> குருத்து: உறவுகள் – மருத்துவர் ருத்ரன்

April 9, 2023

உறவுகள் – மருத்துவர் ருத்ரன்

 


“நட்பையும் காதலையும் புரிந்துகொண்டால்… வாழ்க்கையை சுகமாகவும், வளமாகவும் அமைத்துக்கொள்ள அவை உதவும். உறவுகளில் மிகவும் உதவியானவை நட்பும், காதலும் தான்”

- புத்தகத்திலிருந்து…!

உறவுகள் இல்லாமல் மனிதன் இல்லை. பெற்றோர், குழந்தை, சொந்தம், பந்தம். அலுவலகம், அக்கம் பக்கம், மருத்துவர் என நம்மைச் சுற்றி நிறைய உறவுகள் உணர்வுபூர்வமாக நம் வாழ்வில் தினந்தோறும் குறுக்கும் நெடுக்குமாக வந்து போகிறார்கள். இந்த உறவுகளை நாம் சரியாக கையாள தெரிந்திருக்கவேண்டும். இல்லையெனில், இந்த உறவுகள் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருகிறதோ, அதைவிட துக்கத்தையும் தரக்கூடியது என்பதை நம் அனுபவங்களில் நாமே புரிந்திருக்கிறோம்.

இந்த உறவுகளின் எல்லை, வரம்பு, மனநிலை என ருத்ரன் தன் மன நல மருத்துவம் வழியாகவும், மருத்துவ ஆய்வுகள் வழியாகவும் தன் கருத்துக்களை நமக்கு புரியும் வகையில் சொல்கிறார்.

”பரிச்சயம்” தலைப்பில் இப்படி முடிக்கிறார். உறவின் ஆரம்பம் பரிச்சயம் என்பதால், முதலிலேயே இதில் கவனமாய் இருத்தல் உறவுகள் சுலபமாகவும், சுகமாகவும் அமையும் என 1997ல் இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இணையத்தில் ஏற்படும் உறவுகளையும், அதனால் ஏற்படும் பல சிக்கல்களையும் நினைத்துப் பார்த்தால், இதற்கு பொருத்தமாக இருக்கிறது.

”நட்பு” தலைப்பில் நட்பின் தன்மைகளை சொல்லிக்கொண்டே போகும் பொழுது, ”நட்பு நிரந்தமானது மட்டுமல்ல. நிதமும் வளர்வது. முதிர்வது. இப்படி உண்மையான ஆழமான நண்பர்கள் இருந்தால் வாழ்க்கை அழகாக, சுகமாக அமையும். பெரும்பாலோருக்கு இது அமைவதில்லை” என முடிக்கும் பொழுது, பெருமூச்சு எழுகிறது.

”திருமணம்” என்ற தலைப்பில் இப்படி துவங்குகிறார். “இருவரும் சேரும் திருமண வாழ்வில் ஏற்படும் உறவு பிற உறவுகளை விட வித்தியாசமானது. இந்த உறவு தீவிரமானது, நுட்பமானது, நெருக்கமானது, பிரத்யேகமானது, உள்ளம் உடல் இரண்டையும் பகிர்வது, குடும்பமாவது, சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அங்கமாவது, நிரந்தரமாவது, இப்படித்தான் திருமண வாழ்வின் முதல் நிமிடம் கணவனுக்கும் மனைவிக்கும் தோன்றும். தோன்றவேண்டும். இப்படித்தான் தொடரவேண்டும். இவை வெறும் விருப்பங்களல்ல. இந்த உறவுக்கான விசேச விதிகள் – விரும்பி, ஒப்பி, நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளப்படும் விதிகள்.”

உறவுகளின் ஆழ, அகலங்களை ருத்ரன் சொல்ல சொல்ல நாம் இத்தனை ஆண்டுகளில் கடந்த வந்த அத்தனை உறவுகளும், கருப்பு வெள்ளையில் மனக்கண்ணில் வந்து போகிறார்கள். உறவுகளை கையாள்வதில் நாம் எவ்வளவு சரியாக இருந்திருக்கிறோம். எங்கெல்லாம் தவறிழைத்திருக்கிறோம் என பளிச்சென தெரிகிறது.

ருத்ரனின் எழுத்து அத்தனை ஈர்ப்பாக இருக்கிறது. சின்ன சின்ன சொற்றொடர்கள். தொடர்ச்சியாக படிப்பதிலும், புரிந்துகொள்வதிலும் சிக்கலே இல்லாமல், ஒரு தெளிந்த நீரோடை போல நகர்கிறது. அவரின் இலக்கிய வாசிப்பு அவருடைய எழுத்தில் நன்றாக தெரிகிறது. அவர் தொடர்ந்து சில புத்தகங்கள் எழுதினார். பிறகு நிறுத்திவிட்டார். நமக்கு தான் பெரிய இழப்பு. அவர் எழுதிய புத்தகங்களில் இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

இந்தப் புத்தகத்தைப் பல திருமண ஜோடிகளுக்குப் பரிசாக கொடுத்திருக்கிறேன். திடீரென விற்பனைக்கு இல்லை என சொல்லிவிடுவார்கள். 2006 ஏழாம் பதிப்புக்கு பிறகு இப்பொழுது எட்டாவது பதிப்பாக 2022ல் கொண்டு வந்திருக்கிறார்கள். அனைவரது வீட்டிலும் இருக்கவேண்டிய புத்தகம்.

வாங்கிப்படியுங்கள். நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உறவுகள் வலுப்படும். வாழ்க்கை சுகமாகும்.

பக்கங்கள் : 112
விலை : ரூ. 85
வெளியீடு : கவிதா பப்ளிகேஷன்

தொடர்புகொள்ள : புத்தகத்தில் இருந்த எண்கள்
044-42161657
7402222787

0 பின்னூட்டங்கள்: