புது தில்லி, ஆக.23: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 23.37, ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரியோ ரூ. 40.33. இத்தகைய வரி விதிப்பு வேறெந்த நாட்டிலும் அல்ல. இந்தியாவில்தான் பொருளின் உற்பத்தி விலையை விட அதிக வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்காவை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்தார். தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 63.70-க்கு விற்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 42.82 என்று அவர் குறிப்பிட்டார். இதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 41.81, இலங்கையில் ரூ. 50.30, வங்கதேசத்தில் ரூ. 44.80, நேபாளத்தில் ரூ. 63.24-க்கு விற்கப்படுகிறது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.97, ஜெர்மனியில் ரூ. 95.99, இங்கிலாந்தில் ரூ. 96.39, இத்தாலியில் ரூ. 96.79-க்கு விற்பனையாகிறது. இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு அதிகப்படியான வரி விதிப்பு முக்கியக் காரணமாகும். வரி விதிப்பின்றி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ஒரு லிட்டர் ரூ. 23.37-க்கு விற்பனை செய்ய முடியும். தில்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 41.29. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விடக் குறைவானதாகும். ஆனால் இலங்கை, வங்கேதசம் ஆகிய நாடுகளை விட அதிகமாகும். வரி விதிப்பின்றி ஒரு லிட்டர் டீசலை ரூ. 24.90-க்கு விற்பனை செய்ய முடியும். அமெரிக்காவில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 45.84. பிரான்ஸில் ரூ. 69.87, ஜெர்மனியில் ரூ. 72.54, இங்கிலாந்து ரூ. 82.93, இத்தாலியில் ரூ. 74 விலையில் விற்பனையாகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 46.70, நேபாளத்தில் ரூ. 45.38, இலங்கையில் ரூ. 34.37, வங்கதேசத்தில் ரூ. 27.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொது விநியோக முறையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 14.83-க்கு விற்கப்படுகிறது. இப்பிராந்தியத்தில் இது மிக மிகக் குறைவான விலையாகும். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ. 44.06, இலங்கையில் ரூ. 24.67, வங்கதேசத்தில் ரூ. 45.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (14.2கி.கி) ரூ. 399. இது பாகிஸ்தானில் ரூ. 757.04, இலங்கையில் ரூ. 863.40, வங்கதேசத்தில் ரூ. 469.24, நேபாளத்தில் ரூ. 819.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தினமணி, 24/08/2011
0 பின்னூட்டங்கள்:
Post a Comment