> குருத்து: சென்னையில் உற்சாகமாக செயல்படும் GST Professionals Society

February 18, 2021

சென்னையில் உற்சாகமாக செயல்படும் GST Professionals Society





மத்திய அரசு அதனுடைய பல்வேறு திட்டங்களை எந்தவித முன்தயாரிப்பு இல்லாமல் அறிமுகப்படுத்துவதை போல, ஜூலை 2017ல் ஜிஎஸ்டியையும் அமுல்படுத்தியது. அதனால் தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அவர்களை விட கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு சேவை செய்கிற தணிக்கையாளர்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள் தான்! கடுமையான மன உளைச்சலில் உழன்றார்கள். ஜிஎஸ்டியின் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு சந்தேகங்கள் மம்மி படத்தில் கூட்டம் கூட்டமாக வண்டுகள் வருவது போல வந்துகொண்டே இருந்தன. சந்தேகங்களை தீர்க்க வேண்டிய பொறுப்புள்ள அதிகாரிகளும் ஜிஎஸ்டி சட்டங்களை படித்துக்கொண்டு இருந்தார்கள். இந்த சிக்கலை தீர்க்க மத்திய அரசுக்கு தணிக்கையாளர்கள் வெளிப்படையாகவே கடிதம் எழுதினார்கள்.


இந்த நெருக்கடியான சூழலில் தான் சென்னையில் உருவானது தான் GST Professionals Society. 2019ல் துவங்கப்பட்டது. 50 ஆண்டுகளாக வரி ஆலோசகராகவும், தமிழ்நாடு தழுவிய அளவில் வரிகள் குறித்து செமினார்கள் எடுத்துவரும் செந்தமிழ்செல்வன் அவர்கள் முயற்சியில் ஒரு சங்கத்தை உருவாக்கினார்கள். எனது சீனியர் வில்லியப்பன் அவரை அறிமுகப்படுத்தினார். ஓடிப்போய் சங்கத்தில் சேர்ந்துகொண்டேன். 75க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இப்பொழுது இருக்கிறார்கள். தணிக்கையாளர்கள் (Auditors), வரி ஆலோசகர்கள் (Tax Consultants), கணக்காளர்கள் (Accountants) என பலரும் அடங்குவார்கள்.

மாதத்தின் இறுதி வாரத்தில் வரும் சனிக்கிழமையன்று கூட்டம் ஏற்பாடு
செய்வார்கள். ஜிஎஸ்டியில் உள்ள தலைப்புகளில் விளக்க கூட்டம் நடக்கும். அந்த மாதத்தில் வருகிற மாற்றங்களையும் விளக்குவார்கள். செந்தமிழ்செல்வன்
அருமையான
தமிழில் நடத்துவார். அவரைப் போலவே சக நிர்வாகிகளும் அனுபவமிக்கவர்களாகவும், உற்சாகமாக செயல்படுபவர்களாகவும், அமைந்திருக்கிறார்கள். சங்கத்தில் அது முக்கியம். தனிநபர் எப்பொழுதுமே தேரை இழுத்துசெல்லமுடியாது. ஊர் கூடித்தான் இழுத்துசெல்லமுடியும்.

கொரானா ஊரடங்கில் ஊரே முடங்கியிருந்த வேளையில் இரண்டு மூன்று மாதங்கள் கூடமுடியவில்லை. பிறகு சுதாரித்து, மாற்றுவழி கண்டுபிடித்து ஜூம் வழியில் வாரம் வாரம் சனிக்கிழமைகளில் காலையில் கூட்டம் நடத்தினார்கள். சில மாதங்களுக்கு பிறகு புத்தாண்டை உற்சாகமாய் எதிர்கொள்ள நேற்று சங்க கூட்டத்தை நேரடியாக நடத்தினார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சங்க காலாண்டர் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது. புதியாய் ஆரோக்கியமான டைரி ஒன்று தந்திருக்கிறார்கள். (டைரி எழுதுவதை நிறுத்தி சில வருடங்களாகிவிட்டது. நல்ல டைரியை வீணாக்க கூடாது. இனி தினமும் எழுத யோசித்திருக்கிறேன்.)

சங்கத்திற்கு வாட்சப் குழு ஒன்று இயங்குகிறது. ஜிஎஸ்டி குறித்த செய்திகள் குறைந்தபட்சம் நான்கு பதிவுகளாக நிர்வாகிகள் பகிர்வார்கள். நாம் தாம் படிக்கமுடியாமல் திணறிப்போகிறோம். உறுப்பினர்களின் சந்தேகங்களை குழுவில் கேட்டால், நிர்வாகிகளோ மற்ற உறுப்பினர்களோ பதில் சொல்வார்கள்.

சங்கத்தில் சேர பதிவுக்கட்டணம் ரூ.100. மாதம் ரூ. 200 கட்டணம் தான். குறைவான கட்டணம் தான். சங்கம் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். நீண்டு சென்றுவிடும் என்பதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். சங்கத்தில் இணையுங்கள். வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும், என்னை அழையுங்கள். பதில் சொல்கிறேன்.

அழைக்க : 9551291721

புகைப்படங்கள் : 12 மாதங்கள். 12 கூட்டங்கள் தவறாமல் சென்றதற்காக எனக்கு புத்தகம் பரிசாக தந்தார்கள். நேற்று நடந்த கூட்டத்தின் சில புகைப்படங்கள்.

0 பின்னூட்டங்கள்: