> குருத்து: அம்மா - கவிதை

August 8, 2007

அம்மா - கவிதை

சூரியன் விழிக்கும் முன்
தன் துயில் கலைத்து
வாசல் தெளித்து, கோலமிட்டு
பாத்திரங்கள் துலக்கி
அவசர அவசரமாய் சமைத்து
அறியாமையால் மாமியாரிடம்
'நல்ல மருமகளாய்'
நடந்துகொண்டாய்

காபியுடன்
அப்பாவை எழவைத்து
துவைத்து, தேய்த்து
எல்லா மனைவியரையும் போல்
'நல்ல பணிப்பெண்ணாய்'
மாறிப்போனாய்

அக்காவை உன் வாரிசாய்
என்னை அப்பாவின் வாரிசாய்
அறிந்தும், அறியாமையால்
உருப்பெற செய்தாய்

நல்ல ரத்தம் உள்ளவரை
சளைக்காது உழைத்தாய்
இத்தனை காலம்
சுகமாய், சுமையாய்
இருந்தவைகளெல்லாம்
பெரும்சுமைகளாய்
மாறிப்போயின.

இன்று
இயலாமையின் கோபத்தால்
தளர்ந்து போன மாமியாரை
வார்த்தைச் சவுக்கால் விளாசுகிறாய்
அப்பாவின் மீதும்
என் மீதும்
வலிக்காது பாணங்கள் தொடுக்கிறாய்

இறுதியில்
உன் ராச்சியத்திற்கு வாரிசாய்
'நல்ல மருமகளாய்' எதிர்பார்க்கிறாய்

முதலில்
எனக்கான வேலைகளை
நான் பழகிகொள்கிறேன்
பிறகு யோசிக்கலாம்
புதிய வரவான
இன்னொரு 'மனுசியை'

5 பின்னூட்டங்கள்:

Anonymous said...

good poem.

ravi

வாசகன் said...

amma இரு பக்கமும் உதவுவது போல், முழு நேரமும் எமக்கு மூச்சாய் இருப்பவள் அம்மா.

Socrates said...

வந்து வாசித்து போனதற்கு நன்றி அனானி மற்றும் வாசகன் அவர்களுக்கு!

லக்ஷ்மி said...

சாக்ரடீஸ், ரொம்ப இயல்பான வரிகள். இந்த அறியாமை தெரியாத தேவைதையை விட தெரிந்த பிசாசே மேல் எனும் அபத்தமான வாதத்தினை அடிப்படையாகக் கொண்டது. போன தலைமுறை அம்மா இப்படியிருப்பது கூட ஆச்சரியமல்ல, இந்தத் தலைமுறையிலும் இப்படியான பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதுதான் வேதனையே.

Socrates said...

நன்றி லட்சுமி. நீங்கள் சொல்வது உண்மை தான்.

இரண்டு நாள்களுக்கு முன்பாகத்தான், உள்ளூர் வந்தடைந்தேன். நீங்கள் போட சொன்ன எட்டு எழுத யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

கடைசி நேரத்தில் எழுதுகிற கதிரவன் கூட எட்டு போட்டுவிட்டார். இனிமேல் நான் எழுதினால் எப்படியிருக்கும் என தெரியவில்லை.

இருப்பினும் விரைவில் எழுத முயற்சிக்கிறேன். நன்றி.