> குருத்து: ”அழகிய” சுவர்களும், கேள்வி கேட்டு குடைச்சலைத் தருகிற சுவரொட்டிகளும்!

July 11, 2022

”அழகிய” சுவர்களும், கேள்வி கேட்டு குடைச்சலைத் தருகிற சுவரொட்டிகளும்!


கடந்த இரு வாரங்களுக்குள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதற்காக ஒரு லட்சம் வரை அபராதம் வசூலித்திருக்கிறது சென்னை மாநகராட்சி. கூடுதலாக ஒட்டியவர்கள் மீது 451 வழக்குகளையும் போட்டிருக்கிறது.

 

சுவரொட்டிகள் என்ன செய்யும்?

 

சுவரொட்டிகள் மக்களின் உரிமைகளை உரத்துப்பேசும்.. அநீதிக்கு எதிராக நியாய குரலை எழுப்பும். அரசின் அலட்சியங்களை கண்டிக்கும்.  சமூக பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடுபவர்களுக்கு வழிகாட்டும்.  ஒரு சரியான அமைப்பை கண்டறிய உதவும்.

 

தேர்தல் கட்சிகளும் சுவரொட்டிகளும்



.

தேர்தல் கட்சிகள் அரசியல் ரீதியாக நீர்த்துப்போய்விட்டன. அதனால், சென்னையில் பல பகுதிகளின் சுவர்களில் தங்கள் தலைவர்களின் பெயர்களை பெரிது பெரிதாக எழுதி வைத்திருக்கிறார்கள். தலைவர்களின் முகங்களை பெரிது பெரிதாக வரைந்து வைத்திருக்கிறார்கள். சுவரொட்டிகள் ஒட்டினாலும், அதையே செய்கிறார்கள்.

 

தேர்தல் கட்சிகள் தேசிய நீரோட்டத்தில் ஒன்று கலந்ததால், பதவி, பணம், செல்வாக்கு என எதற்கும் பஞ்சமில்லாமல் வளர்ந்துவிட்டார்கள்.  அதனால் பத்திரிக்கைகளை நடத்துகிறார்கள்.  தொலைக்காட்சி ஊடகங்களை வைத்திருக்கிறார்கள்.  தங்களுக்கு சாதகமான செய்திகளை பார்த்து, பார்த்து வெளியிடுகிறார்கள். தங்களை தொந்தரவு செய்கிற செய்திகளை கவனமாக தவிர்த்துவிடுகிறார்கள்.

 

தமிழக முதல்வரும் சுவரொட்டியும்



 

சமீபத்தில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முதல்வர் பேசும் பொழுது, தன் இளமைக் காலத்தில் தமது தோழருடன் சுவரொட்டி ஒட்டியதாகவும், போலீசு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பியதாகவும் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

 

அப்பொழுது திமுக எதிர்க்கட்சி. அதனால் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டி, சுவர்களின் வழியே மக்களிடம் அரசியல் பேசினார். இப்பொழுது ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு சுவர்கள் பேசும் அரசியலின் வீரியம் மற்றவர்களை விட அவருக்கு நன்றாகவே புரியும் அல்லவா! அதனாலேயே சென்னை மாநகரம் முழுவதும் தமிழக பண்பாட்டு அடையாளங்களை வரைந்து ”அழகிய” சுவர்களாக மாற்ற உத்தரவிட்டுவிட்டார்.  மீறுபவர்களை தண்டிக்கிறார்.

 

அழகிய சுவர்கள் வேண்டுமா? ஆரோக்கியமான சமூகம் வேண்டுமா?

 

தேசிய நீரோட்டத்தில் கலக்காததாலும், மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதாலும், ஆளும் அரசுகளைப் பார்த்து ஓயாது கேள்விகளை எழுப்புவதாலும், ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகளின் செய்திகளை ஊடகங்களில் கவனமாக மறைத்துவிடுகிறார்கள். சமூகப் பிரச்சனைகளைப் விவாதிக்கும் பொழுது அழைப்பதை தவிர்க்கிறார்கள்.

 

ஆக அவர்களுக்கு தான் மக்களிடம் பேசுவதற்கு சுவர்கள் தேவை. அந்த சுவர்களைத் தான் மாநகராட்சி ”அழகிய” சுவர்களாக்கி தடை செய்து வைத்திருக்கிறது.  

 

ஓவியங்கள் நிறைந்த ”அழகிய” சுவர்கள் வேண்டுமா, ஏன் எதற்கு எப்படி என சுவரொட்டி மூலம் கேள்விகள் கேட்டு சிந்திக்கும் சமுதாயமாக மாற வேண்டுமா என மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

-

0 பின்னூட்டங்கள்: