை செய்யமுடியும். தொடர்ச்சியாக வதைக்க முடியும்.

இப்படிப்பட்ட கதைகளை எல்லாம் வளர்ந்த நாடுகளில் தான் பார்க்க முடியும். நம்மூரில் பின்தங்கிய பகுதிகளில் இயல்பிலேயே சில வீடுகளில் பெண்களை, குழந்தைகளை வதைக்கிற ஆண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அதை விட்டு நகர்ந்தால், தன் வாழ்க்கை, குழந்தைகளின் வாழ்க்கை பாழாய் போகுமே என பெண்களும், வேறு வழியின்றி குழந்தைகளும் சகித்துக்கொள்கிறார்கள். பொறுத்துக்கொள்கிறார்கள். குடும்ப வன்முறை என்பது வளர்ந்த நாடுகளை விட, நம் நாடுகளில் மிகப்பெரிய அளவில் தான் இருக்கிறது. இதெல்லாம் எப்பொழுது தீரும் என நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரையில் சமூகத்தில் வளர்ச்சிப் போக்கில் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம், பெண்களை, குழந்தைகளை உடைமை பொருட்களாக பார்க்காத தன்மை என்பதெல்லாம் மாறும் பொழுது தான் இந்த காட்சிகள், செய்திகள் எல்லாம் மாறும்.


இந்த சீரிஸ் ஒரு சீசன். 6 அத்தியாயங்களுடன் இருக்கிறது. நாவலாக வெளிவந்து, கவனம் பெற்று… அதைத்தான் எடுத்திருக்கிறார்கள். அந்த பெண், அந்த குட்டிப்பெண், அந்த குட்டிப் பையன், அந்த பெண்ணுக்கு தாத்தா, பாட்டியாக வரும் நபர்கள், அதிகாரிகளாக வருபவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். முன்பு Room என ஒரு படம் பார்த்தேன். அந்தப் படம் அறையில் அடைக்கப்பட்டு, அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்தது என காண்பித்திருப்பார்கள். இது அங்கிருந்து தப்பித்து வந்த பிறகு என்ன நடந்தது என்பதாக கதை இருக்கிறது.

திரில்லர் பாணியிலும், உணர்வுப்பூர்வமாகவும் (ரெம்ப விறுவிறுப்பாக எதிர்பார்க்கக்கூடாது) பார்க்க கூடிய அளவிற்கும் இருக்கிறது. நெட்பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

September 17, 2023

Miss Shetty Mr. Polishetty (2023) – தெலுங்கு


Miss Shetty Mr. Polishetty (2023) – தெலுங்கு
”கணவன் வேண்டாம்! விஞ்ஞானத்தின் உதவியால் குழந்தை வேண்டும்”

நாயகியும், அம்மாவும் லண்டனில் வசிக்கிறார்கள். நாயகி ஒரு நட்சத்திர உணவகத்தில் சமையல் நிபுணராக (Chef) இருக்கிறார். அம்மாவிற்கு புற்றுநோய். எப்பொழுது வேண்டுமென்றாலும் வாழ்வு முடிந்துவிடும்.

அம்மாவும், அப்பாவும் நாயகியின் சின்ன வயதில் பிரிந்தது, அதன் கசப்பான நினைவுகள் நாயகிக்கு ஆழமாக பதிகிறது. அதனால் அம்மா பலமுறை, பலவிதங்களில் வலியுறுத்திய பொழுதும் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறாள்.

அம்மாவின் அந்திம காலங்களில் தன் சொந்த ஊரில் வாழவேண்டும் என்கிறார். இந்தியாவிற்கு வருகிறார்கள். சில நாட்களில் அம்மா இறந்துவிடுகிறார். இதுவரை எல்லாமுமாய் இருந்த வந்த அம்மா என்ற உறவு இல்லையென்றதும் தனிமை வாட்டுகிறது.

ஒரு நாள் தானே பிள்ளை பெற்றுக்கொண்டால் என்ன என யோசிக்கிறார். திருமணம் வேண்டாம். யாராவது முகம் தெரியாத நன்கொடையாளர் (Doner) மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்கிறாள்.

மருத்துவமனையில் வரிசையில் உட்கார்ந்திருக்கும் நன்கொடையாளர்களை எல்லாம் பார்க்கிற பொழுது, நமக்கான நபரை நாமே கண்டுபிடித்து அழைத்து வருகிறேன் மருத்துவரிடம் சொல்லிவிட்டு தோழியுடன் தேட துவங்குகிறாள்.

நாயகன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, ஓய்வு நேரங்களில் “ஸ்டாண்ட் அப் காமெடியனாக” இருக்கிறார். அவருடைய நகைச்சுவை திறன், இயல்பாக பேசுவது, நடவடிக்கைகள் நாயகிக்கு பிடித்துவிடுகிறது. முதலிலேயே விசயத்தைச் சொன்னால், விலகிவிடுவான். ஆகையால் இன்னமும் மற்ற மருத்துவ சோதனைகள், குடும்ப பின்னணி எல்லாம் தெரிந்துகொண்டு பிறகு சொல்லலாம் என அவனோடு பழகுகிறாள். ஆனால், இவளின் அணுகுமுறையால் நாயகன் தன்னை காதலிப்பதாக புரிந்துகொள்கிறான்.

பிறகு விசயம் தெரிந்து வேண்டாம் என நகர்ந்தவன், பிறகு ஒத்துக்கொள்கிறான். பிறகு என்ன நடந்தது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****


சமீபத்தில் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்த பொழுது, “உங்க பொண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்கிறீர்களா” என கேட்டேன். “எங்க சார்! எங்க சொந்தத்தில் கடந்த மூன்று நான்கு வருடங்களில்… மூன்று பெண்களை கட்டிக்கொடுத்தோம். மூன்று பெண்களும் இப்பொழுது கைக்குழந்தையுடன் அம்மா வீட்டில் இருக்கிறார்கள். சண்டையும் சச்சரவுகளுமாய், விவாகரத்து வழக்குமாய் போய்க்கொண்டிருக்கிறது. பசங்க குடும்ப பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என வருத்தமாய் சொன்னார்.

குடும்பம் சுமத்துகிற பொறுப்புகள், எழும் முரண்பாடுகள், அதனால் வரும் கசப்புகள் எல்லாம் சேர்ந்து குடும்ப அமைப்பு கடுமையாக சுமத்துகின்றன. விளைவு – விவாகரத்து, தனித்து வாழ்தல், குழந்தையை தத்தெடுப்பது, விஞ்னானத்தின் வளர்ச்சியில் யாரோ தெரியாத நபர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்கிற நிலைக்கும் இன்று வளர்ந்து நிற்கிறது.

குடும்பம் இன்னும் பழைய விழுமியங்களோடு நீடிக்கமுடியாது. ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசி, புரிதல்கள் மூலம், குடும்பம் நகர்த்தப்படவேண்டும். அதெல்லாம் கிடையாது. குடும்பத்தின் பழைய பிற்போக்கு விழுமியங்கள் தான் வேண்டும். அது தான் எனக்கு வசதியாக இருக்கிறது என அடம்பிடித்தால், குடும்பம் சிதைவதை யாராலும் தடுக்க முடியாது.

படம் இடைவேளைக்கு பிறகு, பாசிட்டிவாக நகர்வது நன்றாக இருக்கிறது. இயக்குநர் மகேஷ்பாபுவிற்கு முதல்படம் என்கிறார்கள். படத்தின் கதை கொஞ்சம் பிசகினாலும், ஆபாசமாக நகர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் அந்த கோட்டை தாண்டவேயில்லை. நல்ல வரவு. இன்னமும் நல்ல படங்கள் தருவார் என வாழ்த்துவோம்.

(பாகுபலி) அனுஷ்கா ஒரு இடைவேளைக்கு பிறகு நடுத்தர வயதில் பூசினாற் போல மெழுகு பொம்மையாட்டாம் இருக்கிறார். நாயகனை காதலித்துவிடக்கூடாது ஆகையால் உணர்ச்சி காட்டாமல் நடியுங்கள் என இயக்குநர் சொன்னதை கடைசி வரை கடைப்பிடித்துவிட்டார். அடுத்தடுத்த படங்களில் அனுஷ்கா சரியாகிவிடுவார் என நம்புவோம். நாயகன் நவீன் அந்த போதாமையை தன் கலகலப்பான நடிப்பின் மூலம் சரி செய்துவிட்டார். மொத்தப் படத்தையும் தாங்குவது இவர் தான். மற்றவர்கள் ஜெயசுதா, நாசர் எல்லாம் கெளரவ பாத்திரங்களில் வந்துபோகிறார்கள்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியானது. தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருந்தார்கள். இப்பொழுது சென்னையில் சில திரையரங்குகளில் மட்டும் ஓடுகிறது.

நல்ல படம். பாருங்கள். விரைவில் ஓடிடிக்கு வந்துவிடும்.

September 16, 2023

The Smile (2022)


புன்னகைத்து கொண்டே தற்கொலை செய்யவைக்கும் MLM பேய்

நாயகி ஒரு இளம் மனநல பெண் மருத்துவர். ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறார். அங்கு மருத்துவத்துக்கு ஒரு ஆராய்ச்சி மாணவி அழைத்துவரப்படுகிறார். அவள் மரண பயத்தில் இருக்கிறாள்.

கடந்த வாரத்தில், ஒரு பேராசிரியர் அந்த பெண் முன்பு தற்கொலை செய்து கொள்கிறார். அன்று துவங்கி…. தொடர்ச்சியாக இவள் கண்களில் பட்டும் வித்தியாசமாக, வினோதமான காட்சிகள் தென்படுகின்றன. இவளுடைய ஏழு வயதில் செத்துப்போன தாத்தா கண்ணில் தெரிகிறார். புன்னகை செய்கிறார்கள். ஆனால் அது விபரீத புன்னகையாக இருக்கிறது. என்னை கொல்லப்போகிறது! என கதறி கதறி சொல்கிறாள்.

அடுத்த சில நொடிகளில், அவள் உடல் உதறல் எடுக்க ஆரம்பிக்கிறது. எந்த சலனமும் இல்லாமல், மருத்துவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே தற்கொலை செய்து கொள்கிறாள்.

அதற்கு பிறகு, நாயகிக்கு வித்தியாசமான, விநோதமான சில சம்பவங்கள் நடக்க துவங்குகின்றன. அவளின் அக்கா மகனின் பிறந்தநாள் நிகழ்வுக்கு போகிறாள். இவள் கொடுத்த பரிசைப் பிரிக்க, உள்ளே முதல் நாள் தேடிக்கொண்டிருந்த பூனை உள்ளே இருக்கிறது. அங்கே சில களேபரங்கள் நடக்கின்றன. எல்லோரும் அதிர்ந்து போகிறார்கள்.

நாயகியின் அம்மா மனநிலை சரியில்லாமல் இருந்து தான் இறந்துபோனாள். அம்மாவை போலவே இவளுக்கு பித்து பிடித்துவிட்டதாக சொந்த அக்காவே நினைக்கிறாள். நாயகியின் காதலனும் நினைக்கிறான்.

இவள் சொல்வதை யாரும் நம்ப மறுப்பதால், இந்த தொடர் ”தற்கொலைகளுக்கு” பின்னால் என்ன இருக்கிறது? அவளே தேடத்துவங்குகிறாள். தேடத்தேட கிடைக்கும் செய்திகள் எல்லாம் பதட்டத்தைத் தருகின்றன. பயத்தைத் தருகின்றன.

இதிலிருந்து விடுபட முடியுமா என போராடுகிறாள். இறுதியில் இவள் வென்றாளா? பேய் வென்றாளா? என்பதை பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
****


ஒரு குறும்படமாக எடுத்து, பரவலான கவனிப்பை பெற, முழுநீளப்படமாக எடுத்திருக்கிறார்கள். முதலில் வரும் பெண்ணே கண்களிலும், உடல் மொழியிலும் பதட்டத்தை, பயத்தை நம்மிடம் கடத்திவிடுகிறாள். அதற்கு பிறகு நாயகி படம் முழுவதும் அதை வெற்றிகரமாய் கடத்துகிறாள்.

பொதுவாக பேய் என்றாலே ஒரு டுபாக்கூர் தான். உலகில் பேய் யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ…. படம் எடுப்பவர்களுக்கு நன்றாக பயன்படுகிறது. நன்றாகவே கல்லாக் கட்டுகிறார்கள். பேய் படங்களில் லாஜிக் இல்லை என்பதால், கற்பனை குதிரையை தட்டிவிடலாம். அப்படித் தட்டிவிட்டு எடுத்தப் படம் தான் இது என சொல்லலாம்.

பேய் மீது ஒரு நம்பகத்தன்மை வரவேண்டும் என்பதற்காகவே….பேய் படங்களில் ஒரு மருத்துவரை ஒரு கதாப்பாத்திரமாக கொண்டுவருவார்கள். அவர் வாயால் பேய் இருப்பதாக நம்ப வைப்பார்கள். அது போல இந்த படத்திலும் பேராசிரியர், அவரின் ஆராய்ச்சி மாணவி, அதற்கு பிறகு பெண் மனநலப் மருத்துவர் என கொண்டு வந்திருக்கிறார்கள். பேயின்னா இவங்கத் தானே ஏதாவது ஒரு நோயை சொல்லி மறுப்பார்கள். இவர்களுக்கே பேய் பிடிக்க வைத்துவிட்டால்… சோலி முடிச்சிருச்சு!

படத்தை பாசிட்டிவாக முடித்திருக்கலாம். ஆனால் கல்லா கட்டணும் என்கிற நோக்கத்தில் இரண்டாவது பாகத்திற்கு வழிவிட்டு முடித்திருக்கிறார்கள். ஆகையால் விரைவில் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம்.

படத்தில் பிரதான பாத்திரமான நாயகி தான் மொத்தப்படத்தையும் தாங்கியிருக்கிறார். முதல் மாணவியாக வருபவரும் அசத்தல். மற்றவர்கள் வந்து போகிறார்கள். ஒளிப்பதிவு, குறிப்பாக இசை பெரிதளவில் பயமுறுத்த, பதட்டத்தை தர உதவியிருக்கிறது.

அமேசானிலும் பிரைமிலும் இருப்பதாக Just watch தளம் சொல்கிறது. பேய் பட விரும்பிகள் பாருங்கள்.

September 13, 2023

The Hunt for Veerappan (2023)


வீரப்பன் குறித்தான பரபரப்பான வருடங்களில் நிகழ்ந்தவற்றை தொகுத்து ஒரு ஆவணப்படமாக தந்திருக்கிறார்கள்.


ஒரு யானையின் தந்தத்தை கூட விட்டு வைக்காதது, சந்தன மரங்களை டன் டன்னாக வெட்டியது, ஒரு முறை 60 டன்னுக்கும் மேலாக பிடித்திருக்கிறார்கள். வீரப்பனின் கூட்டாளிகளையும், உறவினர்களையும் போலீசு கொல்லுதல், வீரப்பன் பல போலீசுகளை கொல்லுதல்.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல், பிறகு இரு மாநிலங்களிலும் பதட்டங்கள், பல நூறு போலீசு, பல கோடி செலவு, வெயில் காலத்தில் காட்டிற்குள் சொட்டுத் தண்ணீர் கிடைக்காத நிலை; பனிக்காலத்தில் மழையைப் போல பனிக்கொட்டி, குளிரில் நடுங்கும் நிலை, அவன் காட்டுக்குள் இருக்கும் வரை அவனைப் பிடிக்கமுடியாது என முடிவு செய்வது, அவனை வெளியே வரவழைப்பதற்கான முயற்சிகளை எடுத்து… பிறகு சுட்டுக் கொலை செய்வதோடு படம் நிறைவடைகிறது.

இந்த ஆவணப்படத்தில் சொன்னது ஒரு குறிப்பிட்ட பகுதி என்றால் சொல்லப்படாதது நிறைய என புரிந்துகொள்ளலாம்.


படத்தில் அரசு அதிகாரிகள் பலர் பேசுகிறார்கள். வீரப்பனின் கொள்ளையை, கொலைகளை பட்டியலிடுகிறார்கள். புத்திக்கூர்மையையும் புகழ்கிறார்கள். அவனைப் பிடிப்பதற்கு என்னென்ன திட்டங்கள் தீட்டினோம். எல்லாமே தோற்றுப்போயின என விரக்தியோடு பேசுகிறார்கள். வீரப்பனை தமிழ் தேசியம் பேசுகிற ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவனை அரசியல்படுத்த முயன்றதும் வருகிறது.

இதில் சொல்லப்படாத விசயங்களாக சில இருக்கின்றன.

வீரப்பன் கடத்திய யானைத் தந்தங்களை, சந்தன மரங்களை யார் கை மாற்றி கோடி கோடியாக சம்பாதித்தது, அரிசி, ராகி என உணவுப்பொருள்களை வீரப்பன் கும்பலிடம் சேர்ப்பதை கண்காணித்து தடுத்தவர்கள், இந்த கொள்ளையின் பின்னால் இருந்து யார் பலனடைந்தார்கள் என்பதை கண்டுப்பிடித்து கைது செய்தார்களா? அந்த செய்தி ஆவணப்படத்தில் இல்லை. அப்படி இல்லை என்றால் ஏன் இல்லை? அது முக்கியமானது இல்லையா!

வீரப்பனின் தேடுதல் வேட்டையில் அப்பாவி மக்கள் பல நூறு பேர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு அதிகாரி வீரப்பனால் கொலை செய்யப்படுகிறார். உடனே அந்த மேலதிகாரி வதை முகாமில் இருந்து ஆறோ, ஏழு பேரை கொண்டு வரச்சொல்லி அங்கேயே சுட்டுக்கொன்று தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டதாக ஒரு அதிகாரியே மனம் வெதும்பி சொல்கிறார். பலர் வருடக்கணக்கில் சிறையில் இருந்தார்கள். கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன தீர்வு கிடைத்தது மக்கள் தரப்பில் ஏன் எந்த வாக்கு மூலத்தையும் இந்தப் படத்தில் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி வருகிறது.

அந்த காட்டையும் அந்த காட்டை ஒட்டிய மக்கள் வாழ்வும் மிகவும் வறிய நிலை. வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? வீரப்பனின் உருவாக்கத்திற்கு அந்த பகுதியின் வறிய நிலை ஒரு முக்கிய காரணி இல்லையா? ”சந்தன மரத்தை வெட்டுவது சட்ட விரோதமா? அப்படியென்றால், பணக்காரர்கள் தங்கள் வீட்டில் சந்தன மரத்தில் கட்டில் செய்து கொள்கிறார்களே? அரசு வெட்டலாம். வாழ்வாதாரத்திற்கு நான் வெட்டினால் அது எப்படி கொள்ளையாகும்? என வீரப்பனே ஒரு இடத்தில் கேள்வி கேட்பது போல வருகிறது. வீரப்பனை விடுங்கள். அந்த பகுதி மக்களின் வாழ்வதாரத்திற்கு உரிய ஏற்பாடு செய்வது அரசின் கடமை இல்லையா?

படம் வீரப்பன் என்ற கொள்ளையனை பிடித்த ”சாதனை”யை ஒரு ஆவணப் படமாக மாற்றியிருக்கிறார்கள். மற்றபடி, அந்த காட்டை டிரோனில் நன்றாக படம் பிடித்திருக்கிறார்கள். ”Delhi Crime” என தில்லியில் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அரசு தரப்பு கண்ணோட்டத்தில் ஆவணப்படம் எடுத்தவர்கள் தான், இந்த ஆவணப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள். நெட் பிளிக்சில் வெளியாகியிருக்கிறது.

இந்த ஆவணப்படம் பார்த்த பொழுது, சிவில் அமைப்பில் மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் பாலமுருகன் எழுதிய ”சோளகர் தொட்டி” நினைவுக்கு வந்து போனது. அந்த புத்தகம் மக்களின் பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இயக்குநர் வெற்றிமாறன் எடுத்த விடுதலை படத்தின் முதல் பாகத்தின் இடைவேளைக்கு பிறகு வீரப்பன் தேடுதல் வேட்டையில் மக்களை எப்படி வதைத்தார்கள் என்பதை தான் இணைத்திருந்தார் என பரலவாக பேசப்பட்டது.

நீங்கள் பார்த்தீர்களா? என்ன உணர்ந்தீர்கள்?

The Menu (2022)

 


"Do not eat. Taste. Savor. Relish."

"Tonight will be madness."

ஒரு குட்டித் தீவு. அங்கு ஒரே ஒரு பிரபல உணவகம். வேறு யாரும் கிடையாது. அங்கு பிரபல சமையல் நிபுணர் சமைத்து தருகிறார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கட்டணம். இன்னும் தேதி கேட்டு பலர் காத்திருப்பில் இருக்கிறார்கள்.

அப்படித்தான் அன்றைக்கு பத்துப் பேருக்கும் மேலான ஆட்கள் கரையில் காத்திருக்கிறார்கள். உணவகம் ஏற்பாடு செய்துள்ள அந்த இயந்திர படகில் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். அதில் சாப்பாட்டு ப்ரியன் (Foodie) ஒருவன் கடைசி நேரத்தில் தன் காதலி வரமுடியாததால், இன்னொரு பெண்ணை அழைத்து செல்கிறான். ஒரு பெரும் பணக்காரர் தன் துணைவியாருடன் வந்திருக்கிறார். ஒரு பிரபல நடிகர் தன் உதவியாளனியுடன் வந்திருக்கிறார். பிரபல சமையல் விமர்சகரான பெண் ஒருவர், பத்திரிக்கை முதலாளியுடன் வந்திருக்கிறார். ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் மூவர் வந்திருக்கிறார்கள்.


உள்ளே நுழையும் பொழுதே பெயர்களை சரிப்பார்க்கும் பொழுது, அந்த சாப்பாட்டு பிரியன் ஆளை மாற்றி அழைத்து வந்திருக்கிறான் என உணவகத்தினருக்கு தெரிந்துவிடுகிறது.

எல்லோரையும் அழைத்துக் கொண்டு அந்த உள் அரங்கிற்குள் அழைத்துச் செல்கிறார்கள். அந்த பிரபல சமையல் நிபுணர் எல்லோரையும் வரவேற்கிறார். அவருடைய குழு விதவிதமான உணவுகள் சமைப்பதில் மும்முரமாய் இருக்கிறார்கள்.

ஒரு கைத்தட்டு. எல்லோரும் அமைதியாகிறார்கள். அந்த நிபுணர் உணவின் சிறப்பு குறித்து சில வார்த்தைகள் பேசுவார். இப்படி முதல், இரண்டாவது உணவு என இயல்பாக போய்க்கொண்டிருக்கும் பொழுது…. தன் இளம் வயது கதையை சொல்கிறார். ”அப்பா அம்மாவை அடித்து சித்திரவதை செய்வார். அன்றைக்கும் அப்படித்தான். கொஞ்சம் எல்லை மீறி போய்விட்டார். ஒரு கத்திரியை எடுத்தேன். அவரின் தொடையில் குத்தினேன். அந்த வயதில் அவ்வளவு விவரம் தெரியாது. இல்லையெனில், அவர் கழுத்தில் குத்தியிருப்பேன்” என்கிறார். வந்திருப்பவர்கள் கொஞ்சம் ஜெர்க் ஆகிறார்கள். சரி பெரிசு ஏதோ பழைய கதையை பழைய நினைவில் உணர்ச்சியுடன் சொல்வதாக கடந்து போகிறார்கள்.


இதற்கிடையில், பார்வையாளர்கள் மத்தியில் அந்த சாப்பாட்டு பிரியனோடு வந்தவள் மட்டும் தனித்து தெரிகிறாள். அவளை அந்த நிபுணர் யார் என விசாரிக்கிறார். அவள் சொல்ல மறுக்கிறாள்.

அடுத்து ஒரு பெரிய வெள்ளைத் துணியை விரிக்கிறார்கள். சுற்றிலும் பூக்களைக் கொண்டு அலங்கரிக்கிறார்கள். சமைத்துக்கொண்டிருந்த அவருடைய உதவியாளர் ஒரு இளைஞரை அழைக்கிறார். அந்த திரையின் மத்தியில் நிற்கிறார். ”இவர் நன்றாக சமைப்பார். இப்பொழுது சாப்பிட போகும் ஒரு உணவை அவர் தான் சமைத்துள்ளார். ஆனால் நான் அடைந்த உயரத்தை தொட வேண்டும் என நினைக்கிறார். அதற்கு ஒருநாளும் வாய்ப்பில்லை” என்கிறார். அந்த உதவியாளரும் முக இறுக்கத்துடன் ”ஆமாம்” என்கிறார். ”அதனால் இப்பொழுது ஒன்றை செய்யப்போகிறார்” என சொல்லிவிட்டு, நிபுணர் நகர்ந்துவிடுகிறார். உதவியாளர் தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து வாய்க்குள் சுட்டுக்கொல்கிறார். ரத்தம் தெறிக்க மடங்கி கீழே விழுகிறார். அப்படியே அந்த துணியைச் சுருட்டி அள்ளிப்போகிறார்கள். இப்பொழுது பார்வையாளர்கள் அய்யய்யோவென பதறிப்போகிறார்கள். நாம் எக்குத்தப்பாக ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டுள்ளோம் என புரிந்து அலறுகிறார்கள்.

அதற்கு பிறகு அங்கு நடப்பதெல்லாம்… அதகளம் தான். இதற்கிடையில் ஒரு உண்மை தெரிகிறது. சாப்பாட்டு பிரியன் ஆள் மாற்றி அழைத்து வந்தது, ஒரு விலை மாது என தெரிய வருகிறது.

அந்த நிபுணர் ஒரு பக்கா திட்டத்துடன் தான் எல்லாவற்றையும் நடத்தி வருகிறார். அதில் அந்த பெண் மட்டும் எதைச்சையாக மாட்டிக்கொண்டாள். அந்த உணவகத்தில் அடுத்தடுத்து என்ன நடந்தது? அங்கிருந்து எல்லோரும் தப்பித்தார்களா என்பதை பதைபதைப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

****

இது ஒரு கற்பனை கதை தான். அந்த நிபுணர் ஏன் இதையெல்லாம் செய்கிறார் என்பதை முன்கதை பின்கதை என எதையும் விளக்கி சொல்லவில்லை. அந்த நாளில் சாப்பிட வருபவர்களை எல்லாம் எப்படி தேர்வு செய்தார் என்பதையும் விளக்கவும் இல்லை. படத்தின் போக்கில், அவருடைய செயல்கள், பேச்சு மூலம் நாமாக புரிந்துகொள்ள வேண்டியது தான் என விட்டு விட்டார்கள்.

இப்படி புரிந்துகொள்கிறேன். பெரும்பாலோர் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்ய முடியாமல், பிடிக்காத வேலைகளை பிழைப்புகாக செய்துவருகிறோம். பிடித்த வேலைகளை கூட பிடிக்காத இடத்தில் இருந்துகொண்டு செய்துவருகிறோம். ஒரு நல்ல தரமான படத்தில் வேலை செய்யவேண்டும் ஒரு கலைஞர் நினைப்பார். ஆனால், ஒரு குப்பை படத்தில் வேண்டா வெறுப்பாய் வேலை செய்துகொண்டிருப்பார். இப்படியே வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும் பொழுது ஒரு கடும் வெறுப்பு உள்ளுக்குள் இருந்து எழும் அல்லவா! அந்த வெறுப்பில் ஒரு முடிவெடுத்து ஒரு செய்கை செய்தால் என்ன செய்வோம். அதை அந்த நிபுணர் செய்கிறார். அவ்வளவு தான்.

”நாங்கள் ஏன் இப்படி தண்டிக்கப்படுகிறோம்?’ என அந்த பெரும் பணக்காரர். அந்த நிபுணர் கேட்கிறார் ”இங்கு எத்தனை முறை வந்திருக்கிறீர்கள்”. அவர் ”மூன்று நான்குமுறை” என்கிறார். அவருடைய துணைவியார் ’11 முறை’ என திருத்துகிறார். இத்தனை முறை வந்திருக்கிறீர்கள். நாங்கள் ஒவ்வொருமுறையும் என்ன சமைக்கிறோம். அதன் பெயர் என்ன சொல்கிறோம். ’ஒரே ஒரு உணவின் பெயரை சரியாக சொல்லுங்கள்” என கேட்கிறார். அவர் யோசிக்கிறார். யோசிக்கிறார். ம்ஹூம். அவருடைய துணைவியார் எடுத்துக்கொடுக்கிறார். அவரும் தப்பாக சொல்கிறார்.


பிடித்தமானது ஒன்று. ஆனால் செய்வது ஒன்று என இருப்பதை “அந்நியமாதல்” என்பார்கள். உழைப்பில் ஈடுபடுவார்கள். அதில் உயிர்ப்புடன் செயல்படமாட்டார்கள். பெரும்பாலான சமூகமே அப்படித்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. உங்களில் பலரும் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருப்பீர்கள். இதை எப்படி சரி செய்வது? உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள். விவாதிப்போம்.

மற்றபடி படத்தில் நடித்த அத்தனை பேரும் சிறப்பு. அதில் அந்த சமையல் நிபுணர் வெகுச்சிறப்பு. சமையலையும் ரசித்து செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை எல்லாம் ஒத்துழைத்திருக்கிறது.

ஹாட் ஸ்டாரில் இருப்பதாக Just watch தளம் சொல்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

September 5, 2023

Crimson Tide (1995) அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் நடந்த மோதல் கதை


 “அணு உலகில் உண்மையான எதிரி போரே”

- படத்திலிருந்து…!

உலகில் மிக அதிகாரமிக்க பதவி – அமெரிக்க அதிபர்.
உலகில் மிக அதிகாரமிக்க பதவி – இரசிய அதிபர்.
உலகில் மிக அதிகாரமிக்க பதவி – அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் கேப்டன்.
- என்கிற செய்தியுடன் படம் துவங்குகிறது.

ரசியாவில் கிளர்ச்சி நடக்கிறது. கிளர்ச்சிகாரர்கள் ரசியாவின் அணு ஆயுத ஏவுகணை தளத்தை கைப்பற்றுகிறார்கள் எதிரிகளை தாக்கப்போவதாக அறிவிக்கிறார்கள்.

அமெரிக்கா உடனே தனது அணுசக்தி நீர்முழ்கியை தயார்படுத்தி, போர்முனைக்கு அனுப்பிவைக்கிறது. அதில் நாயகன் கேப்டனுக்கு அடுத்த நிலையில் இருக்கிறார்.

ஏவுகணையை ஏவவேண்டும் என்றால்… மேலிடத்திலிருந்து உத்தரவு வரவேண்டும். பிறகு கேப்டன் அனுமதி தரவேண்டும். அடுத்த நிலையில் இருக்கிற நாயகன் அனுமதி தரவேண்டும். ஏவுவதற்கான சூத்திரம் அறிந்த இன்னொரு அதிகாரி ஏவுவார். ஏதொவொரு சூழலில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கும், ஆகையால் கூட்டு முடிவில் அமுலாகவேண்டும் என இந்த ஏற்பாடு அது.

கப்பல் போர்முனைக்கு போய்க்கொண்டிருக்கும் பொழுது, கேப்டன் மற்றவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். நாயகனிடம், ”ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட குண்டுப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என வினவுகிறார். “அது தவறு என நினைத்தால், இங்கு பயணம் செய்துகொண்டிருக்க மாட்டேன்” என்கிறான். அதோடு இல்லாமல், போர் என்பது பெரும் இழப்பு. இரண்டு பக்கமும் சேதாரங்களை விளைவிக்க கூடியது என்ற பொருளில் பதிலளிக்கிறான். இந்த பதில் கேப்டனுக்கு செம கடுப்பாகிறது.

அணு ஆயுத ஏவுகணையை ஏவுவதற்கான உத்தரவு மேலிடத்தில் இருந்து கிடைக்கிறது. ஏவுவதற்கான வேலைகளை துரிதமாக செய்துகொண்டிருக்கும் பொழுது, கப்பல் தாக்கப்படுகிறது. இதில் கப்பலின் சில பகுதிகள் சேதமாகின்றன. அப்பொழுது அடுத்த உத்தரவு வருகிறது. அப்பொழுது கப்பலில் ஏற்பட்ட சேதத்தால் தொலை தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

கேப்டன் முதலில் வந்த உத்தரவை நிறைவேற்றுவோம் என்கிறார். நாயகன் அதில் முரண்படுகிறான். அடுத்து வந்த உத்தரவு என்னவென்று தெரியாமல், ஏவவேண்டாம் என மறுக்கிறான். வாக்குவதம் ஆகிறது. ஒரு கட்டத்தில் கேப்டன் அவனை கைது செய்ய உத்தரவிடுகிறார். ஆனால் கப்பலின் பொறுப்பு அதிகாரி நாயகனின் நிலையை அதிகரிப்பதால், இப்பொழுது கேப்டன் கைது செய்யப்படுகிறார். நாயகன் பொறுப்பேற்கிறான்.

இதற்கிடையில், கேப்டனுக்கு ஆதரவான அதிகாரிகள் ஒன்றிணைந்து கேப்டனை விடுவித்து, அதிகாரத்தை கைப்பற்றும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த முயற்சி வெற்றி பெற்றதா? கேப்டன் அணுசக்தி ஏவுகணைகளை ஏவினாரா? என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இது கற்பனையான படம். ஆனால், உண்மையில் இப்படி சம்பவம் நடந்தால், என்ன நடந்திருக்குமோ அதை கற்பனையாக வடிவமைத்திருக்கிறார்கள்.


ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு சில பத்தாண்டுகள் கடந்தும், அதன் பாதிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ரசியாவின் மீது போட கிளம்புகிறது என்கிற முதல் காட்சியே பதைபதைப்புடன் தான் இருக்கிறது.

இதில் அந்த கேப்டன் உத்தரவு வந்துவிட்டால், உடனே நிறைவேற்றிவிடவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறான். ஆனால் நாயகனுக்கோ ஏவுகணை விழுந்த பிறகு உருவாக்கும் விளைவுகள் அவன் கண்ணுக்கு முன் வந்து நிற்கின்றன. அதனால் அவன் நிதானமாய் செயல்பட நினைக்கிறான். இருவரும் வேறு வேறு பள்ளிகளை சேர்ந்தவர்களாய் இருக்கிறீர்கள் என சக அதிகாரி சொல்லும் பொழுது நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இருவருக்குமான வாக்குவாதத்தில் அந்த தலைமை கேப்டன் ”இங்கு ஜனநாயகத்தை பாதுகாக்க வந்துள்ளோம். அதை நடைமுறைப்படுத்த அல்ல!” (We're here to preserve democracy, not practice it.” ) என அதிகாரத்துடன் அழுத்தமாய் சொல்கிறான்.

இது தான் அமெரிக்காவின் இயல்பு. என்னோடு இல்லையென்றால், நீ எனக்கு எதிரி தான். உலகில் அமெரிக்க செய்த அக்கிரமான போர்கள். அதன் விளைவுகள் எல்லாம் படு பயங்கரம். அப்படி ஒரு நாட்டில் இருந்து… ஒரு படத்தில் இப்படி ஒரு விவாதத்தை செய்திருப்பது ஆச்சர்யம்.

இறுதியில் ஒரு உத்தரவு வரும் பொழுது, படகில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். போர் என்பது எதிரி நாட்டுக்கும் மட்டுமல்ல! எல்லோருக்கும் துன்பம் தான். வரலாற்றில், ஆள்கிறவர்கள் தங்களது லாபத்துக்காக நடத்துவதற்காக நடத்தியவை தான் போர்கள். கடந்த இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடத்திய போர்கள் முதலாளித்துவம் நடத்திய போர்கள் வரலாற்றில் எவ்வளவு மனித உயிர்கள் சேதம். எவ்வளவு பொருளாதார சேதம். மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும் என ஒரு சொலவடை உண்டு. அது போல முதலாளித்துவம் நீடிக்கும் வரை போர் அபாயம் நீடிக்கத்தான் செய்யும். உலகை நேசிப்பவர்கள், அமைதியை விரும்புகிறவர்கள் போரை வெறுக்கிறார்கள். முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டாத வரைக்கும் போர் அபாயம் இந்த உலகுக்கு இருந்துகொண்டு தான் இருக்கும். ஆகையால் அமைதி விரும்புவர்கள் கூட முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டும் வேலையை சிந்தித்தே ஆகவேண்டும். செயல்பட்டே ஆகவேண்டும்.

இதில் வெள்ளையினத்தை சேர்ந்தவர் கேப்டன். அடுத்த நிலையில் இருக்கும் நாயகன் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் இன துவேசம் இன்றைக்கும் நீடித்துக்கொண்டு தான் இருக்கிறது. அது படத்திலும் வெளிப்படும்.

நாயகனாக டென்சில் வாஷிங்டன் சிறப்பான நடிப்பு., கேப்டனாக வருகிற்வர், சக அதிகாரிகள் என எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். Man of fire, Enemy of State, unstoppable இயக்கிய Tony Scott தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

ஒரு பெரும் திமிங்கலத்தைப் போல நகரும் அந்த நீர்முழ்கி கப்பல், கடலுக்குள் தான் பாதிப் படத்திற்கும் மேலே! ஆகையால் தொழில்நுட்பம் சார்ந்தவர்களும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

அவசியம் பார்க்கவேண்டிய படம். யூடியூப்பிலும், ஆப்பிள் சானலிலும் கிடைப்பதாக just watch தளம் தெரிவிக்கிறது.