> குருத்து: வெடிக்காத பட்டாசு!

November 23, 2010

வெடிக்காத பட்டாசு!


நேற்று அலுவலகம் முடிந்து, வண்டியை எடுத்து கிளம்பி கொண்டிருந்தேன். எங்கள் நிறுவனத்தின் அருகே தொழிற்சாலையில் வேலை செய்யும் அறிமுகமான தொழிலாளி "உங்க ஏரியா பக்கம் ஒரு வேலை இருக்கு சார். உங்களோட வருகிறேன்" என்றார். அவரையும் ஏற்றிக்கொண்டு, இருவருமாய் கிளம்பினோம்.

பேசிக்கொண்டே போகும் பொழுது, மிதமான தூறல் விழுந்தது. ஒரு தேநீர் சாப்பிட்டால், நன்றாக இருக்குமே என நினைத்தேன். கடை ஒன்றை தேடி, கடைப்பக்கமாய் வண்டியை ஓரங்கட்டினேன். முதல்நாள் பெளர்ணமி. நிலா வெளிச்சம் பிரகாசமாய் இருந்தது. வானத்தில் பட்டாசுகள் வண்ணமயமாய், அழகாய் வெடித்து சிதறிக்கொண்டிருந்தன். இல்லங்களில் தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. நேற்று, பெரிய கார்த்திகை நாள் என நினைவுக்கு வந்தது.

என்னுடன் வானம் பார்த்துக்கொண்டிருந்தவர்...சொல்லத் தொடங்கினார். "தீபாவளி பண்டிகைக்கு வாங்கியதை, கொஞ்சம் மிச்சம் வைத்திருந்து வெடிக்கிறார்களோ?! மிச்சமே இவ்வளவு என்றால்...தீபாவளிக்கு எவ்வளவு வெடித்திருப்பார்கள்? இந்த பட்டாசை பார்க்கும் பொழுதெல்லாம், என் சிறுவயது சம்பவம் நினைவுக்கு வரும் சார்! 8, 9 வயசுல எங்க வீட்ல அவ்வளவு வறுமை சார். அப்பா பொறுப்பில்லாதவர். அம்மா மட்டும் வேலை செஞ்சு, குடும்பத்தை காப்பத்த முடியல! என் அக்கா, அண்ணன் எல்லாம் சின்ன வயசுலேயே வேலைக்கு போய்ட்டாங்க! அப்ப நான் மட்டும் தான் படிச்சுட்டிருந்தேன்."

"தீபாவளி வந்துட்டாலே, அம்மாவுக்கு பதட்டமாயிரும். எப்படியாவது, வட்டிக்கு கடனை வாங்கி, புதுத்துணி எடுத்திருவாங்க. ஒரே ஒரு இனிப்பு பலகாரம் அம்மா செஞ்சிருவாங்க! ஆனால், இந்த பட்டாசு மட்டும் கிடைக்காது சார். விபரம் தெரியாத வயசு வேற. பட்டாசு கேட்டு, பலமணி நேரம் அழுதா கூட, அம்மா வாங்கித்தர மாட்டாங்க! 10 வயசு இருக்கும். இந்த வருடம் எப்படியும் பட்டாசு வெடிக்கனும்னு நினைச்சு, கிடைக்கிற 25 பைசா, 50 பைசாவை எல்லாம் சேர்த்து வைச்சு, எனக்கு பிடிச்ச சங்கு சக்கரம், புஷ்வானம், பாம்பு பட்டாசுன்னு மூணு, நாலு நாளைக்கு ஒண்ணு வாங்கி, ஆசை ஆசையாய் பெட்டிக்குள்ளே சேர்த்து வைச்சேன். தீபாவளி வந்த பொழுது, 15லிருந்து 20 பட்டாசு வரைக்கும் சேர்ந்திருச்சு!"

"தீபாவளி அன்னைக்கு எழும் பொழுதே, பட்டாசு ஞாபகத்தோடு தான் சந்தோசமா எந்திரிச்சேன். குளிச்சு, சாப்பிட்டு, எல்லோரும் வெடிக்கும் பொழுது, என் பட்டாசையும் எடுத்து..பத்த வைச்சா... பட்டாசெல்லாம் பதபதத்து போய், 20ல் சமீபத்தில் வாங்கின மூணு, நாலு மட்டும் வெடிச்சுது. மற்றவையெல்லாம் வெடிக்கவேயில்லை. காசை சேர்த்து வைச்சு, தீபாவளி நாளில் வாங்கனும்னு கூட விபரம் தெரியாத வயசு. அன்னைக்கு எனக்கு வந்த சோகம் இருக்கே! வாழ்வில் மறக்கமுடியாததது" என சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார்.

என்னாலும் ஒன்றும் பேச முடியவில்லை. "வாங்க போகலாம்!" என்று மட்டும் சொன்னேன். வழியெங்கும் வண்ணமயமாய் பட்டாசுகள் வானத்தில் வெடித்து சிதறிக்கொண்டே இருந்தன. இப்பொழுது, எனக்கு அழகாய் தெரியவில்லை. கொண்டாட்டம் என்பது கூட வர்க்கம் சார்ந்தவை தான்.

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

:(

Anonymous said...

"தீபாவளி அன்னைக்கு எழும் பொழுதே, பட்டாசு ஞாபகத்தோடு தான் சந்தோசமா எந்திரிச்சேன். குளிச்சு, சாப்பிட்டு, எல்லோரும் வெடிக்கும் பொழுது, என் பட்டாசையும் எடுத்து..பத்த வைச்சா... பட்டாசெல்லாம் பதபதத்து போய், 20ல் சமீபத்தில் வாங்கின மூணு, நாலு மட்டும் வெடிச்சுது. மற்றவையெல்லாம் வெடிக்கவேயில்லை. காசை சேர்த்து வைச்சு, தீபாவளி நாளில் வாங்கினும்னு கூட விபரம் தெரியாத வயசு. அன்னைக்கு எனக்கு வந்த சோகம் இருக்கே! மறக்கமுடியாத வருத்தம்" என சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார்."

கண்கள் கலங்கி விட்டது. பேச வார்தைகள் இல்லை

பயணமும் எண்ணங்களும் said...

அன்னைக்கு எனக்கு வந்த சோகம் இருக்கே! //

:((

என்ன சொல்ல ?

"உழவன்" "Uzhavan" said...

மனைதை நெகிழ வைக்கிறது பதிவு

Anonymous said...

This article reemphasizes the fact that Festivals remain Festivals only for the Upper Class and for the Lower class they are only another day to spend with hunger. Thus he highlights the fact that all Indian festivals have Caste orientation as well as Class orientation.

I personally have decided not to burst cracker on Deepavali and have implemented it three years ago. To me its a complete waste of money which also causes huge disturbance to others.

Warm Regards
S.Gopalakrishnan

மகா said...

கட்டுரை எளிமையாகவும், உணர்வு பூர்வமாகவும் இருந்தது.

Anonymous said...

"வெடிக்காத பட்டாசு" என்னுடைய குழந்தை பருவத்தையும் ஞாபகபடுத்தியது. எவ்வளவு சந்தோஷமான நாள் தீபாவளி!. அழுது புலம்பி அம்மா அப்பாவை பாடாய் படுத்தி பட்டாசு வாங்கினால் என் அக்கா தனது பங்கை சரியாக எடுத்துகொள்வார், ஆனால் வெடிக்கவே மாட்டார். ஆர்வம் காரணமாக தீபாவளி முன்தினமே நான் எல்லாவற்றையும் வெடித்து காலி செய்துவிடுவேன். பிறகென்ன, தீபாவளி அன்று அக்காவுடன் சண்டை தான். பல தீபாவளி எனக்கு இப்படி தான் கழிந்தது. அப்பொழுதெல்லாம் நான் என் பிரச்னையை நினைத்து கவலையாடைவேன்.
பல குழந்தைகள் பட்டாசும், துணி, ஏன், சாப்பிட கூட இல்லாமல் தீபாவளி நாளை கழிக்கின்றனர் என்று அன்று எனக்கு புரியவில்லை. அது புரிந்த பின் முன் போல் தீபாவளி இனிக்கவில்லை.

-பாலாஜி