> குருத்து: நடிகை வடிவுக்கரசி பேட்டி -‍ சில சுவாரசிய குறிப்புகள்

May 27, 2021

நடிகை வடிவுக்கரசி பேட்டி -‍ சில சுவாரசிய குறிப்புகள்



 ’முதல் மரியாதை’யில் சிவாஜிக்கு ஜோடி என்றதுமே தங்கப்பதக்கத்தில் கே.ஆர்.விஜயா போல ஒரு பாந்தமான பாத்திரம் என கற்பனையில் மிதந்துகொண்டு மைசூர் போனேன். எதிர்மறை பாத்திரம் என்றதுமே தாரை தாரையாக அழுதேன். ’நடிக்க மாட்டேன்’ என்றேன். இயக்குநரை திட்டித்தீர்த்தேன். படத்தில் என் நடிப்பு சிவாஜி மீதுள்ள வெறுப்பு அல்ல! இயக்குநரின் மீதான கடும் வெறுப்பில் நடித்தேன். ஆனால், இன்று வரை சோறு போடுவது ‘முதல் மரியாதை’ தான்!


முதல் மரியாதை படத்தில் நடிகை ராதாவை நான் வெளக்குமாற்றால் அடிக்கவேண்டும். ”அக்கா நீயே சரியா பண்ணிரு! நீ சரியா பண்ணலைன்னா இயக்குநர் என்னை உண்மையிலேயே அடிச்சு காண்பிப்பார்” என்றார் ராதா கெஞ்சியபடியே!

அருணாச்சலம் படத்தில் ரஜினியை ”அனாதைப் பயலே!” என திட்டவேண்டும். அதற்கு முன்பு தான் மனோராமா ஆச்சி ஒரு படத்தில் திட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரிய பிரச்சனையாகி, கொஞ்சம் சாந்தாமாயிருந்தது. இப்ப நான். வசனம் பேசி, படம் வெளிவந்துவிட்டது.

இரவு 11 மணி. திண்டுக்கல்லில் சென்னை செல்லும் முத்துநகர் ரயிலுக்குள் ஏறி எனக்கான படுக்கையை அவசரமாய் தேடிக்கொண்டிருந்த பொழுது, டிடிஆர் வந்தார். கொஞ்சம் வாங்க! என்னை அழைத்தார். அந்த பிளாட்பாரத்தில் ஏக கூட்டம். ரயில்லுக்கு முன்னால் ஒரு ஆள் படுத்துக்கொண்டு, “ எங்க தலைவனை அநாதைப் பயலேன்னு” எப்படி திட்டலாம். ‘மன்னிப்பு கேட்கனும்னு” ஒரே அடம். “நான் ஏன் மன்னிப்பு கேட்கனும்? அது நடிப்பு” என்றேன். ”வில்லன் ரகுவரனும் தான் திட்டுறார்” என கேட்டால், அவர் தலைவர் கிட்ட நாலு அடி வாங்கிடுவார். நீ வாங்குனயா?” என வாதம். மன்னிப்பு கேட்ட பிறகு தான் வண்டி கிளம்ப முடிந்தது.

கிழக்கு சீமையிலே படத்தில் விஜயகுமாருக்கு ஜோடியாக என்னை நடிக்க அழைத்தார்கள். போனேன். “அவருக்கு ஜோடி வேணாம்னு இப்ப முடிவு பண்ணிட்டோம். வேற பாத்திரம் தர்றோம்” என்றார்கள் “நீங்க ஏதோ முடிவு பண்ணித்தான் என்னை கழட்டிவிடுறீங்க!” என திட்டிக்கொண்டே ரயில் நிலையம் வந்தேன். என் அத்தைப் பையனை அந்த படத்தில் விக்னேஷ் பாத்திரத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார்கள். அத்தாச்சி அழுதுகொண்டே போறாங்களேன்னு என்னை சமாதானப்படுத்த என் கூடவே வந்தான். என் கூட வந்ததாலேயே அப்படியே அவனையும் போக சொல்லுங்கள் என சொல்லிவிட்டார்கள். என்னால் அவனோட நல்ல வாய்ப்பும் போச்சு!

இப்பவும் இளைய இயக்குநர்கள் என்னை நினைவு வைத்து அழைக்கிறார்கள். சந்தோசமாய் இருக்கிறது. நிறைய படங்களில் “ஹார்லிக்ஸ்” அம்மாக்களை போட்டுவிடுகிறார்கள்.

- இந்து தமிழ் திசை காணொளியில்…

0 பின்னூட்டங்கள்: