> குருத்து: பார்க்கிங் – தமிழ் (2023)

December 11, 2023

பார்க்கிங் – தமிழ் (2023)


கணிப்பொறியாளரான நாயகன் கர்ப்பிணியாக இருக்கும் தன் துணைவியாருடன் சென்னையில் அந்த வீட்டின் மாடி வீட்டுக்கு புதிதாக குடிவருகிறார். கீழே ஒரு அரசு அதிகாரியாக இருப்பவர் தனது துணைவியார், கல்லூரி செல்லும் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.


பரஸ்பரம் அறிமுகமாகி உறவு நன்றாக நகரும் பொழுது, நாயகன் தன் தேவைக்கு ஒரு கார் வாங்குகிறார். கீழே காரை நிறுத்தும் பொழுது அரசு அதிகாரி பைக்கை நிறுத்துவதிலும் எடுப்பதிலும் சிரமப்படுகிறார். இதில் எழும் சின்ன வாய்த்தகராறு, இருவருக்கும் எழும் ஈகோ சிக்கலினால் வெடிக்க துவங்குகிறது.

பிறகு நடக்கும் களேபரங்கள் தான் கதை.
***

ஒரு உறவை ”தூரத்து சொந்தம்” என்பது போல பக்கத்து வீட்டு உறவுகளை “நெருங்கிய தூரம்” எனலாம் என்கிறார் மருத்துவர் ருத்ரன் உடல்நிலை சரியில்லை, அவசர உதவிக்கு எல்லாம் உறவுக்காரன், நண்பன் எல்லாம் வருவதற்கு தாமதமாகும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரன் தான் அவசரத்துக்கு உதவுவான். இந்த புரிதல் எப்பொழுதும் இருக்கவேண்டும். அதன் உறவின் எல்லைகளை சரியாக புரிந்து வைத்து கையாளவேண்டும்.

இல்லையெனில் இந்தப் படத்தில் வருவது போல சிக்கல்கள் தினசரி வரத்தான் செய்யும். மன உளைச்சல்களுக்குள்ளும் சிக்கிக்கொள்வோம். செய்தித்தாள்களில் பார்க்கும் பொழுது அக்கம் பக்கத்து உறவுகளின் வாய்த்தகராறு, அடிதடி சண்டைகள் வழக்குகள் வரை செல்வதைப் பார்க்கிறோம். அதிகப்பட்சம் கொலை வரைக்கும் கூட போகின்றன.

இப்படியான கதைகளை ஒன்றிணைத்து தான் இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் கதை எழுதி, தொய்வில்லாத திரைக்கதையாக்கி இயக்கியும் இருக்கிறார். ஆனால் இறுதி காட்சிகளில் “டேய் ரெம்ப ஓவராத்தான் போறீங்க!” என சொல்ல வைத்துவிட்டார்கள். எதார்த்தத்தில் அப்படியே நடந்தாலும், படத்திலும் அப்படியே வைக்கவேண்டியதில்லை.

எம்.எஸ். பாஸ்கர் கலக்கியிருக்கிறார். ஹரிஷ் கல்யாண் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார் எனலாம். மற்றபடி, இந்துஜா, ரமா, இளவரசு என எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: