> குருத்து: மூன்றாம் ஆண்டு கொண்டாட்டமும்... மெல்ல எழும் நினைவுகளும்

July 9, 2022

மூன்றாம் ஆண்டு கொண்டாட்டமும்... மெல்ல எழும் நினைவுகளும்


மூன்றாம் ஆண்டு கூட்டம் குளு குளு ஏற்காட்டில் என பேச்சு ஆரம்பித்து, உறுப்பினர்களின் பர்சை பதம் பார்த்துவிடக்கூடாது, எல்லோரும் கலந்துகொள்ள‌வேண்டும் என்ற தொலைதூர சிந்தனையால், இறுதியில் உள்ளூரிலேயே சந்திப்பு என முடிவானது.  அது அப்படித்தான். ஒரு குழந்தை பிறந்ததும் எழுந்து ஓடிவிடுகிறதா என்ன?  தவழும். தத்தி தத்தி நடக்கும். பிறகு தான் ஓட ஆரம்பிக்கும். ஓட ஆரம்பித்த பிறகு நம்மால் தான் பிடிக்கமுடியாது. 


நிறைய பயணங்களை கடந்துவந்திருக்கிறேன். பெரும்பாலோர் நேரத்துக்கு வந்தது இந்தப் பயணத்தில் தான்.  எல்லா பயணங்களிலும் அந்த "இரண்டு பேர். ஒருவர்" கொஞ்சம் தாமதமாக தான் வந்து சேர்வார்கள். உலகம் உருண்டை என இப்படித்தான் நாம் நிரூபித்துக்கொள்கிறோம்.  🙂


காலையில் அந்த மினி டிபன் சுவையான உணவு. நமக்காக முன்கூட்டியே சாப்பிட்டு சோதித்து, அத்தனை பேரின் வயிறையும் நிர்வாகிகள் காப்பாற்றிவிட்டார்கள். சிரமங்கள் மேற்கொண்ட சந்திரசேகர் அவர்களுக்கு மிக்க நன்றி. அத்தனை டிராபிக்கிலும், திட்டமிட்ட நேரத்தில் போய் சேர்ந்துவிட்டோம். கூட்டத்தையும் துவங்கிவிட்டோம். 


உறுப்பினர்களின் சுய அறிமுகம். அவசியம் தேவை.  உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிகம் என்பதால்,  விரிவான சுய அறிமுகமாகிவிட்டது. இருப்பினும் எல்லா உறுப்பினர்களும் ஒவ்வொருவரைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. 



நானெல்லாம் எப்பொழுதும் கடைசி பெஞ்ச் மாணவன் தான். ஆனால், அந்த அரங்கில் பின்னாடி இருந்த‌தால், எவ்வளவு உன்னிப்பாக கவனித்தாலும் மைக் சத்தம் தெளிவாக கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் களைப்பாகி முன்னாடி வந்து உட்கார்ந்துவிட்டேன். 


மூன்று ஆண்டில் சொசைட்டி கடந்து வந்த பாதை குறித்து நிர்வாகிகள் சொல்ல சொல்ல‌ விரிவாக பதிந்தார்கள். அவசியமான பதிவு. ஆனால் அந்த சமயம் மட்டும் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டதாக எனக்குப்பட்டது. சொசைட்டி துவங்கும் எண்ணம் எப்பொழுது முதலில் உருவானது? எப்படி சாத்தியப்படுத்தினோம். நிர்வாகிகள் ஒவ்வொரு கூட்டத்தையும் எத்தனை திட்டமிடலுக்கு பிறகு கூட்டம் நடத்துகிறோம். எங்கெல்லாம் நமக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் எப்படி நட்புடன் பராமரிக்கிறோம். உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்களை அமுல்படுத்தினோம். உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக என்னென்ன செய்தோம் என்பதை ஒவ்வொரு நிர்வாகியும் அவரவர் அனுபவத்தை லைவ்வாக சொல்லியிருந்தால் மூன்று ஆண்டு கடந்து வந்த பாதை இன்னும் உயிர்ப்புடன் இருந்திருக்கும். அனைத்து உறுப்பினர்களும் உங்கள் அனுபவத்தை தங்கள் அனுபவமாக உள்வாங்கியிருப்பார்கள். (இது எனது ஆலோசனை தான். இதை பேருந்திலேயே தெரிவித்தேன்.)


"செயற்குழு ஒன்றை உருவாக்க யோசித்து அழைப்புவிடுத்திருக்கிறோம்.  சொசைட்டியை உற்சாகமாக கொண்டு செல்ல ஆர்வத்துடன் முன்வாருங்கள்" என செந்தமிழ்ச் செல்வன் சார் கேட்டுக்கொண்டார். ஒரு அமைப்பு என்பது அறிவும், அனுபவமும் உள்ள மூத்தவர்களும், இளரத்தம் ஓடுகிற இளைஞர்களும் கலந்து செயல்படவேண்டும்.  அப்பொழுது தான் சொசைட்டியின் செயல்பாடுகள் இன்னும் வேகமெடுக்கும்.  செயல்பட இளைஞர்கள் தாமாக முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


சாப்பாடு. நல்ல சாப்பாடு. சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் ஜெனிலியா தனக்குத் தானே சொல்லிக்கொள்வது போல, "நிறைய ஐயிட்டம் இருக்கு. கொஞ்சமா சாப்பிடு. கொஞ்சமா சாப்பிடு" எனக்குள் நானே சொல்லிக்கொள்ளவேண்டியதாகிவிட்டது.  🙂


விளையாட்டுகளில், கிரிக்கெட் ஹைலாட்டாகிவிட்டது.  காற்றே இல்லை. வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும்  மிகவும் கர்ம‌ சிரத்தையாக இரண்டு முறை விளையாடினார்கள்.  புல் தடுக்கி எல்லாம் விழுந்தார்கள். சிரித்தார்கள். கோபப்பட்டார்கள். கிண்டல் செய்தார்கள். அழுகை மட்டும் தான் இல்லை. ஒரு விளையாட்டில் எல்லா உணர்ச்சிகளையும் காட்டினார்கள். 😍


இதில் எனக்கு ஹைலெட். என்னை இரண்டாவது விளையாட்டில் ஒன்லி ஒன் அம்பயராக்கியது தான். எனக்கு கிரிக்கெட் தெரியாது என உண்மையை சொன்னேன். விளையாட்டுக்கு சொல்கிறேன் என நினைத்து... அம்பயராக்கிவிட்டார்கள். பள்ளிக் காலத்தில் மட்டும் சில மாதங்கள் மட்டும் கிரிக்கெட் அத்தனை ஆர்வமாயிருந்தது.  பிறகு அந்த ஆர்வம் சுத்தமாக போய்விட்டது. சும்மா ஜாலிக்காகத்தானே விளையாடுகிறார்கள் என நினைத்தேன். விளையாட்டில் மேலே சொன்ன அத்தனை உணர்ச்சிகளும் உள்ளே வந்த பொழுது கொஞ்சம் தடுமாறித்தான் போனேன்.  ஒரு வீரரின் வாழ்வா சாவா என முடிவு செய்வது கூட என் கையில் வந்தது. பிறகு சுதாரித்துக்கொண்டு, ஒரு பேப்பரை எடுத்து பொறுப்பாக குறிக்க‌ துவங்கிவிட்டேன்.  வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் இது. 😇


அதன் பிறகு கொஞ்சூண்டு பரிசல், கொஞ்சூண்டு கேரம், கொஞ்சூண்டு செஸ் என பல  உறுப்பினர்கள் உற்சாகமாக விளையாடினார்கள்.


பேருந்தில் கிளம்பிய பொழுது, ஒவ்வொருவரும் அவரவர் அனுபவத்தை நன்றாக‌ சொன்னார்கள். அடுத்தமுறை ஒரு மைக், ஸ்பீக்கரும் ஏற்பாடு செய்தால்  பேருந்தில் கடைசிவரை உறுப்பினர்கள் என்ன‌ சொன்னார்கள் என கவனமாக கேட்டிருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.


பலரும் பல ஆலோசனைகளை சொன்னார்கள். அதில் ஒரு உறுப்பினர் சொன்ன ஆலோசனை "தங்கத்தை" விட மதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது சுக துக்கங்களை சொசைட்டி உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.  அதில் உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளவேண்டும். அப்பொழுது தான் உறுப்பினர்களிடையே நெருக்கம் வரும். இனி அந்த பழக்கத்தை கடைப்பிடிப்போம்.


ஒரு பயணம் முடிந்ததும், அடுத்த பயணத்திற்கான துவக்கத்திற்கான ஆலோசனையும், உடனடியாக அமுல்படுத்தவும் துவங்கிவிட்டார்கள். இன்னொருமுறை பயணம் கிளம்பும் பொழுது பணம் தடையாக இருக்ககூடாது என ஆலோசனை சொன்னார்கள். மாதம் ஒரு தொகை தருகிறோம். பணம் தடையாக மாறாது என பலரும் ஆமோதித்தார்கள். சிலர் முதல் மாத தவணைத்தொகையை உடனே அனுப்பிவைத்துவிட்டார்கள். இதோ குழந்தை தவழத்துவங்கிவிட்டது. அடுத்து ஓடத்துவங்கும். நாம் நம்புவோம்.


பிறகு கீச்செயின் நன்றாக  இருந்தது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்தது..  வீட்டிற்கு வந்ததும் நினைவுக்கு வந்தது. எல்லோருக்கும் இரண்டு கீச்செயினாவது கொடுத்திருக்கலாம் என தோன்றியது.


முக்கிய குறிப்பு : இந்த ஒருநாள் பயணத்திற்கு நிர்வாகிகள் கொடுத்த கடுமையான‌ உழைப்பும், சக உறுப்பினர்கள் கொடுத்த உழைப்பும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானவை.  இந்த கடுமையான உழைப்பு இல்லாமல், இந்த பயணமும், மகிழ்ச்சியும் சாத்தியமில்லை.  நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.  இதில் உணவு, பேருந்து, ரிசார்ட்டில் பதிவு செய்வது, வரத்தயங்கிய சில உறுப்பினர்களிடம் தொடர்ந்து பேசி என‌ எல்லா ஏற்பாடுகளிலும் தன் உழைப்பைத் தந்து, கடைசி நேரத்தில் உடல் நிலை சரியில்லாது வரமுடியாமல் போன நாராயணசாமி சாரை பலரும் பல சமயங்களில் நன்றிகளுடன் நினைவுப்படுத்தினார்கள்.  உடல்நலம் சரியில்லாமல் இருந்தும் நிகழ்ச்சி சிறப்பாக அமையவேண்டும் என்ற அயராத உழைப்பை, நல்ல  பண்பை எல்லோரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.


0 பின்னூட்டங்கள்: