> குருத்து: விவசாய கடன் தள்ளுபடியும் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும்!

April 19, 2008

விவசாய கடன் தள்ளுபடியும் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும்!60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி என மத்திய அரசு அறிவித்ததும், நிம்மதியடைகின்ற விவசாயிகளின் முகங்கள் நினைவில் வந்து போயின.

தள்ளுபடி அறிவிப்புக்கு பிறகு, "அறுவடை பண்டிகையான ஹோலியன்று மகாராஷ்டிரா அகோட் தாலுகாவில் மூன்று விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்கு மாட்டியும் தற்கொலை செய்து கொண்டனர்' என செய்திகளில் படித்ததும் அதிர்ச்சியாய் இருந்தது.

உண்மை நிலை என்ன என்று தேடினால்...

"5 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு தான் கடன் தள்ளுபடி. அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் 75% கடனை உடனடியாக திருப்பி செலுத்துபவர்களுக்கு மட்டும் தான் 25% கடன் தள்ளுபடியாம்."

இந்த நிபந்தனை படி, மகாராஷ்டிராவில் உள்ள 18 லடசம் பருத்தி விவசாயிகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்காது. காரணம் அவர்களில் பெரும்பான்மையோர் 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கிறார்கள். எல்லாம் வானம் பார்த்த பூமி.

கடந்த டிசம்பர் 2007 வரை 18 லட்சம் பருத்தி விவசாயிகளில்.. 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். 16 மணி நேரத்திற்கு ஒரு தற்கொலை. நம் பாரத பிரதமர் ஆறுதல் சொல்லி வந்த பிறகு, 8 மணி நேரத்திற்கு ஒரு தற்கொலை.

75% கடனை கட்ட வக்கு இருந்திருந்தால், விவசாயிகள் தங்கள் உயிரை ஏன் மாய்த்துக் கொள்ள வேண்டும்? வங்கி கடன் தவிர பல கந்து வட்டிகாரர்களிடம் விவசாயிகள் மாட்டி தவிக்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கும் தற்கொலைகள் தொடர்கின்றன.

கடந்த வாரம் உத்திர பிரதேச அரசு தலைக்கு தடவும் ஒரு குறிப்பிட்ட 'ஹேர் டை' யை தடை செய்திருக்கிறது. இந்த ஹேர் டை-யை குடித்து தான் விவசாயிகள் செத்துப் போகிறார்களாம்.

கல்யாண மாப்பிள்ளை சீவும் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று போகும் என்பார்கள். அது இது தான்.

1991 லிருந்து புதிய தாரளமய தொழில் கொள்கைகள் இந்தியாவில் அமுலானதற்கு பிறகு தான், விவசாயம் புறக்கணிக்கப்பட்டு, விவசாயிகள் தற்கொலைகள் ஆரம்பித்தன என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமும் வருகிற செய்திகள் அதை உறுதிப்படுத்துகின்றன.நேற்று பன்னாட்டு முதலாளிகளுக்கு முன்பு, நம் பாரத பிரதமர்

"1991-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் புதிய தாரளமய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைக்கும், அதற்கு பிறகு ஆட்சியில் இருந்த எல்லா மத்திய, மாநில அரசுகளும் இங்கு தொடங்கப்பட்ட எல்லா பன்னாட்டு நிறுவனங்களுக்கு எல்லாவித சலுகைகளும் தருகின்றன. எந்தவித குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. ஆகையால், மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க வேண்டும்" என்கிறார்.

நம் விவசாயி ஏன் சாகின்றான்?

பன்னாட்டு நிறுவங்கள் ஏன் செழிக்கின்றன? - இப்பொழுது பளிச்சென புரிகிறது அல்லவா?

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

பிரதமரை இருந்தாலும், இப்படி படம் போட்டு அசிங்கப்படுத்த கூடாது.