நேற்று உறவினர் வீட்டில், சத்துணவு ஆசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தென் மாவட்டத்தின் ஒரு கிராமப்புற நடுநிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றுகிறார். அநேகமாக இன்னும் ஓராண்டில் ஓய்வு பெற்றுவிடுவேன் என்றார்.
25 ஆண்டு பணி அனுபவத்தைப் பற்றி கேட்கும் பொழுது அவர் சொன்ன சில தகவல்கள் பள்ளிகளின், அரசின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது.
உங்கள் பள்ளியில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்? அனைவருக்குமே சத்துணவு உண்டா? அல்லது ஏதேனும் விதிமுறைகளில் சிலருக்கு கிடையாதா?
எங்கள் பள்ளி நடுநிலைப் பள்ளி. பள்ளியில் 90 மாணவர்கள் இருக்கிறார்கள். அனைவருக்குமே சத்துணவு உண்டு.
நான் பள்ளியில் படிக்கிற 90 களில் வெள்ளைச் சோறு, காய்கறிகள் போட்ட சாம்பார் ஊற்றுவார்கள். தனியாக காய்கறி என எதுவும் இருக்காது. இப்பொழுது எப்படி?
இப்பொழுது சாம்பார் சோறு, தக்காளிச் சோறு, கறிவேப்பிலை சோறு, புளிச்சோறு, புலாவு என எங்களுக்கென ஒரு பட்டியல் இருக்கிறது. அதன்படி சமைத்து மாணவர்களுக்கு கொடுப்போம். எல்லா நாளிலுமே வேகவைத்த முட்டையும் தருவோம்.
எல்லா மாணவர்களும் முட்டை சாப்பிட சிரமப்படுவார்களே?
அதை ஏன் கேட்கிறீங்க! முட்டை வேண்டாம் என சிலர் அழுவார்கள். சொல்லி சொல்லி சாப்பிட வைப்போம். சில பிள்ளைகள் மஞ்சள் கருவை மட்டும் சாப்பிடுவார்கள். சில பிள்ளைகள் வெள்ளை பகுதியை மட்டும் சாப்பிடுவார்கள்.
முட்டை என்பது கையாள்வது சிரமம். அரசிடமிருந்து எப்படி விநியோகிக்கிறார்கள்?
நீங்கள் சொல்வது சரிதான். 90 பேர் என்றால்…100 முட்டைகள் கொடுப்பது தான் சரி. அப்பொழுது தான் சேதாரம் போக சரியாக வரும். ஆனால் 90 கூட சரியாக வராது. நாலைந்து முட்டைகள் குறையும்.
இப்படி எண்ணிக்கையில் குறைவதை எப்படி சமாளிக்கிறீர்கள்?
எட்டாவது வரை படிக்கிற பள்ளியல்லவா! சில குழந்தைகள் உடல்நிலை சரியில்லை என வராது. புல் அட்டண்டன்ஸ் (Full attendance) இருக்கவேண்டும் அரசு தொடர்ந்து வலியுறுத்துவதால், எல்லா பிள்ளைகளும் வந்ததாய் எழுதுவார்கள். வராத குழந்தைகளின் முட்டைகளை வைத்து கணக்கை சரி செய்வோம்.
முட்டையில் கமிசன் நிறைய போகிறது என புகார்கள் எழுகின்றன. வழக்கமாக நாம் கடைகளில் வாங்கும் முட்டைகளின் அளவில் இருக்குமா?
நீங்கள் சொல்வது சரிதான். அதிமுக ஆட்சி, திமுக ஆட்சி இரண்டு ஆட்சிகளிலுமே ஒரு முட்டை பேரலுக்கு இரண்டு மூன்று முட்டைகள் மட்டுமே நாம் சாதாரணமாக கடைகளில் வாங்கும் முட்டைகளின் அளவில் இருக்கும். பெரும்பாலும் சின்ன முட்டைகளாய் தான் இருக்கும்.
அரிசி ரேசன் கடைகளில் மக்களுக்கு கொடுப்பதை தான் தருவார்களா? மற்ற பருப்பு, மளிகை சாமான்களின் நிலவரம் என்ன?
ரேசன் கடையில் போடும் அரிசியை விட, நல்ல அரிசி தான் பள்ளிக்கு வரும். முட்டை குறைவதைப் போல தான், பருப்பு, மளிகை சாமான்களின் நிலையும். முட்டைகளில் சமாளிப்பதைப் போலவே, இதற்கும் சமாளிப்போம்.
உங்களுக்கு சம்பள நிலவரம் எப்படி? தொகுப்பூதியமா? அரசு ஊழியருக்கான சம்பளமா?
நான் 95ல் வேலைக்கு வந்தேன். என்னுடைய முதல் மாத சம்பளம் ரூ. 300. ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாக கூடி, இப்பொழுது 25வது ஆண்டில், 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன். இந்த 20 ஆயிரம் சம்பளத்தை வாங்குவதற்கே, நிறைய போராட்டங்களை எங்களது சங்கத்தின் மூலமாக செய்திருக்கிறோம்.
சமைப்பதற்கு மற்ற வேலைகளுக்கென எவ்வளவு வேலையாட்கள் தருகிறார்கள்?
சமையல் செய்பவர், ஒரு உதவியாளர் என அரசு விதிகளின்படி நியமிக்கவேண்டும். ஆனால், சமையல் செய்யும் ஒருவரை மட்டுமே பல பள்ளிகளில் நியமித்துள்ளார்கள். உதவியாளரை தருவதில்லை. ஆகையால் ஒருவரை வைத்தே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய நெருக்கடி இருக்கிறது.
சமைப்பவர்கள் எப்படி சமைப்பார்கள்? பிள்ளைகளுக்கு பிடிக்குமா?
குழந்தைகளுக்கென சாப்பாடு என்பதால், கவனமாகத் தான் சமைப்போம். சில நேரங்களில் சமைப்பவர் வேகமாக சமைக்கவேண்டும் என காய்கறிகளை நன்றாக கழுவதில் சுணக்கம் காட்டுவார்கள். காய்கறிகளையும், பருப்பையும் தனித்தனியாக வேகவைத்தால் தான், சுவையாக இருக்கும். இரண்டையும் சேர்த்து வேகவைப்பார்கள். ஆகையால் நாம் உடனிருந்து கவனித்து செய்வதால், தவறு ஏதும் நடக்காமல் கவனமாய் இருக்கிறோம்.
பள்ளிகளில் காலை உணவு தரப்போவதாக அறிவிப்பு வந்ததே? இப்பொழுது கொடுக்கிறீர்களா? அதையும் நீங்களே பொறுப்பேற்க வேண்டுமா?
விரைவில் எங்கள் பள்ளியில் கொண்டுவரப்படும் என சொல்லியிருக்கிறார்கள். இல்லை. வேறு ஆட்கள் வந்து சமைப்பார்கள் என சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் மற்ற விசயங்களையும் பயன்படுத்துவார்கள் என சொல்கிறார்கள். குழப்பம் தான். அமுல்படுத்திய பிறகு பேசி சரி செய்துகொள்ளலாம் என நினைத்திருக்கிறோம்.
குழந்தைகளின் ஆரோக்கியமும், கல்வியும் தான் இந்த நாட்டின் எதிர்காலம். ஆகையால், அதில் சமரசமில்லாமல் மிகுந்த கவனம் வேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நேர்மையாக நடந்துகொள்ள வைப்பதில், பொதுமக்கள் தான் மிகுந்த பொறுப்புடன் குறைபாடுகளை சுட்டிக்காட்டி நேர் செய்யவேண்டும்.