> குருத்து: கொன்றால் பாவம் (2023)

July 9, 2023

கொன்றால் பாவம் (2023)


1900 களில் மேலை நாடுகளில் சிறு கதையாக எழுதப்பட்டு, அதன் சாரத்தை எடுத்துக்கொண்டு கன்னடத்தில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். அதைப் பார்த்து, திரைக்கதை எழுதி கன்னடத்தில் படமாக எடுத்து வெற்றிப் பெற்று, பிறகு தெலுங்கில் எடுத்து வெற்றிப்பெற்று, இப்பொழுது தமிழுக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் தயாள் பத்மநாபன் தமிழ் நிலம் சார்ந்தவராக இருந்தாலும், கன்னடத்தில் பதினெட்டு படங்களை இயக்கியிருக்கிறார். ஆச்சர்யம். அவரே தமிழிலும்
இயக்கியிருக்கிறார்.


1980 காலகட்டம். தர்மபுரி மாவட்டம். அப்பா, அம்மா, மகள் என மூவரும் ஒரு கிராமத்தில் ஒதுக்குப்புறமான வீட்டில் வாழ்கிறார்கள். நிறைய வறுமை. சொந்த நிலத்தையும் அடகு வைத்து, அதிலேயே வேலை செய்து பிழைக்கும் நிலை. வாழ்வதற்கே பிரச்சனை என்பதால், மகளுக்கு திருமணத்தை நினைத்துப் பார்க்க முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஊருக்கு புதிதாய் வந்த ஒரு இளைஞர் அவர்களின் வீட்டுக்கு வருகிறார். தான் ஒரு எழுத்தாளர், கேலிச் சித்திரம் வரைபவர். ஒரு நாள் மட்டும் இங்கு தங்க முடியுமா என கேட்டு, அவர்கள் முதலில் தயங்கினாலும், தங்க அனுமதிக்கிறார்கள்.

அந்த சமயத்தில் சுற்றுவட்டாரத்தில், ஒரு பணக்காரர் வீட்டில் திருட்டு போகிறது. ஆகையால், திருடனை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். வீட்டிற்கு வந்து தங்கிய அந்த இளைஞரிடம் நிறைய பணம், நகைகள் இருக்கின்றன. அந்த குடும்பத்து நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், அவனை கொன்றுவிட்டு, நகை, பணத்தை எடுத்துக்கொண்டால் என்ன என யோசிக்கிறார்கள். அங்கிருந்து படம் பதட்டமாய் நகர்கிறது. பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

பேராசை பெரும் நஷ்டம் என்பதை அழுத்தமாக படம் முன்வைக்கிறது. தங்களது அன்றாட துன்ப துயரங்களில் இருந்து விடுபட்டு விட மாட்டோமா? என சிக்கித் தவிக்கிறது குடும்பம். அந்த குடும்பத்திடம் போய், கற்பனையான நீதிக்கதை சொன்னால் எப்படி?

சமூகத்தின் இயல்பு எப்படி இருக்கிறது என பார்ப்போம். 1997 துவங்கி 2013 வரை கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் விவசாயிகள் கடனை வாங்கி, கட்ட முடியாமல், பூச்சி மருந்து, தூக்கு என தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் விவசாயி என்பவர் யார் என்றால், அவரிடம் குறைந்தப்பட்சமாய் இரண்டு ஏக்கராவது இருக்கவேண்டும் என அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. இதில் தாம் செத்துப் போனால், குடும்பம் அனாதரவாய் தெருவில் நிற்குமே என நினைத்து, குடும்பத்திற்கும் பூச்சி மருந்து கொடுத்து, குடும்பத்தோடு செத்தால், அந்த குடும்ப உறுப்பினர்கள் இந்த விவசாயிகள் பட்டியலில் சேரமாட்டார்கள். இந்தச் செய்தியை சொன்னவர் இந்து பத்திரிக்கையில் வேலை செய்தவரான சாய்நாத். தொடர்ச்சியான ஆதாரங்களோடு எழுதியவர். நாட்டின் மக்களவையிலேயே இந்தச் செய்தியை பதிந்தவர். மோடி ஆட்சியில் இன்றைக்கும் விவசாயிகள் தினந்தோறும் ஏழு பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என இன்றைய செய்தி சொல்கிறது.

ஆக, நேர்மை, நியாயம் என மதிப்பீடுகளோடு வாழ்பவர்கள் தான், சிக்கலில் சிக்கும் பொழுது, அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போகிறார்கள். எவனையாவது கொன்று, வாழ்ந்தால் போதும் என நினைத்திருந்தால், ஏன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார்கள்?

இதையே இப்படி மாற்றி யோசிப்போம். இந்த நாட்டில் எத்தனை பெருமுதலாளிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போயிருக்கிறார்கள்? அதற்கு ஏதாவது டேட்டா இருக்கிறதா? வங்கிகளில் கடனை வாங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிய பெருமுதலாளிகள் பல பேரை இந்த நாட்டில் நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு ஒன்றிய அரசு எவ்வளவு துணை நின்றிருக்கிறது என்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
படத்தில் வரும் அந்த இளைஞர் போல பெரும் பணத்தோடு ஒரு பெரு முதலாளி வீட்டுக்கு போயிருந்தால், காதும் காதும் வைத்தாற் போல, கொலையை செய்து கமுக்கமாய் மூடியிருப்பார்கள். படத்தில் சொல்வது போல அப்படியே அந்த இளைஞன் குறித்த உண்மை தெரிந்தால் கூட எந்தவித வருத்தம் இல்லாமல், கடந்து போகக்கூடிய மனவலிமையும் அவர்களுக்கு உண்டு.

நேர்மை, நியாயம், உழைத்து வாழ்வது, அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதது என மதிப்பீடுகளோடு எளிய மக்களுக்கே இன்னும் நீங்கள் நீதிக்கதைகளைப் போதிப்பது ஏன்? இனியாவது எல்லா அற மதிப்பீடுகளையும் தூக்கி எறிந்து வாழும் பெரு முதலாளிகளுக்கு நீதிக்கதை சொன்னால் நல்லது.
படத்தில் குறைவான நடிகர்கள் தான். ஒரே ஒரு வீட்டில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டார்கள். செழியன் ஒளிப்பதிவும், வசனங்களும் படத்திற்கு வலு சேர்க்கின்றன. ஒரே இடத்திலேயே கதை சுழல்வதால், இன்னும் சில காட்சிகளை அடர்த்தியாய் வைத்திருக்கலாம். இடைவேளை வரை கொஞ்சம் சுணக்கம் இருக்கிறது.
மகளாக வரலட்சுமி, அம்மாவாக ஈஸ்வரி ராவ், அப்பாவாக சார்லி, அந்த இளைஞராக சந்தோஷ் பிரதாப் வருகிறார். எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அமேசான் பிரைமில் இருப்பதாக இணையம் சொல்கிறது. படம் பார்த்துவிட்டு, சொன்னது சரிதானா என பரிசீலியுங்கள்.

0 பின்னூட்டங்கள்: