இப்பொழுது அரசு மானியம் தருவதை நிறுத்திவிட்டது என இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநர் இராம்குமார் 2021 அக்டோபர் மாதத்தில் ஊடகங்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.
****
ஒரு சிலிண்டரின் விலை ரூ. 1065.50
வீடுகளில் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் விலை வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் ரூ. 1068.50- என உயர்ந்திருக்கிறது. தில்லியில் ரூ. 1053க்கும், மும்பையில் ரூ. 1052.50க்கும் விற்கிறார்கள். கடந்த 14 மாதங்களில் 12முறை விலை ஏற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் நாம் தான் விரல்விட்டு எண்ணி நிறைய கவலைப்படுகிறோம். அவர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலையே இல்லை.
இப்படி கடுமையாக விலை ஏறியதன் விளைவாக தமிழகத்தின் கிராமப்புறங்களில் சிலிண்டர் வாங்க முடியாமல், மீண்டும் மரபு வழி எரிபொருளான விறகு, மாட்டுச்சாணத்தால் செய்யப்படும் எருவாட்டி என பயன்படுத்த துவங்கிவிட்டார்கள் என ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் இறக்கிறார்கள்
கடந்த காலங்களில் விறகு, எருவாட்டி, மண்ணெண்ணெய், மரம் அறுக்கும் தூள் என அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை எரிபொருளாக கொண்டு, சமைத்துவந்தார்கள். இப்படி சமையல் செய்வதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் வெளியேறும் புகை கார்பன் உமிழ்வை அதிகம் உண்டாக்குகிறது. இது சுற்றுப்புற சூழலை கடுமையாக மாசுப்படுத்துகிறது. இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் தான் சமைப்பதால், புகை மண்டலத்தால் நிறைய சுவாச நோய்கள் உண்டாகின்றன. சமைப்பதில் எழும் புகை ஒரு மணி நேரத்துக்கு 400 சிகரெட்டுகள் புகைப்பதற்கு இணையானது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்படி கரும்புகையோடு மல்லுக்கட்டி சமைப்பதால், ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் சுவாச நோய்களால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மரணங்களில் பெரும்பாலானவை, இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய் காரணமாக ஏற்படுபவை. சமையல் எரிவாயு என்பது மற்ற எல்லாவற்றையும் விட தூய்மையான எரிபொருள் என்கிறார்கள்.
மோடியின் உஜ்வாலா திட்டம் பல்லிளித்துவிட்டது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, ஏழைப் பெண்கள் சமைப்பதை எளிதாக்க, சுவாச நோய்களிலிந்து தப்பிக்க என உஜ்வாலா (ஒளி) என்ற திட்டத்தை 2016ல் பந்தாவாக துவங்கினார்கள். இந்த திட்டம் துவங்கப்பட்டு, சமையல் எரிவாய் பதிவு கட்டணம் இல்லாமல் இணைப்பு வழங்கினார்கள். தொடங்கியதிலிருந்து இன்றைக்கு வரை இந்த திட்டத்தில் 9 கோடி இணைப்புகள் வழங்கியுள்ளதாக சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இவ்வளவு விலை உயர்ந்துவிட்டதே! பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் வளர்ந்து நிற்கும் தமிழ்நாட்டிலேயே மக்கள் மாற்று எரிபொருளை தேட ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற மாநிலங்களின் நிலை என்னவென்று சமூக ஆர்வலர் சந்திரசேகர் உஜ்வாலா திட்டத்தின் தற்போதைய நிலை என்னவென்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு வந்த பதில். 2021 – 22 நிதியாண்டில் மட்டும் இத்திட்டத்தில் இருந்த 90 லட்சம் பயனாளிகள் தங்களுக்கு வழங்கிய சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்த பிறகு, மீண்டும் வாங்கவில்லை. குறிப்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் 65 லட்சம் சிலிண்டர்கள் வாங்கவில்லை. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் 9 லட்சம் பேர் வாங்கவில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் 16 லட்சம் பேர் வாங்கவில்லை. ஆக ஒரு ஆண்டிலேயே 90 லட்சம் பேர் வாங்கவில்லை. வாங்குவதற்கு பணமில்லை என்பதே எதார்த்த நிலைமை. உஜ்வாலா திட்டத்தின் வழங்கப்பட்ட பெரும்பாலான சிலிண்டர்கள் வீட்டில் காட்சிப்பொருளாக மாறிவிட்டன.
எரிவாயுக்கான மானியத்தை அரசு நிறுத்திவிட்டது
இவ்வளவு விலை உயர்வுக்கு என்ன காரணம். முதலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என எரிபொருளுக்கு அரசு விலை நிர்ணயம் செய்வதை தன் வசம் வைத்திருந்தது. அப்பொழுது விலை கட்டுக்குள் இருந்தது. இப்படி கட்டுக்குள் வைத்திருந்ததின் மூலம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நிறைய மானியம் கொடுத்துக்கொண்டிருந்தது. ”மக்களுக்கு மானியம் தராதே” என ஏகாதிப்பத்தியங்களும், தங்களால் ”தொழில்” செய்யமுடியவில்லை என கார்ப்பரேட்டுகளும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் ஆட்சி தானே நடக்கிறது. ஆகையால், சில ஆண்டுகளுக்கு முன்பு விலை தீர்மானிப்பதை ஆயில் நிறுவனங்களிடமே விட்டுவிட்டார்கள்.
மொத்தமாய் மானியம் தராமல் கைவிட்டுவிட்டால், மக்கள் கொந்தளிப்பார்களே என யோசித்த அரசு, நைச்சியமாய் சமையல் எரிவாயு இணைப்புடன் வங்கி, ஆதாரை இணையுங்கள். மானியத்தை வங்கிக்கணக்கில் தந்துவிடுகிறோம் என்றார்கள். பணமும் போட்டார்கள். 2018ல் அதிகப்பட்சமாக ரூ. 465 வங்கியில் மான்யமாக வரவு வைத்தார்கள். (பார்க்க படம்). கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2021ல் ரூ. 25 மட்டுமே பெயரளவில் வரவு வைக்கிறார்கள். இன்று வரைக்கும் ரூ. 25 யாக தொடர்கிறது.
இன்னொரு வாக்குமூலம் சொல்லவேண்டுமென்றால்… “இந்தியாவில் 90% பேர் சிலிண்டர் பயன்படுத்துகிறார்கள். இதில் இந்தியா 50% எரிபொருளை இறக்குமதி செய்கிறது. உலக சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியா மானியம் வழங்கிவந்தது. இப்பொழுது மானியம் தருவதை நிறுத்திவிட்டது என இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநர் இராம்குமார் 2021 அக்டோபர் மாதத்தில் ஊடகங்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.
காலி சிலிண்டர்களை கொண்டு சாலைகளை மறிப்போம்
உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு தருகிறோம் என சொன்னதின் மூலம், அரசு ரேசன் கடைகளின் மூலமாக தந்த மண்ணெண்ணெய்யும் நிறுத்திவிட்டார்கள். ஆக, பழைய நிலைமையை விட மோசமான நிலைக்கு வந்து நிற்கிறோம்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கூடிக்கொண்டே போவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாமே கணிசமாக உயர்ந்திருக்கிறது. சிலிண்டர் விலை குறித்து மக்களிடம் பேசும் பொழுது, குமுறுகிறார்கள். ஒன்றிய ஆட்சியாளர்களை திட்டித்தீர்க்கிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.
ஆக, பழைய மரபு வழி சமையலுக்கு திரும்புவதால், முன்பு வருடத்திற்கு ஐந்து லட்சம் பெண்கள் செத்துப்போனோம். உச்சத்தில் இருக்கும் இன்றைய விலையால் சாவு எண்ணிக்கை மேலும் சில லட்சங்கள் நிச்சயம் உயரத்தான்போகிறது. ”இனிமேல் மூன்று வேளை சாப்பிட முடியாது. இரண்டு வேளை தான் சாப்பிடமுடியும்” என தொலைக்காட்சியில் ஒரு அம்மா மனம் உடைந்து பேசினார்.
ஏன் இவ்வளவு மனம் உடையவேண்டும். ஏன் இத்தனை லட்சம் பேர் சாகவேண்டும். இந்த நாட்டை மலிவு விலையில் வாங்கி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகளையும், அவர்களுக்கு பாதந்தாங்கிகளாக இருக்கும் காவி ஆட்சியாளர்களையும் பணிய வைக்க, வீட்டில் காட்சிப்பொருளாய் இருக்கும் சிவப்பு காலி சிலிண்டர்களை எல்லாம் தூக்கி வந்து சாலையை மறிப்போம். சாலைகள் சிவப்பாகும். எதிரிகளை கதறவிடலாம். நம் பிரச்சனையையும் எளிதாய் தீர்த்துவிடலாம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment