> குருத்து: July 2025

July 9, 2025

பறந்து போவும் ஒரு நினைவும்! – விமர்சனமல்ல


படத்தின் ஓரிடத்தில் சிவாவின் அப்பா ”பையனுக்கு எவ்வளவு பீஸ் கட்ற?” என கேட்கும் பொழுது… ”மூன்றே கால் லட்சம்” என்பார்.

 

***

 

தொழில்முறையில் நடுத்தர வயதில் ஒருவரைத் தெரியும். பெயரைத் தவிர்க்கலாம். தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடை வைத்திருந்தார். துவக்கத்தில் நன்றாக விற்பனை ஆனது. விற்பனை அதிகரிக்க கடன்கள் கொடுக்க ஆரம்பித்தார்.  அதில் இரு நிறுவனங்கள் சில லட்சங்களில் பாக்கி வைத்து ஓடிப்போனார்கள். இன்னும் ஒன்றிரண்டு நிறுவனங்கள் அவர்கள் பெரும் கடன் பாக்கியில் சிக்க, அவர்கள் இவரிடம் பெரிய தொகையாக நிறுத்திவைத்தார்கள். மெல்ல மெல்ல வீழ்ச்சியைச் சந்திக்கத் துவங்கினார்.

 

அவர் கொஞ்சம் பந்தா பேர்வழி. அவருடைய சொந்த அண்ணனின் முன்பு, அவருடைய நண்பர் கிண்டலோடு ஒரு சம்பவத்தைச் சொன்னார். ஒரு நாள் மழை பெய்த பொழுது…. சட்டை நனைஞ்சிருச்சுன்னு… கலர் ப்ளஸ் கடையில் நுழைந்து மூவாயிரத்துக்கு சட்டை வாங்கி, மாற்றிக்கொண்டு கிளம்பினான் என்றார்.

 

அவருக்கு இரண்டு பையன்கள். அவர்களை இண்டர்நேசனல் பள்ளி ஒன்றில் சேர்த்திருந்தார்.  வருடத்திற்கு ஒன்றரை லட்சம் கட்டணம். இரண்டு பையன்களுமே அங்கு படித்தார்கள்.  தொழில் வீழ்ச்சியடைய, அடைய பொருளாதார நெருக்கடியில் சிக்கினார். அதைச் சரிக்கட்ட வீட்டை அடமானம் வைத்து வட்டிக்கு சில லட்சங்களை கடன் வாங்கினார். நிலைமையை சரி செய்யமுடியவில்லை. தொடர்ச்சியான, பிறகு அதிகமான குடிப்பழக்கம் சொந்தங்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் அவர் மீதான மதிப்பையும் குறைத்திருந்தது. அவர் மீள்வதற்கு நிறைய யோசனைகள் அவர் வைத்திருந்தாலும், அவரால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.

 

வருமானம் பெரிதாக உயரவில்லை. செலவுகளை குறைக்கலாமே! பசங்களை வேறு பள்ளியில் மாற்றலாமே! என்றால்… அந்தப் பள்ளி எத்தனை சிறந்தப் பள்ளி தெரியுங்களான்னு நமக்கே பாடம் எடுப்பார். 

 

அவரிடம் பத்து, பதினைந்து நிமிடம் பேசினாலே, எத்தனை உற்சாகம் நம்மிடம் இருந்தாலும்… வற்றி பதட்டமாகிவிடுவோம். ”தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன்னு” என்று தான் ஒவ்வொருமுறையும் முடிப்பார்.

 

இடையில் சில மாதங்கள் அவரைச் சந்திக்கவேயில்லை. அவருடைய தொழில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அந்தப் பக்கம் போகும் பொழுதெல்லாம், கடை அடைத்தே கிடக்கும்.

 

வேறு ஒருவர் அவர் நலம் குறித்து விசாரித்தப் பொழுது சொன்னார். “தீபாவளிக்கு முதல்நாள் இருவருக்கும் சண்டை வந்து… இவர் தண்ணியடித்து எழ முடியாத அளவிற்கு தூங்க…. அன்று இரவில் அவருடைய துணைவியார் தூக்கு மாட்டிக்கொண்டு, இறந்துவிட்டார். இவர் மீது சந்தேகம் கொண்டு வழக்கு நடந்தது அவருடைய மூத்தப் பையன்  நடந்ததை சொன்னதால்… அவர் வழக்கிலிருந்து மீண்டார்” என்றார்.

 

அடுத்த சில மாதங்களுக்கு பிறகு அவரையேச் சந்தித்தேன். நடந்த விசயங்கள் குறித்து அவரே புலம்பியபடி சொன்னார். இப்பொழுது இரண்டு பசங்களும் தன்னுடைய மாமானார் வீட்டில் வளர்கிறார்கள். அவர்களை நாங்கள் நன்றாக கவனித்துக்கொண்டது போல கவனித்துக்கொள்வதில்லை என மிகவும் விசனப்பட்டார்.  சில மனிதர்கள் அப்படித்தான் போலிருக்கிறது!

கண்ணப்பா (2025)


வேடர் குலத்தைச் சார்ந்த தலைவருக்கு மகனாக பிறக்கிறான் நாயகன் திண்ணன். அவர்களிடத்தில் காளி வழிபாட்டில் பலி கொடுக்கும் வழக்கத்தில்அதில் நாயகனின் நண்பனை பலிகொடுக்கும் பொழுது, கடவுள் வழிப்பாட்டையை எதிர்க்கிறான்.

 

அங்கு ஒரு தனிக்காட்டில் வாயு லிங்கத்தை வைத்து தான் மட்டும் சடங்குகள் செய்து வழிபாட்டு வருகிறார் வேதங்களைக் கற்றுத் ”தேர்ந்த” சாஸ்திரி.  வாயு லிங்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதைக் கைப்பற்ற வருகிறான் காளா முகி என்ற பெரும் படைக்குத் தலைவன்.

 

பிரிந்துக் கிடக்கும் ஐந்து வேடர் குழுக்களும் ஒன்றாய் இணையவேண்டிய நெருக்கடி வருகிறது. நாயகனின் காதலால், ஒற்றுமையில் குழப்பம் வருகிறது. மகனைத் தள்ளி வைக்கிறார்.

 

காளா முகி வந்தானா? திண்ணன் தான் கண்ணப்பனா? என்ற கேள்விக்கு ஆக்சன், பக்தி என கலந்து கட்டி தந்திருக்கிறார்கள்.

 

***


சிவனின் திருவிளையாடல்களை 63 நாயன்மார்கள் கதையை விரிவாக சொல்கிறது பெரிய புராணம்.  அதில் ஒருவர் கண்ணப்ப நாயனார். ஆகம முறைப்படி சடங்கு சம்பிராயதங்களுடன் வழிபாடும் சிவகோசாரியார், வேடன் குலத்தைச் சேர்ந்த திண்ணன் சிவன் மீது கொண்ட பேரன்பினால், தான் சாப்பிட்டும் கறியைப் படைத்து, லிங்கத்தின் கண்ணீல் ரத்தம் வடிய, தன் கண்ணைக் கிழித்து தந்த கண்ணப்பன் கதையை கேள்விப்பட்டிருப்போம்.

 

கண்ணப்பர் பிறந்த இடம் ஆந்திராவின் காளஹஸ்தி என இருப்பதால், தெலுங்குகாரர்கள் அந்த கதையை எடுத்துக்கொண்டு…. அதைச் சுற்றியும் கற்பனையாய் கதையை அமைத்து இந்திய அளவில் அக்சய் (சிவன்)  – காஜல் (பார்வதி), சரத்குமார் (நாயகனின் அப்பா), மோகன்லால், மோகன்பாபு, பிரபாஸ் போன்ற நட்சத்திரங்களையும் நடிக்க வைத்து பான் இந்தியா படமாக இயக்கியிருக்கிறார் முகேஷ் குமார் சிங்.  நாயகனான விஷ்ணு மன்சு கதை, திரைக்கதையும் சேர்த்து எழுதியிருக்கிறார். திருச்சியைச் சார்ந்த ப்ரீத்தி நாயகியாக நடித்திருக்கிறார்.  எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதே போல தொழில்நுட்ப குழுவும்.

 

வில்வித்தையில் வீரனான் திண்ணனை அர்ஜூனின் அடுத்தப் பிறப்பு என்கிறார்கள். அதுவும் கற்பனை தான். 

 

தமிழ் மொழிமாற்றம் சிறப்பாக இருக்கிறது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் ஓடிடிக்கு வரும்.

Sitaare Zameen Par (2025) இந்தி


தில்லியில் ஒரு கூடைப்பந்து உதவி பயிற்சியாளர். காதல் திருமணம் முடித்திருந்தாலும், அப்பா சின்ன வயதில் விட்டுப் போனதால், குழந்தைப் பெற்றுகொள்வதைத் தவிர்க்கிறார். துணைவியார் வலியுறுத்துவதால், தன் அம்மா வீட்டுக்கு வந்து இருக்கிறார்.

 

கோபத்தால், தனது மேலாதிகரியான முதன்மை பயிற்சியாளரை மைதானத்தில் வைத்தே அடித்துவிடுகிறார். தண்ணியைப் போட்டு, போலீசு வண்டியை இடித்ததில், நீதிமன்றத்தில் வந்து நிற்கும் பொழுது, அங்கும் எசகு பிசகாக பேச, அவருக்கு தண்டனைக்கு பதிலாக ஒரு வாய்ப்பாக அறிவுசார் சவால் உள்ள (intellectually challenged) நபர்களின் குழுவிற்கு மூன்று மாத காலம் பயிற்சி கொடுக்க உத்தரவிடப்படுகிறார்.

 

அந்த குழுவின் இயல்புகள் மீது ஒரு ஒவ்வாமை இருந்தாலும், அவர்களின் பலங்களையும் மெல்ல மெல்ல புரிந்துகொள்கிறார். அவர்களோடு ஒன்றத் துவங்குகிறார். அதற்கு பிறகு அந்தக் குழு போட்டிகளில் வெல்லத் துவங்குகிறது. 

 

அதில் உள்ள சவால்கள் என்ன? அவர்களிடமிருந்து பெற்றது என்ன என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

***



Champions என ஒரு ஸ்பானிஷ் மொழியில் 2008ல் ஒரு படம். அந்தக் கதையை வாங்கி, இங்குள்ள நிலைமைக்கு சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் தேடி, இன்னும் சில காட்சிகளை மெருகேற்றியிருக்கலாம் என எனக்குப் பட்டது. இறுதிக் காட்சி நெகிழ்ச்சியானது.

 

ஒரு பெரிய நாயகன் என்ற பிம்பத்தை முன்நிறுத்தாமல், கதைக்கு தேவைப்படுகிற நாயகனாக மட்டும் அடக்கி வாசித்திருக்கிறார் அமீர். ”நான் ஒண்ணும் குள்ளம் இல்லை. சராசரி உயரம் தான்” என வாதாடுகிறார்.

 

கொஞ்சம் லூசான பாத்திரங்களாக செய்திருந்த ஜெனிலியா, நிதானமான நாயகியாக வருகிறார். மகிழ்ச்சி.

 

மற்றபடி இந்தப் படத்தின் நாயகர்கள் அந்தக் குழு தான்அவர்களின் இயல்பான வாழ்வில் உள்ள அம்சங்களையும் காண்பித்தது நன்றாக இருந்தது. படத்தைக் காப்பாற்றுவது அவர்கள் தான்.  சரசாரி இயல்பு கொண்ட உள்ள மனிதர்களே இங்கு வாழ்வதற்கு அத்தனை சிரமப்படும் பொழுது, இப்படி சிறப்பியல்புகள் கொண்ட மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பெரிய யோசனையாக இருக்கிறது. அவர்களின் குடும்பங்களும், கரிசனத்துடன் அணுகக்கூடிய சக மனிதர்களும் இருக்கிறார்கள் என படத்தில் சொல்லப்படுவது பெரிய ஆறுதல்.

 

பிரசன்னா இயக்கியிருக்கிறார். இசை ஷங்கர் - எஷான் – லாய். பாடல்கள் சிறப்பு.

 

அரைத்த கதைகளையே அரைக்காமல், இப்படி சில சிறப்பான பேசப்படாத, அவசியம் பேசவேண்டிய சிலருடைய வாழ்க்கையின் பகுதியையும் எடுப்பது எப்பொழுதுமே சிறப்பு.

 

திரையரங்குகளில் ஓடிய பொழுது பார்த்தேன். தமிழ் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். விரைவில் ஓடிடிக்கு வரும். பாருங்கள்.