முன்குறிப்பு : இன்று நாடுமுழுவதும் ஊழல் குறித்தான விவாதம் முன்னணிக்கு வந்து இருக்கிறது. ஊழல் குறித்தான தனது நிலைப்பாடை பத்திரிக்கையாளர் சாய்நாத் முன்வைக்கிறார். ஊழலின் வேரை சுட்டிக்காட்டுவது முக்கியமானது.
****
ஜூலை 8, 2011 அன்று 'தி இந்து' பத்திரிக்கையில் பி. சாய்நாத் எழுதிய கட்டுரையின் சாரம்
"எது எப்படி இருந்தாலும் நமது பிரதமர் மிகவும் நேர்மையானவர்" என்று பெருமையாகவும் பிறகு தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ளவும் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், சமீபத்தில் இந்த வாக்கியம் நம் காதிற்கு வருவதில்லை. ஏனெனில், மிக நேர்மையான நம் பிரதமர் வரலாறு காணாத ஊழல் நிறைந்த அரசுக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
இந்த ஊழலுக்கான காரணங்களை பற்றி பலர் பல கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால், முக்கியமான இந்த மூன்று விசயங்களை ஆராயாவிட்டால் இந்திய ஊழலை பற்றிய எந்த ஆய்வும் முழுமை கிடையாது.
1. இந்திய சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு, பணமும், வசதியும் ஒரு இடத்தில் குவிப்பது. வர்க்கம் மற்றும் சாதிகளினாலான ஏற்றத்தாழ்வு மற்றும் பல.
2. இந்த ஏற்றத்தாழ்வுகலை வலுப்படுத்தி, அதை நியாயப்படுத்தும் இந்திய பொருளாதாரக்கொள்கை.
3. பல விதிவிலக்குகள், தனிச்சையான முடிவெடுக்கும் தன்மை மற்றும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத கலாச்சாரம். இவற்றினால் பணம், பதவி உள்ளவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் எனும் நிலைமை. ஆளும் வர்க்கத்தை பகைத்துக் கொள்ளாமல் இருந்தால், எந்த வரிச்சட்டத்தையும் உடைத்து வரி காட்டாமலேயே சமாளித்துவ்ட முடியும் என்கிற நிலைமை.
ஊழலை அதன் அடிப்படையிலிருந்து சரி செய்ய தவறுவது, குழாய் திறந்திருக்கும் பொழுது தரையை துடைத்து ஈரத்தை போக்க முயற்சிப்பது போல் ஆகும்.
கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வரும் பொருளாதார கொள்கையினால் இந்திய அரசு கம்பெனிகளை மேலும் செல்வச் செழிப்புமிக்கவைகளாக்கும் கருவியாய் குறுகிவிட்டது. தனியார் முதலீட்டுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவே அரசு இயங்கி வருகிறது.
கடந்த 6 பட்ஜெட்களில் மட்டும் ரூ. 21 லட்சம் கோடி அரசு, வரிவிலக்கு என்ற பெயரில் கம்பெனிகளுக்கு நன்கொடை வாரிவழங்கியிருக்கிறது. அதே காலகட்டத்தில் உணவு மற்றும் விவசாயத்திற்கான மானியங்களும் பெருவாரியாக குறைக்கப்பட்டுள்ளன.
புதிய பொருளாதார கொள்கை, கம்பெனிகளின் தேவைகளை மிக விசுவாசமாக பூர்த்தி செய்யும் பணியாளராக அரசை மாற்றியுள்ளது. அதுவும் மக்கள் வரிப்பணத்தில். நிலம், தண்ணீர், அலைவரிசை போன்ற இந்தியாவின் வளங்களை கொண்டு தனியார் கம்பெனிகளின் லாபத்தை அதிகரிக்க அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
இந்து மாநிலங்களில் கடந்த மே மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 825 எம்.எல்.ஏக்கள் வெளியிட்ட தகவ்ல் படி அவர்களது மொத்த சொத்து மதிப்பு ரூ. 2128 கோட். இவர்கள் வெளியிடாத சொத்து மதிப்பு இன்னும் எவ்வளவோ? தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் 825 பேர் இதே பணத்தை சம்பாதிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா? வெறும் 2000 ஆண்டுகளே. இதை 10,000 பேர் சேர்ந்து சம்பாதித்தால் கூட 170 ஆண்டுகளாகும். இது தான் நம் நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வு.
நாட்டின் பல இடங்களில் தன்னுடைய வலமான நிலங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுதல், கட்டாயமாக வளமான நிலங்களை கையகப்படுத்துதல் போன்ற அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். ஊழலை எதிர்த்து போராட வேண்டுமா? அதற்கு லோக்பால் மட்டும் போதாது.
சமுதாய ஏற்றத்தாழ்வு, பொருளாதார கொள்கை போன்ற போராட்டங்களுடன் ஊழல் எதிர்ப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு சின்ன லோக்பால் கூட்டம் செய்துவிடமுடியாது. மக்களின் மிகப்பெரிய போராட்டமாக இது அமையும்.
- மொழிபெயர்ப்பாளர் : திரு. பாலாஜி
ஆகஸ்ட் மாத தோழமை இதழிலிருந்து.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment