> குருத்து: 2022_30 புத்தகங்கள்
Showing posts with label 2022_30 புத்தகங்கள். Show all posts
Showing posts with label 2022_30 புத்தகங்கள். Show all posts

January 3, 2023

தூக்கு மேடை குறிப்புகள்


 “மக்களே! உங்கள் எல்லோரையும் நான் நேசித்தேன்… உஷாராக இருங்கள்”

- ஜூலியஸ் பூசிக்
***

இரண்டாம் உலகப்போர் காலகட்டம். இட்லர் நாடுகளை எல்லாம் போர் தொடுத்து தன் ஜெர்மனியின் ஆளுகைக்குள் கொண்டு வந்த காலம். செக்கோஸ்லோவியாவையும் அவன் பிடித்தான். ஏற்கனவே இருந்த அரசு கம்யூனிஸ்டுகளை ஒடுக்கிக்கொண்டிருந்தார்கள். ஜெர்மன் படைகள் இன்னும் தீவிரமாய் கம்யூனிஸ்டுகளை வேட்டையாட துவங்கியிருந்தார்கள்.

ஒரு வீட்டில் ஜூலியஸ் பூசிக்கும் உடன் இருந்த தோழர்களும் கொலைகார ஜெர்மன் படையால் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் சித்திரவதை. மேலும் சித்திரவதை. எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார்கள். இன்னும் புதிய தோழர்கள் சிறைக்குள் வந்து சேர்கிறார்கள். யார் அந்த துரோகி என கணித்துவிடுகிறார். ஒரு சமயத்தில் அவருடைய அன்பு துணைவியாரை அழைத்து வந்து யார் என கேட்கிறார்கள். தெரியாது என்கிறார்.

சிறை அனுபவங்களையும், தனது எண்ணங்களையும், சிறைக்காவலரிடம் குறிப்புகள் எழுதி தருகிறார். செப்டம்பர் மாதம் எட்டாம் நாள் 1943, பெர்லினில் பூசிக் தூக்கிலிடப்படுகிறார்.

அவருடைய துணைவியார் கைகளில் அந்தக் குறிப்புகள் கிடைத்து புத்தகமாக வெளியே வந்தது. உலகத்தின் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து, இன்றைக்கும் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது.

பூசிக் பத்திரிக்கை ஆசியராக இருந்தவர். அதனால் அவருடைய எழுத்து அத்தனை கூர்மை. வாசிக்க துவங்கினால், கீழே வைக்க முடியாத அளவிற்கு எழுதியிருப்பார். தமிழில் இஸ்மத் பாஷா அதே உணர்வுகளை அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம்.

மொழிபெயர்ப்பாளர் : இஸ்மத் பாஷா

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

பக்கங்கள் : 128

விலை : ரூ. 125

கழிவறை இருக்கை


”பண்ணும் தொல்லைகளெல்லாம்

துன்ப வாதை செய்கிறதே
இன்னும் தொல்லைகள் செய்ய
பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே
திறக்காத ஜன்னல்கள் எல்லாம்
திடுக்கிட்டுத் திறக்கிறதே
எனக்குள்ளும் இத்தனை அறையா
எனக்கின்று புரிகிறதே
மழையில் தலைசாயும்
இலையின் நிலைபோல
எனதுயிர் உன்வசம் ஆனதே.”
- ”வர்மா” படத்தில் இருந்து…

புத்தகத்தில் காதல், காமம், சுய இன்பம், திருமணம், நட்பு, ரகசியம், ஆண் அகந்தை, பாலியல் கல்வி, சமூக கட்டமைப்புகள், நல்ல உறவிற்கான சில விதிமுறைகள், காதல் மற்றும் காமம் குறித்தான கட்டுக் கதைகள் என 32 கட்டுரைகளில் தொகுத்து எழுதியுள்ளார்.

பாலியல் குறித்து ஏதாவொரு மருத்துவர் தொலைக்காட்சிகளில் பேசினால்… பார்வையாளர்களிடம் பத்து கேள்விகள் கேட்டால்.. அதில் ஒரு கேள்வி சுயமைதுனம் செய்வது செய்வது சரியா சார்? என்கிற மிக மிக அடிப்படை கேள்வியாக இருக்கும். காமம் குறித்த நம் புரிதல் அவ்வளவு தான்.

நமது ஆண், பெண் உறவுகளில் ஆதிக்கம் நீடிக்கும் வரைக்கும் காமம் என்பது ஒரு தலை காதல் போல ஒரு தலை காமம் தான். நம் சமுதாயத்தில் காமம் என்பது இன்றளவும் உடல் ரீதியான ஒன்றாக மட்டுமே கருதப்படுகிறது. சமீபத்தில் பார்த்த டாக்டர் ஜி படத்தில் மருத்துவராக இருந்தாலும், அவன் ஆண் என்ற ஆதிக்க உணர்வில் இருப்பதால், பெண்களின் உணர்வுகளை அவனால் புரிந்துகொள்ளவே முடியாது. அவன் சுற்றி உள்ள பெண்களால் மெல்ல மெல்ல எப்படி நேர்மறையில் மாறுகிறான் என்பது தான் கதையே!. டாக்டருக்கே இது தான் நிலைமை.

காமம் குறித்தான அனைத்து பார்வைகளையும் ஆசிரியர் விளக்குகிறார். பல அறிஞர்களின் ஆராய்ச்சிகளை மேற்கோள்காட்டி அறிவியல் ரீதியாகவும் பேசுகிறார். நம் சமுதாயத்தில் நடக்கும் அவலங்களுக்கு காரணங்களை கூறுவதோடு, தீர்வையும் முன்வைக்கிறார். பெண்ணியப் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும் ஆண்களை மட்டும் விமர்சனம் செய்யாமல் பெண்களையும் சில இடங்களில் விமர்சனம் செய்கிறார். மேலும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் எவ்வாறெல்லாம் நடக்கிறது என்பதையும், ஆண்கள் எதனால் தவறிழைக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.

சமீபத்தில் டாக்டர் G என படத்தில் இன்னொரு காட்சி. குழந்தை இல்லை என ஒரு தொழிலாளி தம்பதி மருத்துவரை சந்திக்க வருவார்கள். ஒரு வருடத்திற்கு இத்தனை முறை உறவு கொண்டே என சொல்லி… இன்னும் கர்ப்பமாகவில்லை என கணவன் சொல்வான். மனைவி ஏதோ சொல்ல வருவாள். ஆனால் தயங்குவாள். பிறகு ஒரு பேப்பரில் எழுதி கசக்கி தூக்கி எறிந்து மருத்துவருக்கு கண் காட்டிவிட்டு செல்வார். படித்துப் பார்த்தால், அவர் தப்பான பாதையில் செய்கிறார் என இருக்கும். இதுதான் நம்முடைய இந்திய நிலைமை.

உறவுகளில் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒரு உறவு என்றால் நண்பர் என்பது பொதுபுரிதல். ஆனால் அவர்களிடம் கூட காமம் குறித்த தனிப்பட்ட சந்தேகங்களை, குழப்பங்களை விவாதிக்கிறோமோ என்றால் இல்லை. இதை எப்பொழுது நினைத்தாலும் ஆச்சர்யமாய் இருக்கும். இன்னும் நிறைய பேசலாம். இன்னொருமுறை விரிவாக பேசுவோம்.

புத்தகத்தின் வடிவமைப்பு அருமையாக இருந்தது. இப்படி ஒரு அழகான வடிவமைப்பில் இந்தப் புத்தகம் வெளிவந்தது மிகச் சிறப்பு. தலைப்பை மாற்றி வைத்திருக்கலாம். இன்னும் நிறைய பேரிடம் சென்றிருக்கும்.

ஆசிரியர் லதா தொடர்ந்து எழுதவேண்டும். அவருக்கு நமது நன்றிகள்.

ஆசிரியர்: லதா
பக்கங்கள்: ரூ 225
வெளியீடு: நோராப் இம்பிரிண்ட்ஸ்

வாசிப்பது எப்படி?


கடந்த ஆண்டு பிக்பாசை கமல் வரும் சனி ஞாயிறுகளில் மட்டும் கவனித்து வந்தேன். கமல் ஒரு வாரம் இந்தப் புத்தகத்தை கவனப்படுத்தியிருந்தார். அப்பொழுதே வாங்கிப் படித்து பாதியில் நிறுத்தியிருந்தேன். வேறு திசை மாறி போனதில் மறந்துவிட்டேன். இப்பொழுது வேறு ஒன்றை தேடும்பொழுது இந்தப் புத்தகம் கண்ணில்பட்டது. எடுத்து முடித்துவிட்டேன்.

படிப்பதினால் என்ன பயன் என்பதை பல்வேறு கோணங்களில், கோபித்து, சாந்தமாகி என பல்வேறு உணர்ச்சி நிலைகளிலும் எழுதியிருந்தார். ”பதின்பருவத்திற்கான வாசக வழிகாட்டி” என கொடுத்திருந்தார். இந்தப் புத்தகம் அவர்களுக்காக என சொன்னாலும், படித்து முடித்தப்பின் இந்தப் புத்தகம் அவர்களால் படிக்கமுடியுமா என கேட்டுக்கொண்ட பொழுது இல்லை என்று மட்டும் என் மனதில் பட்டது.

சமூக அக்கறை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் சில புரிதல்களை உருவாக்கும். இளம் பருவத்தினரிடம் கொண்டு செல்வதற்கு ஒரு உத்வேகத்தைத் தரும் என சொல்வேன்.

நம் ஊரில் நடுத்தர வர்க்கம் அரசு பள்ளிகளை விட்டு நகர்ந்து, இங்கிலீஷ், இந்தி வழி படித்தவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி மூன்றிலுமே தெளிவில்லாமல் இருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே பள்ளியில் படித்த என் நண்பனின் நண்பனுக்கு ”தாய்” நாவலை அவனால் படிக்க முடியவில்லை. நான் வாசித்து காண்பித்தது நினைவுக்கு வருகிறது.

போன தலைமுறை தான் எழுத்தை வாசிக்கிற தலைமுறையாக இருக்கிறது. இப்போதைய தலைமுறை காட்சி வழி தலைமுறையாக இருக்கிறது. எங்கள் வீட்டில் என் பொண்ணுக்கு படிப்பதற்கு உற்சாகப்படுத்தினோம். ஆனாலும் காட்சி வழியாக அதாவது எங்களோடு சர்வதேச அளவில் பல்வேறு மொழிப்படங்களை பார்க்க கற்றுக்கொண்டாள். படிப்பது அவளுக்கு உவப்பாக இல்லை.

என்ன உற்பத்தி முறை சமூகத்தில் நிலவுகிறதோ, அது தான் பண்பாடாகவும் மக்களிடத்தில் படிகிறது. நிலவுவது முதலாளித்துவ உற்பத்தி முறை கூட அல்ல! நிதி மூலதன ஆதிக்க கும்பல்கள் தான் உலகை வழிநடத்துகிறார்கள். அதனால் தான் பொருளாதாரம், அரசியல், பண்பாடு துறைகளில் எல்லா விழுமியங்களையும் தூக்கிபோட்டு மிதிக்கிறார்கள். அதை சரி செய்ய முயலாமல், நாம் வெறுமனே கவலைப்படுவது என்பது வெறும் புலம்பலாக தான் முடியும். இது தான் என் புரிதல்.

இன்னும் கொஞ்சம் விரிவாக படிக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு கட்டுரையை பின்னூட்டத்தில் பரிந்துரைக்கிறேன். படித்துப் பாருங்கள்.

கடந்த ஆண்டு அபிலாஷ் சந்திரன் எழுதிய ”ஏன் வாசிக்கவேண்டும்?” என்ற புத்தகம் இந்தப் புத்தகத்தின் தொடர்ச்சி என எடுத்துக்கொள்ளலாம். இந்த புத்தகத்தை வாசித்தவர்கள் அடுத்து அந்தப் புத்தகத்தை படிக்க பரிந்துரை செய்கிறேன்.

நண்பர் ஒருவர் சமீபத்தில் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். கமல் பரிந்துரைத்தாகவும் சொன்னார். இந்த பிக்பாசிலுமா சொன்னார் என கேட்டதற்கு, “இது தாங்க நம்ம டக்கு” என்றார். :)


- ஆசிரியர் செல்வேந்திரன்

விலை ரூ. 100



அதிகாலையின் அமைதியில் - நாவல்


“ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், இவர்கள் மனிதர்கள் அல்ல, மக்களும் அல்ல, விலங்குகளும் அல்ல, பாசிஸ்டுகள். ஆகவே, இவர்களை இந்த நோக்கோடு பார்.”

- நாவலிலிருந்து…
****

சோவியத் ரசியா. ஏகாதிப்பத்தியங்கள் தங்களுக்குள் நாடு பிடிக்கும் போட்டி தான் இரண்டு உலகப்போர்களுமே. தோழர் ஸ்டாலின் இரண்டாம் உலகப் போரில் இருந்து ரசியாவை காக்கவேண்டும் என பல வழிகளில் முயன்றார். ஆனால், வளர்ந்த ஏகாதிப்பத்திய நாடுகள் இட்லரை ரசியாவிற்குள் திருப்பிவிட்டார்கள். இந்த போரில்ன் ரசியா, ஜெர்மனி இரண்டு பேரும் ஒழிந்தாலும் நல்லது. யாராவது ஒரு ஆள் ஒழிந்தாலும் நல்லது என கணக்குப் போட்டார்கள். 1942 காலக்கட்டத்தில் போரின் பின்னணியில் உள்ள ஒரு களம் தான் இந்த நாவல்.

எல்லையோர காவல் படை அது. ஐந்து பெண்கள், ஒரு ராணுவ தளபதி என மொத்தம் ஆறு பேர். அவர்களிடம் இருக்கும் துப்பாக்கிகளும் மிக சாதாரணமானவை. நம்மூரைப் போல பட்ஜெட்டில் பெரும் பகுதியை இராணுவத்துக்கு எல்லாம் ஒதுக்குவதில்லை. போர்க்காலம் வேறு.

ஆறு பேரும் ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். ரஷ்யாவில் அழிவு வேலையைச் செய்வதற்காக , சக்தி வாய்ந்த வெடி குண்டுகளுடன், துப்பாக்கிகளுடன் ஜெர்மானியர்கள் ஒரு குழுவாக காட்டு வழியே ரஷ்யாவுக்குள் ஊடுருவுகின்றனர். அவர்களை சாதாரண ஆயுதங்களோடு இருந்த இந்த ஆறு பேரும் தடுத்து நிறுத்தினார்களா என்பது தான் முழு நீளக்கதையும்.

போரில் ரசியா இரண்டு கோடி பேரை இழந்து, உலகத்தை இட்லர் என்ற பாசிஸ்டிடம் இருந்து காத்தது. இந்த நாவலில் வரும் எளிய பின்னணியில் வந்தவர்கள் தான் தங்கள் உயிர்களை கொடுத்து, உணர்வோடு போரிட்டார்கள். அதனால் தான் பல கோடிகளை இராணுவத்திற்கு கொட்டி நவீன படைகளை வைத்திருந்தாலும் ஜெர்மன் இட்லர் தோற்றான்.

அருமையான நாவல். இந்த கதையை எடுத்துக்கொண்டு தான், இயக்குநர் ஜனநாதன் ”பேராண்மை” படத்தை எடுத்தார். படம் வணிக சமரசங்களுடன் எடுக்கப்பட்டிருக்கும். பெரிய வெற்றி பெற்றது.

ரஷ்ய மொழியில் ”The Dawns are quiet here” (விடியல்கள் இங்கே) என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது.

நல்ல உணர்வுப்பூர்வமான நாவல். படியுங்கள்.

ஆசிரியர் : பரீஸ் வஸீலியெவ்

தமிழில் : பூ. சோமசுந்தரம்

பக்கங்கள் : 100

விலை : ரூ. 160
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

January 1, 2023

காடோடி – நாவல்


மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பரை சந்திக்கும் பொழுது, இந்த நாவலைப் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். கையோடு இரவல் வாங்கி படித்துவிட்டேன். அழுத்தமான பதிவு.

மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் போர்னியா மழைக்காடுகள் பசுமையாய் இருந்திருக்கின்றன. ஒரு வெட்டுமர முகாமில் வேலை செய்தபோது நிகழ்ந்த அந்த காட்டையே அழிப்பை கண்ணெதிரே பார்த்து, அதை நமக்கு தந்துள்ளார்.

அவதார் படத்தில் அந்த பெரிய மரம் சாயும் பொழுது, அந்த பண்டோரா பழங்குடி மக்களின் ஓலம் நம்மை உலுக்கும். இந்த காட்டில் லட்சகணக்கான மரங்கள் அப்படி சாய்க்கப்பட்டன என படிக்க படிக்க பதறுகிறது.

”காடு எவ்வளவு விந்தையானது என்றால், அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது” என அவன் காட்டை வென்றான் நாவலில் வரும் பாத்திரம் சொல்லும். இந்த காட்டில் எத்தனை விதவிதமான மரங்கள், பூக்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் பற்றி பல குறிப்புகளையும், அதன் மருத்துவ குண நலன்கள் பற்றியும் போகிற போக்கில் நிறைய சொல்லி செல்கிறார். ஓமர், யோகன்னா, பிலீயவ், ஜோஸ் என நினைவில் நிற்கும் பாத்திரங்கள்.

மரம் என்றால், அது இலைகள் அல்ல, பூக்கள் அல்ல, காய்கள் அல்ல, கனிகளும் அல்ல, ஏன் அது மரமே அல்ல. மரம் என்றால் அது வெறும் டாலர் டாலர் டாலர் மட்டுமே! என ஓரிடத்தில் வரும். டாலருக்காக இப்படி எத்தனையோ காடுகளை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள் கார்ப்பரேட் கம்பெனிகள். அதனால் வரும் பருவ மாற்றத்தினாலேயே உலகம் ஏகப்பட்ட பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது. உலகை சிதைக்கும் கார்ப்பரேட்டுகளை எதிர்த்து போரிடாமல் எதையும் காப்பாற்ற முடியாது.

ஆசிரியர் : நக்கீரன்
வெளியீடு : காடோடி பதிப்பகம்
பக்கங்கள் 312
விலை : ரூ. 300

பெரியாரின் குட்டிக் கதைகள்


பெரியார் தன் எழுத்தில், பேச்சில் சொன்ன குட்டிக் கதைகளை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். பெரும்பாலான கதைகள் மூட நம்பிக்கைகளை, கடவுளர் கதைகளை கேள்வி எழுப்புகிற பகுத்தறிவு கதைகள், பொய் வாக்குறுதிகள் தரும் தேர்தல் கட்சிகளை, சமகால சம்பவங்களை கேலி, கிண்டல் செய்கிற கதைகளாக இருக்கின்றன.


ஒரு வயதான பார்ப்பன வக்கீல் இருந்தாராம். அவருக்கு நிறைய பெண் பிள்ளைகள். ஒரு பையனாம். தன்னுடைய வருமானத்தில் ஒவ்வொரு பெண்ணாக திருமணம் முடித்துக்கொடுத்துவிட்டாராம். கடைசிப் பெண் மட்டும் இருந்தாளாம். ஒரு நாள் உடல் நிலை முடியவில்லை. தன் வக்கீல் மகனிடம் கேசு கட்டை கொடுத்து ”போய், வாய்தா வாங்கிவா!” என்றாராம். அவன் போய் வந்து, ”பல நாட்கள் இழுத்த கேசை நான் ஜெயித்து வந்துவிட்டேன்” என பெருமையாய் சொன்னானாம். அவர் பதறி ”உன் கடைசி தங்கச்சியை இந்த வழக்கை வைத்து தாண்டா கரையேத்தலாம் என நினைச்சேன். காரியத்தை கெடுத்திட்டியே!” என்றாராம்.

சுருட்டுப்பாயும், முரட்டு பெண்டாட்டியும்!

ஒரு சுருட்டுப்பாயும், முரண்டு பிடிக்கிற பெண்டாட்டியும் இருந்தார்கள். அவளை கையைப் பிடித்து அழைத்து வந்தால் பாய் சுருண்டுகொள்ளுமாம். பாயை சரி செய்து, பொண்டாட்டிப் பார்த்தால் எங்கேயோ இருப்பாளாம். இந்த போராட்டத்திலேயே விடிந்தும்விட்டதாம். அப்படி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்த பேச்சுவார்த்தையை கிண்டலடித்திருக்கிறார்.

தேர்தலில் நிற்க தான் திமுக திகவை விட்டு பிரிந்தது. இப்பொழுது தேர்தலுக்கு வந்துவிட்டது பார்த்தீர்களா என கேலி செய்திருக்கிறார்.

பார்ப்பன வக்கீல் தனது சாதிக்காரனான நீதிபதியைப் பார்க்கும் பொழுது கெஞ்சுவார்களாம். “தீர்ப்பு என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள். அதைச் சொல்லும் பொழுது உன் வக்கீல் மூஞ்சிக்காக தான் இவ்வளவோடு விட்டேன் என சொல்லுங்கள். நான் பிழைத்துக்கொள்வேன்.”

1920 லிருந்து 1970 வரைக்குமான கால வரிசையில் பல கதைகள் இப்படி இருக்கின்றன. படியுங்கள்.

தொகுத்தவர் : புலவர் நன்னன்

பக்கங்கள் : 92

விலை: ரூ. 30

எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை - ஜென்னி


ஜென்னி வான் வெஸ்ட் பாலன் 1814 ஆம் ஆண்டு பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். ஜெர்மன் மொழி இலக்கியத்தில் வல்லுநர். யூத குடும்பத்தில் பிறந்த காரல்மார்க்சை காதலித்தார். நான்கு ஆண்டுகள் வயது குறைந்தவரான மார்க்சை சிறு வயதிலிருந்தே காதலிக்க தொடங்கி விட்டார். ஆறு ஆண்டுகள் காத்திருந்தார். பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.


வறுமையில் வாழ்க்கை நகர்ந்தாலும் மார்க்சுடன் இருப்பதே பெரிய மகிழ்ச்சி எனக் கருதினார். மார்க்சு எழுதியவைகளை படித்துப் பார்த்து யோசனை தருவது, சொன்னபடி எழுதி செப்பனிடப்பட்ட எழுத்துக்களை திருத்தமாக படி எடுத்து காரல் மார்க்சுக்கு தருவது, குடும்பத்தை கவனிப்பதுமாய் இருந்தார்.

மார்க்சின் எழுத்து ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தியது. நாட்டை விட்டு வெளியேற சொன்னார்கள். வெளியேறினார். அவரை பிரியாது ஜென்னியும் குழந்தைகளுடன் உடன் செல்வார். மொத்தம் ஏழு குழந்தைகள். அதில் நான்கு குழந்தைகள் இறந்துபோயின. குழந்தையை புதைக்க கூட பணம் இல்லாமல், ஒரு அறையில் குழந்தையின் உடலை வைத்துவிட்டு, மறு அறையில் மற்ற குழந்தைகளுடன் அழுதுகொண்டிருந்தனர். எட்டு வயது மகனாகிய எட்கர் இறந்தது அவர்கள் இருவரையும் கடுமையாக உலுக்கியது.

”எனது மிகவும் சந்தோஷமான நாட்கள் மார்க்ஸ் எழுதும்பொழுது உதவிய நாட்களே!” ஜென்னி அந்த அளவிற்கு மார்க்சை விரும்பினார். வறுமை வாட்டிய பொழுதிலும், தனது இறுதிநாள் வரை மார்க்சுடன் ஜென்னி உடனிருந்தார்.

ஆசிரியர்: ஜென்னி மார்க்ஸ்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
பக்கங்கள்: 60
விலை: ரூ.40.00

காந்தி கொலை வழக்கு


நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினர். மற்ற இந்துத்துவ அமைப்புகளில் நெருக்கமாக இருந்துள்ளான். திருமணம் செய்துகொள்ளவில்லை. (அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்ற விதி இருந்தது. பின்னாட்களில் ஊழியர்கள் மேல் பாலியல் பிரச்சனைகள் எழுந்ததால், திருமணம் செய்துகொள்ளலாம் என விதியை திருத்தினார்கள்.)


சாவர்க்கரின் ஆசியில் மராத்தி மொழியில் “அக்ரணி” (முன்னோடி) என ஒரு இதழை நடத்தியுள்ளான். அந்த காலக்கட்டத்திலும் வதந்தி, அவதூறு செய்திகளை பரப்பவே, அரசு தடை செய்துள்ளது. உடனே “இந்து ராஷ்டிரா” என புதிய இதழை துவங்கியுள்ளான்.

கோட்சே போன்ற இந்துத்துவ அடிப்படைவாதிகள் என்ன செய்தாலும் மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு பெறமுடியவில்லை என்பது பெரிய மன உளைச்சலாகவே இருந்துள்ளது. இந்தியாவில் காங்கிரசுக்கும், காந்திக்கும் உள்ள செல்வாக்கு பெரிய எரிச்சலை கொடுத்திருக்கிறது. இரண்டாம் உலக்ப்போர் நடந்த சமயம், சாவர்க்கர் பிரிட்டிசாரிடம் நல்ல பெயர் எடுக்க தனது இந்துத்துவ விசுவாசிகளை பிரிட்டிஷ் படையில் சேர்த்துவிட்டிருக்கிறார்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து… பிரிட்டிஷ் வெளியேற இருக்கும் சூழ்நிலையில், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பிரச்சனை துவங்கியிருக்கிறது. ஜின்னாவை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. பாகிஸ்தான் வேண்டும் என உறுதியாய் இருந்திருக்கிறார்.

கலவரங்கள் வெடிக்கின்றன. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் இந்துக்கள் வருகிறார்கள். இங்கிருக்கும் முசுலீம்கள் பாகிஸ்தானுக்கு நகர்கிறார்கள். இந்துத்துவ ஆட்கள் பெரிய கலவரத்தை நடத்துகிறார்கள். காந்தி தனது உண்ணாவிரதத்தினால் அமைதிப்படுத்த முயல்கிறார்.

ஏற்கனவே காந்தியின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள். 1944லிலேயே ஒருமுறை நாதுராம் கோட்சே கத்தியோடு தாக்க போய் பிடிபட்டு, காந்தி கோட்சே மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என சொன்னதால் தப்பித்துள்ளார்.

இந்தமுறை கொன்றே தீரவேண்டும் என தமது ஒத்த கருத்து ஆட்களை திரட்டி, இந்த்துவ ஆதரவு முதலாளிகளிடம் போய் நன்கொடைகளை திரட்டி மக்கர் செய்யும் துப்பாக்கிகள் இரண்டை தேத்தி, வெடிகுண்டுகளை வாங்கி, மும்பையிலிருந்து தில்லி வந்து காந்தி கொல்லப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு காந்தி தங்கியிருந்த பிர்லா இல்லத்திற்கு வந்து… கத்துக்குட்டித் தனமாக ஒரு தாக்குதலை நடத்தில் கோட்சேவின் ஒரு ஆள் சிக்கவும் செய்திருக்கிறான். மற்றவர்கள் சுதாரித்து தப்பிவிட்டார்கள்.

பிடிபட்ட ஆள் சொன்னதை வைத்தே போலீசு தீவிரமாக விசாரித்து இருந்தால், கோட்சே கும்பலை பிடித்திருக்கலாம். மந்தமாகவும், அலட்சியமாகவும் கையாண்டிருக்கிறார்கள். கடந்த முறை செய்த சொதப்பலை இனி செய்யக்கூடாது என முடிவெடுத்து, ஒற்றை ஆளாய் காந்தியை கொல்ல கோட்சே முடிவெடுக்கிறான். குவாலியருக்கு போய் அங்கு இந்துத்துவ பிரமுகர் டாக்டர் பார்ச்சூரைப் பார்த்து விசயத்தை சொல்லி, ஒரு தரமான இத்தாலி துப்பாக்கியை வாங்குகிறான். தன்னுடன் இரண்டு பேருடன் மீண்டும் தில்லி வந்தடைகிறான்.

பிர்லா இல்லத்தில் பிரார்த்தனைக்கு வருபவர்களை யாரையும் சோதனை இடக்கூடாது என்பதில் காந்தி பிடிவாதமாக இருந்திருக்கிறார். தனக்கு பாதுகாப்பும் வேண்டாம் என சொல்லியிருக்கிறார். நெருக்கடியான நிலை, தன் உயிருக்கும் ஆபத்து என்பது காந்திக்கு தெரிந்தும் இருக்கிறது. ஆனால் கொன்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலையில் தான் இருந்திருக்கிறார்.

கோட்சே உள்ளே போகிறான். அன்றைக்கு சர்தார் வல்லபாய் படேல் தனக்கும் நேருவுக்கும் உள்ள முரண்பாட்டை காந்தியிடம் விவாதிக்க வந்திருக்கிறார். மதியம் துவங்கிய பேச்சு மாலை வரை நீளுகிறது. இருவரும் தங்கள் வேறுபாடுகளை களைந்து ஒன்றாக செயல்படவேண்டும் என காந்தி வலியுறுத்துகிறார்.

ஐந்து மணிக்கு வழக்கமான பிரார்த்தனை. தாமதம் செய்வது காந்திக்கு அறவே பிடிப்பதில்லை. வேகமாக 5.10க்கு குறுக்கு வழியில் போகிறார். எதிரே வந்த கோட்சே சுடுகிறான். மூன்று குண்டுகள். காந்தி கொல்லப்படுகிறார். கோட்சே தப்பிக்க முயற்சி செய்யவில்லை.

முசுலீம் ஒருவன் கொன்றுவிட்டான் என வதந்தி பரப்பியிருக்கிறார்கள். பிறகு இநது ஆள் என அறிவித்திருக்கிறார்கள்.

கோட்சேவுக்கும், கூட்டாளி ஆப்தேவுக்கும் தூக்குத்தண்டனை. மற்ற துணை நின்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்கள்.

கோட்சேவின் பிறப்பு, வளர்ப்பு, கொல்ல முடிவு. ஆயுதம் சேகரிப்பு, தாக்குதல் திட்டம், இந்தியாவின் அன்றைய அரசியல் சூழ்நிலை, கொலை, பிறகு விசாரணை என பல அம்சங்களையும் பறவை பார்வையில் ஆசிரியர் சொக்கன் எழுதியுள்ளார். நாவல் வடிவத்தில் எழுதியிருப்பது. படிக்க வசதியாய் இருக்கிறது. இப்படி எழுதுவது உண்மையிலேயே சிரமம். நிறைய படிக்கவேண்டும். சரி பார்க்கவேண்டும்.

தொழில்முறை எழுத்தாளர் போல ஆசிரியர் எழுதுகிறார். ஆகையால் அரசியல் ரீதியில் ஆழமாக எழுதிய சில புத்தகங்கள் படித்து இன்னொருமுறை விரிவாக எழுத முயல்கிறேன்.

ஆசிரியர் : என். சொக்கன்
பக்கங்கள் : 256
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

தேவமலர் – குறுநாவல்


ஹாலிவுட்டில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றிரண்டு படங்கள் வரும். சண்டைப்படம், அறிவியல் படம் என விதவிதமாய் விளம்பரப்படுத்தியிருந்தாலும், படம் கொஞ்சம் நகர்ந்ததும் கண்டுபிடித்துவிடலாம். இது பைபிள் புகழ்பாட வந்த படம் என சொல்லிவிடலாம். உதாரணத்திற்கு டென்சில் வாஷிங்டன் நடித்த ”Book of Eli” . தமிழில் கூட அப்படி படம் வந்திருக்கிறது அஷ்வின், ஷிவதா நடித்த ”ஜூரோ”.


அப்படி ஒரு கதை தான் இந்த குறுநாவல். ஊரில் ஒரு திருடன். அவனை காட்டுக்குள் விரட்டிவிடுகிறார்கள். காட்டுக்குள் வருபவர்களிடம் வழிமறித்து கிடைத்ததைப் பறித்து வாழ்க்கையை ஓட்டுகிறான். இப்பொழுது யாரும் வராததால், திருடனின் மனைவி ஊருக்குள் தன் பிள்ளைகளோடு வந்து பிச்சை எடுத்து வாழ்கிறாள். திருடனின் குடும்பத்தின் மீது கோபம் இருந்தாலும், திருடன் ஏதாவது செய்துவிடுவான் என பயந்துகொண்டு அவளுக்கு பிச்சைப் போடுகிறார்கள்.

அந்த ஊரில் ஒரு பாதிரியார் காணக்கிடைக்காத மலர் செடிகளை எல்லாம் பார்த்து பார்த்து சேகரித்து ஒரு அருமையான தோட்டம் போட்டிருக்கிறார். அதை தற்செயலாகப் பார்த்த திருடனின் மனைவி பெரிதும் ரசிக்கிறாள். பாதிரியார் அவளிடம் பேச்சுக்கொடுக்கும் பொழுது, ”தோட்டத்தைப் பார்த்து அதிசயிக்கிறாயா?” என பெருமையாய் கேட்கிறார். ”இதென்ன பிரமாதம்! காட்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இதை விட மிகப்பெரியதாய் காடு பூத்துக்குலுங்கும். மணம் வீசும்” என்கிறாள். மற்றவர்கள் நம்ப மறுத்தாலும் கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த பாதிரியார் தன் உதவியாளனுடன் காட்டுக்குள் திருடனின் வீட்டை நோக்கிப் போகிறார். அங்கு அதிசயத்தை அவர் பார்த்தாரா இல்லையா என்பதை மீதிக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை கொஞ்சம் பில்டப்பாக இருந்தது. ரசிய கதைகளுக்கு இணையாக ஐரோப்பிய ஸ்காண்டிநேவிய கதைகள் இருக்கும் எனவும், அதில் கடவுள் நம்பிக்கை இருக்கும் என்கிறார்கள். இந்த கதை எழுதிய ஆசிரியர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.

நாத்திகவாதி என்பதால் நமக்கு இந்த கதையின் மீது ஒரு பிடிப்பு வரமாட்டேன் என்கிறது. நாமெல்லாம் "சாத்தானின்" சொந்தக்காரர்கள். 🙂

கதை பைபிள் கதையாக இருந்தாலும்… மொழிபெயர்ப்பு க.நா. சு சிறப்பாக செய்திருந்தார். அவர் எழுதிய ஒரு நாவலைப் படிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

ஆசிரியர் : ஸெல்மா லாகர்லெவ் (1848 – 1940)

மொழிபெயர்ப்பு : க.நா. சுப்பிரமணியம் (1912 – 1988)
பக்கங்கள் 33

அவன் காட்டை வென்றான் - நாவல்


"காடு எவ்வளவு விந்தையானது என்றால், அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது. நம் வாழ்க்கைக்கும் அது பொருந்தும் தானே!"

****

அன்று அந்த வயதானவருக்கு உடல்நிலை சரியில்லை. தன் பேரனை பன்றிகளுடன் மேய்ச்சலுக்கு அனுப்பி வைக்கிறார். மாலை அவன் வர தாமதமாகிறது. கவலைகொள்கிறார். மேய்ச்சலுக்கு சென்ற பன்றிகளில் ஒன்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. இந்த சமயத்தில் கவனம் இல்லாமல் அனுப்பிவிட்டோமே என வருந்துகிறார்.

அவர் நினைத்தது போலவே பேரன் வந்து கர்ப்பிணி பன்றியை காணவில்லை. அதை தேடி அலைந்தேன் என அழுதுகொண்டே சொல்கிறான். பதட்டமாகிறார். பன்றியைத் தேடி காட்டுக்குள்ளே தன்னந்தனியாய் கிளம்புகிறார். காட்டின் இயல்பு அறிந்தவர் என்பதால், தேடி கண்டுபிடித்துவிடுகிறார். அவர் நினைத்தது போலவே பன்றி குட்டிகளை ஈன்றிருக்கிறது. பிறந்த குட்டிகளுடன் இருப்பதால், இப்பொழுது ஆக்ரோசமாய் இருக்கும். வளர்த்தவரே என்றால் கூட குதறிஎடுத்துவிடும்.

தாமதம் ஆக ஆக காட்டிற்குள் மற்ற மிருகங்கள் குட்டிகளைத் தேடிவரும் என பயப்படுகிறார். இவர் அருகில் போனதும் அவர் எதிர்பார்த்தது போலவே அவரையும் தாக்குகிறது. விலகிவந்துவிடுகிறார். அடுத்து நரி ஒன்று வருகிறது. தாய்ப்பன்றி நரியை கொன்றுவிடுகிறது. அடுத்து நான்கு நரிகள் மோப்பம் பிடித்து வருகிறது.

இப்படி பல்வேறு போராட்டத்திற்கு பிறகு அவர் பன்றியுடனும், குட்டிகளுடன் வீடு வந்து சேர்ந்தாரா என்பது மீதிக்கதை.

பேரனுக்கு கெஸ்ட் ரோல் தான். அவனை தவிர்த்துவிட்டு பார்த்தால், நாவலில் ஒற்றைப் பாத்திரம் தான். அந்தப் பாத்திரத்திற்கும் ஆசிரியர் பெயர் தரவில்லை. மற்றவை எல்லாம் காடு, மிருகங்கள் தான். ஒருநாள் இரவு தான் மொத்தக்கதையும். படிக்கும் பொழுது ஹெமிங்வேயின் "கிழவனும் கடலும்" நினைவு வந்து போனது.

காடு எவ்வளவு விந்தையானது என்றால், அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது என இக்கதையில் வரும் அந்த கிழவன் ஒருமுறை குறிப்பிடுகிறான். காட்டிற்கு மட்டுமல்ல மனித வாழ்க்கைக்கும் அது பொருந்தும் தானே. வாழ்க்கை எவ்வளவு விந்தையானது என்றால், அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது.

ஒரு சிறிய களத்தை எடுத்துக்கொண்டு காட்டையும் மனித வாழ்க்கையின் குறித்தும் இந்த குறுநாவலை எழுதியவர் டாக்டர் கேசவ ரெட்டி. தெலுங்கு மூலத்திலிருந்து அதனை ஏ.ஜி. எத்திராஜுலு தமிழில் மொழிபெயர்ப்பு நாவல் என்ற உணர்வு வராத அளவிற்கு அருமையாக மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்.

அருமையான நாவல்.

ஆசிரியர் : கேசவ ரெட்டி (Atadu Dadavani Jayichaadu - தெலுங்கு)
தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு
விலை : 105
பக்கங்கள் : 89
வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட்.

ஆயிஷா - குறுநாவல்

 


சில ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறை படிக்கும் பொழுது எவ்வளவு உள்ளம் வெதும்பியதோ இத்தனை வருடங்களுக்கு பிறகு படிக்கும் பொழுதும் அவ்வளவு உள்ளம் வெதும்புகிறது. அருமையான நாவல்.


அறிவியல் கேள்விகளால் துளைத்தெடுக்கும் ஆயிஷாவும், மரத்துப்போன நிலையில் இருந்தாலும், ஒரு மாணவியிடமிருந்து வந்த கேள்விகளால், தலையை சிலுப்பிக்கொண்டு தன்னை உடனடியாக மாற்றம் செய்துகொண்ட அந்த ஆசிரியரும் மறக்க முடியாத பாத்திரங்கள்.

ஆயிஷா நம் குழந்தைகளின் அறிவியல் தாகத்தின் ஒரு தேவதை வடிவம். அவளை வதைப்பதும், வாட்டுவதும் நமக்கு நாமே சாட்டை எடுத்து அடித்துக்கொள்வது தான்!

கடந்த பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். இந்த கல்விமுறை கோளாறானது என்பதை சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பல்கலை கழக துணைவேந்தர்கள் என பல கல்வியாளர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார்கள். ஆனாலும் ஏன் தொடர்ச்சியாய் கடைப்பிடிக்கிறார்கள் என தொடர்ந்து தேடலின் விளைவாக… அதற்கும் பதில் கிடைத்தது.

பிரிட்டிசார் ஆதிக்கத்தில் இருந்த பொழுது, எல்லா வேலைகளையும் பிரிட்டிசாரை வைத்து வேலை வாங்க முடியாது. இந்தியர்களையும் வேலைக்கு அமர்த்தியே ஆகவேண்டும். சரியான அறிவியல் கல்வி என்பது சுதந்திர உணர்வை கிளறக்கூடியது. கல்வி தரவேண்டும். ஆனால் அடிமை சிந்தனையோடு இருக்கவேண்டும் என்ற சதித்திட்டத்தின் விளைவாக உருவாகியதே ”மெக்காலே” கல்வி முறை.

சுதந்திரத்திற்கு முன்பு இதை அமுல்படுத்தினார்கள். புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் ”சுதந்திரம்” கிடைத்த பிறகும் ஏன் இந்த கல்விமுறையை இந்த அரசு நீடிக்க வைக்கிறது என்பது முக்கியமான கேள்வி அல்லவா! இது குறித்து மொத்த சமூகமும் சிந்திக்கும் பொழுது இதற்கு தீர்வு கிடைக்கும்.

ஆயிஷா பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்திருப்பது ஆரோக்கியமான விசயம். அதே போல கல்வி சார்ந்து அக்கறை கொண்ட சமூக இயக்கங்கள் இதை மலிவு விலையில் அச்சடித்து மக்களிடம் சேர்த்தது ஆரோக்கிமான விசயம்.

சுதந்திரம் என்பது எல்லா அடிமை தளைகளிலிருந்து இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாய் விடுபடுவது தானே! ஆயிஷாவும் நமக்கு உதவுகிறாள்.

இந்த நாவலை குறும்படமாக படமாக்கினார்கள். குறுநாவலில் கொடுத்த உணர்வை அந்தப் படமும் கொடுத்தது. நாவலில் ஆயிஷா தோற்றம் போல படத்தில் இல்லையே என்ற குறையை அந்த ஆயிஷாகவே மாறி போக்கினாள்.

ஆயிஷா என்ற தேவதை படிக்கிற எல்லோரிடமும் கொஞ்சம் ஒட்டிக்கொள்வாள். என்னிடமும் தான். எந்த குழந்தை கேள்விக் கேட்டாலும், எத்தனை நெருக்கடி வேலை இருந்தாலும் காது கொடுத்து கேட்கிறேன். தெரிந்த பதில் என்றால் உடனடியே பதில் சொல்கிறேன். தெரியவில்லை என்றால் தெரியவில்லை என சொல்லி... தேடி சொல்கிறேன் என பதில் அளிக்கிறேன். அதே போல தேடி பதிலையும் சொல்லிவிடுகிறேன்.

ஆசிரியர் : இரா. நடராசன்
பக்கங்கள் : 30

காந்தி கதை


காந்தியைப் பற்றிய படங்களும், பாடங்களும், நிறைய கதை வடிவிலும் கேட்டிருப்போம். இந்தப் புத்தகம் படக் கதையாக காந்தி வரலாற்றை சொல்லியிருக்கிறார்கள்.


இதில் காந்தியைப் பற்றி தெரியாத சின்ன சின்ன செய்திகள் அதிகம் இருக்கின்றன. அதில் சிலதை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

காந்தியின் தாத்தாவும், அப்பாவும் போர்பந்தர் என்னும் சிறு சமஸ்தானத்தின் முக்கிய மந்திரிகளாக இருந்திருக்கின்றனர். தந்தையின் வேலையை பெறுவதற்கு தான் காந்தியை இங்கிலாந்துக்கு பாரிஸ்டர் ஆக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சமஸ்தான மந்திரி வேலை கிடைக்கவில்லை போலிருக்கிறது. பாரிஸ்டர் படித்து இந்தியா வந்து வழக்கறிஞர் தொழிலை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் வெற்றி பெறவில்லை. அதனால் ஒரு நிறுவனத்தின் சார்பில் தென்னப்பிரிக்கா சென்றிருக்கிறார்.

”இந்தியாவை பரிசுத்தமாக்குவதே லட்சம். ஆங்கிலேயரை வெளியேற்றுவது உப விளைவு தான்” என ஓரிடத்தில் சொல்கிறார்.

1924ல் காங்கிரசின் அடுத்தக் கூட்டத்தில் தலைமை ஏற்க அழைக்கும் பொழுது… ”அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். எதற்கெடுத்தாலும் என்னையே நாடுவதா?” என சலித்துக்கொள்கிறார்.

”1938ல் இந்து முசுலீம் பிளவு விரிந்துவந்த சமயம் அது. எனினும் காந்திஜி அரசியலில் இருந்து விலகி, கிராமத் தொழில்களை வளர்ப்பதில் ஈடுபட்டார்.” என ஒரு செய்தி வருகிறது.

இரண்டாம் உலகப்போர். ஏகாதிப்பத்தியங்களுக்குள் நடந்த சண்டையில் காலனியாக இருந்த இந்தியாவையும் பிரிட்டிஷ் இணைத்தனர். காங்கிரசில் விவாதம் வந்திருக்கிறது. சுதந்திரம் கொடுத்தால், உதவலாம் என இராஜாஜி சொல்லும் பொழுது, காந்தி ”இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரிட்டனை நெருக்க விரும்பவில்லை” என்கிறார்.

காந்தி தன் வாழ்நாளில் இந்தியாவில் 2089 நாட்களும், தென்னாப்பிரிக்காவில் 249 நாட்களும் இருந்திருக்கிறார். ஆக 6.5 வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகப்பிரிவினையில் 55 கோடி இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டும் என சொல்லி, கொடுக்கவும் வைத்திருக்கிறார். நாதுராம் கோட்சேக்கு அதுவும் கடுப்பேற்றியதாக எழுதியிருக்கிறார்கள்.

இந்த கதைக்கு நேரு குட்டி முன்னுரை எழுதியிருக்கிறார். வெளியீடு அரசு தரப்பில் இருந்து வெளியாகியிருக்கிறது. முதல் பதிப்பு 1966 என புத்தகத்தில் எழுதியிருக்கிறது.

இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டுகளின் கதையை ஒரு பக்கத்தில் எழுதி காந்தி பிறந்ததில் இருந்து சுடப்பட்டு இறக்கும் வரைக்கும் எழுதியிருக்கிறார்கள். இது குழந்தைகளுக்கு எழுதிய மாதிரி தெரியவில்லை. பெரியவர்களுக்கு தான் புரியும்.

பக்கங்கள் : 47

ஆசிரியர்கள் : ஸாவந்த், பாதல்கர்

வெளியீடு : பப்ளிகேசன்ஸ் டிவிசன்,
செய்தி – ஒலிபரப்பு அமைச்சகம்.

December 23, 2022

நூல் அறிமுகம் : உப்பிட்டவரை


”உப்பு பெறாத விசயத்தை பேசிகிட்டு…” என யாராவது சொன்னால் அவர்களுக்கு நிச்சயம் உப்பின் வரலாறு தெரியாது என நிச்சயம் சொல்லலாம்.


உப்பு எதற்கெல்லாம் பயன்படுகிறது?

”உப்பு இல்லா பண்டம் குப்பையிலே” என்பது புகழ்பெற்ற சொலவடை. சமையலில் சகலத்துக்கும் பயன்படுத்துகிறோம். பழரசம் தயாரிக்கும் பொழுது கூட கொஞ்சூண்டு உப்பு சேர்த்தால், இனிப்பின் சுவையை கூட்டித் தருகிறது. நாம் அன்றாடம் துவைக்கும் சோப்பை தயாரிப்பதற்கு, மருந்து தயாரிப்பதற்கு, விவசாய உரத்திற்கு, ஆலைகளில் சில பொருட்களை தயாரிப்பதற்கு என உப்பின் பயன்பாட்டை நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

நமது பண்பாட்டிலும், பழக்க வழக்கங்களிலும் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகளில் மக்கள் உப்பை பயன்படுத்துகிறார்கள். வீடு கட்ட துவங்கும் பொழுது, ’கெட்ட ஆவிகள்’ புகாமல் இருக்க , புதுவீடு புகும் பொழுது, ’கடவுளுக்கு’ நேர்த்திக்கடனாக உப்பை படைக்கிறார்கள்.

சங்க காலத்தில் உப்பு

சங்க காலத்தில் உப்பு அரிதான பொருளாக இருந்திருக்கிறது. வறுமையின் கொடுமையை உணர்த்த, ”உப்பில்லாமல் உண்பது” என எழுதியிருக்கிறார்கள். அந்த காலத்தில் உப்பு தயாரித்தவர்கள் பரதவர்கள். அதை வாங்கி மக்களிடம் விநியோகித்தவர்களை உமணர்கள் என அழைத்துள்ளனர். உப்பு விற்ற பெண்களை “உமட்டியர்” என்கிறது சிறுபாணாற்று படை.

உப்பின் மீது வரி

எல்லாவற்றிக்கும் உப்பு தேவை. அப்ப அதற்கு போடு வரி என ஏழாம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவ மன்னர்கள் காலத்தில் இருந்தே உப்பின் மீது வரி போட்டு மக்களை வாட்டியிருக்கிறார்கள். ஒரு படி உப்புக்கு ஒரு படி நெல் என சரிக்கு சமமாக மக்களிடம் விற்பனை செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் 1805ல் நுழைந்த பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள். வகை தொகையில்லாமல் உப்பின் மூலம் கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆட்சியில் இருந்த 1947வரை உப்பு வரியாக மட்டும் கொள்ளையடித்த தொகை மட்டும் ஆண்டுக்கு 9 கோடி. அந்த காலத்தில் ஒரு நீதிபதியின் மாதச் சம்பளம் ரூ.1000 என்கிறார்கள். அப்படியென்றால், இது எவ்வளவு பெரியதொகை என புரிந்துகொள்ளலாம்.

இப்படி கொள்ளையடித்ததால், பெரும்பாலான ஏழை மக்கள் அரிசி, பருப்பு வாங்கவே சிரமப்படும் வேளையில் உப்பு இல்லாமலே தான் சாப்பிட்டிருப்பார்கள் என நிலைமையில் இருந்து புரிந்துகொள்ளமுடியும். சரி தொலையுது! நாமே உப்பை காய்ச்சி பயன்படுத்தலாம் என்றால்… சட்டத்திற்கு புறம்பாக உப்பைத் தயாரித்தால்… ”ஆறு மாதம் சிறைதண்டனை. ரூ. 500 ரொக்கம் தண்டம். இரண்டையும் சேர்த்து கூட விதிக்கப்படும்” என அறிவித்திருக்கிறார்கள். உப்பளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசை பாதுகாப்புக்கு நிறுத்தியிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலத்திற்கு முன்பு உப்பு விற்றவர்கள் குறவர்கள். ஆட்சிக்கு வந்த பிறகு, மற்றவர்களிடம் உப்பு விற்கும் வியாபாரத்தை கைமாற்றிவிட்டார்கள். அரசின் உத்தரவை எதிர்த்து உப்பு தயாரித்த குறவர்களை முத்திரை குத்தி குற்ற பரம்பரையாக்கியிருக்கிறார்கள்.

உப்பு என கேட்டதற்காக தலித் அடித்தே கொலை

சாதிய வேறுபாடுகள் ஆதிக்கம் செலுத்திய இந்திய சமூகத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட உப்பு என்ற சொல்லிலும் பயன்படுத்தியுள்ளனர். அம்பேத்கர் ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

“மலபாரில் உள்ள ஒத்தப்பாலம் என்ற இடத்தில் ஈழவ சாதியைச் சேர்ந்த சிவராமன் என்ற 17வது இளைஞர், சாதி இந்து ஒருவரின் கடைக்குச் சென்று உப்பு வேண்டும் என்று கேட்டார். அவர் ‘உப்பு’ என்ற மலையாள வார்த்தையைப் பயன்படுத்தினார். மலபாரில் உள்ள வழக்கப்படி ’உப்பு’ என்ற சொல்லைச் சாதி இந்துக்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அந்த இளைஞர் ஹரிஜன் என்பதால் அவர் ’புளிச்சாட்டன்’ என்று தான் கேட்டிருக்கவேண்டும். இதனால் கோபமடைந்த உயர்சாதிக் கடைக்காரர், சிவராமனை பலமாக அடித்ததால் அவர் இறந்து போனார்”

உப்புச் சத்தியாகிரகம்

பிரிட்டிஷார் உப்பில் கொள்ளையடிக்கிறார்கள் என மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. காங்கிரசு கட்சி இதை எதிர்க்கவேண்டும் என விவாதம் எழுந்த பொழுது, வருமான வரியை உயர்த்தப் போவதாக பிரிட்டிஷார் யோசித்த பொழுது, காங்கிரசில் ஒரு பிரிவினர், வேண்டுமென்றால் உப்பின் மீதான வரியை ஏற்றிக்கொள்ளுங்கள் என அயோக்கியத்தனமாய் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

1923ல் பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த சிங்காரவேலர் தாங்கள் உருவாக்கிய கட்சியின் வேலைத் திட்டங்களில் ஒன்றாக உப்பு வரி ஒழிப்பு என்பதையும் வைத்திருந்தார்கள்.

பின் வந்த ஆண்டுகளில் சிவில் சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தை காந்தி தலைமையிலான காங்கிரசு துவக்கியது. தம் தேவைக்கான உப்பை மக்களே தயாரித்துக்கொள்ளலாம் என அறிவித்தார். கால்நடையாக உப்பு எடுக்கப் போவதாக 1930 ஏப்ரல் 6ல் காந்தி போராட்டம் அறிவித்தார்.

இந்தப் போராட்டத்தில்… தமிழ்நாட்டு மக்கள் உணர்வுபூர்வமாய் கலந்துகொண்டிருக்கிறார்கள். நாகையில் உள்ள உப்பளம் நோக்கி மற்ற மாவட்டத்தில் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள நடை பயணம் சென்றவர்களுக்கு எதுவும் கொடுக்க கூடாது என்பது பிரிட்டிஷ் அரசின் கடுமையான உத்தரவு. உத்தரவையும் மீறி மக்கள் ஊருக்கு வெளியே ஒரு மரத்தில் முன்னாடியே போய் சாப்பாடை கட்டி வைத்துவிட்டு, நடை பயணம் போகிறவர்களிடம் மரத்தில் உள்ள உணவு குறித்து ரகசியமாய் தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.

உப்புக்கான போராட்டத்தை தடுக்கும் போலீசை கண்டிக்கும் விதமாக நாவிதர்கள் ”இனி அவர்களுக்கு சவரம் செய்யமாடோம்” என அறிவித்திருக்கிறார்கள். பதினாறு வயதுடைய வைரப்பன் என்ற நாவிதர் ஒரு போலீஸ்காரனுக்கு சவரம் செய்ய மறுக்க, அவரை அடித்து, ஆறு மாதம் சிறையில் தள்ளியிருக்கிறார்கள். அவரின் உறுதி காரணமாக அவருக்கு நாகை மாவட்டதின் வேதாரண்யத்தில் நினைவுத்தூண் அமைத்திருக்கிறார்கள். இன்றைக்கும் இருக்கிறது.

உப்பளகங்களும் தொழிலாளர்களும்

இந்தியா ஆண்டுக்கு 300 மில்லியன் டன் உப்பு உற்பத்தியில் உலகத்தில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. குஜராத்தில் 79%யும், தமிழகத்தில் 10%யும், இராஜஸ்தானில் 9%யும் உப்பு தயாரிக்கிறார்கள். குஜராத்தில் கணிசமான அளவு தயாரிப்பதால், குஜராத்தில் உப்புத்துறைக்கு தனி அமைச்சகமே உருவாக்கியிருக்கிறார்கள். நவீன உற்பத்தி முறையை பின்பற்றுகிறார்கள். தமிழகத்திலும் நவீன உற்பத்தி முறையை பயன்படுத்தவேண்டும் என கடந்த வாரம் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியிருக்கிறார். ஆனால் தமிழக உப்பு உற்பத்தியாளர்களுக்கு வங்கிகளிலிருந்து உரிய கடன் வசதி கிடைப்பதில்லை என புலம்புகிறார்கள்.

தமிழகத்தில் பெரும்பாலும் தூத்துக்குடி மாவட்டத்திலும், நாகை மாவட்டத்திலும் உப்பைத் தயாரிக்கிறார்கள். இலட்சக்கணக்கான குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியிருக்கிறார்கள். அதிகப்பட்ச சம்பளமாக ஆண்களுக்கு ரூ. 500யும், பெண்களுக்கு ரூ. 400யும் தினக்கூலியாக தருகிறார்கள். ஞாயிறு வேலை கிடையாது. சம்பளமும் கிடையாது. வருடத்திற்கு மூன்று மாதம் மழைக் காலங்களில் வேறு வேலை தேடி, கிடைத்தவரை செய்கிறார்கள். அந்த காலத்தில் எந்த உதவித் தொகையும் தருவதில்லை.

உப்பு என்பது கண்ணாடியைப் போல, உடல் முழுவதும் கீறும் தன்மையுடையது. உப்பு வயல்களில் வேலை செய்யும் பொழுது உரிய பாதுகாப்பு உடைகள் கிடையாது. காலை 5 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை வேலை. கடுமையான வெயிலில் வேலை செய்யும் பொழுது, போதுமான குடிநீர் குடிக்கவேண்டும். ஆனால் போதுமான குடிநீர் தருவதில்லை. எங்கும் பார்த்தாலும் உப்பின் வெண்மை. வெயில் பட்டு இன்னும் மினுமினுக்கும். ஆகையால் கண்கள் கடுமையாக பாதிக்கும். பாதிக்கிறது. அதைத் தவிர்ப்பதற்காக கருப்பு கண்ணாடி அணியவேண்டும். நிர்வாகம் தருவதுமில்லை. அப்படியே அபூர்வமாய் தந்தாலும் விழிப்புணர்வு இல்லாததால் தொழிலாளர்கள் அணிவதுமில்லை.

தமிழக உப்பளகங்கள் கடலில் இருந்து நீர் எடுப்பதில்லை. ஏனென்றால் கடலில் உப்பின் அடர்த்தி குறைவு. அதனால் போர் போட்டு அல்லது கிணற்றில் இருந்து மோட்டார் வழியாக நீர் எடுக்கிறார்கள். ஆகையால் மின்சார செலவு இருக்கிறது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை மிகவும் அதிகப்படுத்திவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து உப்பை அகற்றியதால், 1800 டன் உப்பு இருந்தால் மட்டுமே ரயிலில் எடுத்துசெல்லமுடியும் என்ற நிலை இருக்கிறது.

குஜராத்திலோ நேரடியாக கடல் நீரை பயன்படுத்துகிறார்கள். அதனால் மின்சார செலவு குறைவு. குஜராத்தில் தொழிலாளர்களின் சம்பளம் தமிழகத்தை விட இன்னும் மோசம். திறன் ஊழியருக்கே (Skilled) ஒரு நாளைக்கு ரூ. 371.30 தான் சட்டப்பூர்வமாக தீர்மானித்திருக்கிறார்கள். நடைமுறையில் அவ்வளவு தருவார்களா என நிச்சயம் சொல்வதற்கில்லை. உப்பு உற்பத்தி அதிகம் என்பதால், ரயிலிலும், கப்பலிலும் உப்பை கொண்டுவருகிறார்கள். குஜராத் அரசும் உப்புத் தொழிலுக்கு சலுகைகள் தந்து ஆதரவு தருகிறது. விளைவு, தமிழக உப்பை விட, குஜராத் உப்பின் விலை குறைவாக சந்தையில் கிடைக்கிறது. தமிழகத்தில் உப்பு விலை உயர்ந்துவிட்டது என குஜராத்தில் இருந்து 27500 டன் உப்பை குஜராத்தில் இருந்து 2019 நவம்பரில் வரவழைத்தார்கள்.

தமிழகத்தில் உப்புத் தொழிலை நம்பி நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், உப தொழில்களில் நான்கு லட்சம் தொழிலாளர்களும் என மொத்தம் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் நம்பி வாழ்கிறார்கள். இலாபம் குறைந்து கொண்டே வருவதால், மெல்ல மெல்ல தமிழகத்தில் உப்பு உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. தொழிலை நவீனப்படுத்த சொல்லும் தமிழக அரசு அதற்கேற்ப மான்யங்களை, கடன் வசதிகளை, வங்கிகளின் வழியே ஏற்பாடு செய்வதற்கான ஆக்கப்பூர்வ வழிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

உப்பு குறித்த அத்தனை தகவல்களையும் தலைப்பு வாரியாக அருமையாக தொகுத்து தந்திருக்கிறார் ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன். உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் எழுதிய ”கரிப்பு மணிகள்” (1978) நாவலிலும், எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன் எழுதிய ”உப்பு வயல்” (1995) நாவலிலும், எழுத்தாளர் தமிழ்ச்செல்வி எழுதிய ”அளம்” (2002) நாவலிலும் விரிவாக பதிவு செய்துள்ளனர்.

அனைவரும் படிக்கவேண்டிய நூல் இது.

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்.
பக்கங்கள் : 154
விலை : ரூ. 190
ஆசிரியர் : ஆ. சிவசுப்பிரமணியன்