> குருத்து: தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை சூறையாட துடிக்கும் "மக்கள் நல அரசு"!

October 19, 2010

தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை சூறையாட துடிக்கும் "மக்கள் நல அரசு"!



தொழிலாளர்களின் சேமிப்பு பணமான வருங்கால வைப்பு நிதியின் (Provident Fund - PF) இன்றைய கையிருப்பு ரூ. 5 லட்சம் கோடிகள். இந்த பணத்தை பங்கு சந்தை சூதாட்டத்தில் இறைக்க சொல்லி, மத்திய அரசு தனது நிதி அமைச்சகம் மூலமாக வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை வற்புறுத்துகிறது.

கடந்த 58 ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி பணத்தை அரசு வங்கியான எஸ்.பி.ஐ. தான் நிர்வகித்து வந்தது. இவ்வளவு பணமும் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறதே என நினைத்த மன்மோகன்சிங் அரசு, 2008ல் முதன்முறையாக பி.எப். பணத்திலிருந்து 2.5 லட்சம் கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல், ஐசிஐசிஐ புரூடன்சியல், HSBC போன்ற தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தூக்கி தந்தது. அந்த பணத்தின் கதியே இன்றைக்கு என்ன நிலை என்று தெரியவில்லை.

அந்த சமயத்தில், நாடு முழுவதும், தொழிற்சங்கங்கள் தனது எதிர்ப்பை காட்டின. இப்பொழுது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மீதியுள்ள பணத்தையும் பங்கு சந்தையில் கொட்ட காய் நகர்த்துகிறது. இதற்காக சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், "பங்குச் சந்தையில் போடலாம்! ஆனால், அப்படி போடுகிற பணத்திற்கு அரசு உத்திரவாதம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காத பட்சத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது" என்று பி.எப். நிதியை நிர்வாகம் செய்யும் மத்திய அறங்காவலர் வாரியம் அரசுக்கு தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் நிதி மூலதன சூதாடிகள் பந்தய ஒப்பந்தங்கள் மூலமாகவும் பல்வேறு வகைகளில் விளையாடி தான், உலகமே நிதி நெருக்கடிக்குள் சிக்கியது. அதிலிருந்தே முதலாளித்துவ உலகம் மீளமுடியாமல் சிக்கி திணறிக்கொண்டிருக்கிறது. சீட்டு விளையாடுபவன் விளையாடி கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் கை நடுங்கும் அல்லவா! அது போல உலகம் முழுவதுமே நிதி மூலதன சூதாடிகள் எங்கெல்லாம் பாதுகாப்பாக பணம் இருக்கிறதே அதையெல்லாம் பங்குச்சந்தையில் கொட்டு என எல்லா அரசுகளையும் மிரட்டி வருகிறார்கள். இந்தியாவில், மன்மோகன் சிங் தான் நிதிமூலதன சூதாடிகளுக்கு நல்ல விசுவாசமான ஆள் அல்லவா! அதனால், பி.எப். நிதியை சூறையாட துடியாய் துடிக்கிறார்.

இதன் அபாயத்தை தொழிலாளர்கள் உணர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். ஏற்கனவே நடத்திய போராட்டங்களின் விளைவாக தான் "உத்திரவாதம் தா!" என பேச வைத்திருக்கிறது. ஆகையால் தொழிலாளர்கள் இறுதிவரை தொடர்ந்து போராட வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள் :

அரசு உறுதி அளிக்காதவரை பி.எஃப். பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது: மத்திய தொழிலாளர் நலத்துறை

1 பின்னூட்டங்கள்:

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!