கேரளாவைச் சார்ந்த ஒரு நாடகக் குழு. ஒரு மேடை நாடகத்தை நிகழ்த்துகிறார்கள். ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு தம்பதியினர் அந்த குழுவை பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விருந்து தர விரும்புகிறார்கள்.
March 22, 2024
Attam (2023) மலையாளம்
கேரளாவைச் சார்ந்த ஒரு நாடகக் குழு. ஒரு மேடை நாடகத்தை நிகழ்த்துகிறார்கள். ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு தம்பதியினர் அந்த குழுவை பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விருந்து தர விரும்புகிறார்கள்.
Kung pu panda (2024)
வழக்கம் போல ஒரு டிராகன் வீரராய், மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி உதவுகிறார். எதிரிகளை வீழ்த்துகிறார் பாண்டா கரடி
Anweshippin Kandethum (2024)
காலம் 90. கோட்டயம். கல்லூரி சென்று திரும்பிய பெண்ணை காணவில்லை. புகார் வருகிறது. நாயகன் துணை ஆய்வாளராக இருக்கிறார். விசாரணையை துவக்குகிறார். ஒரு மத போதகரின் வீட்டு வாசலில் ஒருவர் கடைசியாய் பார்த்ததாய் சொல்கிறார். ஆனால் உள்ளே சென்று விசாரிப்பதற்கு உள்ளூரில் சிலர் தடுக்கிறார்கள்.
Indigo (2023) இந்தோனேசியா பேய் படம்
தங்கள் எட்டு வயது மகளின் கண்களுக்கு மட்டும் தெரியும் உருவம் குறித்து அம்மாவும், அப்பாவும் கவலைப்படுகிறார்கள். மாந்தீரிக வேலைகளில் ஈடுபடும் ஒரு அம்மணியிடம் அழைத்துச் செல்கிறார்கள். இறந்தவர்களை”பார்க்கும்” ஆற்றல் கொண்டவர்கள் இண்டிகோ. உங்கள் மகள் ஒரு இண்டிகோ” என்கிறார்.
March 8, 2024
ரணம் - அறம் தவறேல் (2024)
நாயகன் அடையாளம் அழிந்து, சிதைந்த முகங்களைப் பார்த்து, வரைந்து தரக்கூடிய முக மீட்டுருவாக்க திறமையான வரை கலைஞர். அவர் தரும் ஓவியத்தை வைத்து போலீசு தனது விசாரணையை நடத்துகிறது. கூடுதலாக சுயமாக துப்பறிந்து வழக்கை முடிக்கவும் உதவி செய்கிறார்.
ஒருநாள் போலீசு ஸ்டேசன் வாசலிலேயே முழுவதும் எரிக்கப்பட்ட இரண்டு கால்கள், இன்னொரு ஸ்டேசன் வாசலில் கைகள், இன்னொரு இடத்தில் உடலும் கிடைக்கின்றன. தலையை காணவில்லை. அதற்கு பதிலாக ஒரு முகமூடி மட்டும் கிடைக்கிறது.
யார் செய்தது என விசாரணையை இன்ஸ்பெக்டரும், ஒருபக்கம் நாயகனும் விசாரணை செய்யும் பொழுது, திடீரென நாயகனை போனில் அழைத்து ”இனிமேல் வழக்கை விசாரிக்காதே” என சொல்கிறார். சொன்ன நாளில் இருந்து இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார்.
புதிய பெண் அதிகாரி வருகிறார். இருவரும் விசாரணை செய்துக் கொண்டிருக்கும் பொழுது, நாயகன் தனித்து ஆராய்ந்து முழு உண்மையையும் கண்டறிகிறார்.
ஸ்டேசன் வாசல்களில் கிடைத்தது ஒருவருடைய உடல் பாகங்களா, அல்லது பலருடையதா? ஏன் இந்த கொலைகள்? இதற்கு பின்னால் யார் இருப்பது என்பதை ஒரு உணர்ச்சிகரமான பிளாஷ்பேக்குடன் சுவாரசியமாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
****
நாயகன் வைபவை இங்கொன்றும் அங்கொன்றும் பார்த்த மாதிரி இருக்கிறது. 25வது படம் என்கிறார்கள். ஆச்சர்யம். அவர் குண இயல்புக்கேற்ப (!) அந்தப் பாத்திரமும் பொருந்தி போகிறது. ஆனால், திடீர் திடீரென அவருக்கு அதிர்ச்சி ஏற்படுவது, நரம்பு சுளுக்கி கொள்வது எல்லாம் கதைக்கு அத்தனை பொருந்தி போகவில்லை.
படம் மிஸ்கினின் சேரன் நடித்த ”யுத்தம் செய்” படத்தை நினைவுப்படுத்துகிறது. அதிலும் மக்கள் கூடும் இடங்களில் உடல் பாகங்களை கையாண்டிருப்பார்கள். அதில் மிஷ்கின் உணர்வுப்பூர்வமாய் நன்றாக கையாண்டிருப்பார். இதில் அந்த உணர்வு கிடைக்கவில்லை என்பது தான் படத்தின் பெரிய பலவீனம். நாயகனுக்கு அறிமுகம், ஒரு சண்டைக் காட்சி, ஒரு பாடல் என படத்தின் துவக்க காட்சிகள் இன்னும் சோர்வை ஊட்டுகின்றன.
இன்ஸ்பெக்டர் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை எல்லாம், தனிநபராக நாயகன் கண்டுபிடிக்கிறார் என்பது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா! நந்திதா கொடுத்த பாத்திரத்தை நன்று செய்திருக்கிறார். தன்யா சமாளித்திருக்கிறார்.
அடுத்து ஸ்பாய்லர் அலர்ட். இவ்வளவையும் படித்துவிட்டு படம் பார்க்கும் மன உறுதி கொண்டவர்கள் இத்தோடு நகர்ந்துவிடலாம். மீதி பேர் தொடருங்கள். J
படத்தில் சொன்ன முக்கிய விசயம். இறந்த உடல்களோடு புணர்வது என்பது மிகவும் கேவலம். அது புனிதமான உடல் அல்லவா! இப்படி அறம் தவறி நடக்கலாமா என்பது தான் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷெரீப் சொல்ல வந்த செய்தி. அவருடைய கவலை சரியானது தான்.
இறந்த உடலோடு உறவு கொள்ளுதல் என்பதை மருத்துவ ரீதியாக Necrophilia என பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த பழக்கம் சில நூற்றாண்டு காலமாக நீட்டித்துவருகிறது என வரலாறு சொல்கிறது. இந்த சிக்கலை எதிர்கொள்ள ”அழகான” பெண்கள் இறந்தால், உடலை சில நாட்கள் அழுகவிட்டு, அதற்குப் பிறகு தான் புதைத்திருக்கிறார்கள். சில மன்னர்களுக்கு இந்த கெட்ட பழக்கம் இருந்திருக்கிறது.
திருமணமாகாத பெண்கள் இறக்கும் பொழுது, அப்படியே புதைத்தால், ”நிம்மதி” இல்லாத ஆவியாக அலைவார்கள் என ஒரு குறிப்பிட்ட சமூக வழக்கப்படியே அந்த பெண்ணின் உடலோடு புணர்ந்துவிட்டு, புதைக்கிற/எரிக்கிற பழக்கமும் இருந்திருக்கிறது என்கிற செய்தியை ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள்/பழக்கவழக்கங்கள் நிறைய உள்ள சமூகம் தானே நம்முடையது.
சம காலங்களில், உயிரோடு பாலியல் பலாத்காரம் செய்வது ஒரு வகை கொடூரம் என்றால், கொன்றுவிட்டு அதன்பிறகு உறவு கொள்வதை பல சீரியல் கொலையாளிகள் தொடர்ந்து செய்திருக்கிறார்கள்.
இறந்த உடலை உறவு கொள்ளுதல் தகுமா? ”புனித உடல்” அல்லவா என்று பார்ப்பதை விட, இப்போதைக்கு இரண்டு இடங்கள் தான் அதற்கான வாய்ப்பு. ஒன்று சுடுகாடு. இன்னொரு இடம் மார்ச்சுவரி. இரண்டையும் சிசிடி உட்பட கண்காணிப்பை கடுமையாக்கினால் நிலைமை கட்டுக்குள் வரும்.
சமூகத்தில் உயிரோடு வாழும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத இந்த சமூகத்தில், இறந்த உடல்களைப் பற்றி கவலைப்படுமா இந்த அரசும், இந்த அமைப்பு முறையும் என்பது தான் நமது கவலை.
திரையரங்கில் பிப்ரவரியில் வெளிவந்தது. விரைவில் ஓடிடிக்கு வந்துவிடும்.
Dinosaurs (2023)
இந்தப் படம் நன்றாக இருந்தது என யாரோ எழுத, பார்த்தேன்.
Brave Citizen (2023) தென்கொரியா
ஒரு உயர்நிலைப் பள்ளி. எந்தவித ராக்கிங்கும் நடக்கவில்லை என விருது பெற்ற பள்ளி. ஆனால் அது பெரிய பொய். போலீசு உயரதிகாரி அப்பா, அரசு தரப்பு வழக்கறிஞர் அம்மா என செல்வாக்கு உள்ள அவர்களுடைய மகன் தினம் யாரையாவது தன் குழுவோடு டார்ச்சர் செய்துக்கொண்டே இருக்கிறான்.
March 2, 2024
வயிற்றுவலி தற்கொலை!
தற்கொலைகள் பலவிதம்.
யாருமில்லாமல் சாகலாம்.
எல்லோரும் இருந்தும் சாகலாம்.
’காதலால்’ சாகலாம்.
கடனால் சாகலாம்.
காரணமே இல்லாமல் கூட சாகலாம்.
தற்கொலைகளில்
”வயிற்றுவலி” தற்கொலைதான்
சிறப்பானது.
அடிக்கடி பத்திரிக்கைகளில்
இடம் பெறுபவை.
பெரும் உலகப்புகழ் பெற்றவை.
படிக்கவேண்டும் என சொல்லி
சித்தி ஒத்துக்காததால்
மருந்து குடித்து செத்துப்போனான்
என் நண்பன் குருசாமி.
அவன் ”வயிற்றுவலியால்” தான் செத்தான்
அடுத்தநாள் செய்தி வந்தது.
வாட்டும் கொடிய நோய்
யாருமில்லாத தனிமை
தற்கொலை செய்துகொண்டார்
ஒன்றுவிட்ட மாமா.
அவரும் வயிற்றுவலியால் தான்
என செய்தி வந்தது.
தன் துணையின்
நடத்தை சரியில்லை என நொந்து
தற்கொலை செய்துகொண்டார்
தூரத்து அண்ணா.
உண்மை காரணத்தை
அறிய முடியாமல் போனால்…
அறிந்துகொண்டும் சொல்லாமல் போனால்…
அரசுக்கு சங்கடம் தருமென்றால்
போலீசின் கை “வயிற்றுவலி” என
தயக்கமே இல்லாமல்
தானாக எழுதிவிடும்.
வயிற்று வலியால்… என படித்தால்
என்ன காரணமாக இருக்கும் என
மனம் இப்பொழுதெல்லாம்
ஆராய ஆரம்பித்துவிடுகிறது.
தற்கொலைகளை ஆய்வு செய்தால்
உண்மை காரணம் அறியப்படலாம்.
அதெல்லாம் அறிந்து….?
வயிற்று வலியால்….
சிந்துபாத் கதை போல
நம்மை தொடரத்தான் போகின்றன!